சம்பாதித்தும் சேமிப்பு இல்லையா? 35+ வயது பெண்கள் ₹1 கோடி சேர்க்கும் சீக்ரெட்!
கேரளா: ஜி.சுதாகரன் சிபிஎம் கட்சியில் இருந்து விலக முடிவா? சமாதானம் பேசும் தலைவர்கள்; பின்னணி என்ன?
கேரள அரசியலின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜி.சுதாகரன், 63 ஆண்டுகளாக சி.பி.எம் கட்சியில் இயங்கி வந்தார். ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வரும் தேர்தலில் அம்பலப்புழா சட்டசபை தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், சிட்டிங் எம்.எல்.ஏ-வான சலாமுக்கு மீண்டும் சீட் வழங்க கட்சி முடிவு செய்துள்ளது.
இது ஜி.சுதாகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே ஜி.சுதாகரனின் உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்க அவரது வீட்டுக்கு கிளைச் செயலாளர் சென்றபோது படிவத்தைப் பூர்த்திசெய்ய அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து ஜி.சுதாகரன் சி.பி.எம் கட்சியை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதற்கிடையே சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "ஜி.சுதாகரனுக்குப் பதவி வழங்குவதற்கான பரிசீலனை உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, "எந்தப் பரிசீலனையும் இல்லை" எனக் கூறி எம்.வி.கோவிந்தன் சிரித்தார். அதைக் கேட்டு செய்தியாளர்களும் சிரித்தனர். அந்த வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மனவேதனையையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார் ஜி.சுதாகரன்.

இதுபற்றி ஜி. சுதாகரன் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளதாவது:
"என்னை கட்சியில் தொடரவிடாமல் சிலர் தடுத்து வருகின்றனர். நான் தலைமைக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. 43 ஆண்டுகளாக மாநிலக் குழு உறுப்பினராக இருக்கும் என்னைக் கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாவட்டச் செயலாளர் ஆர்.நாசர் அனுமதி அளிக்கவில்லை.
எமெர்ஜென்சி காலத்தில் சிறைவாசம் மற்றும் சித்திரவதைகளை அனுபவித்தவர்களில் ஆலப்புழா மாவட்டத்தில் தற்போது உயிருடன் இருக்கும் ஒரே நபர் நான்தான். ஆனால், எமெர்ஜென்சி 50-வது ஆண்டு விழாவிற்கு எனக்கு அழைப்பிதழ் கூட வழங்கப்படவில்லை.
இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சி என் வீட்டுக்கு அருகேதான் நடைபெற்றது. எனது தந்தையை இழிவுபடுத்தும் வகையில் கட்சியின் உள்ளூர் நிர்வாகி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டும், அவர் மீது கட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை"
இவ்வாறு அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.

அம்பலப்புழா தொகுதியில் 2011 முதல் 2021 வரை எம்.எல்.ஏ-வாக இருந்தார் ஜி.சுதாகரன். 2016-ல் முதல் பினராயி விஜயன் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்தார். சமீபத்தில் ஜி.சுதாகரன் அளித்த பேட்டிகளால்தான் அவருக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
அம்பலப்புழாவில் சுயேச்சையாகப் போட்டியிட்டால் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனச் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஜி.சுதாகரனை அம்பலப்புழா தொகுதியில் சுயேச்சையாக களம் இறக்கி, வெளியில் இருந்து ஆதரவு கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறது.
அதேசமயம், ஜி.சுதாகரனை தொலைபேசியில் அழைத்து சமாதானம் பேசியுள்ளார் சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன். அப்போது, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கேட்ட கேள்விக்காகத்தான் சிரித்தேன் என்றும், உங்களைக் கிண்டலாக நினைத்து சிரிக்கவில்லை எனவும் எம்.வி.கோவிந்தன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
சி.பி.எம் அகில இந்திய செயலாளர் எம்.ஏ.பேபி-யும் ஜி.சுதாகரனிடம் சமாதானம் பேசி வருகிறார். தலைவர்கள் சமாதான பேச்சு கைகொடுக்குமா? ஜி.சுதாகரன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.














