BB Tamil 10: `முனியம்மாவின் அதிரடி ஆட்டம் டு வி.சே-வின் நாற்காலி கவிழ்ப்பு' - மு...
BB Tamil 10: `முனியம்மாவின் அதிரடி ஆட்டம் டு வி.சே-வின் நாற்காலி கவிழ்ப்பு' - முதல் வார சுவாரஸ்யம்!
விகடன்.காம் வாசக உறவுகளுக்கு வணக்கம். நான் உங்கள் சுரேஷ் கண்ணன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசனின் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற பிக் பாஸின் பாணியைப் போலவே, இந்த பததாவது சீசனைப் பொறுத்தவரை, இந்தக் கட்டுரைத் தொடர், தினசரி அப்டேட் ஆக அல்லாமல் வாரத்திற்கு ஒருமுறையான அப்டேட்டாக மாறுகிறது. சில காரணங்களால் இந்த மாற்றம்.
ஆனால், நீங்கள் தரவிருக்கும் ஆதரவு பிரம்மாண்டமாக பெருகினால், ஒருவேளை இந்தத் தொடர் தினசரி அப்டேட் ஆகவும் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த மாற்றம் நிகழ்வது உங்கள் கைகளிலும் இருக்கிறது. எனவே வழக்கம் போல் தொடர்ந்த ஆதரவைத் தாருங்கள். இனி, இந்த பத்தாவது சீசனில் இதுவரை என்ன நிகழ்ந்தது என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

மக்களுக்கு பரிச்சயமான முகங்களாகிய செலிபிரிட்டிகள் என்றல்லாமல் சாமானியர்களும் இதற்கு முந்தைய சீசன்களில் பங்கேற்றிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குரல் எழுப்பி ‘திடீர்’ ஊடகப் புகழ் பெற்ற ஜூலி ஓர் உதாரணம்.
ஆனால் இந்த சீசனில், காமன்மேன் என்கிற லேபிளில் சாமானியர்களும் போட்டியிட முடியும் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது வரவேற்கத்தக்க மாற்றம். `இவன்லாம் என்னத்த விளையாடறான்.. நான் வீட்டுக்குள்ள போயிருந்தா வேற லெவல்ல ஆடுவேன்” என்று களத்திற்கு வெளியில் இருந்து சோஷியல் மீடியா கமெண்ட்டுகளில் மட்டும் மனம் புழுங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாக இருந்தது.
இதற்கான ஆடிஷன் சுற்றுகளையும் ஒளிபரப்பி மெயின் திரைப்படத்திற்கு முந்தைய டிரைய்லர் போல வெளியிட்டு கல்லா கட்டியது பிக் பாஸ் டீம். இந்தத் தகுதிச் சுற்றுகளுக்கு நடுவர்களாக ஆரி, ஓவியா, ராஜூ ஆகிய மூவரும் இருந்தார்கள். மாயா சமயங்களில் எரிச்சலூட்டினாலும் சுவாரசியமான தொகுப்பாளராக இருந்தார். இடையில் புகுந்து நடுவர் வேலையையும் செய்தார். ‘மஞ்சுளா டீச்சராக’ இவர் விடுமுறையில் சென்ற போது தொகுப்பாளராக வந்த கனியக்கா பரிதாபமாக நின்று கொண்டு மட்டுமே இருந்தார்.
இந்த காமன்மேன் தகுதிச் சுற்றுகள் சுவாரசியமாக அமைந்ததற்கு ராஜூவின் நகைச்சுவை முக்கியமான காரணமாக இருந்தது. அவர் அடித்த டைமிங் கமெண்ட்டுகள், கவுண்ட்டர்கள் நிகழ்ச்சியை கலகலக்க வைத்தன. ஆரி வழக்கம் போல் ஸ்ட்டிரிக்ட் வாத்தியராக இருந்தார். ஓவியா அழகுப் பதுமையாக புன்னகையால் மழுப்பி மௌனமாக இருந்தாலும் சமயங்களில் சிறந்த கமெண்ட்டுகளை தந்தார்.
தீபாவளி சமயத்து பேருந்து கூட்டத்தில் அடித்துப் பிடித்து இடம் பிடித்து வியர்வையுடன் மணிக்கணக்கில் நின்று தாக்குப்பிடிப்பது, நாற்காலியில் அமர குடுமிப்பிடிச் சண்டை போடுவது என்று ஆரம்ப டாஸ்க்குகளே கதிகலங்க வைத்தன.
இந்த காமன்மேன் போட்டியாளர்களில் ஆரம்பத்திலேயே கவனத்தைக் கவர்ந்தவர் முனியம்மாள். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நிச்சயம் செல்வார் என்று அப்போதே தோன்றியது. “மூஞ்சி சார்.. மூஞ்சி.. சில மூஞ்சிகளைப் பார்த்தாதான் கோர்த்து விடத் தோணும்” என்று அல்வா வாசு சொல்கிற காமெடி வசனத்தைப் போல முனியம்மாளின் வெள்ளந்தியான பேச்சும் கிராமத்து தோற்றமும் தனியாக கவனிக்க வைத்தன.
எந்தவொரு ரியாலிட்டி ஷோக்களிலும் பொது கேட்டகிரியைத் தாண்டி சில எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் கேட்டகிரிகள் இருக்கும். அதில் ஒன்று கிராமத்து கேட்டகிரி.
