செய்திகள் :

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் : தினமும் மூன்று திருக்கோலங்களில் அருள்பாலிக்கும் அம்பிகை!

post image

கேரளத்தில் உள்ள தேவி திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில். அம்பிகையின் அருளைப் பெறுவதற்காக மட்டுமல்லாமல், மனநிலை பாதிப்புகள், தீய சக்திகளின் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தை நாடி வருகிறார்கள். இந்தக் கோயிலின் பின்னணியில் பல புராணக் கதைகளும், செவிவழிச் செய்திகளும், வரலாற்று நம்பிக்கைகளும் நிறைந்திருக்கின்றன.

கேரளத்தில் 108 துர்காலயங்கள், 108 சிவாலயங்கள், 108 சாஸ்தா ஆலயங்கள், விஷ்ணு ஆலயங்கள் ஆகியவற்றைப் பரசுராமர் பிரதிஷ்டை செய்ததாகக் கேரளத்தின் உற்பத்தி புராணங்கள் கூறுகின்றன. கேரளத்தின் பாதுகாப்புக்காகப் பரசுராமர் இத்தகைய ஆலயங்களை நிறுவியதாகச் சொல்லப்படுகிறது. இந்த 108 துர்காலயங்களின் பெயர்களையும் சிறப்புகளையும் எடுத்துரைக்கும் ஒரு துதிப்பாடல் கேரளத்தில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. மாலை வேளையில் விளக்கேற்றி, அந்தப் பாடலைப் பாடி வழிபடுவது ஒரு மரபாகத் தொடர்கிறது. இந்த 108 துர்காலயங்களில் முக்கியமான திருத்தலமாகச் சோட்டானிக்கரை விளங்குகிறது.

சோட்டானிக்கரை என்ற பெயருக்குப் பின்னாலும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஜோதி சொரூபமாக அம்பிகை காட்சி அளிக்கும் திருத்தலம் என்பதால், ஜோதியான கரை என்ற பெயர் மருவி சோட்டானிக்கரை என்றானதாகச் சொல்லப்படுகிறது.

சோட்டானிக்கரை பகவதி அம்மன்

பரசுராமர் பிரதிஷ்டை செய்த ஆலயம்

ஆதியில் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பிகையின் ஆலயமாகச் சோட்டானிக்கரை இருந்திருக்க வேண்டும் என்பது அங்குள்ள துதிப்பாடல்களின் மூலம் தெரியவரும் செய்தி. காலப்போக்கில் அந்தக் கோயில் மறைந்து, அதன் இருப்பிடமே தெரியாத நிலை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப் பகுதியில் கண்ணப்பன் என்ற வேடர் குலத் தலைவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு மகள். மகள்மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த அவன், வனதேவதைகளைப் பிரீதி செய்வதற்காகப் பலி கொடுப்பது உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்து வந்தான்.

ஒருமுறை பலி கொடுப்பதற்காக ஒரு இளம் பசுங்கன்றைக் கொண்டு வந்தான். அதைப் பார்த்த அவனுடைய மகள், அந்தக் கன்றின் மீது அன்பு கொண்டு, அதைக் கொல்லக்கூடாது என்று தந்தையிடம் வாதிட்டாள். அவளுடைய வேண்டுகோளுக்கு இணங்க, அந்தக் கன்றை வளர்க்கத் தொடங்கினான்.

உயிர்களைப் பலியிடுவது தவறு என்ற எண்ணத்தையும் அந்தச் சிறுமி தந்தையிடம் ஏற்படுத்தினாள். ஆனால், எதிர்பாராதவிதமாக ஒருநாள் அந்தச் சிறுமி உடல்நலமின்றி இறந்துபோனாள். அவள் வளர்த்து வந்த கன்றும் காணாமல் போய்விட்டது.

இதனால் மனம் கலங்கிய கண்ணப்பன், அங்கிருந்த பெரியவர்களிடம் இதற்கான காரணத்தைக் கேட்டான். அப்போது, உயிர்களைப் பலியிடும் பாவத்திலிருந்து அவனைத் தடுத்து, நல்வழிப்படுத்துவதற்காகவே அம்பிகை பசுங்கன்றின் வடிவில் வந்து அவனுடைய மகளுக்கு வழிகாட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கண்ணப்பன் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கத்தைக் கைவிட்டு, முறையான வழிபாடுகளை மேற்கொள்ளத் தொடங்கினான் என்கிறார்கள்.

