Samantha: 'ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும்' - பூதசுத்தி விவாஹா முறையில் திருமணம் செய...
கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; "ரூ.20 லட்சம் இழப்பீடு" - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்தில் இப்பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அதிமுக தொண்டரான அர்ஜுன் (33) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இன்று அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் பழனிசாமி, "அதிமுகவிற்காக பல ஆண்டுகள் உழைத்த தொண்டர் அர்ஜுன். கோபிசெட்டிபாளையத்தில் அன்றைய அதிமுக கூட்டத்திற்கு வந்திருந்த அவர், கூட்டத்திற்கு முன்பாகவே வந்து நீண்ட நேரம் காத்திருந்து பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததால் மயங்கி விழுந்திருக்கிறார். அங்கிருந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்திருக்கிறார்.
இந்தத் தகவல் அறிந்து உண்மையிலேயே மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். இன்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது தாயாருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

மேலும், கோபிசெட்டிபாளையம் அதிமுக மாவட்டம் சார்பாக ரூ.10 லட்சமும், அதிமுக தலைமை சார்பாக ரூ.10 லட்சமும் வழங்கவிருக்கிறோம். மகனை இழந்து வாடும் அர்ஜுனின் தாயாருக்கு இந்த இழப்பீடு தொகையைக் கொடுக்கிறோம்" என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.