அறந்தாங்கி நிஷா, தாமரைச் செல்வி, தீபாக்கா என்கிற வரிசையில் முனியம்மாளும் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று அப்போதே தெரிந்து விட்டது. ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நகரத்தின் மக்கள் மட்டுமல்லாது சிற்றூர்களிலும் கிராமங்களிலும் விரும்பிப் பார்க்கிறார்கள். எனவே அவர்களில் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்தும் வணிக நோக்கம் இதில் இருக்கிறது. தமிழ் மண்ணின் கலாசாரமும் பண்பாட்டு அடையாங்களும் இன்னமும் கிராமங்களில்தான் எஞ்சியிருக்கிறது என்கிற வகையில் கிராமத்துப் பெண்கள், பிக் பாஸ் போன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கதே.
தகுதிச் சுற்றுகளின் ஆரம்பத்தில் முனியம்மாள் நிறைய சுணங்கினாலும் கடைசியில் ‘ரேங்கிங் டாஸ்க்கில்’ அதிரடியாக செயல்பட்டு பிக் பாஸ் மேடைக்கு வந்து நிகழ்ச்சியிலும் இடம்பிடித்து விட்டார். வீட்டின் முதல் வாரத்தின் நிகழ்வுகள் பெரும்பாலும் முனியம்மாளையே மையமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. தனது அடாவடித்தனமான பேச்சுக்களாலும் செய்கைகளாலும் பெரும்பான்மையான பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்திருந்தாலும் பல சமயங்களில் லாஜிக்காக பாயிண்ட்டுகளை பேசுகிறார். துணிச்சலாக செயல்படுகிறார்.
முதல் வாரத்திலேயே வீட்டின் கேப்டன் ஷாதிகாவுடன் மல்லுக்கட்டி திணறடித்தார்.
“என்னை நாமினேட் பண்ணீங்கன்னா என் கிட்ட மோத பயந்துட்டீங்கன்னு அர்த்தம்” என்று சக போட்டியாளர்களிடம் சவால் விடுமளவிற்கு முனியின் தன்னம்பிக்கை கொடி கட்டிப் பறக்கிறது.
தனது அடாவடித்தனத்தை குறைத்துக் கொண்டு புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தினால் மேலும் சில வாரங்களுக்கு முனியம்மாளை அசைக்க முடியாது என்று தோன்றுகிறது.
காமன்மேன் ஆடிஷன் சுற்றுகளில் கலந்து கொண்டவர்களில் பலர் பின்தங்கினாலும் எவிக்ட் செய்யப்பட்டவர்களில் தகுதியானவர்களும் இருந்தது துரதிர்ஷடமானது.
உதாரணத்திற்கு சரண்யா என்கிற போட்டியாளரைச் சொல்லலாம். வழக்கறிஞரான இவர், கோர்ட் டாஸ்க்கில் திறமையாக பேசியது கூட தொழில்சார் அறிவு என்று சொல்லி விடலாம். ஆனால் மற்ற டாஸ்க்குகளிலும் நிதானம், புத்திசாலித்தனம், சமயோசிதம் போன்றவற்றை வெளிப்படுத்தி ‘தானொரு பிக் பாஸ் மெட்டீரியல்’ என்பதை நிரூபித்தார்.
இவரைப் போன்றே பழைய பிக் பாஸ் சீசன்களை கரைத்துக் குடித்திருந்த சுகுமாரன், துறுதுறுப்பாக விளையாடிய அபிநயா, ஃபிளிர்ட்டிங்கில் ஈடுபட்டாலும் திறமையாக வாதாடிய அரவிந்த் போன்றவர்கள் இறுதிப்பட்டியலுக்கு வரக்கூடிய அளவிற்கு திறமையானவர்களாக இருந்தார்கள்.
ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் போன்ற தேவையற்ற ஆணிகள் இல்லாமல் துவக்க விழா சுருக்கமாக அமைந்தது சிறப்பு. மூன்றாவது சீசனாக தொடர்ந்து தொகுப்பாளராக விளங்கும் விஜய்சேதுபதி வழக்கமான உற்சாகத்துடனும் இயல்பான நகைச்சுவையுடனும் செயல்பட்டார்.
ஆர்ட் டிபார்ட்மெண்ட்டை கை வலிக்க குலுக்கி பாராட்டும்படியாக வண்ண மயமாக இருந்தது, சீசன் (10) பத்திற்கான வீடு. வழக்கமான அலங்காரங்களைத் தாண்டி, ‘Democracy Room’ என்பது இந்த சீசனின் கூடுதல் இணைப்பாகவும், ஆவலைக் கிளப்புவதாகவும் இருந்தது.
வழக்கமாக போட்டியாளர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வீட்டுக்குள் அனுப்பப்படுவதுதான் இதுவரையான மரபு. ஆனால் ‘எதி்ர்பாராததை எதிர்பாருங்கள்’ என்கிற தத்துவத்தை கோணங்கித்தனமாக கையாண்டு ஒன்றிற்கும் மேற்பட்டவர்களை நிற்க வைத்து, ஒரு நிமிடம் பேச வைத்து, பார்வையாளர்களிடம் வாக்கெடுப்பு நடத்துவதின் மூலம் ஒருவரை வீட்டுக்கு அனுப்பியது நியாயமற்ற செயல். பார்த்த சில நிமிடங்களிலேயே இவர் போட்டிக்கு தகுதியானவர் என்று எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
‘நீங்கள் பிக் பாஸிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்’ என்கிற மகிழ்ச்சியான தகவலைக் கேள்விப்பட்டு பல கனவுகளுடன் மேடைக்கு வந்து நின்றவர்களை ஏதோ அதிர்ஷ்ட குலுக்கல் போல தேர்வு செய்து திருப்பியனுப்பியது, அடாவடித்தனமானது. ஆனால் பிக் பாஸில் எது வேண்டுமானாலும் நிகழும் என்கிற வாதத்தை வைத்து ஜல்லியடிப்பார்கள்.
