NLC: விதிமீறல்களின் 'சுரங்கம்' என்.எல்.சி? சிஏஜி அறிக்கையில் வெளியான அதிர்ச்சித்...
CBSE: பிளஸ் டூ தேர்வில் திடீர் மாற்றங்கள்: கம்ப்யூட்டர் மூலம் `ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' - இது சரியா?
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்தியாவில் சுமார் 23,806 சிபிஎஸ்இ சீனியர் செகண்டரி பள்ளிகள் உள்ளன. 18 லட்சத்து 49,000 மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு முதல் இரண்டு முக்கிய மாற்றங்களை கடைசி நேரத்தில் செய்திருக்கிறது சிபிஎஸ்இ நிர்வாகம். பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை ஏதேனும் மூன்று பாடங்களில் மறுதேர்வு எழுதலாம். இரண்டில் எதில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்களோ அது இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.
ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் -
பிளஸ்டூ-வைப் பொறுத்தவரை இந்தாண்டு முதல் ஆசிரியர்கள் விடைத்தாளை நேரடியாகத் திருத்த மாட்டார்கள். ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' முறையில், விடைத்தாளை ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் ஏற்றி திருத்துவார்கள். இப்படித் திருத்துவதால் மதிப்பெண்களை கூட்டுவதில் தவறு நேராது என்றும், சில விடைகள் திருத்தாமல் விடுபட்டுப்போவது நடக்காது என்றும் சிபிஎஸ்இ நிர்வாகம் கூறுகிறது. புதிய கல்விக் கொள்கைப்படி, தேர்வு தொடர்பான மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இந்த மாற்றங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் இது மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்குமா?
கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் கேட்டோம். "ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்' முறையைக் கொண்டு வந்ததற்கு பல காரணங்களை முன்வைக்கிறது சிபிஎஸ்இ. 'விடைத்தாள் திருத்த நிறைய சென்டர்கள் உருவாக்க வேண்டியுள்ளது. ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது சிரமமாக இருக்கிறது. நிறைய ஆசிரியர்களை இந்தப்பணியில் ஈடுபடுத்த வேண்டியுள்ளது' என்றெல்லாம் சிபிஎஸ்இ தரப்பில் சொல்லப்படுகிறது.

விடைத்தாளை ஸ்கேன் செய்து சர்வரில் ஏற்றி விடுவார்கள். இந்தியாவில் எங்கே இருந்தாலும் ஆசிரியர்கள் அதைத் திருத்தலாம். தமிழக மாணவர்களின் விடைத்தாளை உத்தர பிரதேசத்தில் உள்ளவர் திருத்தலாம். குஜராத் மாணவன் எழுதிய பேப்பரை தமிழக ஆசிரியர் திருத்தலாம். 'சாதாரணமாக பேப்பர் திருத்துவதைப் போலதான் இது, எந்தக் குழப்பமும் இதில் வரவாய்ப்பில்லை' என்று சிபிஎஸ்இ தரப்பில் சொல்கிறார்கள்.
என் கேள்வி என்னவென்றால், இந்த திருத்த முறை மாற்றத்தை ஏன் தேர்வுக்கு சில தினங்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்? நம் கல்விமுறைப்படி பிளஸ்டூ தேர்வு முடிவுகள்தான் மாணவர்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகின்றன.
இந்தச்சூழலில் எந்தப் புதிய முயற்சிகளும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது. இந்தியாவில் சிபிஎஸ்இ பள்ளிகளே ஆனாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் கம்ப்யூட்டரை முழுமையாகக் கையாளும் அளவுக்கு இன்னும் பழகவில்லை.
தமிழகத்தின் நிலை பரவாயில்லை. வட இந்திய, வடகிழக்கு இந்திய மாநிலங்களில் இன்னும் போதிய இண்டர்நெட் வசதிகூட இல்லை. சிபிஎஸ்இ பள்ளிகள் என்றாலே மிகவும் தரமான பள்ளிகள் என்று நினைக்கக்கூடாது. இன்னும் பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலேயே நிரந்தர ஆசிரியர்கள் இல்லை.
காண்ட்ராக்ட் ஆசிரியர்கள்தான் பணியாற்றுகிறார்கள். ஏராளமான தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் கம்ப்யூட்டர்கள் கூட போதுமானதாக இல்லை. பள்ளிகளில் போய் ஆய்வு செய்யும் அளவுக்கு சிபிஎஸ்இ நிர்வாகத்தில் போதிய ஊழியர்களும் இல்லை.
எழும் கேள்விகள்...
இந்தத் விடைத்தாள் திருத்த முறையில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. மாணவர்கள் எழுதும் பேப்பரை யார் ஸ்கேன் செய்வார்கள்? டேட்டா என்ட்ரி ஆபரேட்டரா? ஆசிரியர்களா? எத்தனை ஆசிரியர்களுக்கு அந்தத் தொழில்நுட்பம் தெரியும்..? இத்தனை லட்சம் பேப்பரை ஸ்கேன் செய்ய போதுமான ஊழியர்களோ ஆசிரியர்களோ இருக்கிறார்களா? அல்லது வெளி ஏஜென்ஸிகளுக்கு இந்தப்பணியைத் தருவார்களா? அப்படி தந்தால் இத்தனை லட்சம் மாணவர்களின் விடைத்தாளை அவர்கள் எந்தளவுக்கு கையாள்வார்கள்? இப்படி இதில் பல கேள்விகள் இருக்கின்றன.
இதென்ன சர்வாதிகாரம்..?