இதற்கிடையில், அந்தப் பகுதியில் புல் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்கள், ஒரு பாறையில் அரிவாளைக் கூர்தீட்டியபோது அதிலிருந்து ரத்தம் பீறிட்டு வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்தச் செய்தி கண்ணப்பனிடம் தெரிவிக்கப்பட்டது.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்

உடனே அங்கிருந்த பெரியவர்களையும் அறிஞர்களையும் அழைத்து வந்து பிரச்னம் பார்த்தபோது, அந்தப் பாறையில் வெளிப்பட்டிருப்பது பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பிகையின் சைதன்யம் என்பது தெரியவந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் அரசரின் துணையுடன் அந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டது என்பது அங்கு வழங்கிவரும் செவிவழிச் செய்தியாகும்.

இந்த ஆலயத்தில் அம்பிகையின் திருமேனி வழக்கமான கற்சிலையாக இல்லாமல், பிரமாண்டமான ருத்ராட்ச வடிவில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் மீது கவசம் சாத்தப்பட்டிருக்கும். சதசத்திர கலசாபிஷேகம் நடைபெறும் நேரத்திலோ, அதிகாலை வேளையிலோ அந்தக் கவசம் இல்லாதபோது அம்பிகையின் உண்மையான திருவுருவத்தைத் தரிசிக்கலாம்.

போகாசாரியர், ஆதிசங்கரர், காகசேரி பட்டத்திரி, வில்வமங்கல சுவாமிகள் உள்ளிட்ட பல மகான்கள் இந்த அம்பிகையைத் தரிசித்துப் பூஜித்திருப்பதாகவும் ஆலய வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இரண்டு சந்நிதிகளே இரண்டு கோயில்களாய்

சோட்டானிக்கரை ஆலயத்தில் மேல்காவு, கீழ்காவு என இரண்டு முக்கியமான சந்நிதிகள் உள்ளன. இரண்டுமே அம்பிகையின் சந்நிதிகள்தாம். மேல்காவு சந்நிதியில் ராஜராஜேஸ்வரி அல்லது துர்க்கை என்ற திருக்கோலத்திலும், கீழ்காவு சந்நிதியில் பத்ரகாளி என்ற திருக்கோலத்திலும் அம்பிகை அருள்பாலிக்கிறாள்.

இரண்டு சந்நிதிகளும் ஒரே ஆலய வளாகத்தில் அமைந்திருந்தாலும் தனித்தனிக் கோயில்களாகவே விளங்குகின்றன. முதலில் மேல்காவு அம்பிகையைத் தரிசித்துவிட்டு, பின்னர் கீழ்காவு சந்நிதிக்குச் சென்று தரிசிப்பது வழக்கம்.

இந்த ஆலயத்துக்கும் கொல்லூர் மூகாம்பிகைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஒரு சுவாரசியமான ஐதிகம் கூறப்படுகிறது.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில்

ஆதிசங்கரருக்கும் மூகாம்பிகைக்கும் உள்ள தொடர்பு

ஆதிசங்கரர் கொடஜாதிரியில் மூகாம்பிகையை நோக்கித் தவம் செய்தபோது, சரஸ்வதி சொரூபமாக விளங்கும் அம்பிகையைத் தன்னுடைய கேரள தேசத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்படி அம்பிகையிடம் வேண்டினார்.

அம்பிகையும் அவருடன் வரச் சம்மதித்தாள். ஆனால், ஒரு நிபந்தனை விதித்தாள். தான் பின்னால் வருவதாகவும், ஆதிசங்கரர் ஒருபோதும் திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும் கூறினாள்.

அதன்படி ஆதிசங்கரர் முன்னால் செல்ல, அம்பிகை பின்னால் வந்துகொண்டிருந்தாள். அப்போது அம்பிகையின் கொலுசுச் சத்தம் திடீரென நின்றுவிட்டது. அம்பிகை வருகிறாளா என்பதை அறிய ஆதிசங்கரர் திரும்பிப் பார்த்தார்.

