செய்திகள் :

சதுரங்க வேட்டை: ஏய்ப்பெனும் கலை!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 31

post image

சிறிய அளவு திருட்டான பிக்பாக்கெட்டை நாம் பார்த்திருக்கிறோம், பர்ஸைப் பறிகொடுத்திருக்கிறோம். பெரிய அளவு திருட்டான வங்கிக் கொள்ளைகளைப் பற்றிப் படிக்கிறோம், கேள்விப்படுகிறோம். இவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், சீட்டிங் எனப்படும் பெரிய அளவிலான ஏமாற்றுச் செயல்களைப் பற்றிச் செய்தித்தாள்களில் படிக்கும் போதுதான், இது எப்படி நடக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஓரிருவர் சரி, எப்படிக் கூட்டம் கூட்டமாக லட்சங்களில், கோடிகளில் ஏமாந்து போகிறார்கள் என்பதுதான் நம்மை வியக்க வைக்கும் செய்திகளாக இருக்கின்றன. அதற்கு ஒரு விடையாகத்தான் காந்தி பாபுவின் சுவாரசியமான இந்த வேட்டைக் கதை அமைந்திருந்தது.

காந்தி பாபு திருடுவதில்லை. ஆனால், பணம் சம்பாதிப்பதுதான் இவ்வுலகின் மிக எளிதான வேலை என்று நம் பொறாமையைத் தூண்டும் வாக்கியத்தோடு அறிமுகமாகிறான். அனுபவம் வாய்ந்த ஒரு மேஜிக் நிபுணரைப் போல, குற்றங்களைத் துப்பறியும் ஒரு தடயவியல் நிபுணரைப்போல சிந்திக்கிறான் அவன். மிக நீண்ட காலம் ஒரே வேலையில் பணியாற்றி, நுட்பங்களை அறிந்துகொண்ட துல்லியமான நிபுணத்துவம் அவனது ஒவ்வொரு அசைவிலும் இருக்கிறது.

தலையும், வாலும் ஒரே மாதிரி தோற்றமளிக்கிற, ஆபத்தில்லாத ஒருவகைப் பாம்பைப் பிடித்து, அதை ஆண்மைக் குறைவுக்கான மருந்து தயாரிக்கப் பயன்படும் அரிய உயிரினம் என்று சொல்லி ஏமாற்றிப் பணம் பிடுங்க வேண்டும் என்பது நோக்கம். அதற்கான அவனது திட்டமிடல் வியப்பூட்டுகிறது. முதலில், பணத்தாசை பிடித்த ஒரு பணக்காரனைத் தேடுகிறான் காந்தி பாபு. செட்டியார் எனும் ஒரு வியாபாரி சிக்குகிறார்.

செட்டியாரால் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய முடியும் என்பதைக் கணக்கிடுகிறான். 5 லட்சம் கொடுத்து ’ரெட்டைத்தல உளி’யை வாங்கி, சில நாட்கள் பாதுகாத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேறு நபருக்கு மாற்றிவிட்டால் 15 கோடி கிடைக்கும் என்று அவருக்கு ஆசை காட்டுகிறான். உளிக்கு பல மொழிகள் தெரியும், அதனால் அதற்கு எந்தச் சத்தமும் காதில் விழக்கூடாது.

விழுந்தால் அதன் எடை குறைந்துவிடும், அதன் எடைதான் விற்பனைக்கான முதல் தகுதி என்றெல்லாம் கதைகளைக் கட்டுகிறான். எப்படியும் இடமாற்றத்தாலும், உணவுப் பிரச்சினையாலும் அந்த உயிரினம் எடை குறையத்தான் போகிறது என்பதும், செட்டியாரால் சத்தமில்லாத ஓர் இடத்தில் உளியைப் பாதுகாக்க முடியாது என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் அந்த இரண்டுக்கும் முடிச்சுப் போடுகிறான்.

உளியைக் கண்ணால் காண்பதற்காகவே காரில் பயணம் செய்கிறார்கள், பின்னர் பனங்காட்டுக்குள் நெடுந்தூரம் நடக்கிறார்கள், வித்தியாசமான மனிதர்களையும், சூழலையும் சந்திக்கிறார்கள். இது அப்படி இப்படியென்று எளிதாக நடந்துவிடுகிற வேலையில்லை என்றதொரு மனநிலையை செட்டியாருக்கு ஏற்படுத்துகிறான். எனக்கான கமிஷனை மறந்துவிடக்கூடாது, அதற்காகத்தான் நான் இவ்வளவு வேலைகளைச் செய்கிறேன் என்று செட்டியாருக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறான் காந்தி பாபு.

