இருட்டைப் பயன்படுத்தி 4 கொலைகள்! உலகையே அதிர வைத்த லண்டன் தொடர் கொலை வழக்கு - கு...
இருட்டைப் பயன்படுத்தி 4 கொலைகள்! உலகையே அதிர வைத்த லண்டன் தொடர் கொலை வழக்கு - குருதிச் சுவடுகள் 5
1942 பிப்ரவரி மாதம். இரண்டாம் உலகப் போரின் பதற்றம் லண்டன் வீதிகளில் நிரம்பியிருந்தது. ஜெர்மன் போர் விமானங்களின் இரவு நேரத் தாக்குதல்களுக்கு இலக்காகாமல் இருக்க, அரசாங்கம் கடுமையான 'பிளாக்-அவுட்' விதிகளை அமல்படுத்தியிருந்தது. வீதிகளில் விளக்குகள் கிடையாது; வீடுகளின் ஜன்னல்கள் கறுப்புத் துணிகளால் மூடப்பட்டிருக்கும்; வாகனங்களின் முகப்பு விளக்குகள் கூட மங்கலாகவே எரிய வேண்டும். சூரியன் மறைந்ததும் லண்டன் ஒரு கறுப்புக் கடலாக மாறிவிடும்.
மக்கள் ஒருபுறம் வானத்திலிருந்து விழும் குண்டுகளுக்குப் பயந்து கொண்டிருந்தபோது, தரைமட்டத்தில் அந்த இருளுக்குள் ஒரு கொடூர மிருகம் உலாவிக் கொண்டிருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. 1888-ல் லண்டனை நடுங்க வைத்த 'ஜாக் தி ரிப்பருக்குப்' (Jack the Ripper) பிறகு, லண்டன் கண்ட மிக மோசமான தொடர் கொலைகள் வெறும் ஆறே நாட்களில் அரங்கேறின.

யார் அந்தக் கொலையாளி?
கொலையாளியின் பெயர் கார்டன் பிரடெரிக் கம்மின்ஸ் (Gordon Frederick Cummins). 1914-ல் இங்கிலாந்தின் யார்க் நகரில் ஒரு அரசு ஊழியரின் மகனாகப் பிறந்தவன். 28 வயதில் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையில் ஒரு 'லீடிங் ஏர்கிராஃப்ட்மேன்' ஆகப் பணியாற்றி வந்தான். விமானப்படை சீருடையில் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், கண்ணியமானவனாகவும் தோற்றமளித்தான். சக வீரர்கள் அவனை "தி கவுண்ட்" (The Count) என்றும் "தி டியூக்" (The Duke) என்றும் கேலியாக அழைப்பார்கள். காரணம், தான் ஒரு உயர்குடிப் பிரபுவின் வாரிசு என்று அவன் அளந்துவிடும் பொய்கள்!
போர்க்காலத்தில் ராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள் மக்களால் தேசத்தின் கதாநாயகர்களாக மதிக்கப்பட்டனர். இரவு நேரங்களில் சாதாரண மக்களை விசாரிக்கும் காவலர்கள் கூட, சீருடையில் இருக்கும் இவனைச் சந்தேகப்படாமல் விட்டுவிடுவார்கள். இதுவே அவனுக்கு மிகப்பெரிய கவசமாக அமைந்தது. 1936-ல் மார்ஜோரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, வெளி உலகிற்கு ஒரு நல்ல கணவனாகவும் நடித்து வந்தான்.
தொடர் கொலைகள்!
1942 பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களில் இவன் செய்த கொலைகளால் லண்டன் நகரமே உறைந்து போனது.
பிப்ரவரி 9, எவ்லின் ஹாமில்டன் என்பவர் லண்டனுக்கு ஒரு நாள் பயணமாக வந்திருந்தார். இரவு உணவிற்குப் பின் ஹோட்டலுக்குத் திரும்பும்போது கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டு, ஒரு வான்வழித் தாக்குதல் பதுங்கு குழியில் வீசப்பட்டார்.
பிப்ரவரி 10, எவ்லின் ஓட்லி என்ற முன்னாள் நடிகை, தனது அறையிலேயே கொடூரமாகக் கழுத்து நெரிக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
பிப்ரவரி 11, மார்கரெட் புளோரன்ஸ் லோவ் என்பவர், வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் பட்டுக் காலுறையால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் உடல் சிதைக்கப்பட்டிருந்தார்.
பிப்ரவரி 12, டோரிஸ் ஜோவானெட் என்பவர் பேடிங்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிலேயே கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்.

