கௌதம் கம்பீர் - பிசிசிஐ அதிகாரிகள் கூட்டம்: மூத்த வீரர்கள் எதிர்காலம் குறித்து ஆலோசனையா?
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் - இந்திய அணித் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இடையேயான கூட்டம் இன்று (ஜனவரி 11) நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்த நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும், ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் தொடரிலும் சிறப்பாக செயல்படத் தவறிய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த ஆலோசனைகள் இன்றையக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட் அத்தியாயம் முடிந்துவிட்டது... ஓய்வை அறிவித்த தமிம் இக்பால்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதற்கான முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக வரலாற்றுத் தோல்விகளை சந்தித்து வருவதால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழு தொடர்பான ஆலோசனையும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கம்பீரின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணித் தேர்வு
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர் இழப்புகள் மட்டுமின்றி, எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணித் தேர்வு குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: 3-வது ஒருநாள்: நியூசி.யை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி!
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு பிசிசிஐ-க்கு நாளை (ஜனவரி 12) வரை கால அவகாசம் இருக்கிறது. இன்றைய கூட்டத்தில் நடைபெறும் ஆலோசனையைப் பொருத்து, அணியில் இடம்பெறும் வீரர்கள் குறித்து தெரிய வரும்.
தசைப்பிடிப்பின் காரணமாக சிட்னி டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடாத ஜஸ்பிரித் பும்ரா மற்றும் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடி வரும் முகமது ஷமி ஆகியோரின் உடல்தகுதி குறித்து ஆலோசனைகள் இருக்கும். இந்திய அணியில் அறிமுகமானது முதல் சிறப்பாக விளையாடி வரும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான போட்டியில் உள்ளனர். ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் ரெட்டி மூவருமே அவர்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
இதையும் படிக்க: 40 வயதிலும் மிரட்டும் டு பிளெஸ்ஸி..! ஃபிட்னஸ், பேட்டிங்கின் ரகசியம் என்ன?
இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் எந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்பது கௌதம் கம்பீர் மற்றும் அணித் தேர்வுக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையேயான கூட்டம் முடிவடைந்த பிறகே தெரிய வரும்.