செய்திகள் :

காவிரி – மேட்டூர் திட்டம்: பங்களித்து, சாத்தியமாக்கிய முக்கிய ஆளுமைகள் | மேட்டூர் அணை ஓசை 45

post image

1. கர்னல். W. M. எல்லீஸ்., C.I.E.

முழுப்பெயர்: ELLIS, William Montague. ராயல் இன்ஜினியர். வடிவமைப்பாளர். இந்திய பொதுப்பணித்துறையில் முதலில் உதவி பொறியாளராக 1884-ம் ஆண்டு ஜூலையில் பணியில் சேர்ந்தார். 1895-ல் ஏப்ரல் மாதம் செயற்பொறியாளராக பதவி உயர்வு. கண்காணிப்புப் பொறியாளராக 1909-ம் வருடம் ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். 1913 டிசம்பரில் பாசனத்துறை தலைமை பொறியாளராகவும், அரசு செயலராகவும், மெட்ராஸ் மாகாண அரசில் பொறுப்பேற்றுக் கொண்டார். காவிரி – மேட்டூர் திட்டத்திற்கான திட்டமிடல், இவர் தலைமையில் முதலில் நடைபெற்றது.

கர்னல். W. M. எல்லீஸ்

மேட்டூரில் உபரி நீர் திறப்பு அமைப்பு என்ற “16 கண்பாலம்” (16 SLUICES BRIDGE) இவரது வடிவமைப்பு என்பதால், இந்தப் பாலம் இவரது பெயரில் "எல்லீஸ் பாலம்" என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது. பாசனத்துறையில் பெரும் புகழ் மிக்கவராக விளங்கினார், கர்னல் எல்லீஸ். 1917 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

2. சர். C. T. முல்லிங்ஸ், தலைமைப் பொறியாளர், காவிரி – மேட்டூர் அணை திட்டம்.

இவரது முழுப்பெயர் Sir. Clement Tudway. Mullings. C.S.I.

1926 ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி மதியம் வரை சென்னை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக பணியாற்றினார். விடுமுறையில் இங்கிலாந்து சென்று நவம்பர் மாதம் 9-ம்தேதி திரும்பி வந்து நீர்ப்பாசனத்திற்கான தலைமைப் பொறியாளர் பதவியை ஏற்றுக்கொண்டார். பிறந்தது: 9 ஏப்ரல், 1874. Indian service of Engineer. Royal Institute of Engineering College ல் பயிற்சி எடுத்தவர். முதன்முதலாக 1895, அக்டோபர் மாதம் உதவி பொறியாளராக வேலையில் சேர்ந்தார்.

1906ல் அக்டோபர் மாதம் செயற்பொறியாளர் பதவிக்கு உயர்ந்தார்.1917ல் பொறுப்பு கண்காணிப்பு பொறியாளராகவும், 1920 ஏப்ரலில் கண்காணிப்பு பொறியாளராகவும் பதவி உயர்வு அடைந்தார்.

பொதுப்பணித் துறை அரசு செயலராக 1921 ஆகஸ்டு மாதத்திலிருந்து பணிபுரிந்தார். பொறுப்பு தலைமைப் பொறியாளராக 1925 மே மாதத்திலிருந்து, 1926 ஏப்ரலில் நிரந்தர தலைமைப் பொறியாளராக, பிறகு காவிரி- மேட்டூர் திட்டத்திற்கான “ஆலோசனை தலைமைப் பொறியாளர்” என்ற கௌரவமிக்க பதவியில் அமர்ந்து 1927 மே மாதம் முதல் 1931 பிப்ரவரி மாதம் வரை அந்த பொறுப்பு மிக்க பதவியில் பணியாற்றினார்.

சர். C. T. முல்லிங்ஸ்

1929-ல் பணிஓய்வு பெற்றாலும் சிறப்பு ஆலோசகராக 1931 வரை மேட்டூரில் பணிபுரிந்த பெருமை இவருக்கு உண்டு. இவரது கூர்மையான அறிவு, அனுபவம் ஆகச்சிறந்த மேட்டூர் அணை கட்டுவதற்கு பெருமளவில் உதவிபுரிந்தது. துணிச்சலான முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்து, செலவுகளை குறைத்து சிக்கனமாக அணையை கட்டி முடிக்க தனது பெரும் பங்களிப்பை செய்தார்.

3. லெப்டினென்ட் கர்னல் தி ரைட் ஹானரபிள் சர். ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லி., Sir GEORGE FREDERICK STANLEY.

P.C., G.C.I.E., C.M.G. மெட்ராஸ் மாகாண கவர்னர். பிறந்த தேதி: 14 அக்டோபர் 1872.

படித்தது: Wellington & Woolwich. Entered R.H.A 1893. C.M.G. 1916-ல் முடித்தார். மேன்மை தாங்கிய ராணியின் மாளிகையில் 1919ல் பொறுப்பு வகித்தார். போர் அலுவலகத்தில் பொருளாதார செயலாளராக 1921-1922ல் பணிபுரிந்தார். பார்லிமென்டில் உள்துறை செயலாளராக 1922-1923 கால கட்டத்தில் பணிபுரிந்தார். ஓய்வூதிய அமைச்சகத்தில் பார்லிமென்ட் செயலாளராக, நவம்பர் 1924 முதல் 1929 ஜூன் வரை பணியாற்றினார். மெட்ராஸ் மாகாண கவர்னராக 12 நவம்பர் 1929ல் நியமனம் செய்யப்பட்டார்.