உடனே அம்பிகை, தான் மூகாம்பிகையை விட்டுப் பிரிந்து வரப்போவதில்லை என்றும், கொடஜாதிரியிலிருந்து இங்கே வந்திருப்பதால் இங்கேயே தங்கப்போவதாகவும் கூறினாள். அதேவேளை, ஆதிசங்கரரின் வேண்டுகோளுக்கு இணங்க, சோட்டானிக்கரையிலும் எழுந்தருளி அருள்புரிவதாக வாக்குக் கொடுத்தாள் என்பது ஐதிகம்.

இதன் காரணமாகவே மூகாம்பிகைக்கும் சோட்டானிக்கரைக்கும் ஒரே மாதிரியான சக்தி மற்றும் வழிபாட்டு நம்பிக்கைகள் இருப்பதாகப் பக்தர்கள் கருதுகிறார்கள். மூகாம்பிகை கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களில் பெரும்பாலானோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோட்டானிக்கரையில் அதிகாலையில் அம்பிகை சரஸ்வதி அம்சமாகவும், நண்பகலில் லட்சுமி அம்சத்துடனும், மாலையில் துர்கை அம்சத்துடனும் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. மூகாம்பிகையிலும் இதேபோன்ற முத்தேவியர் தத்துவம் வழிபாட்டில் இடம்பெற்றுள்ளது.

இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய சோட்டானிக்கரை திருக்கோயிலின் மகிமைகளை விளக்கும் பல நம்பிக்கைக் கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றையும் அறிவோம்.

மகிமைகள் தொடரும்.

திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கற்குடிநாதர்; கவலைகள் தீரும்... ஆயுள் விருத்தி நிச்சயம்!

திருச்சி, உய்யக்கொண்டான் திருமலை, உய்யநாதர் கோயில் பாடல் பெற்ற தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் புனரமைக்கப்பட்ட பழைமையான கோயில். மார்க்கண்டேயரைக் காப... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா;கொடியேற்றத்துடன் ஆரம்பம் | Album

தீபத்திருவிழா கொடியேற்றத்துடன்தீபத்திருவிழா கொடியேற்றத்துடன்தீபத்திருவிழா கொடியேற்றத்துடன்தீபத்திருவிழா கொடியேற்றத்துடன்தீபத்திருவிழா கொடியேற்றத்துடன்தீபத்திருவிழா கொடியேற்றத்துடன்தீபத்திருவிழா கொடியே... மேலும் பார்க்க

சபரிமலை: "முன்பதிவு செய்த தேதியில் வாருங்கள்" - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி ஆனந்த் விளக்கம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலப் பூஜைகளுக்காகக் கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான நேற்று அதிகாலை முதல் புதிய மேல்சாந்திகள் பூஜைகளை நிர்வகித்து வருகின்றனர்... மேலும் பார்க்க

ஈரோடு: திண்டல் முருகன் திருக்கல்யாணம்; காப்பு கட்டி விரதம் இருந்து தரிசனம் செய்த பக்தர்கள் | Photos

ஈரோடு திண்டல் முருகன் கோயில் திருக்கல்யாணம் ஈரோடு திண்டல் முருகன் கோயில் திருக்கல்யாணம் ஈரோடு திண்டல் முருகன் கோயில் திருக்கல்யாணம் ஈரோடு திண்டல் முருகன் கோயில் திருக்கல்யாணம் ஈரோடு திண்டல் முருகன் கோ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கந்தசஷ்டி: திரும்பும் திசையெங்கும் அரோகரா கோஷம்; சூரசம்ஹாரத்தை காண குவிந்த பக்தர்கள்

தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழ... மேலும் பார்க்க

சபரிமலை: பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு; தபால் மூலம் அரவணை அனுப்பவும் வசதி

மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்குத் திறக்கப்பட உள்ளது. சபரிமலையில் பக்தர்களுக்காகப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தி... மேலும் பார்க்க