முதல் பேட்சில் வந்த லட்சுமிபிரியா, ஷாதிகா, ஷப்னம் ஆகிய மூவரும் இந்த அநியாய விதியைக் கண்டு வெளிப்படையாகவே அதிர்ச்சியடைந்தார்கள். ஷப்னமிற்கு பதட்டம் அதிகமாகி பேச முடியாமல் போய் விட்டது. இதனால் வாக்கெடுப்பில் பின்தங்கி பரிதாபத்துடன் கிளம்பினார்.
இந்த வரிசையிலும் தகுதியான சிலர் வாக்கெடுப்பில் தோற்றது துரதிர்ஷடமானது. உதாரணத்திற்கு சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னை திறமையாகவே முன்வைத்தார். சமூகவலைத்தளத்தில் இவரைப் பற்றிய பிம்பம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இவரைப் போன்று திறமையாக பேசக்கூடியவர்கள் உள்ளே சென்றால் நிகழ்ச்சியின் சுவை கூடலாம். இதே போல் யோகா டீச்சர் கவிதா, புவியரசு போன்றவர்களும் வெளியேற்றப்பட்டார்கள்.
காமன்மேன் சுற்றுகளில் தோ்வானதில் ஷோபா, மணிவண்ணன், ஆஷா, ஷாமா, முனியம்மாள், டார்வின், கரிஷ்மா, ஜேசன் ஆகிய எட்டு போட்டியாளர்கள் மேடைக்கு வந்தார்கள். இதில் முனியம்மாள், ஜேசன், ஷாமா ஆகிய மூவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு மற்றவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
மணிவண்ணன் எல்லாம் நிச்சயமாக உள்ளே செல்வார் என்று ஆரம்பத்திலேயே யூகித்திருந்தேன். அந்த அளவிற்கு ஆடிஷன் சுற்றுகளில் நடுவர்களின் செல்லப்பிள்ளையாக இருந்தார்.
அண்ணனும் தங்கையுமாக மோதிய அவினாஷ் மற்றும் அக்ஷிதாவில் அண்ணன் வெற்றி பெற்றார். வீட்டில் குடுமிச்சண்டை போட்டுக் கொள்ளும் இருவரும், மேடையிலேயும் பரஸ்பரம் ஊமைக்குத்தாக குத்திக் கொண்டது சுவாரசியம். தன் தகுதியை மட்டும் முன்வைக்காமல், அண்ணனை உரிமையுடன் மட்டம் தட்டியதாலேயே அக்ஷிதா தோல்வியைத் தழுவினார்.
இந்த இன்ஸ்டன்ட் போட்டியில் தோற்றவர்கள் பரிதாபமாக வெளியேறினாலும், ஒருவேளை அவர்கள் ‘வைல்ட் கார்ட்’ என்ட்ரியில் வாய்ப்பு பெறக்கூடும் என்று தோன்றியது. பிக் பாஸ் அப்படியொரு பிளானை ஒளித்து வைத்திருக்கலாம் என்று யூகித்தது, பின்னர் உண்மையாயிற்று. அதன்படி மணிவண்ணன் இப்போது உள்ளே வந்து ஆடிக் கொண்டிருக்கிறார். ஆக பத்தொன்பது போட்டியாளர்களோடு உற்சாகமாக ஆரம்பித்தது, பிக் பாஸ் சீசன் 10.
மன்னராட்சியில் இருந்து மக்களாட்சி மலர்ந்து, மக்களின் குரல் எப்படி மையக்கருத்தாக ஒலிக்கிறது என்கிற வரலாற்றைச் சுருக்கமாக விளக்கிய பிக் பாஸ், ‘ஜனநாயகம்’ என்கிற கருத்தாக்கம், இந்தச் சீசனின் மையமாக இருக்கும் என்பதை அறிவித்தார். அதன் படி வீட்டின் போட்டியாளர்கள், ஆளும் அணி, எதிரணி என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டார்கள்.
ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ‘Democracy Room’-ல் இரு அணிகளும் விவாதிக்கும். அதாவது மோதிக் கொள்ளும். இப்படியொரு ஐடியாவை பிக் பாஸ் டீம் எவ்வாறு யோசித்தது என்பதில் வியப்பில்லை.
முன்பெல்லாம் சட்டமன்ற நிகழ்வுகளை அரசியல் ஆர்வலர்கள் மட்டுமே பார்ப்பார்கள். ஆனால் இப்போது நேரடியாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை இளைய தலைமுறையினர் கூட ஆர்வமாக பார்த்து வருகிறார்கள். இது தொடர்பான ரீல்ஸ்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகின்றன.
இதையொட்டி GENZ தலைமுறைக்கு அரசியல் ஆர்வம் பீறிட்டு வந்திருப்பதாக சிலர் சொல்லி வருகிறார்கள். இளம் தலைமுறைக்கு உண்மையிலேயே அரசியல் ஆர்வம் மிகுந்திருக்கிறதா அல்லது தங்களது ஆதர்ச நடிகர் ஆவேசமாக பன்ச் டயலாக் பேசுவதை வேடிக்கை பார்க்கும் ஆர்வம் மட்டும்தான் மிஞ்சுகிறதா என்பது கேள்விக்குறி.