இந்தப் பதவியில் இருந்தபோது தான் காவிரி-மேட்டூர் அணை திறப்பு விழாவில் தனது மனைவியுடன் கலந்து கொண்டு இவர் அணையை திறந்து வைத்தார். இவரது பெயரில்தான் மேட்டூர் அணை "ஸ்டான்லி டேம்" என்ற பெயர் பெற்று விளங்குகிறது. இவரின் மனைவி பெயர் “லேடி பீட்ரிக்ஸ் ஸ்டான்லி”. மேட்டூர் அணையில் அமைந்துள்ள பூங்காவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

4. ஹார்ட், வின்சென்ட் . A.M.I.C.E. Indian service Engineer.

HART, VINCENT. பிறந்தது. 23 ஜூன் 1881. 1903-ம் வருடம் அக்டோபர் மாதம் 1ம்தேதி உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தார். மெட்ராஸில் பணி! 1911 அக்டோபரில் செயற்பொறியாளர் பதவி உயர்வு! 1925-ல் கண்காணிப்பு பொறியாளராக பொறுப்பு பதவி. 1929-ல் அப்பதவியில் நிரந்தரம் ஆக்கப்பட்டார். காவிரி-மேட்டூர் திட்டத்தின் தலைமைப் பொறியாளராக (Engineer in Chief) 1930 ஏப்ரலில் பதவியேற்றார். 1934ல் மெட்ராஸ் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக பதவி உயர்வு பெற்றார்.

5.C. G. பார்பர்.

முழுப்பெயர்: Barber, Charles Gordon. M.B.E., A.C.G.I. Indian service of Engineer.

பிறந்த தேதி: 01. அக்டோபர் 1885. உதவிப் பொறியாளராக 01 அக்டோபர் 1908-ல் வேலையில் சேர்ந்தார். 1919 மே மாதம் செயற்பொறியாளர் பதவி உயர்வு.

Superindent C.G. Barber & Others

கண்காணிப்புப் பொறியாளர்- பொறுப்பு பதவியை 1933 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வகித்தார். இவர் இந்தப் பதவியில் இருக்கும் போது தான் காவிரி-மேட்டூர் நீர்த்தேக்கம் துவக்க விழா மேட்டூரில் நடைபெற்றது. இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தையும் “சூப்பரிண்டெண்டன்ட் ஆஃப் ஒர்க்ஸ்” என்ற பதவியிலிருந்து திறம்பட நிர்வகித்தார்.

மேட்டூர் அணை கட்ட ஆரம்பித்த போதிலிருந்து மேட்டூரில் பணிபுரிந்தவர். இந்தத் திட்டம் குறித்த குறிப்புப் புத்தகமான "ஹிஸ்டரி ஆஃப் காவிரி-மேட்டூர் ப்ராஜெக்ட்" என்ற குறிப்புப் புத்தகத்தை எழுதியவர்.

6. ஹெச். ஏ. இர்வின்

டிசம்பர் 1895 முதல் ஆகஸ்ட் 1929 வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர்.

ஆஸ்திரேலியாவுக்கு போர் சேவைக்குச் சென்றார்—குதிரைகள் வாங்க. குதிரைகளை பிரான்சுக்கு கொண்டு சென்றார், பொருளாதாரத்தில் கமிஷன் பெற்று பின்னர் ராயல் இன்ஜினியர்ஸுக்கு மாற்றப்பட்டார். 21 ஜனவரி 1919 அன்று பணி நீக்கம் செய்யப்பட்டார். மார்ச் 1919 இல் இந்தியா திரும்பினார்.

வன பயன்பாட்டு அதிகாரியாக, மெட்ராஸ் அரசாங்கத்தின் கீழ் பணி புரிந்தார். ஆகஸ்ட் 1929 காவிரி-மேட்டூர் அணை திட்டத்தில் சேர்ந்தார்.

திரு.இர்வின் மற்றும் காம்பெல் ஆகியோரின் சேவைகள் குறித்து ஒரு முக்கிய பிரச்சினையில் மெட்ராஸ் மாகாண சட்டமன்றத்தில் ஒருமுறை கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது.

திவான்பகதூர் ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார் அவர்களால், மேட்டூர் திட்டத்தின் ‘தற்காலிக நிர்வாக பொறியாளர்களாக’ நியமிக்கப்பட்ட திரு. இர்வின் மற்றும் காம்பெல் ஆகியோரின் சேவைகளுக்கு ஏன் நியமனங்கள் வழங்கப்பட்டன? துறையில் அவர்களின் பணி திருப்திகரமாக கருதப்பட்டதா? அவர்களின் வயது என்ன? மேட்டூர் திட்டத்தில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு 55 என்ற உயர்ந்தபட்ச வயது விதியை அரசாங்கம் செயல்படுத்தாது என்று எண்ணம் உள்ளதா? என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசு அளித்த பதில் இவ்வாறு இருந்தது.

