Aaromaley Review: 90ஸ் கிட்ஸின் காதலும், மேட்ரிமோனியின் மறுபக்கமும்! எமோஷன் எடுப...
ட்ரம்ப் சந்திப்பில் ஜி ஜின்பிங் சிரித்த புகைப்படங்கள் சீனாவில் வெளியிடவில்லை - ஏன் தெரியுமா?
சீன அதிபர் ஜி ஜின்பிங் வாய்விட்டு சிரிப்பது மிகவும் அரிதானது. ஏனெனில், கடினமான மற்றும் தீவிரமான அரசியல் தலைவர் என்ற நற்பெயரை உருவாக்க, சீன அரசு மற்றும் அதன் ஊடகங்கள் கடுமையாக செயல்பட்டுள்ளன.
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த இருதரப்பு சந்திப்பில் சோயாபீன்கள், ஃபெண்டானில், அரிய தாதுக்கள் மற்றும் கணினி சிப்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட புகைப்படங்கள், ஜி ஜின்பிங்கின் ஒரு புதிய முகத்தை வெளிப்படுத்தியுள்ளன. அந்த புகைப்படங்களில், இரு அதிபர்களும் தங்கள் அலுவலர்களுடன் எதிரெதிராக அமர்ந்திருந்தனர்.
அதில், ட்ரம்ப் நீட்டிய காகிதத்தைப் பார்த்து ஜி ஜின்பிங் கண்களை மூடிக்கொண்டு சிரிப்பது போல் தெரிகிறார். அவருக்கருகே இருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியும் சிரிக்கிறார்.
கடந்த மாதம் இதேபோல தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் உடனான சந்திப்பில், பரிசுப்பொருட்களை பரிமாறும் போது ஜி ஜின்பிங் நகைச்சுவையாக சிரித்தார். அந்த தருணம் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

அப்போது லீ, மரத்தாலான செஸ் பலகையை சீன அதிபருக்குக் கொடுத்தார். ஜி ஜின்பிங் அவருக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட Xiaomi மொபைலை வழங்கினார். இதற்குப் பிறகு, லீ “இதன் தகவல் தொடர்பு பாதுகாப்பு எப்படி இருக்கிறது?” என்று கேள்வி எழுப்ப, “பின்னால் கதவு இருக்கிறதா என நீங்களே சோதனை செய்யலாம்” என்று நகைச்சுவையாக பதிலளித்தார் ஜி ஜின்பிங்.
சீனா தனது தயாரிப்புகளில் பின் கதவை வைத்து, பயனருக்குத் தெரியாமல் கேட்ஜெட்டுகளை அணுகுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிக்கடி முன்வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சீன அதிபரின் நகைச்சுவையும் சிரிப்பும் வழக்கத்திற்கு மாறானவை.
சீனாவில் கருத்துச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், தகவல்கள் வெளியாவதும், அரசின் பிம்பமும் தீவிரமான கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்கத்திய ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

அரசாங்கம் உருவாக்கும் பிம்பத்துடன் ஒத்துப்போகாத அதிபரைப் பற்றிய எந்தவொரு செய்திக்களையும் தணிக்கை செய்து எளிதில் அகற்றிவிடுகின்றனர். இதனால் சீன தளங்களான Weibo, Douyin மற்றும் Xiaohongshu ஆகியவற்றில் அதிபர் சிரிக்கும் புகைப்படங்களையோ, வீடியோக்களையோ பார்க்க முடியாது.
சில தளங்களில் பரிசுகளை மாற்றிக்கொள்ளும் சாதாரண புகைப்படங்களை மட்டும் பார்க்க முடியும் என என்.டி.டி.வி செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
