எப்படியோ, ‘பய பிடிச்சிட்டான்’ என்று டெல்லி கணேஷ் சொல்கிற வசனம் மாதிரி, சட்டமன்ற கூட்டத் தொடரை வேடிக்கை பார்க்கும் இளைய தலைமுறையை கவர்வதற்காக அதே செட்டப்பை பி்க் பாஸ் வீட்டில் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. இதை ரசிப்பவர்கள் ஒரு பக்கம் இருக்க, ‘இங்கேயும் அதே ராவடியா?’ என்று அலுத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்து செட்டில் ஆனதும், fun task தரப்பட்டது. இதில் பப்லு வாய்ஸிலும் சந்திரபாபு பாட்டையும் பாடி அசத்தினார் ராகவ். (அது எப்படிங்க அதே மாதிரி யூத்தாவே இருக்கீங்க?”) திரையிசைப் பாடல்களை பாடும் பாடகர்கள் சேஷ்டைகள் சிலதை செய்து காட்டினார் வினோத்.
முதல் வார கேப்டனை தேர்ந்தெடுக்கும் சடங்கோடு வில்லங்க நிகழ்ச்சி ஆரம்மாகியது. சும்மா சொல்லக் கூடாது, காமன்மேன் தேர்விலிருந்து வந்திருக்கும் முனியம்மாள், ஜேசன், ஷாமா ஆகிய மூவரும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது சரி என்பதை ஆரவாரமாக நிரூபித்து வருகிறார்கள்.
கேப்டன்சிக்காக ஐந்து வேட்பாளர்கள் களம் இறங்கியதில் வினோத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அடுத்தது ஷாதிகா. ஷமாவும் ஜேசனும் சமமான வாக்குகள் பாவம் முத்தழகிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. ஷமாவும் ஜேசனும் மல்லுக்கட்டியதில் ‘உன்னை நான் காமன்மேன் ஷோவிலேயே ஜெயிச்சிட்டேன்” என்று இறுதி அஸ்திரத்தை ஷமா எடுக்க, தனது தோல்வியை உடனே ஒப்புக் கொண்டு விலகினார் ஜேசன்.
‘பாட்சா. மேல பாரு.. உன்னை அஞ்சே செகண்ட்ல முடிச்சிடுவேன்’ என்கிற ரகுவரன் சாயலில் இருக்கிற ஜேசன், காமன்மேன் ஆடிஷனில் மட்டுமல்லாது பிக் பாஸ் வீட்டிலும் தனது உடல்மொழியைக் காட்டி எதிராளிகளை தடுமாற வைக்கிறார்.
போலவே தனது வாதங்களையும் லாஜிக்கோடு முன்வைக்கிறார். ஏதாவது சண்டை நிகழ்ந்தால் உடனே சமாதானம் ஆகிறார். ஆனால் மற்றவர்களை எரிச்சல் அடைய வைக்கும் விஷயங்களையும் செய்கிறார். இந்த சீசனின் முக்கியமான போட்டியாளராக ஜேசன் நீடிப்பார் என்று தெரிகிறது.
வழக்கமாக தலைவர் போட்டிக்கு அவர்கள்தான் களத்தில் இறங்கி ஆடுவார்கள். ஆனால் இந்த முறை அவர்களின் ஆதரவாளர்கள் ஆட வேண்டும். இந்த வகையில் ஷாதிகாவிற்கு அதிக ஆதரவு கிடைத்து வீட்டின் முதல் கேப்டன் ஆனார். அதாவது ஆளும் அணியின் தலைவர்.
‘ ஸ்ட்டார்ட்டிங்கலாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனா உன் கிட்ட ஃபினிஷிங் சரியில்லையேப்பா’ என்கிற வசனம் மாதிரி ஆரம்பத்தில் ஷாதிகா தந்த வாக்குறுதிகளும் வழிநடத்துதல்களும் சிறப்பாக இருந்தன. ஆனால் போகப் போக அந்தப் பொறுப்பின் அழுத்தம் தாங்காமல் கலங்கி உடைந்து விட்டார். “நான் அழுவலையே.. கண்ணு வியர்க்குது” என்று சமாளிக்கும் விதமாக அடிக்கடி கண்களை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டார்.
எதிரணித் தலைவராக வினோத் தோ்வானார். இந்தப் போட்டியில் இறுதி வரை நீடிக்கக்கூடிய அம்சங்களை இவரிடம் பார்க்க முடிகிறது. தலைமைப் பண்பு, விவாத திறமை, நிதானம், சர்ச்சைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்களால் கவர்கிறார்.
கிராமத்து மக்கள் வெள்ளந்தியானவர்கள் என்று பொதுப்புத்தி சார்ந்த ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதைப் பொய்யாக்கும் உண்மையாக முனியம்மாளின் ஆளுமை இருக்கிறது. சமயங்களில் தன்னை வெள்ளந்தியாகவும் சித்தரித்துக் கொள்ளும் முனியம்மாள், பல சமயங்களில் பாயிண்ட் பாயிண்ட்டாக தெளிவுடன் பேசுகிறார். ‘உலகமே உன்னை எதிர்த்தாலும் நீயா ஒப்புக்கற வரைக்கும்’ என்பது மாதிரி மற்ற போட்டியாளர்களை அநாயசமாக எதிர்த்து நிற்கிறார். தான் நாமினேட் செய்யப்படும் போது “ஒரு நல்ல பேச்சாளரை, சிந்தனையாளரை வெளியே அனுப்பப் பார்க்கறீங்க. அப்புறம் எப்படி ஷோ சுவாரசியமா இருக்கும்?.. அப்ப என்னைப் பார்த்து பயப்படறீங்கன்னு அர்த்தம்” என்று அதிரடியாக சவடால் விடுகிறார்.