அது செட்டியாருக்கு அவன் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்துகிறது. உளி செட்டியாரின் கைக்குப் போனதுமே, காந்திபாபு சொன்ன 15 கோடி பார்ட்டியைவிட அதிகமாக 20 கோடி தருகிறேன் என்று இன்னொரு பார்ட்டியிடமிருந்து போன் வருகிறது. அதுவும் காந்தி பாபுவின் ஏற்பாடுதான். போன் மட்டுமல்லாது, 20 கோடி பணத்தோடு ஆட்கள் நேரிலேயே வந்துவிடுகிறார்கள். பணத்தைப் பார்த்ததும் செட்டியாருக்கு சகல சிந்தனையும் ஒடுங்கிப் போய்விடுகிறது.

5 லட்ச ரூபாய்க் கொடுத்து வாங்கிய உளியைக் காப்பாற்ற இன்னும் எத்தனை லட்சமும் செலவழிக்கத் தயாராகிவிடுகிறார். அப்படித்தான் மேலும் பல லட்சங்களை அவரிடமிருந்து காந்தி பாபு குழுவினர் கறக்கிறார்கள்.

இப்படித்தான், ’வெளிநாட்டிலிருந்து டாலரில் பணம் வந்திருக்கிறது, மதிப்பு மிக்க பொருட்கள் வந்திருக்கின்றன... ஆனால், கஸ்டம்ஸ் கட்டணம் கட்டினால்தான் அதை வெளியே எடுக்க முடியும்’ என்று ஏமாற்றுவேலைகள் நடப்பதை செய்தித்தாள்களில் படிக்கிறோம்.

ஏமாளிகள் முதலில் எதற்கோ ஆசைப்பட்டு ஒரு தொகையைக் கட்டிவிடுகிறார்கள். அதன் பின்னர் மேலும் மேலும் காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலில் கட்டப்பட்ட பணம் வீணாகிவிடக்கூடாது எனும் எண்ணத்திலேயே மேலும் மேலும் பணத்தைக் கொடுத்து பெருந்தொகையை இழக்கிறார்கள். அது ஒரு நுட்பம்.

இந்த சதுரங்க வேட்டை, இப்படியான நுட்பங்களின் தொகுப்பாக இருந்தது. சீட்டிங் உலகம் எப்படி இயங்குகிறது என்பதை பார்வையாளர்களுக்கு பரபரப்பான காட்சியமைப்புகளோடு கூடிய ஒரு பாடமாகவே நடத்தியது என்றும் சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்க்கும் போது, சமூகத்துக்கு அவசியமான ஒரு விழிப்புணர்வுக் கதை, அதுவும் இத்தனைப் பரபரப்பாக, இத்தனை நெகிழ்ச்சியாக சொல்லப்பட வாய்ப்பிருக்கிற ஒரு கதை, எப்படி இத்தனை நாட்களாகக் கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்தது என்ற வியப்புதான் ஏற்படுகிறது.

காந்தி பாபுவின் சின்ன வயதில், வறுமை அவனைக் கடுமையாகப் பாதித்து அவனது வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. அந்த வறுமையிலிருந்து மீள நாள் முழுதும் உழைக்கிறான்.

ஆனால், அது செல்வத்தைக் கொண்டுவரவில்லை. ஒருநாள் சில சூதாடிகளிடமிருந்து பணம் சம்பாதிக்க ஒரு வழியைக் கண்டுகொள்கிறான். அதில் தேர்ச்சியுறுகிறான். அது சீட்டிங்! செட்டியாரைப் போன்ற பணக்காரத் தனிநபர்களை ஏய்த்துச் சம்பாதிப்பது, கக்கூஸில் பிடித்த தண்ணீரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த ’மேஜிக் பேர்ள்’ என்று சொல்லி, எம்.எல்.எம் எனும் பெயரில் எளிய மக்களை ஏய்ப்பது என எத்தனையோ வழிகளில் கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கிறான்.

அவனது வாழ்க்கையிலும் ஒரு பெண் வந்து சேர்கிறாள். பானு எனும் அந்தப் பெண், ’யாரோ செஞ்ச தப்புக்காக வேற யாரையோ ஏமாத்துறது தப்பில்லையா சார், ஒருத்தருக்கொருத்தர் அக்கறையாவும், அன்பாவும் இருக்குறதுதானே சார் வாழ்க்கை?’ என்று அவனைக் கேட்கிறாள். ’இந்த சமூகம் நமக்கு என்ன பண்ணுச்சோ, அதைத்தான் நாம இந்த சமூகத்துக்கு பண்ணுறோம், ரொம்ப சிந்திக்காத பானு’ என்று சொல்லி அவளை எளிதாகக் கடந்து போய்விடுகிறான் காந்தி பாபு.

