CBSE: பிளஸ் டூ தேர்வில் திடீர் மாற்றங்கள்: கம்ப்யூட்டர் மூலம் `ஆன்-ஸ்கிரீன் மார்...
ட்ரம்ப் வரிக்கு எதிரான தீர்ப்பு: `இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த நிலை?' - அதிபர் ட்ரம்ப் பதில்!
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற அதிபர் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரிப்போர் நடத்திவந்தார். இதனால் உலக நாடுகளுக்கு மத்தியில் மட்டுமல்லாமல், தன் சொந்த நாட்டிலேயே அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அதன் வெளிப்பாடாக அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், ``மக்களின் பாக்கெட்டுகளுக்குள் நுழையும் அதிகாரம் காங்கிரஸிற்கு (அமெரிக்க நாடாளுமன்றம்) மட்டுமே உள்ளது. வரி விதிக்க நிர்வாகிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ட்ரம்ப் தனது அதிகாரத்தைத் தாண்டி வரி விதித்து இருக்கிறார்." எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார். ``எனக்கு எதிராகத் தீர்ப்பளித்த நீதிபதிகளைப் பார்த்து வெட்கப்படுகிறேன். நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தவறானது. இந்த தீர்ப்பு என் முயற்சிகளை முடக்கிவிடாது. எனக்கு இன்னும் பல அதிகாரங்கள் இருக்கிறது." எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து உலக நாடுகள் மீதான வரி குறைக்கப்படுமா அல்லது வேறு சட்டங்கள் மூலம் வரி விதிக்கும் வழமையை அதிபர் ட்ரம்ப் தொடரப்போகிறாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.
இதற்கிடையில், சமீபத்தில் இந்தியா - அமெரிக்கா இடையே உருவான வர்த்தக ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களும் எழுந்தன. அதற்கு விளக்கமளிக்கும் வகையில் அதிபர் ட்ரம்ப், ``இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது. முடிவு செய்யப்பட்ட வரிகளை இந்தியா தொடர்ந்து செலுத்தும். அமெரிக்கா எந்த வரிகளையும் செலுத்தாமல் வரத்தகம் செய்யும். இது முன்பு இருந்த நிலையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறது.

இந்தியா அமெரிக்காவை அதிக வரி விதித்து அமெரிக்காவை சுரண்டியது என்ற என் கருத்திலிருந்து, இப்போது அமெரிக்காவுக்கு சாதகமாகியிருக்கிறது. நாங்கள் ஒரு சிறிய திருப்பத்தை செய்தோம். பிரதமர் மோடி உண்மையில் சிறந்த மனிதர். அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை, அவர் யாரை எதிர்த்தாரோ அவர்களைவிட மிகவும் புத்திசாலி." என்றார்.