இந்த சீசனின் சுவாரசியமான போட்டியாளர்களுள் ஒருவராக முனியம்மாள் இருக்கிறார். அடாவடித்தனமாக பேசுவது, ஒரு விஷயத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் மல்லுக்கட்டுவது, கெட்ட வார்த்தை பேசுவது, துப்பும் சைகையை செய்வது போன்றவற்றை மட்டும் அவர் கட்டுப்படுத்திக் கொண்டால் போட்டியில் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியும். மற்றபடி வீட்டின் தலைவரான ஷாதிகாவின் நிம்மதியை இழக்கச் செய்து தொடர்ந்து மல்லுக்கட்டி உண்மையான எதிரணித் தலைவராக முனியம்மாள் இருந்தார். ஆளும் அணியில் இருந்து கொண்டே தலைவரை எதிர்த்து வெளிநடப்பு செய்தததெல்லாம் சுவாரசியமான அராஜகம்.
இந்த முதல் வாரத்தில் ‘Night star task’ என்பது முக்கியமான அம்சமாக இருக்கிறது. இது எல்லா வாரமும் தொடருமா என்று தெரியவில்லை.. மனிதனுக்கு இன்றியமையாத விஷயங்களான உணவு, உறக்கம், மனநிம்மதி போன்றவற்றில் நெருக்கடி ஏற்படுத்தி அத்தகைய அசாதாரணமான சூழலை போட்டியாளர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்று பரிசோதிப்பது பிக் பாஸ் ஆட்டத்தின் அடிப்படை.
அந்த வகையில், இந்த சீசனில் போட்டியாளர்களின் உறக்க நேரத்தை கணிசமாக குறைப்பதற்கான உத்திதான் ‘Night star task’.
ஒவ்வொரு நாளும் வீட்டின் தலைவரால் இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் தங்களின் திறமையைப் பயன்படுத்தி இரவு நேரத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத் தர வேண்டும். இதில் பின்னடைவு ஏற்பட்டால் அவர்கள் நாமினேஷனுக்கும் எலிமினேஷனுக்கும் பலியாகும் வாய்ப்பிருக்கிறது.
இன்னொரு வகையில் இது போட்டியாளர்களுக்கு தங்களின் தனித்திறமைகளைக் காட்டுவதற்கான வாய்ப்பும் கூட. இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் பார்வையாளர்களைக் கவர்ந்து வாரா வாரம் முன்னேறலாம். இந்த வாய்ப்பை சிலர்தான் சரியாக பயன்படுத்திக் கொண்டார். முனியம்மாள் போன்ற சிலர் அலட்சியப்படுத்தி உறங்கச் சென்று வி்ட்டார்கள்.
‘அரக்கப்பசி டாஸ்க்’ என்கிற போட்டியில் அதிக பாயிண்ட்டுகளை எடுப்பவர்கள், பிக் பாஸ் வீட்டின் சில பவர்களைப் பெறலாம். ஆயிரம் பாயிண்ட் ஜெயித்து Unlimited food, Ban the Bed என்று இரண்டு பவர்களைப் பெற்ற அவினாஷ் அதன் மூலம் நிகழ்ச்சிக்குள் எவ்வித சுவாரசியத்தையும் ஏற்படுத்தவில்லை. ‘Style Patrol’ என்கிற பவரை பெற்ற முகேஷ், ஆரம்பத்தில் முனியம்மாளை நகரப் பெண்மணி அலங்காரத்திலும் சாந்தினியை கிராமத்துப் பெண்மணி தோற்றத்திலும் உடை உடுக்க வைத்து ஆர்வத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதை சரியாக தொடரவில்லை. நகரத்துப் பெண்மணிகளின் ஆடை அலங்காரத்தை வைத்துக் கொண்டு முனியம்மாள் செய்த அலப்பறைகள் சுவாரசியமாக இருந்தன. ‘Replace and Save’ என்கிற பவரைப் பெற்ற பிருத்வி, தன்னையே காப்பாற்றிக் கொண்டு சேஃப் கேம் ஆடினார்.
நகைச்சுவை நடிகரான பிளாக் பாண்டி, சில சமயங்களில் கலகலப்பூட்டினாலும் பெரும்பாலும் அமைதியாக இருந்தார். இதற்கிடையில் உடல்நலப் பிரச்சினை காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறியது துரதிர்ஷ்டமானது. பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சகலவிதமான பரிசோதனைகளும் செய்யப்படுவதாக சொல்கிறர்கள். எனில் பாண்டிக்கு இருந்த பிரச்சினையை எப்படி முன்பே கவனிக்காமல் விட்டார்கள்?
இரண்டே நாட்கள் பழகியிருந்தாலும் அவரின் வெளியேற்றத்திற்காக சக போட்டியாளர்கள் பலரும் கலங்கினார்கள். வைல்ட் கார்ட் வாய்ப்பில் பாண்டி மீ்ண்டும் உள்ளே வருவார் என்று எதிர்பார்ப்போம். வார இறுதி எபிசோடில் பாண்டியின் வெளியேற்றத்தை வருத்தத்துடன் குறிப்பிட்ட விஜய் சேதுபதி ‘விரைவில் ஒரு படத்தில் இணைவோம்’ என்று சொன்னது நல்ல விஷயம்.