“பொதுப்பணித் துறையில் இருவரின் பணியும் திருப்திகரமாக இருந்தது. இருவரும் பொதுப்பணித்துறையில் நியமிக்கப்பட்ட தேதியில் 54 வயதுடையவர்களாக இருந்தனர். அவர்கள் மருத்துவரால் ஒவ்வொரு ஆண்டும் மேலும் சேவைக்கு தகுதியானவர்கள் என்று சான்றளிக்கப்பட்டால், அவர்களின் விஷயத்தில் 55 வயது விதியை செயல்படுத்த திட்டமிடப்படவில்லை என்ற அளவில் அவர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது”. அதேசமயம், மேட்டூர் திட்டத்தில் இர்வின் முக்கியப் பங்காற்றினார் என்பதும் தரவுகள் காட்டும் உண்மை.

7. டெளலி, ஃபிரான்சிஸ் மைக்கேல். DOWLEY, FRANCIS MICHAEL. A.M.I.C.E

INDIAN SERVICE OF ENGINEER. தலைமை பொறியாளர், மெட்ராஸ்.

பிறந்தது- 29 செப்டம்பர் 1885. 1907 ஜனவரி 1-ம் தேதி உதவிப்பொறியாளராக வேலையில் சேர்ந்தார். 1915 ஜனவரியில் செயற்பொறியாளர் ஆனார். ஜூன் 1915-லிருந்து ஜூலை 1920 வரை ராணுவத்தில் பங்களிப்பு. காவிரி-மேட்டூர் திட்டத்தில் பொறுப்பு அதிகாரியாக 1929-ம் வருடம் ஜூலையிலிருந்து பணிபுரிந்தார்.1934-ல் கண்காணிப்புப்பொறியாளராக பதவி உயர்வு! 1936-ல் தலைமைப் பொறியாளராக பதவியேற்றார்.

சர். கிளமென்ட் முல்லிங்ஸ் பிற பொறியாளர்களுடன் (இடது பக்கத்திலிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர்)

8. ஏ. எச். எஸ். காம்பெல்

மே 1909 முதல் ஜூலை 1915 வரை மெட்ராஸ் பொதுப்பணித் துறையில் தற்காலிக பொறியாளராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் அவர் காவிரி நீர்த்தேக்கத்திட்டம் விசாரணையில் ஒரு வருடம் பணியாற்றினார். பின்னர் மேற்கு கடற்கரை பிரிவு மற்றும் கொச்சின் துறைமுகப் பணிகளில் நிர்வாக பொறியாளராக பணியாற்றினார்.1915—1920 காலகட்டத்தில் ராயல் இன்ஜினியர்ஸில் பணியாற்றி ,ஃபிளாண்டர்ஸ், எகிப்து மற்றும் மெசபடோமியாவில் சேவை செய்து மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

ஜூன் 1916 முதல் நவம்பர் 1916 வரை புகழ்பெற்ற சர். ஜார்ஜ் புகானானின் கீழ், துறைமுக மற்றும் நதி பாதுகாப்புப் பணிகளில் பணியாற்றினார். 1921—1923-ல் பொறியியலில் தனியார் நடைமுறையில் ஈடுபட்டார். 1924—1927. கூட்டாட்சி மாநிலங்களின் பொதுப்பணித் துறையில் தற்காலிக நிர்வாக பொறியாளராக பணியமர்த்தப்பட்டார். மேட்டூர் திட்டத்தில் பணிபுரிந்தார்

9. கோலன் டொனால்டு வில்லியம். GOLLAN DONALD WILLIAM. A.M.I.C.E

செயற்பொறியாளர், மெட்ராஸ்.

அக்டோபர் 1-ம்தேதி 1910-ல் உதவி பொறியாளராக பணியில் சேர்ந்தவர், 1918- அக்டோபரில் செயற் பொறியாளராக பதவி உயர்வு பெற்று காவிரி திட்டத்தில் பங்கு பெற்றார்.

10. மெக்கே. MACKAY. T.I.S. (THOMAS IAN SUTHERLAND) B.Sc., A.M, I.C.E., INDIAN SERVICE OF ENGINEER.

1912-ல் அக்டோபர் 1-ம் தேதி உதவி பொறியாளராக பணியில் சேர்ந்து, 1921-அக்டோபர் மாதம் செயற் பொறியாளராக பதவி உயர்வு பெற்று இத்திட்டத்தில் பணியாற்றினார்.

11. டர்னர். வில்லியம் ஹென்றி. TURNER WILLIAM HENRY. B.Sc., A.M.I.M.E. INDIAN SERVICE OF ENGINEER.

1919 அக்டோபர் 1-ம் தேதி முதல் பணி. மே, 1920-ல் உதவிப் பொறியாளர் பதவி, 1925-ல் உதவி செயற் பொறியாளராக பதவி உயர்வு பெற்று மேட்டூர் திட்டத்தில் பணியாற்றினார்.

12. திரு. ஜே. சி. டால்டன், (J. C. Dalton) பட்டறை மேற்பார்வையாளர்,

முன்பு மாஸ்ஸே & கோ மற்றும் ஆஸ்திரேலியா இன்னபிற இடங்களிலும் நிறுவனத்தில் பணியாற்றியவர். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் கட்டிடங்கள், இயந்திரங்கள் மற்றும் கனரக பொறியியல் பணிகளின் அமைப்பில் பரந்த அனுபவம் உள்ளவர். பொது இயந்திர பொறியியல் பணியிலும் தேர்ச்சி பெற்றவர்.