சிக்க வைத்த ஒரு சிறிய தவறு
நான்கு கொலைகள் அடுத்தடுத்து நடந்தும், கொலையாளி யார் என்ற சிறு தடயம் கூட இல்லாமல் காவல்துறை திணறியது. அன்றைய பத்திரிகைகள் அனைத்தும் "பிளாக்-அவுட் கொலையாளி நடமாடுகிறான்" எனத் தலைப்புச் செய்திகள் வெளியிட்டு மக்களை எச்சரித்தன. ஆனால், குற்றவாளி எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் ஒரு சிறிய தடயத்தை விட்டுச் செல்வான் என்பதற்கு ஏற்ப, பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கம்மின்ஸ் செய்த இரு செயல்கள் அவனைக் காட்டிக் கொடுத்தன.
பிப்ரவரி 12 இரவு டோரிஸைக் கொன்ற கையோடு, கேத்தரின் என்ற பெண்ணையும் தாக்க முயன்றான். ஆனால், அவள் பலமாகக் கத்திப் போராடவே, பயந்து போன கம்மின்ஸ் அங்கிருந்து தப்பியோடினான். அவசரத்தில் தனது இடுப்பு பெல்ட்டை அங்கேயே விட்டுச் சென்றான். பிப்ரவரி 14 இரவு, வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள ஒரு இருண்ட வாசலில் கிரெட்டா ஹேவுட் என்ற பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியே வந்த ஒரு டெலிவரி பையன் சத்தம் கேட்டு டார்ச் லைட்டை அடித்தான். மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றத்தில் கம்மின்ஸ் ஓடிவிட்டான். அந்தப் பதற்றத்தில் கம்மின்ஸ் அங்கேயே விட்டுச் சென்ற விமானப்படை கேஸ் மாஸ்க் பை தான் மொத்த வழக்கையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. அந்தப் பையில் அவனது விமானப்படை அடையாள எண்ணான "525987" பொறிக்கப்பட்டிருந்தது!
விசாரணையும் தண்டனையும்
பிப்ரவரி 16-ம் தேதி காவல்துறையினர் கம்மின்ஸைக் கைது செய்தனர். அவனது அறையில் சோதனையிட்டபோது, கொல்லப்பட்ட பெண்களிடம் இருந்து திருடப்பட்ட சிகரெட் பெட்டி, தங்க வாட்ச் மற்றும் பேனா ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும், எவ்லின் ஓட்லியின் வீட்டிலிருந்த பொருட்களில் பதிந்திருந்த கைரேகைகள் கம்மின்ஸின் கைரேகையுடன் 100% பொருந்தின. 1942 ஏப்ரல் மாதம் லண்டனின் புகழ்பெற்ற ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. நீதிமன்றத்தில் கூட கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி, தனது மனைவியைப் பார்த்துச் சிரித்தபடியும், கையசைத்தபடியும் நின்றான் கம்மின்ஸ்.
ஆனால், அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அவனுக்கு எதிராக வலுவாக இருந்தன. நடுவர் மன்றம் வெறும் 35 நிமிடங்களில் அவனைக் குற்றவாளி என அறிவித்தது. 1942 ஜூன் 25-ஆம் தேதி, லண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் கார்டன் கம்மின்ஸ் தூக்கிலிடப்பட்டான். விதியின் விளையாட்டு என்னவென்றால், அவன் தூக்கிலிடப்பட்ட சரியான நேரத்தில், லண்டன் நகரில் ஜெர்மன் விமானத் தாக்குதலுக்கான 'ஏர் ரெய்டு சைரன்' ஒலித்துக் கொண்டிருந்தது! எந்த இருளையும் போர் அபாயத்தையும் பயன்படுத்தி அவன் அப்பாவிப் பெண்களை வேட்டையாடினானோ, அதே அபாய ஒலியின் பின்னணியில் அவனது உயிர் பிரிந்தது.

கார்டன் கம்மின்ஸின் வழக்கு குற்றவியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. போர்க்காலச் சூழலையும், தேசபக்தி மிக்க சீருடையையும் ஒரு கொடிய குற்றவாளி எப்படித் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு கசப்பான உதாரணம். அதே சமயம், கைரேகைத் தடயவியல் மற்றும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையின் துரிதமான செயல்பாடு ஆகியவை, அவன் மேலும் பல உயிர்களைப் பறிப்பதற்கு முன்பே அந்த `இருளின் அரக்கனை' வீழ்த்தின.




















