மதுரை தல்லாகுளம் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசர் கோயில்... திருப்பதிபோல் களைகட்டும் புரட்...
திருச்செந்தூர் அம்பேத்கர் சிலை விவகாரம்; திருமாவளவன் முன்பு இரு தரப்பினர் மோதலால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை அமைப்பது தொடர்பாக அக்கட்சியினர் இரு தரப்பாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடும், மோதலும் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்ற அம்பேத்கர் படிப்பக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருகை தந்தார். தொடர்ந்து, அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தையும் அவர் பார்வையிட்டார்.

அப்போது, சிலை அமைப்பு தொடர்பாக இரு தரப்பினரிடையே நிலவி வரும் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், இரு தரப்பினரையும் அழைத்து திருமாவளவன் சமாதானப்படுத்த முயன்றார். அப்போது இரு தரப்பினரும் திருமாவளவன் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களைப் பிடித்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து, திருமாவளவன் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்ட விவகாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே பிரச்னை நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் திருச்செந்தூரில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பின்னர், திருச்செந்தூர் வீரமகேந்திரகோட்டை முகாமில் புரட்சியாளர் அம்பேத்கர் படிப்பகம் மற்றும் இரட்டைமலை சீனிவாசனார் அரங்கம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட தொல் திருமாவளவன் அம்பேத்கர் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார்.

10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் உரையாற்றினார்.
முன்னதாக அவர் மேடையில் ஏறியதும் மின் இணைப்பு துண்டிக்கபட்டது. அப்போது அங்கு நின்ற தொண்டர்கள் தங்களது செல்போன்களை ஒளியை ஒளிர விட்டனர். சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வந்தது. தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாக மின்விநியோகம் தடைபட்டு வரும் நிலையில் திருமாவளவன் நிகழ்ச்சியில் மின்விநியோகம் தடைப்பட்டது பேசு பொருளாக மாறியுள்ளது.

