ஆனால், எல்லாக் கதைகளுக்குமே ஒரு முடிவு உண்டு என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் போலீஸில் மாட்டிக்கொள்கிறான். சம்பாதித்த பணத்தைக் கொண்டு சட்டத்திலிருந்து அவனால் தப்பித்து வந்துவிட முடிகிறது. ஆனால், அவனால் ஏமாற்றப்பட்ட, கோடிகளில் பணத்தை இழந்த, வாழ்க்கையே தடம்புரண்டு போன ஒருவன், கூலிப்படையினர் மூலமாக அவனைப் பிடித்துக் கொல்ல முனைகிறான். அந்த முயற்சி காந்தி பாபுவின் வாழ்க்கையை மற்றுமொரு முறை புரட்டிப்போடுகிறது. அவர்களிடமிருந்து காந்தி பாபு தப்பினானா? மீண்டும் பானுவைச் சந்திக்கும் அவனது வாழ்க்கையில் எப்படியான மாற்றம் நிகழ்ந்தது என்பது கதையின் முடிவு!

காந்தி பாபுவாக நட்டி நடித்திருந்தார். நட்டி எனும் நடராஜ் அடிப்படையில் ஓர் ஒளிப்பதிவாளர். 2002-ல் விஜய் நடித்த யூத் படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமான நட்டி, இந்தி சினிமாவுக்குப் போய், அங்கு ஓர் ஒளிப்பதிவாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். பிளாக் ஃப்ரைடே, ஜப் வி மெட், ராஞ்சனா போன்ற படங்கள் அவரது ஒளிப்பதிவுப் பயணத்தில் குறிப்பிடத்தகுந்தவை. ஒரு நடிகராக 2006-ல் வெளியான ’நாளை’ படத்தில் அறிமுகமானாலும், பின்னர் வேறு பல படங்களில் நடித்திருந்தாலும், சதுரங்க வேட்டைதான் அவரது நடிப்பில் குறிப்பிடத்தகுந்த, தனித்துவமான படமாக நிலைபெற்றிருக்கிறது.

காந்தி பாபு பாத்திரத்துக்கென்றே அளவெடுத்து உருவாக்கியவர் போலிருந்தார் நட்டி. காந்தி பாபுவின் ஏமாற்று வேலைகளைத் தெரிந்துகொண்ட பிறகும், அவனுக்குள் இருக்கும் ஒரு சின்ன வலியைப் புரிந்துகொண்டு அவனை நேசிப்பதோடு, அவனை நல்வழிக்குத் திசை திருப்பும் முக்கியமான பானு எனும் பாத்திரத்தில் இஷாரா நாயர் நடித்திருந்தார். அன்பும், அப்பாவித்தனமும் கொண்ட அந்தப் பாத்திரத்துக்கு அவரது தோற்றமும், பெரிய கண்களும், குரலும் கச்சிதமாகப் பொருந்திப் போயிருந்தன. சுத்தத் தமிழ் பேசும் வித்தியாசமான கூலிப்படைத் தலைவன் கதாபாத்திரத்தில் வி.பி.வளவன் நடித்திருந்தார். மேலும், பொன்வண்ணன், இளவரசு, கவிஞர் பிறைசூடன், தரணி வாசுதேவன் ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தின் ஒளிப்பதிவு இயக்குநராக கே.ஜி.வெங்கடேஷ் பணியாற்றியிருந்தார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். ஷான் அறிமுகமான வாயை மூடிப்பேசவும் படத்தைத் தொடர்ந்து அதே ஆண்டில் இசையமைத்த படம் இந்த சதுரங்கவேட்டை. பரபரப்பான திரைக்கதைக்கேற்ற ஷான் ரோல்டனின் பொருத்தமான பின்னணி இசை படத்துக்குப் பலமாக அமைந்தது. காந்தி பாபுவும், பானுவும் புதிய வாழ்க்கையைத் தேடிப்போகும் போது வருகிறது, மதன் கார்க்கி எழுதி சத்யபிரகாஷ் பாடிய ’முன்னே என் முன்னே’ எனும் அழகிய பாடல். வைரமுத்து எழுதிய ’காதலா’ பாடலை கல்யாணி நாயர் பாடியிருந்தார்.

எஸ்.ஆர் சினிமாஸ் சார்பில் சஞ்சய் ராவல், பிக்சர் ஹவுஸ் சார்பில் இயக்குநர்-நடிகர் மனோபாலா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தனர். கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருந்தவர் எச்.வினோத். தனது முதல் படமான இந்த சதுரங்கவேட்டையிலேயே மிகப்பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றார் வினோத்.