13. டௌலி பிரான்ஸிஸ் மைக்கேல். DOWLEY, FRANCIS MICHAEL . A.M.I.C.E

(INDIAN SERVICE OF ENGINEER). மெட்ராஸ் மாகாண தலைமைப் பொறியாளர்.

1907 ஜனவரி 1-ம்தேதி உதவிப் பொறியாளராக சேர்ந்தார். 1915-ல் செயற் பொறியாளர் பதவி. 1915 முதல் 1920 வரை ராணுவப்பணி. பிறகு தலைமைப் பொறியாளராக மெட்ராஸில் பணிபுரிந்து மேட்டூர் திட்டத்தில் பங்களிப்பு செய்தார்.

14. ஹென்ஸா லூயிஸ், HENSHAW LEWIS., A.M.I

மெட்ராஸ் மாகாண எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்தார். 1921 மார்ச் 29-லிருந்து மேட்டூர் திட்டத்தில் பணிபுரிந்தார்.

15. சர் ஆர்தர் காட்டன்

1830-ல் தனது 27 வது வயதில் கல்லணையை புனரமைப்பு செய்து விரிவுபடுத்தி இன்றைய காவிரி டெல்டாவை நெற்களஞ்சியமாக மாற்றிய சிறப்புமிகு “நீர்ப் பாசனத் தந்தை” என்னும் போற்றுதலுக்குரியவர் இவர்.

சர். ஆர்தர் காட்டன்

1936-ல் முக்கொம்பில் மேலணை கட்டியவர். 1840-ல் அணைக்கரையில் கீழணை கட்டி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டிற்கு வடிவமைப்பு செய்தார். 1822 கப்பல் போக்குவரத்திற்காக “பாம்பன் நீரிணை” பணிகளை மேற்கொண்டார். வீராணம் உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான ஏரிகளை புனரமைப்பு செய்தவர். 1837-ல் சென்னை துறைமுகத்தின் துவக்க கால பணிகள் மற்றும் கடல் அரிப்பிலிருந்து காக்க பாறைகளை கொண்டு பாதுகாப்பு அமைத்தவர்.

1853-ல் மெட்ராஸ் பொதுப்பணித்துறையின் முதல் தலைமைப் பொறியாளராக பதவியேற்றார். 1849-ல் கிருஷ்ணா நதியின் குறுக்கே பெசவாடாவில் அணை வடிவமைப்பு செய்து அது தற்போது “பிரகாசம் பேரேஜ்” என்று அழைக்கப்படுகிறது. 1852-ல் கோதாவரியின் குறுக்கே ராஜமுந்திரி பகுதியில் தவளேஸ்வரத்தில் மிகப் பிரம்மாண்ட அணையை கட்டி ஆந்திர மாநிலத்தை நெற்களஞ்சியமாக மாற்றியவர். துங்கபத்ரா நதியில் கால்வாய்கள் அமைப்பதிலும், மத்திய பிரதேசத்தில் சோனு நதியில் பாசன திட்டத்தை வடிவமைப்பதிலும் பங்காற்றியவர். ஒரிசாவின் நீர்ப்பாசன திட்டங்களை வழங்கியவரும் இவரே. இந்திய நதிகளை இணைப்பதற்கான திட்டங்களை முதன் முதலில் வழங்கியதோடு இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிகளை உருவாக்கியவர். நவீன இந்தியாவிற்கு பாசன வசதியை ஏற்படுத்தித் தந்து நமது மண்ணையும் மக்களையும் நேசித்த “சர் ஆர்தர் காட்டன்" பெரும் போற்றுதலுக்குரியவர். பெரும் சாதனையாளர்!

பிரிட்டிஷ் அதிகாரிகளின் விவரங்கள்

1. கோஷன், விஸ்கவுண்ட், (GOSCHEN, VISCOUNT)

மெட்ராஸ் கவர்னராக பதவி வகித்தவர். 1924-ல் காவிரி-மேட்டூர் அணை திட்டத்திற்கான திறப்புவிழாவில் அடிக்கல் நாட்டியவர் இவர் தான். ஆக்ஸ்போர்டில் RUGBY AND BALLIOL காலேஜில் படித்தார். 1895 – 1905-ல் பிரிட்டனில் எம்.பியாக பதவியில் இருந்தவர். 1918-ல் விவசாயத் துறையின் இணை பாராளுமன்ற செயல் வாரியத்தில் பணிபுரிந்தார். 1924 ஏப்ரல் 14-ம் தேதி முதல் மெட்ராஸ் மாகாண கவர்னராக பதவியேற்றார். 1925-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள், மேட்டூர் அணை அடிக்கல் நாட்டு விழாவில் அடிக்கல் நாட்டி உரையாற்றியதன் மூலம் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் கலந்து கொண்ட பெருமை கொண்டவர் ஆனார்.