தேர்வுக்கு சில தினங்களுக்கு முன் இப்படி அறிவித்தது, மாணவர்களின் மன உறுதியைக் குலைப்பது தான் சிபிஎஸ்இ நிர்வாகத்தின் எண்ணமா என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. புதிதாக ஒரு தேர்வு முறையை கொண்டுவரும்போது பள்ளி நிர்வாகத்தினர், மாணவர்கள், பெற்றோரின் கருத்துகளைக் கேட்க வேண்டாமா? வேண்டிய சிலரை மட்டும் அமரவைத்து இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். இதென்ன சர்வாதிகாரம்..?
18 லட்சம் - எப்படி ஸ்கேன் செய்வார்கள்?
ஒரு யூடியூப் வீடியோவில் தான் இதுதொடர்பான விளக்கங்களை அளிக்கிறார்கள். சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்யக்கூட வாய்ப்புத் தரவில்லை.
ஒரு விடைத்தாள் குறைந்தது 40 பக்கங்கள் இருக்கும். 18 லட்சம் பேரின் தேர்வுத்தாளையும் இவர்கள் எப்படி ஸ்கேன் செய்வார்கள்? ஸ்கேன் செய்பவர் சரியாக அந்த வேலையைச் செய்வாரா? கவனக்குறைவால் லேசாக ஒரு பக்கம் நகர்ந்தால்கூட ஒரு விடையில் சில பகுதிகள் காணாமல் போய்விடுமே, அந்த இழப்பை எப்படி ஈடுசெய்வார்கள்..? போதிய பிரைட்னஸில் ஸ்கேன் செய்யாவிட்டால் திருத்தும் ஆசிரியர் எப்படி தெரிந்து திருத்துவார்..? இதில் பல குழப்பங்கள் இருக்கின்றன.
ஒரு மாணவன் அழுத்தமாக எழுதுவான். ஒரு மாணவன் பேனாவை மென்மையாகப் பிடித்து எழுதுவான். அவன் போடுகிற ஒரு வரைபடம் சரியாக இருந்தும் ஸ்கேன் செய்யும்போது சரிவர செய்யப்படாமல் போனால் அந்த மாணவனின் நிலை என்ன?

உயர்கல்வி வாய்ப்புகள் 0.1% சதவிகிதத்தில்கூட பறிபோகும் வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் எல்லா ஆசிரியர்களுக்கும் இப்படி கம்யூட்டரில் ஏற்றப்பட்ட விடைத்தாளைத் திருத்தப் பயிற்சி தந்துள்ளார்களா? ஆண்டின் தொடக்கத்தில் அல்லது அரையாண்டுத் தேர்வு முடிந்தபிறகாவது, இந்தாண்டு இப்படித்தான் திருத்தப்போகிறோம் என்று மாணவர்களுக்குச் சொல்லி அவர்களைத் தயார் படுத்தியிருக்க வேண்டும். திருத்தும் ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகளை அளித்திருக்க வேண்டும்.
அவகாசம் வேண்டும்
இந்தாண்டு மறுகூட்டல் கிடையாது என்று அறிவித்திருக்கிறார்கள். மறு மதிப்பீடு மட்டும் செய்யலாம் என்கிறார்கள். அதற்குத் தனியாக கட்டணம். பெற்றோர் பணம் கட்டி பேப்பரை வாங்கிப் பார்க்கவேண்டும்.
ஒரு பேப்பருக்கு குறைந்தது 500 ரூபாய் என்றால்கூட, 10 லட்சம் பேர் பேப்பர் வாங்கினால் எவ்வளவு பெரிய தொகை சிபிஎஸ்இக்குப் போய் சேர்கிறது? ஏன் இப்படி பெற்றோரை வதைக்க வேண்டும்?
திருத்த நடைமுறையை மாற்றியிருக்கிறோம் என்று இன்னும்கூட பல பள்ளிகளுக்கு செய்தி தெரியவில்லை. மாணவர்களுக்கு இதுபற்றி அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்தளவுக்கு நெருக்கடியாக இதைச் செய்ய என்ன தேவையிருக்கிறது?
நவீன தொழில்நுட்பங்களை பள்ளிக்குள் கொண்டு வருவது நல்ல விஷயம் தான். ஆனால் அதற்கான அவகாசம் தரவேண்டும். இளைஞர் சக்தி மிகுந்த நாடு, தொழில்நுட்பத்தில் சிறந்த நாடு என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டால்கூட இன்னும் உயர்கல்விக்கு வருபவர்கள் வெறும் 30% தான். மாணவர்களை இப்படி வதைத்தால் அவர்கள் எப்படி நம்பிக்கையோடு மேலே வருவார்கள்? இது மிக மோசமான சூழல்.." என்கிறார் நெடுஞ்செழியன்.
கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்யப்படும் என்பதால் விடைத்தாளில் மேலும் கீழும் 5 செ.மீ இடைவெளி விட்டு எழுதுங்கள்.
நல்ல டார்க் பென்சில் பயன்படுத்துங்கள். எழுத்துகளை தெளிவாக எழுதுங்கள்.
மொத்தம் எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்பதை முதல் பக்கத்தில் மறக்காமல் குறிப்பிடுங்கள். திருத்தும்போது ஏதேனும் விடுபட்டுப்போனால் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும்.
செக்சன் எண், கேள்வி எண் சரியாக எழுத மறக்காதீர்கள்.
தேவையில்லாமல் குழப்பத்துக்கு ஆளாகாதீர்கள். எப்படித் திருத்தினாலும் நீங்கள் சரியாக எழுதியிருக்கிற பட்சத்தில் உங்களுக்கான மதிப்பெண்ணை யாராலும் மறுக்க முடியாது. நிதானமாக, தைரியமாக தேர்வை எழுதுங்கள்.
ஒரு கேள்விக்கு விடை முழுமையாகத் தெரியாவிட்டாலும் தெரிந்த ஸ்டெப்களை எழுத மறக்காதீர்கள்.!




