ஷாதிகாவுடன் மோதல் ஏற்பட்ட ஒரு தருணத்தில் “உன்னையெல்லாம் லீடராவே ஏத்துக்க முடியாது. மாத்தி மாத்தி பேசற” என்று வெடித்த முனியம்மா, சட்டென்று துப்புவது போல் செய்து காட்டியது தவறான செயல். இதை வன்மையாக கண்டித்த ஷாதிகா, முனியம்மாள் சிறை செல்லும் தண்டனையை அளித்தார். முதலில் முரண்டு பிடித்தாலும் பிறகு சிறைக்குள் அடைபட்ட முனியம்மாள் “இந்த முனியம்மாக்குள்ள இரக்கம், அன்புன்னு வேற முகங்களும் இருக்கு. இதுவரைக்கும் நிறைய கட்டுப்பாடுகளுக்குள்ள இருந்துட்டேன். இப்பதான் சுதந்திரம் கிடைச்சிருக்கு” என்று சொல்லி கண்ணீர் விட்டது நெகிழ்ச்சியான காட்சி. பிக் பாஸ் போன்ற பெரிய வெளிக்குள் ஒரு கிராமத்துப் பெண்மணி நுழைவது எத்தனை பெரிய பரவசத்தை அளித்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
காமன்மேன் ஆடிஷன் சுற்றுகளில் இறுதி வரை முன்னேறி, ஆனால் மேடையில் வெளியேறிய மணிவண்ணன் இப்போது என்ட்ரி. எனில் இது போல் வெளியேறிவர்களும் உள்ளே வருவார்கள் என்று தெரிகிறது. தானொரு பிக் பாஸ் மெட்டீரியல் என்பதை முன்பே நிரூபித்து விட்டார் மணி. கலகலப்பாக பேசக்கூடியவர். கூடவே வில்லங்கமாக பேசி ஏழரையையும் கூட்டுவார். மற்றவர்களின் கமெண்ட்டிற்கு அச்சப்பட மாட்டார். தன் கருத்துக்களையும் துணிச்சலாக கூறி விடுவார்.
மூன்றாவது நாளின் இறுதியில், மற்றவர்களின் அழுத்தம் தாங்காமல் தன் பதவியை ராஜினாமா செய்தார் ஷாதிகா.
இந்த சீசனில் போட்டியாளர்களே விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ள முடியும். ‘உங்க ஆட்சி, எங்க காட்சி’ என்பதுதான் பிக் பாஸ் தந்த வாக்குறுதி. திட்டங்களையெல்லாம் நன்றாக சிந்தித்த ஷாதிகாவால் அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை.
Leader’s Exit List என்கிற டாஸ்க்கில் மூன்று போட்டியாளர்களை வீட்டின் தலைவர் நாமினேட் செய்யலாம். அவர்களில் ஒருவர் எலிமினேட் ஆவார். நைட் ஸ்டார் டாஸ்க்கில் யார் சரியாக செயல்படவில்லையோ அவர்களைத் தேர்ந்தெடுக்கலாம். இத்தனை முக்கியமான டாஸ்க்கில் ஷாதிகா பயங்கரமாக சொதப்பினார். முதலில் சவின்யா, சாந்தினி, ராகவ் ஆகிய மூவரின் புகைப்படங்களை வைக்க மக்களுக்கு அதிர்ச்சி.
‘என்னது ராகவ் ஃபோட்டோவா?” என்று சிலர் பதட்டமடைய, ‘அடப்பாவிங்களா மூணு நாளா கண்ணு மூடாம வேலை செஞ்சேனே?” என்று ராகவ் கண்கலங்க, “நீயெல்லாம் ஒரு தலைவியே இல்ல. உன்னை செலக்ட் செஞ்சதற்காக நாங்க வெட்கப்படறோம்.. வேதனைப் படறோம்” என்று ஆளுங்கட்சி அணி நபர்களே தலைவியை தாக்க ஆரம்பித்தார்கள்.
“ஆக்சுவலி.. நான் ஒரு காரணத்திற்காக அப்படி பண்ணேன்.. அதன் மூலம் நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்த முடியும்” என்று தடுமாறி மழுப்பிய ஷாதிகா, எதிர்ப்பை கண்டு மூன்று புகைப்படங்களையும் முனியம்மாள், தன்யா, சாந்தினி என்று மாற்றி வைத்தார். ‘என் மேலயா கை வெச்சிட்டே. பார்த்துக்கறேன்’ என்பது போல் உக்கிரமானார் முனியம்மாள்.
ஷாதிகாவின் அடுத்த தடுமாற்றம், மீட்டிங்கின் போது நடந்தது. கூச்சல், குழப்பம் அதிகமாகவே ‘நீங்க பேசி முடிங்க. நான் அப்புறமா வரேன்’ என்று வெளியேறி விட்டார். கட்டுக்கு அடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியதுதான் ஒரு தலைவனுக்கு அழகு. இதை செய்யத் தவறி தன்னுடைய அணியின் விரோதத்தையே சம்பாதித்துக் கொண்டார் ஷாதிகா.
அடுத்து பிருத்வியும் வினோத்தும் புதிய தலைவர் போட்டிக்கு நிற்க, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வினோத். எதிரணி தலைவராக ஜேசன். ஒரே அணியில் முன்பு இருந்தவர்களே எப்படி ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் இருக்க முடியும்? இந்தப் பாயிண்ட்டை ஷாதிகாவிடம் தனியாக சொல்லிக் கொண்டிருந்த தன்யாவின் புத்திசாலித்தனம் நன்று.
புதிய தலைவரான வினோத், முனி, சவின்யா, தன்யா ஆகிய மூவரை நாமினேட் செய்ய, பிறகு நடந்த வாக்கெடுப்பில் தேர்வாகி வீட்டை விட்டு வெளியேறினார் சவின்யா. இந்த சீசனின் முதல் எவிக்ஷன். ஆம், இந்த சீசனில் பார்வையாளர்களின் வாக்குகள் இல்லாமல். சக போட்டியாளர்களே ஒருவரை வெளியேற்ற முடியும். சவின்யா இந்த எவிக்ஷனுக்கு தகுதியானவரே. அந்த அளவிற்கு அவரது இருப்பு வெளிப்படவில்லை.
