காங்கிரஸ் : கூட்டணி மாற்றமா? தலைமை மாற்றமா? - டெல்லியில் நடந்த பரபரப்பு ஆலோசனை!
தாய் கிழவி விமர்சனம்: ரகளையான காமெடிகளைச் சுருக்குப் பையில் கட்டி, அலப்பறையைக் கூட்டும் பவுனுத்தாயி!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி பவுனுத்தாயி (ராதிகா). கணவனைப் பிரிந்துவந்த தன் மகளோடு (ரேச்சல் ரெபேக்கா) வாழ்ந்து வரும் அவர், ஊர்க்காரர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுப்பதும், அதை அடாவடியாக வசூல் செய்வதுமாக தன் அலப்பறையால் அனைவரையும் கதிகலங்க வைக்கிறார்.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக, சுயநினைவை இழந்து பவுனுத்தாயி படுத்தப்படுக்கையாக, மொத்த ஊரே மகிழ்ச்சியாகிறது. அவரிடம் சண்டை போட்டுப் பிரிந்த மூன்று மகன்களும் (சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன்) தாயின் நிலையை அறிந்து வேண்டா வெறுப்பாக வீட்டிற்கு வருகிறார்கள்.
சுயநினைவில்லாமல் சைகை மொழியில் ஏதோ சொல்லப் போராடுகிறார் பவுனுத்தாயி. அது என்ன என்பதை அறிய முயலும் மகன்களுக்கு, அவர்களின் சொந்தக்காரரான பென்னி குவிக் (முனீஸ்காந்த்) உதவுகிறார்.
இறுதியில், பவுனுத்தாயி பிழைத்தாரா, அவர் சொல்ல முயன்ற விஷயம் என்ன, அதனால் மகன்களின் வாழ்க்கையில் என்னென்ன நடந்தன போன்ற கேள்விகளுக்குக் கலகலப்பாகப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருக்கும் 'தாய் கிழவி' திரைப்படம்.
வாரிக்கட்டிய கோணக் கொண்டை, காதுகளில் ஆடும் தண்டட்டி, ஒனப்புத்தட்டு, புல்லாக்கு, எந்நேரமும் வெற்றிலையைக் குதப்பும் வாய், முதுமையும் துடிப்பும் கலந்த நடை, எத்தருணத்திலும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பேச்சு எனப் 'பவுனுத்தாயி' கதாபாத்திரத்திற்கு ரத்தமும் சதையுமாக உயிரூட்டியிருக்கிறார் ராதிகா. அவரின் இருத்தலே, அக்கதாபாத்திரத்தின் பாதி வேலையை முடித்துக்கொடுக்க, எமோஷன் காட்சிகளிலும் தன் அனுபவத்தால் திரையை ஆக்கிரமிக்கிறார்.
சுயநலமும், பேராசையும், ஆற்றாமையும் கலந்த மகன்களாக, காமெடி, எமோஷன் என இரண்டு ரோட்டிலும் கச்சிதமாக நடித்து, சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன் ஆகியோர் படத்தைத் தாங்குகிறார்கள்.
ஓடியோடி உதவும் சொந்தக்காரராக மூனீஸ்காந்த், ஆங்காங்கே காமெடிக்கு உதவியதோடு, திரைக்கதையின் நகர்விற்கும் உதவியிருக்கிறார். நிதானமான நடிப்பால் ரேச்சல் ரெபேக்கா, அடாவடி நடிப்பால் 'வேட்டை' முத்துக்குமார் தேவையான பங்களிப்பைச் செய்ய, ஜார்ஜ் மரியனும், இளவரசும் வந்து போகிறார்கள். மருமகள்கள் முத்துலட்சுமி, நிரோஷா, அபிநயா ஆகியோர் நடிப்பில் குறையில்லை.
பசுமையும், வெக்கையும் கலந்த விக்கிரமங்கலத்து நிலப்பரப்பை எதார்த்தமாகப் பதிவுசெய்ததோடு, சிறு குன்றுகள், ஊரணிகள், நாட்டார் கோயில்களையும் காட்சிகளின் சுவாரஸ்யத்திற்குப் பயன்படுத்திய விதத்தில் விவேக் விஜயகுமாரின் ஒளிப்பதிவு அட்டகாசம் செய்ய, அதற்குப் படத்தொகுப்பாளர் சான் லோகேஷும் கைகொடுத்திருக்கிறார்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையில், கிராமிய மனத்தில் எல்லாப் பாடல்களும் படத்தோடு வந்து ரசிக்க வைக்கின்றன. தன் ரகளையான பின்னணி இசையால் காமெடி காட்சிகளிலும் கலகலப்பைக் கூட்டியிருக்கிறார் நிவாஸ் கே. பிரசன்னா. வீடுகள், அவற்றிலுள்ள பொருள்கள், சந்துகள், போஸ்டர், ரசிகர் மன்ற போர்டுகள், வண்டிகள் எனக் கிராமத்தின் நிலவியலுக்கு நெருக்கம் சேர்த்திருக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராமு தங்கராஜ். ராதிகாவிற்கான ப்ராஸ்தெட்டிக் மேக்கப் சில இடங்களில் உறுத்தலாக நிற்கிறது.
