"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்..." - கனிமொழி சந்தோஷ் கண்டனம்
"திமுக தலைவர்களுக்கு நாவடக்கம் தேவை; இல்லையெனில்..." - கனிமொழி சந்தோஷ் கண்டனம்
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தின் இயல்பு. ஆட்சியின் செயல்பாடுகள், கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
ஆனால், தமிழகத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் மக்கள் பிரதிநிதியை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் சில தி.மு.க. தலைவர்கள் பேசுவது எந்த வகையிலும் அரசியல் நாகரிகமாகாது.
’பாரம்பரிய கட்சி’ என்று பெருமை பேசிக்கொள்ளும் தி.மு.க, தனது அரசியல் மேடைகளில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளிலும் அந்தப் பாரம்பரியத்தையும் அரசியல் நாகரிகத்தையும் கடைப்பிடிக்க வேண்டாமா?
ஒருவரை விமர்சிக்கும்போது அவரது பதவிக்கும், தனிப்பட்ட மரியாதைக்கும் மதிப்பளிக்க வேண்டும். குறிப்பாக, பெண்களை மதிப்போம் என்று பேசும் அரசியல் கட்சியினர், பொதுமேடைகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் எந்த அளவுக்குத் தரக்குறைவாக இருக்கின்றன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்காக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் நாகரிகம் அல்ல. உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு, பொதுவெளியில் மற்றவர்களை அவமதிக்கும் வகையில் பேசுவது எந்த வகையான அரசியல் பண்பாடு என்பதை தி.மு.க தலைமை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையே மதிக்காமல் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடும் போக்கு இனியாவது நிறுத்தப்பட வேண்டும். அரசியல் விமர்சனங்கள் மக்கள் பிரச்னைகள், ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
நாவடக்கம் தேவை. இல்லையெனில், மக்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தொடர்ந்து அவதூறான மற்றும் மரியாதைக் குறைவான தனிநபர் தாக்குதல்களில் ஈடுபட்டால், மக்கள் தங்களது ஜனநாயகச் சக்தியால் அரசியலிலிருந்து ஓரங்கட்டும் நிலை விரைவில் உருவாகும்.
எனவே, தனிநபர் தாக்குதலையே அரசியலாகக் கருதும் போக்கை தி.மு.க கைவிட்டு, மக்கள் பிரச்னைகள் மற்றும் கொள்கைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க முன்வர வேண்டும். அரசியல் நாகரிகத்தைக் காப்பதும், ஜனநாயக மாண்பை நிலைநாட்டுவதும் ஒவ்வொரு அரசியல் கட்சியின் பொறுப்பு என்பதை தி.மு.க தலைமை உணர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