வினோத் தற்காலிகமாக பதவி ஏற்றதால், அடுத்த வார தலைவருக்கான வாக்கெடுப்பு நடந்தது. இதன் படி அன்சரும் ஷாமாவும் தலைவர் பதவிக்காக மோதுவார்கள். இந்த வாரம் முழுவதும் சரியாக செயல்படாத கேட்டகிரியில் தேர்வாகி அஷ்மிதாவும் முனியம்மாவும் சிறைக்குச் சென்றார்கள். தன்னை body shaming செய்ததாக சொல்லி கண்கலங்கினார் அஷ்மிதா.
முனியம்மாள் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்க மழை பெய்து அவர்களைக் காப்பாற்றியது. ‘பார்த்தீங்களா பிக் பாஸ். இயற்கையே வந்து என்னைக் காப்பாத்திடுச்சு. நியாயமே வெல்லும்’ என்று பிக் பாஸிற்கே முனியம்மாள் சவால் விட்டு பேசியது சுவாரசியமான காமெடி.
கோமாளி ஷோவையொட்டி அன்சரை மணிவண்ணன் கிண்டல் செய்யப் போக, அப்போதைக்கு சிரித்து சமாளித்தாலும் “என் தொழிலைப் பத்தி தப்பா பேசிட்டாரு. நான் இந்த இடத்துக்கு வர எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பேன்” என்று அழ ஆரம்பித்து விட்ட அன்சரை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.
பொதுமக்களை மகிழ்விக்கிற நகைச்சுவைக் கலைஞர்களின் மறுபக்கம் எத்தனை சோகம் நிறைந்தது என்பதற்கான உதாரணம் இது. அன்சரிடம் மட்டுமல்லாது தன்யாவிடமும் ஏடாகூடமாகப் பேசி ஏழரையை மணிவண்ணன் கூட்டியிருக்கிறார் போலிருக்கிறது.
விஜய் சேதுபதி என்ட்ரி. முதல் வார பஞ்சாயத்து. ‘ஜனநாயகம்ன்னா உங்க புரிதல் என்ன?” என்று முதல் கேள்வியை வீச, சில போட்டியாளர்கள் தாங்கள் சின்ன வயதில் படித்த ஆங்கில வாக்கியங்களை பதிலுக்கு வீசினார்கள். கேள்வி புரியாத மாதிரி முனியம்மாள் பாவனை செய்து ‘எனக்கெல்லாம் பயமே கிடையாது” என்று வழக்கம் போல் பன்ச் வசனம் பேச ‘அதெல்லாம் எனக்கு வேணாம். கேட்ட கேள்விக்கு பதில்’ என்று ஸ்ட்டிரிக்ட் ஆபிசராக மாறிய விசே, பிறகு சட்டென்று மாறி “பெண்கள் எத்தனைதான் அலங்காரம் செய்து கொண்டாலும் கிச்சன் அறையில்தான் நிற்க வேண்டியிருக்கு” என்று திடீர் பெண்ணியம் பேசி கைத்தட்டல்களை அள்ளினார்.
தலைவர் ஆவதற்காக ஷாதிகா அள்ளித் தந்திருந்த வாக்குறுதி பாயிண்ட்களை வரிசையாக வாசித்த விசே “இதையெல்லாம் நீங்க ஃபாலோ பண்ணீங்களா?” என்று கேட்க, ஏற்கெனவே போட்டியாளர்களிடம் மல்லுக்கட்டி விடிவி கணேஷ் வாய்ஸிற்கு வந்திருக்கும் ஷாதிகா மௌனமாக நின்று முழு சரணாகதி அடைந்து விட்டார்.
“லீடர்ஷிப்புன்னா என்னன்னு தெரியல. வாக்குறுதிகளை அள்ளி வீசிட்டு பதவிக்கு வந்தப்புறம் பிரச்சினைன்னா விலகி ஓடறீங்களே.. இது சரியா?” என்று விசே யதார்த்தமாக கேட்க, அதை வேறு எங்கேயோ கனெக்ட் செய்து கொண்ட பார்வையாளர்கள் “இது அதுல்ல…” என்று கைத்தட்டினார்கள். இந்த வசனம் காரணமாக விசேவிற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பும், கொஞ்சம் பாராட்டும் கிடைத்திருக்கிறது. பிக் பாஸ் டீம் இதையெல்லாம் யோசித்துதான் டயலாக் எழுதியிருப்பார்கள் போல.
அடுத்ததாக எதிரணித் தலைவர் வினோத்தையும் அவரது கூட்டாளிகளையும் எழுப்பி ‘எதிரணியோட பொறுப்பு என்ன?” என்று ரோஸ்ட் செய்ய “என்னய்யா இது மனுஷன் மெஷின் கன்னோட வந்திருக்காரு” என்று வினோத்தும் டோட்டல் சரணாகதி ஆகி விட்டார். ஜேசன் மட்டும் சற்று சுதாரித்துக் கொண்டு “அதுல பாருங்க.. ஷாதிகா பாயசம் தரேன்னு சொல்லி லீடர் ஆகிட்டு கடைசில பாசிசம் ஆக்கிட்டாங்க” என்று வியாக்கியானம் செய்ய “புரியறா மாதிரி பேசுங்க. பாஸ்.. உக்காருங்க” என்று அவரை ஆஃப் செய்தார் விசே.
துறைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மட்டும்தான் வீட்டுப் பணிகளைச் செய்ய வேண்டும். மற்ற எவரும் அவர்களுக்கு உதவக்கூடாது என்பது விதி. ஆனால் தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைக்கலாமா என்றொரு உரையாடல் எதிரணியில் ஓடியது.