2. பட்லர், மௌரீஸ். BUTLER, MAURICE – இந்திய நிதிப் பிரிவு அக்கௌன்டன்ட் ஜெனரல். 1909 டிசம்பர் மாதம் 7-ம்தேதி பணியில் சேர்ந்தார். மே 1911-ல் உதவி அக்கௌன்டன்ட் ஜெனரலாக பதவியேற்பு. 1917 முதல் 1918 வரை இந்திய அலுவலக பணியும், படைக்கலங்கள் அமைச்சகத்திலும் பணிபுரிந்தார். 1919-ல், நிதி கணக்குகள் குறித்து ஆய்வாளர் பணி. 1927-ல் வங்காளத்தில் அக்கௌண்டண்ட் ஜெனரலாக பதவி உயர்வு. 1928-ல் இந்திய கிழக்கு பிராந்தியத்தில் ராணுவ ஆய்வுக்கான இயக்குநராக பொறுப்பு! மேட்டூர் திட்ட ஒப்புதல் வழங்கும் காலங்களில் இந்திய அரசின் கீழ் பணிபுரிந்து அதற்கான நேரடி பணிகளை செயல்படுத்தியவர்.

பொறியாளர்கள் குழு

3. AYG கேம்ப்பெல். CAMPBELL, ARCHIBALD YOUNG GIBBS. C.S.I., C.I.E., C.B.E., B.A

மெட்ராஸ் மாகாண அரசின் தலைமைச் செயலாளர். பிறந்தது 18 மே மாதம் 1872. கேம்பிரிட்ஜில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் படிப்பு. 1895-ல் பிரிட்டனில் பணி நியமனம். 1896 டிசம்பர் மாதம் 3-ம் தேதி இந்தியா வந்து மெட்ராஸில் உதவி கலெக்டர் மற்றும் மேஜிஸ்டிரேட்டாக பதவியேற்றார். 1903-ல் அரசின் செயலராக பதவி வகித்தார். 1906 மே மாதம் மெட்ராஸ் அரசின் தனிச்செயலராக (PRIVATE SECRETARY) பதவியேற்பு. 1911-ல் துணை கலெக்டராகவும், 1912-ல் இணை மாஜிஸ்டிரேட்டாகவும் பதவி உயர்வு. மெட்ராஸ் கார்ப்பரேஷனில் தற்காலிக தலைவராகவும், இந்திய எடை மற்றும் அளவீட்டு துறையில் உறுப்பினர் மற்றும் மாவட்ட மேஜிஸ்டிரேட்டாக பதவி புரிந்தார்.

1916-ல் பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணி. மெட்ராஸ் தொழிற்சாலைகளுக்கான இயக்குநராக 1919-ல் பணி. 1924 வரை பல்வேறு பணிகளில் பணிபுரிந்து, பின்னர் நிதி வருவாய் செயலராகவும், தலைமைச் செயலாளராகவும் பதவி வகித்தார். மேட்டூர் திட்டம் செயல்படுத்தப்படும் போது 1926, 1927, 1928-ம் ஆண்டுகளில் பொறுப்புமிக்க கவர்னரின் எக்ஸிகியூட்டிவ் மெம்பராக பணி புரிந்தார்.

4. ஹாரிஸ் பிரெயின் ஆல்ஃபிரெட்: (தணிக்கை அதிகாரி) HARRIS, BRYAN ALFRED

பிறந்தது- 11 ஜூன் 1890. பணியில் 1908ல் ஜூலை மாதம் 30 அன்று உதவி பரிசோதகராக சேர்ந்தார். உதவி அக்கவுண்டன்ட் ஜெனரலாக ஜனவரி 1915-ல் பொறுப்பேற்றார்.

பிரிட்டிஷ் பொறியாளர்கள்

1924 ஏப்ரலில் உத்தரப்பிரதேசத்தில் டெபுடி அக்கவுண்டன்ட் ஜெனரலாக பொறுப்பேற்பு! மத்திய வருவாய் பிரிவில் 1925-ம் ஆண்டு அக்டோபரில் சேர்ந்தார். மெட்ராஸ் கிளையில் மார்ச் 1927-ல் பொறுப்பேற்றார். 1927 டிசம்பரில் காவிரி-மேட்டூர் திட்டத்தின் "தணிக்கை அதிகாரியாக” பொறுப்பேற்றார். 1934-ம் வருடம் பிப்ரவரி மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

மேற்கண்ட பிரிட்டிஷ் பொறியாளர்கள் மட்டுமன்றி இந்திய பொறியாளர்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் தங்கள் பங்களிப்பை மேட்டூர் அணை கட்டுமானத்திற்கு நல்கியுள்ளனர். இந்திய பொறியாளர்களின் வாழ்க்கை விவரங்கள் நமக்கு கிட்டவில்லை அல்லது தேடலை இன்னும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

பிரிட்டிஷ் பொறியாளர்கள்

அணையின் மேல்புறத்தில் அமைந்த தடுப்புச் சுவரில் 1934-ம் வருடம் ஜூலை மாதம் 14ம் தேதி கடைசி கல்லை வைத்து சம்பிரதாயமாக அணை வேலைகளை முடித்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து நாம் ஏற்கனவே முன் அத்தியாயத்தில் வாசித்து அறிந்துள்ளோம். இதன் மூலம் அணை கட்டுமானம் முடியும் கடைசி தருணத்துக்கு நாம் வந்துள்ளோம்.

