கோவை: தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை; கூட்டத்தோடு சேர்க்க வனத்துறை முயற்ச...
தஞ்சாவூர்: மகளைக் கொலை செய்த இளைஞர்; 5 மாதங்கள் காத்திருந்து பழிக்குப் பழி வாங்கிய தந்தை
தஞ்சாவூர் அருகே உள்ள பிராந்தை பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(53). தி.மு.க-வைச் சேர்ந்த இவர் ஆலங்குடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர். இவரது மகள் காவியா(26). இவர், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில், தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
மேலகளக்குடியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(30) பெயிண்டர். ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவியாவும், அஜித்குமாரும் பல ஆண்டுகளாகக் காதலித்ததாகச் சொல்லப்படுகிறது.
காவியா டீச்சர், அஜித்குமார் பெயிண்டர் என்பதால் காவியாவின் பெற்றோருக்குத் தன் மகளை அஜித்குமாருக்குத் திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. காவியாவிடம் பேசி சம்மதிக்க வைத்து தங்களுக்கு உறவுமுறை குடும்பத்தைச் சேர்ந்த நபருக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து நிச்சயதார்த்தம் செய்தனர்.
இதையடுத்து, காவியா தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதையும், அதன் போட்டோவையும் அஜித்குமாருக்கு, அனுப்பியட்துடன் இனி என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.
இந்நிலையில். கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி காலை, வழக்கம் போல் காவியா பள்ளிக்குச் சென்றுள்ளார். காவியா மீது ஆத்திரத்தில் இருந்த அஜித்குமார் அவரை வழிமறித்து, கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இந்தச் சம்பவம் தஞ்சாவூரை உலுக்கியது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்த அஜித்குமார் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதையறிந்த கவியாவின் தந்தை புண்ணியமூர்த்தி, தன் மகளைக் கொலை செய்தவன் எந்தக் குற்ற உணர்ச்சியிலும் இல்லாமல் நடமாடுகிறானே என்று புலம்பியிருக்கிறார்.
மேலும், அஜித்குமாரைப் பழி தீர்க்கும் விதமாகக் கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். அதன்படி, புண்ணியமூர்த்தி தனது உறவினரான ஆலங்குடி, கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்த லோகேஷ்(22), ராமலிங்கம்(30), புலவர்நத்தம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா(55) ஆகியோருடன் இன்று அதிகாலை அஜித்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
வீட்டில் அஜித்குமார் துாங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்து அஜித்குமாரை அரிவாளால் சராமாரியாக வெட்டி கொடூரமாகக் கொலை செய்தனர்.
இதைத்தொடர்ந்து புண்ணியமூர்த்தி, லோகேஷ்,ராமலிங்கம், கருப்பையா ஆகிய நான்கு பேரும், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து போலீஸார், அஜித்குமார் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மகளைக் கொலை செய்த இளைஞரைப் பழிக்குப் பழியாக, மகளின் தந்தை கொலை செய்த சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















