செய்திகள் :

சாலமன் பாப்பையா: ' தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு' - பிரபலங்கள் இரங்கல்

post image

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், "படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இதனைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், "சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.

பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.

ஸ்டாலின் - சாலமன் பாப்பையா
ஸ்டாலின் - சாலமன் பாப்பையா

கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.

தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், " தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

``கலங்கி நிற்கிறேன்... ஒரே இருளாக இருப்பது போல இருக்கிறது" - கண்ணீருடன் பாரதி பாஸ்கர்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா அவர்களின் திடீர் மறைவு தமிழ் உலகையும், அவரது ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 90.மதுரை திருமங்கலம் அருக... மேலும் பார்க்க

சாலமன் பாப்பையா: "செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும்..!" - கவிஞர் வைரமுத்து உருக்கம்

பட்டிமன்றம் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று (செப்.11) காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கவிஞ... மேலும் பார்க்க

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே.. விடை பெற்றார் சாலமன் பாப்பையா

அன்பு பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே எனத் தன் காந்தக் குரலால் கால் நூறாண்டுக்கும் மேலாக தமிழ் மக்களைக் கட்டிப்போட்டு வைத்திருந்த ஓய்வுபெற்ற பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உட... மேலும் பார்க்க

சவால்களை வென்று மாணவர்களை உயர்த்திய லலிதா டீச்சரின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

வரலாறு படித்து வரலாறு படைத்த பெண் மருத்துவர் - இந்தியாவின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

'I Miss You' யுகத்தில் கட்டுரை வாசிப்பின் அவசியம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க