எனில், அணை திறப்பு விழா என்ற சம்பிரதாய நிகழ்ச்சி நடைபெற்றிருக்க வேண்டுமே என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றுமல்லவா? ஆம்! திறப்பு விழா நடைபெற்றது 1934-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ம் தேதி அந்த பொன்னாள்!

அணை கட்டுமானம் தோராயமாக 1934 -ம் வருடம் ஜூலை மாதம் முடிவடைந்து விடும் என்று அறிந்த பிறகு, இந்த திட்டத்தின் திறப்பு விழா குறித்த முன்னேற்பாடுகள் முன்பே திட்டமிட ஆரம்பிக்கப்பட்டன! இந்தத் திறப்பு விழாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றுதான் கூறவேண்டும்! ஒரு மாபெரும் அணை திட்டம் செயல்பாட்டுக்கு வருவதால் இதன் எதிர்பார்ப்பு பல மடங்கு பெரியதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மெட்ராஸ் மாகாண அரசு கருதியது. எனவே, சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்தது.

காட்சிக் கூடம். திறப்பு விழா நடந்த இடம்

இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணும் விழாவை ஒட்டி அணையின் இடது புறக்கரையில், மலைக்குன்றின் மேற்புறத்தில் ஒரு காட்சிக் கூடமும், காவிரி ஆற்றின் மேற்குப் புறமாக அணையை ஒட்டிய பகுதியில், ஒரு அழகிய பூங்காவையும் நிர்மாணிப்பதாக முடிவு செய்யப்பட்டது. காட்சிக் கூடம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்வதற்கு முன்பு அங்கிருந்து பார்க்கும் போது கழுகு பார்வையில் முழு அணையும், தேங்கி நிற்கும் முழு அணையின் நீர்ப்பரப்பும், உபரி நீர் வெளியேறும் "எல்லீஸ் பாலம்" , தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களையும் ஒட்டுமொத்தமாக காணும் வகையில் உயரமான இடத்தில் அமைய வேண்டும் என்று பொருத்தமான இடம் ஒன்று தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடத்திற்கு பெயர் "முல்லிங்க்ஸ் முனை". (MULLINGS POINT). இப்படி பெயர் வைத்து அழைத்ததற்கு ஒரு காரணமும் இருந்தது. திரு.முல்லிங்ஸ், தலைமைப் பொறியாளராக பணிபுரிந்த போது, (Engineer in Chief) மாலை நேரங்களில் அந்த இடத்தில் இருந்து தான் கட்டுமானத்தை பார்வையிடுவதாக கூறப்பட்டது. அந்த ஒரு இடத்திலிருந்து ஒட்டுமொத்த திட்ட நடவடிக்கைகளை முல்லிங்ஸ் கண்காணிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

மிகவும் சூடான தட்பவெப்ப நிலை நிலவினாலும் எப்போதும் குளிர்ந்த காற்று வீசும் அந்த மலைக்குன்று, "காட்சிக் கூடம்" அமைவதற்கு மிகப் பொருத்தமான இடமாக அமையப் பெற்றது.

இந்த காட்சிக் கூடம் அமைந்த மலைக்குன்று பெரிய பெரிய அளவிலான கற்பாறைகள் கொண்டதாக இருந்ததால், இந்த கூடத்திற்கு தேவையான கற்கள் அங்கிருந்தே வெட்டி எடுக்கப்பட்டு கட்டப்பட்டது.

பெயர்கள் பொறித்த கல்வெட்டு

அந்த குன்றின் மேல் பாகம் பெரிய அளவில் சமப்படுத்தப்பட்டு, அந்த இடத்தில் திறப்பு விழா நடத்தும் போது நிறைய நபர்கள் அமர்ந்து கொள்ளும் வசதி கொண்டதாக இடம் ஏற்படுத்தப்பட்டது.

மெட்ராஸ் மாகாண அரசின் "கன்சல்டிங் ஆர்க்கிடெக்ட்" (Consulting Architect) Mr. Dann என்பவர், இந்த காட்சிக் கூடத்தை வடிவமைத்தார். இந்த காட்சிக் கூடம் அசாதாரண வடிவமைப்பிலும், வேலைப்பாட்டிலும் கட்டப்பட்டது. அனைத்து திசைகளிலும் காட்சிகளை காண வசதியாக இந்த கூடம் "OCTOGON" எனப்படும் "எண்கோண வடிவில்" வடிவமைக்கப்பட்டது.

ஒரு மிகப்பெரிய கற்பாறையின் மீது இந்தக் கூடம் வீற்றிருக்கும் படி அமைந்தது. இந்த குன்றின் வலது புறம் மிகுந்த சாய்தளமாக அமைந்திருந்தது. கூடத்தை சுற்றி முழு வட்ட வடிவில் பால்கனி (BALCONY) அமையப்பெற்றது.

