ஆனந்த் போஸ் ராஜினாமா: தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றமா?!
`மானாமதுரை சம்பவம் சாதிய மோதலா?' - விளக்கமளித்த சிவகங்கை எஸ்.பி!
நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் நடந்த கொடூரத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள், அதே பாணியில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறியிருப்பது, தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.
சம்பவத்தன்று இடைக்காட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார் ராசு. அங்கு வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல், போதையின் உச்சத்தில் ராசுவிடம் வம்புக்குச் சென்றிருக்கிறது. வார்த்தை தடித்த நிலையில், திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து ராசுவைத் தாக்கத் தொடங்கியுள்ளது. இதில் நிலைகுலைந்த ராசு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பட்டியலின மக்கள் வசிக்கும் தனது தெருவை நோக்கி ஓடியிருக்கிறார். ஆனால், அந்த வெறிபிடித்த கும்பல் அவரை விடுவதாக இல்லை.
மூன்று இருசக்கர வாகனங்களில் மின்னல் வேகத்தில் அந்தத் தெருவுக்குள் புகுந்தது அந்தக் கும்பல். அந்தக் கும்பல் ஆயுதங்களுடன் ராசுவைத் தாக்குவதைப் பார்த்துவிட்டு அங்கு ஓடிவந்த அவருடைய உறவினர்கள் தினேஷ், ராஜேந்திரன் ஆகியோர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அந்த ஊர் மக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடியிருக்கின்றனர். இந்தக் கொடூரச் செயல்கள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
ஒரு கும்பல் எவ்வளவு துணிச்சலாகத் தெருவுக்குள் புகுந்து சினிமா பாணியில் ஒரு பட்டியலின சமூகத்தின்மீது தாக்குதல் நடத்துகிறது என்பது சட்ட ஒழுங்கின் மீதான கேள்வியை எழுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக அன்புமணி உள்ளிட்ட பலரும், கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மானாமதுரை காவல் நிலையத்தில் (மார்ச்-5) செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.
“கடந்த மார்ச் 3 ஆம் தேதி மதியம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த நண்பர்களான பாண்டியராஜ் மற்றும் புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஷ் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த ராசு என்பவர் இருவரையும் கண்டித்து அங்கிருந்து அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த புதுக்குளம் மகேஷ், தனது கூட்டாளிகளான 9 பேரை அழைத்துக்கொண்டு பாண்டியராஜின் வீட்டிற்கு செல்லும் வழியில் கண்டித்து அனுப்பிய ராசுவைப் பார்த்து ஆத்திரத்தில் அவரை தாக்கி உள்ளார். அந்தச் சமயத்தில் அதனை தடுக்க முயன்ற ராசுவின் உறவினர்களையும் மகேஷ் தரப்பினர் தாக்கியதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து சென்ற அந்தக் கும்பல் பாண்டியராஜின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். இப்படி நண்பர்களாக இருந்தவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறிலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் சாதிய மோதல்கள் எதுவும் இல்லை. பாண்டியராஜ் மனைவி கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அதேபோல் ராசு கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஏ2 இருளப்பன், ஏ3 வேல்முருகன், ஏ5 பாலமுருகன், ஏ8 பாரதி, ஏ9 மைனர் சிறுவன் உட்பட ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளியான மகேஷ் உட்பட இன்னும் 4 பேர் காவல்துறையினரால் தேடப்பட்டு வருகின்றனர். அவர்களையும் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 3 பேரில் ராசுவைத் தவிர மற்ற இருவரும் சிக்கிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். இந்த விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கை குறித்துப் புகார்கள் வெடிக்கின்றன. `இந்தச் சம்பவத்தை வெளியே சொல்லாதீங்க' என போலீஸார் தங்களை மிரட்டியதாகவும், `இதுவரை உருப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை' என்றும் அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
இது தொடர்பாக மானாமதுரை சரக டி.எஸ்.பி ராஜாவை நாம் தொடர்பு கொண்டு நடந்தது பற்றி விசாரித்தோம். “இந்தச் சம்பவம் இரு தனி நபர்களுக்கு இடையிலான வாய்த்தகராறு காரணமாகத்தான் தொடங்கி உள்ளது. இது சாதிய மோதல் இல்லவே இல்லை. இந்தப் பிரச்னை பற்றி யாரும் வெளியில் சொல்ல வேண்டாம் என்று போலீஸார் சொன்னதன் நோக்கம்.. அப்போது இந்த சிசிடிவி காட்சிகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளும் யார் என்று முழுவதுமாக தெரியாத நிலையில் இருந்ததால் அவர்கள் தப்பிச் சென்று தலைமறைவாகிவிடுவார்கள் என்ற காரணத்திற்காகத்தான் அப்படிச் சொன்னோமே தவிர, மற்றபடி அதில் வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை. இது சாதிய மோதலே இல்லை” என்று கூறினார்.
- பழ.அசோக்குமார்





