காடுபட்டி கிராமம், பவுனுத்தாயின் 'காப்ரா'த்தனங்கள், ஊருக்கும் அவருக்குமான உறவு என ஆரம்பிக்கும் திரைக்கதை நேரடியாகக் கதைக்குள் நுழைகிறது. மகன்களின் வருகைக்குப் பின் முழுக்க காமெடி ரூட்டெடுக்கிறது திரைக்கதை.
மகன்கள், மருமகள்கள், மருமகன், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள் என எக்கச்சக்க கதாபாத்திரங்கள் தனித்துவமாகவும், சிறு பின்கதையோடும் எழுதப்பட்டிருக்கின்றன. அதோடு அவை துருத்தலின்றி அறிமுகமாகி, திரைக்கதையோடு இணைந்த விதம் சுவாரஸ்யத்தைத் தந்து ரசிக்க வைக்கிறது.
அதேநேரம், சில காட்சிகள் திரைக்கதையின் மையப்போக்கிலிருந்து விலகி, சோழவந்தான், உசிலம்பட்டி என ஜெயவிலாஸ் பஸ் போல் ரவுண்டு அடித்து வந்து திரைக்கதையில் சேர்கின்றன.
இடைவேளைக் காட்சி வரை கதை பெரியளவில் நகரவில்லை என்றாலும், அந்தந்தக் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், அவர்களுக்கும் பிறருக்குமான உறவு, ஊருக்கும் அவர்களுக்குமான உறவு போன்றவற்றை நுணுக்கமாகவும் காமெடியாகவும் விவரித்தபடியே செல்வதால், முதல் பாதி பயணம் அலுப்புத்தட்டாமல் ஓடுகிறது.
நிறையக் காட்சிகளில் நடிகர் கமல்ஹாசனையும் அவரது பாடல்களையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்தியது சூப்பர் எழுத்திற்கான சாம்பிள்!
மதுரை மாவட்டத்தில், செக்கானூரணி, உசிலம்பட்டி, கருமாத்தூர் பகுதிகளில் பேசப்படும் வட்டார வழக்கையும், அப்பகுதிகளிலுள்ள பிரத்யேக சொற்களையும் அழுத்தமாகப் பயன்படுத்தியவிதம் பெரிய ப்ளஸ் என்றாலும், சில இடங்களில் அவை ஓவர்டோஸ் ஆகவும் மாறுகின்றன.
இரண்டாம் பாதி முக்கால்வாசி காமெடி, கால்வாசி எமோஷன் எனக் கலவையாக ஓடுகிறது. பிரதான கதாபாத்திரங்களை மையப்படுத்திய காமெடிகள் கலகலப்பூட்டினாலும், சிறிது நேரத்திலேயே அவர்களை மகா முட்டாள்களாகவும், அடிப்படை அறிவற்ற மனிதர்களாகவும் முன்னிறுத்திக்கொண்டே செல்கிறது திரைக்கதை.
அதனால், சில காட்சிகள் எதார்த்தத்திலிருந்து விலகியோடுகின்றன. கதை நகர்வுக்குத் தேவையான எமோஷன்கள் அழுத்தமாக எழுதப்பட்டிருந்தாலும், அவற்றோடு காமெடிகளும் சேர்ந்தே தொற்றிக்கொண்டு வருவதால், அவை முழுமையான தாக்கத்தைத் தராமல் போகின்றன. மேலும், அதிகமான சினிமா மற்றும் சினிமா பாடல்கள் ரெஃப்ரன்ஸுகளும் எதார்த்தத்திலிருந்து நம்மை விலக வைக்கின்றன.

இவற்றைத் தாண்டி, கதாபாத்திரங்களின் நடிப்பு இக்குறைகளைப் பெருமளவு கலைக்கிறது. கிராமப் பெண்களின் அதீத உழைப்பை ரொமாண்டிசைஸ் செய்யாமல், அவற்றால் அவர்களின் உடல்கள் பாதிக்கப்படுவதை மையக்கதைக்குள் ஒரு சரடாகப் பேசுகிறது திரைக்கதை.
மேலும், கிராமப் பெண்களின் பொருளாதாரத் தற்சார்பு, சுயமரியாதை, சேமிப்பின் அவசியம் போன்றவற்றையும் எமோஷனோடு பேசுகிறது படம்.
ஆங்காங்கே தலைகாட்டும் குறைகளைச் சுருக்குப் பையில் போட்டுவிட்டு, சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், கச்சிதமான நடிகர்கள் தேர்வு, ரகளையான காமெடிகள் போன்றவற்றால் கலகல கல்லாவைக் கட்டியிருக்கிறார் இந்தத் 'தாய் கிழவி'!

