தொடர்ந்து அவர் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று எனும் படமும் பெருவெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைத் தொடர்ந்து இயக்கினார் வினோத். ஆனால் அவை எதுவுமே முதல் இரு படங்களை போல் அமையவில்லை. தனித்துவமான கமர்ஷியல் படங்களைக் கொடுத்து பெயர் பெற்ற வினோத்தையே, மசாலா கமர்ஷியல் படங்கள் விழுங்கிவிட்டன என்றுதான் பார்க்க முடிகிறது. இனியாவது அதிலிருந்து அவர் விடுபட்டு மீண்டு வருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கொடூரமான வளவன் கும்பலிடம் மாட்டிக்கொண்டு, கடுமையாகத் தாக்கப்படுகிறான் காந்தி பாபு. அவர்கள் அவனைக் கொல்லப்போகும் கடைசி நொடியில் ’அடுத்தொரு சீட்டிங் வேலை பார்த்து 50 கோடி ரூபாய் சம்பாதித்துக்கொடுக்கிறேன்’ எனும் டீல் பேசி, அவர்களின் ஆசையைத் தூண்டிவிட்டு உயிர் பிழைக்கிறான் காந்தி பாபு. அப்போது வளவன், ’இவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும், இவனுக்கு நம்பிக்கையான ஆள் யாராவது இருக்கிறார்களா’ என்று கேட்கிறான்.

அப்போது, ஓர் உதவியாளன், ’இவ்வளவு நாள் பணத்தைத்தான் நம்பிக்கொண்டிருந்தான். இப்போது அதுவும் இல்லாத காலி டப்பா இவன். இவனுக்கென்று யாரிருக்கப் போகிறார்கள்?’ என்று கேலி செய்து சிரிக்கிறான். அப்போதுதான், ’உன்னைப்போலவே பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் ஒருவனிடம் நீ மாட்டிக்கிட்டா என்னாவேன்னு நினைச்சுப்பாரு’ என்று சொன்ன ஏசிபியின் வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறான் காந்தி பாபு. அவனது நம்பிக்கைக்கு உரியவராக யாருமே இல்லாத அந்த நிலை அவனது வாழ்க்கையை ஒருமுறை மறுபரிசீலனை செய்யவைக்கிறது. காலம் அவனை மீண்டும் பானுவின் முன்னிறுத்துகிறது. ’அன்னிக்கு உங்க அம்மாவை யாராவது காப்பாற்றியிருந்தால், நீங்க இப்படி ஒரு ஆளா மாறியிருக்கமாட்டீங்கள்ல சார்’ என்று சொல்லி அவள் அவனை மன்னிக்கிறாள். அந்த மன்னிப்பு காந்தி பாபுவை மீண்டும் மனிதனாக்குகிறது. ஏய்ப்பை விடுத்து உழைப்பை நோக்கி நகருகிறான் அவன்.

ஏமாற்றுபவன் புத்திசாலி என்பதால் மட்டுமே நாம் ஏமாற்றப்படுவதில்லை. காந்தி பாபுவை உருவாக்கியது அவனது திறமை மட்டுமல்ல; நமது பேராசையும் கூடத்தான். நாம் பணத்தை எளிதாகப் பெருக்க ஆசைப்படுகிறோம். அதை காந்தி பாபுக்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இருவருக்கும் இடையில் இருப்பது ஒரு பொய்தான். அந்தப் பொய்க்கு உயிர் கொடுப்பது பேராசை. சதுரங்க வேட்டை இந்த மிகப் பழைய சமூகப் பாடத்தைத்தான் நமக்கு நினைவுபடுத்திச் செல்கிறது.!

'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?

விஷால் இயக்கி நடித்த 'மகுடம்' படத்திற்குப் பின், 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது விஷாலின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் செப்... மேலும் பார்க்க

டோரதி: "கார்த்திக் சுப்புராஜ் ஒரு கல்ட் இயக்குநர்.!"- படக்குழுவை பாராட்டிய கன்னட நடிகர் உபேந்திரா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

"மன அழுத்தங்களில் இருந்து விடுபட்ட உணர்வு கிடைத்திருக்கிறது"- நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதென்ன?

'காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ் ‘லவ்’. இதில் அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திர... மேலும் பார்க்க

Ajith: `ரேஸ் முடிந்ததும் படப்பிடிப்பு' - பான் இந்தியா படமாக உருவாகிறதா AK 64?

நடிகர் அஜித்தின் AK 64 என்று ரசிகர்களால் குறிப்பிடப்பட்ட படத்துக்கு 'டேர் டெவில்' என்று பெயர் சூட்டப்பட்டு, ஆடிப்பெருக்கு விசேஷ நாளில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன்வந... மேலும் பார்க்க

டோரதி: 'படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும் நான் கண்டுகொள்ளவில்லை, ஏனென்றால்..!'- கார்த்திக் சுப்புராஜ்

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற 'டோரதி' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (அக.7) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், "நான் நம்பும் இரண்டு விஷயங்களை இந்தப் படம் ... மேலும் பார்க்க

Dorothy: "கார்த்திக் சுப்புராஜோட போன படம் மொக்கையாகத்தான் இருந்துச்சு!" - மிஷ்கின் ஓபன் டாக்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக... மேலும் பார்க்க