அங்கு அமைந்த தரைத் தளத்திலிருந்து 11 அடி உயரத்தில் அந்தக் கூடம் அமைந்ததால் முழு சுற்றளவையும் தங்குதடையின்றி காட்சிகளை காணும் வாய்ப்புப் பெற்றது. வராண்டா மற்றும் கைப்பிடி சுவர்கள் அழகுற அமைக்கப்பட்டன! தரைதளத்தில் இருந்து மேலே பால்கனிக்கு செல்ல படிக்கட்டுகள், அங்கு விளக்குகளும் அமைக்கப்பட்டன. அழகான இரும்புக் கதவுகளும் பொருத்தப்பட்டன. இந்த காட்சிக் கூடத்தில் உள் பக்கம் மிகுந்த கவர்ச்சியாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும் அமைந்தது.

உள்ளே அழகான வளைவுகள், பளபளப்பான சுவர்கள், அலங்கார விளக்குகள் அவை தரும் வெண்ணிற ஒளி கூடத்தின் மேற்பரப்பில் பட்டு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்ளே எந்த நிழலும் படியாவண்ணம் ஒளி வெள்ளம் பாய்ந்தது. தேக்கு மரத்தாலான ஜன்னல்கள் மற்றும் கதவுகள் தாமிரப் பட்டைகளில் பொருத்தி இணைக்கப்பட்டன. உள்ளே அழகுற வடிவமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கீழ்க்கண்ட வாசகங்களை பொறித்தவாறு காட்சி அளித்தது.

"மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டதன் நினைவாக இக் கல்வெட்டு பதியப் பெறுகிறது. இதை மேதகு லெப்டினென்ட் கர்னல், மாண்புமிகு. சர். ஜார்ஜ் ஃப்ரெடிரிக்ஸ் ஸ்டான்லி, P.C, G.C.S.I., G.C.I.E., C.M.G, அவர்கள், மெட்ராஸ் மாகாண கவர்னர் திறந்து வைத்தார். தேதி ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி வருடம் 1934."

மேலும், இந்தச் சுவரில் அணையின் குறுக்கு வெட்டுத் தோற்றமும், அணை குறித்த முக்கிய விவரங்களும் பதியப்பட்டன. தெற்குப்பகுதி சுவரில் உள்ள ஒரு கல்வெட்டில் இந்த மேட்டூர் அணை கட்டுவதற்கு பணிபுரிந்த அலுவலர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் இந்தத் திட்டத்தில் குறைந்தது ஒரு வருடம் பணிபுரிந்த "செயற்பொறியாளர்" பதவிக்கு மேல் பணிபுரிந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றன. இந்தக் காட்சிக் கூடத்தில் பெரும்பாலானவை (Reinforced Concrete) கான்கிரீட் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. ஏற்கனவே குறிப்பிட்டபடி "ப்ரீ காஸ்ட்" முறையில் பல இடங்களில் கட்டி எழுப்பப்பட்டது. சிறிய கட்டிடமாக அமையப்பெற்றாலும் இதன் அழகியல் அமைப்பு பல பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. 100 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் இந்த அழகு சற்றும் குறையாமல் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும். இந்த மலைக்குன்றின் அடிவாரம் எல்லீஸ் பாலத்துக்கு அருகில் ஆரம்பமாகிறது. அங்கிருந்து காட்சிக் கூடம் அமைந்திருக்கும் மலையின் மேற்புறம் வரை செல்ல கான்கிரீட்டால் அமைந்த சாலை போடப்பட்டது.

மேட்டூர் அணை சுவரின் தெற்குப் பகுதியில் பாசன கால்வாய்க்கும், காவிரி ஆற்றுக்கும் நடுவில் 34 ஏக்கர் பரப்பளவில் அமைந்த அழகிய பூங்காவை கவர்னரின் மனைவி "லேடி பீட்ரிக்ஸ் ஸ்டான்லி" திறந்து வைத்தார்.

அழகிய நடைபாதைகள், கண்கவர் பூச்செடிகள், நீரூற்றுகள் போன்ற அமைப்புகள் அழகுற அமைக்கப்பட்டன!

மேற்கு புறத்தில் சற்று மேடாக உள்ள பகுதிக்கு பாசனக் கால்வாய் வழியாக நடந்து சென்றுதான் கடக்க வேண்டும். கிழக்குப் புறத்தில் உள்ள பூங்கா முழுவதும் ஒரே சமதளத்தில் அமைந்திருக்கிறது. மொத்த பூங்கா பரப்பில் கிழக்குப் பகுதி பூங்கா, மூன்றில் இரண்டு பங்கு இடத்தைக் கொண்டுள்ளது.

பூங்காவின் நடுவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய நீரூற்று (Water fountain) கண்கவர் அம்சமாகும். பூங்காவின் உள்ளே நான்கு சக்கர வாகனங்களும் வசதியாக சென்று வர அழகான சாலைகள் அமைக்கப்பட்டன.

காட்சிக் கூடத்தில் திறப்பு விழா கல்வெட்டு

உள்ளே அமைந்த சாலைகளுக்கு ஒட்டியவாறு பூங்காவில் அமைத்த பூச்செடி, மரங்களுக்கு நீர் பாய்ச்ச, விசேடமான குழாய்கள் பதிக்கப்பட்டன. பிரத்தியேகமாக ஒரு குழாய் நீரூற்றுகளுக்கு விநியோகிக்க மட்டும் தனியாக பதிக்கப்பட்டது. கீழ்ப்பகுதியில் உள்ள பூங்காவில் நடப்பட்ட மரங்கள் பெரும்பாலும் பழ வகைகளைச் சார்ந்தவை. சிறிது காலத்துக்குப் பின்பு இவை தரும் பழங்களால் வருமானம் ஈட்டும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. புகழ்பெற்ற "கோல்ட் - மோஹர்" மரங்கள் கால்வாய் ஓரமாக நடப்பட்டன. குளிர்ச்சியான நிழல்கள் தரும் மரங்களாகும் இவை!

பின்னாளில், 1936 -ல் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இரண்டு வருடங்களில் எந்த அளவுக்கு இந்த பூங்கா பசுமையாக மாறி இருக்கிறது என்பதை தெளிவாக காண்பிக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு இந்தப் பூங்கா முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்ற வளையத்தில் கொண்டு வந்து பொதுமக்கள் பார்வையிட தடை செய்யப்பட்டு இருந்தது. சிறிது காலம் கழித்து அந்த தடை நீக்கப்பட்டு தற்போதைய நிலையில் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படுகிறது. இன்றளவும் ஏராளமான மக்கள் தங்கள் குடும்ப சகிதமாக இங்கு வந்து அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற “அணை முனியப்பன் கோவிலில்” வழிபாடு செய்துவிட்டு பூங்காவிற்கு சென்று மகிழ்ச்சியோடு விடுமுறையை கழிப்பது வாடிக்கையான ஒன்றாகும்!

இனி, மேட்டூர் அணை திறப்பு விழா அன்று நடந்த நிகழ்வுகளை காண உங்கள் அனைவரையும் ஒரு நூற்றாண்டுக்கு பின்னே அழைத்துச் செல்கிறேன். உடன் வாருங்கள்.

காவிரி நன்னீர் சிறப்பு

`செஸ்போர்டின் 64 கட்டங்களுக்காக 63 கொலைகள்' ரஷ்யாவை நடுங்கவைத்த சீரியல் கில்லர்! குருதிச் சுவடுகள் 4

சதுரங்கம் என்பது அறிவுக்கூர்மைக்கான விளையாட்டு. ஆனால், மாஸ்கோவின் தென்பகுதியில் அமைந்திருந்த ஒரு தனிமையான பூங்காவில், சதுரங்கப் பலகையின் 64 கட்டங்களும் மனித உயிர்களின் கணக்காக மாற்றப்பட்டன. ஒவ்வொரு மன... மேலும் பார்க்க

பிரிட்டனை அதிரவைத்த 'கொலைகார' டாக்டர்; 132 பேரைக் கொன்று சொத்துகளை அபகரித்த கதை- குருதிச் சுவடுகள் 3

இங்கிலாந்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள 'ஈஸ்ட்போர்ன்', ஓய்வுபெற்ற செல்வந்தர்கள் அமைதியாக காலத்தைக் கழிக்கும் ஒரு ரம்மியமான நகரம். 1950-களில் அந்த நகரத்தின் மிக உயரிய மரியாதைக்குரிய மனிதராக வல... மேலும் பார்க்க

மைக்ரோ லெவல் சிக்கனம்; திறன்மிகு நிர்வாகம்; அணையின் தளபதிகள் | மேட்டூர் அணை ஓசை 44

சிக்கன நடவடிக்கைகள்காவிரி-மேட்டூர் அணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தேவைப்பட்ட அளவை அரசு ஒதுக்கினாலும், மேட்டூரில் திட்ட நிர்வாகம் சிறப்பாகவும், சிக்கனமாகவும் செயல்பட்டு செலவுகளை குறைப்பதற்கு பல முயற்சி... மேலும் பார்க்க

வால்வுகளில் ஏற்பட்ட அரிப்பு; மோட்டார் லாஞ்ச்; மனமகிழ் மன்றம் | மேட்டூர் அணை ஓசை 43

மேட்டூர் அணை திட்டம் போன்ற பெரிய திட்டங்கள் நடைபெறும் இடங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடி வசிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. அந்த ஊரில் சில வருடங்கள் தொடர்ந்து வசித்து வாழ்வதற்கு உண்டா... மேலும் பார்க்க

கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கதைகள்… சேலம் அருங்காட்சியகத்தில் ஒரு வரலாற்றுப் பயணம்!

சில கற்கள் பேசுவதில்லை. ஆனால், அவற்றைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் ஒரு காலத்தின் கதையைச் சொல்லத் தொடங்கிவிடும்! ஒரு கற்சிற்பத்தின் உருவம், வீரனின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல், கல்லில் பொறிக்கப்பட்ட எழ... மேலும் பார்க்க

பாசனக் கால்வாய்; மேட்டூர் நீர் மின் நிலையத் திட்டம் | மேட்டூர் அணை ஓசை 42

மதகுகள் அமைப்புமேட்டூர் திட்டத்தில் இறுதியாக முடிவெடுத்த படி, நீர்ப்பாசனத்திற்கான கீழ் மட்ட மதகுகள் ஐந்து எண்ணிக்கையிலும், மேல் மட்ட மதகுகள் 8 எண்ணிக்கையிலும் அணையில் அமைக்கப்பட்டுள்ளன. 5 கீழ்மட்ட மதக... மேலும் பார்க்க