“பாத்ரூம் க்ளீன் பண்றது அவங்க வேலைதான். அதுக்காக நாம ஃபிளஷ் செய்யாம வர முடியுமா. அதை மாதிரிதான் இதுவும்” என்று கச்சிதமான உதாரணத்தைச் சொன்னார் ஜேசன். வினோத், ஷாமா ஆகியோருக்கும் இதே கருத்தில் உடன்பாடு இருந்தது.
ஆனால் வாரஇறுதி பஞ்சாயத்தில், எத்தனையோ விஷயங்களை விட்டு விட்டு இதை கையில் எடுத்த விசே “உங்களை யாரு எதிரணிக்கு உதவச் சொன்னது.. இமேஜ் போயிடும்ன்னு பயப்படறீங்களா.. ஹீரோவா நடிக்கறத விட வில்லனா நடிக்கறதுலதான் எனக்கு போதை. எத்தனை நாளைக்கு நல்லவனா ஆக்ட் பண்றது?” என்றெல்லாம் வியாக்கியானம் தந்தார்.
எதிரணிக்கு நெருக்கடி தந்து ஆட்டத்தை சுவாரசியப்படுத்த வேண்டும் என்பதெல்லாம் சரிதான். அதற்காக தான் சாப்பிட்ட தட்டை தானே கழுவி வைக்கும் அடிப்படையான பண்பை கூட கை விட வேண்டும்? பல விஷயங்களை நுட்பமாக சிந்திக்கிற விசேவால் எப்படி இவ்வாறு அபத்தமாக சொல்ல முடிந்தது என்று தெரியவில்லை.
ஆளும் அணியில் இருந்து கொண்டே தலைவரை எதிர்க்கும் முனியம்மாள் உள்ளிட்டவர்களுக்கு அட்வைஸ் தந்த விசே, இந்த எதிர்ப்பையெல்லாம் தனியாக நடக்கும் மீட்டிங்கில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னது நல்ல பாயிண்ட்.
பஞ்சாயத்தின் இரண்டாவது நாள். எவிக்ட் ஆன சாவின்யா மேடைக்கு வந்து பெங்களூர் தமிழில் ஒவ்வொருவரையும் கிழித்து தோரணை கட்டினார். சிலருக்கு நல்ல சான்றிதழ் கொடுத்தார். ‘இதை வீட்டுக்குள்ள செஞ்சிருந்தா வெளியே போகத் தேவையில்லையே’ என்று மக்கள் முணுமுணுத்தார்கள்.
சக போட்டியாளர்களே வாக்களித்து சாவின்யாவை வெளியேற்றினார்கள். இது ஒரு வாரம் மட்டும்தான். இனிமேல் மக்கள் வாக்குகள்தான் எவிக்ஷனை தீர்மானிக்கும் என்று விசே தெளிவுப்படுத்தியது நன்று. மக்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த ஷோ சுவாரசியம் அடையாது.
‘எந்த இரண்டு நபர்களுக்கு கேப்டன் ஆக தகுதியே கிடையாது. கும்பல்ல கோயிந்த போடற ஆள். சொல்லுங்க” என்று அடுத்த கேள்வியை விசே கேட்க “முனியம்மாள், மணிவண்ணன் போன்றவர்கள் செய்யும் ராவடிகளை மக்கள் அடுக்கினார்கள். “அவங்க நல்லா பேசறாங்கன்னா, எப்படி கும்பல்ல கோயிந்தா போடறதா சொல்வீங்க.. யோசியுங்க” என்றார் விசே. இதன் மூலம் இன்னமும் ஆட்டத்திற்குள் வராமல் அமைதியாகவே இருக்கும் மிக்சர் பார்ட்டிகளை குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது.
இந்த முதல் வாரத்தைப் பொறுத்தவரை வினோத், முனியம்மாள், ஜேசன், ஷாமா, ஷாதிகா, மணிவண்ணன், அன்சர் போன்றவர்கள் சிறப்பாக வெளிப்பட்டார்கள். முகேஷ், லஷ்மிபிரியா, தன்யா, ராகவ், அஷ்மிதா, சாந்தினி போன்றவர்கள் இப்போதுதான் முதலடி எடுத்து வைக்கிறார்கள். குமரன், ஜாவித், பிருத்வி, அவினாஷ் போன்றவர்கள் இன்னமும் வெளிப்படவே இல்லை.
பிரபலங்கள் vs சாமானியர்கள் என்று இரு பிரிவாக அமர வைத்தார் விசே. ஏற்கெனவே சற்று பிரபலங்களாக இருக்கிறவர்களுக்கு அதன் காரணமாகவே சற்று வாக்குகள் கிடைக்கும். ஆனால் மக்களுக்கு பரிச்சயமே இல்லாத முனியம்மாள், ஜேசன், மணிவண்ணன், ஷாமா போன்றவர்கள் எப்படி கலக்குகிறார்கள், பார்த்தீர்களா என்பதை உணர்த்துவதே இதன் நோக்கம். அதிலும் கிராமத்திலிருந்து வந்திருக்கும் முனியம்மாள், நகரத்து போட்டியாளர்களுக்கு இத்தனை சவாலாக இருப்பது சுவாரசியம்.
“நீங்க சண்டை போடணும்னு நான் சொல்லல. ஒருத்தரையொருத்தர் சேலன்ஞ் பண்ணுங்க. அதுக்கேத்த மாதிரி ரூல்ஸ் போடுங்க. ஆட்டத்தை சுவாரசியமாக்குங்க. அப்பத்தானே மக்கள் பார்ப்பாங்க” என்று போட்டியாளர்களை உசுப்பேற்றியிருக்கிறார் விசே. இதன் தாக்கம் எப்படி இருக்குமென்று அடுத்தடுத்த நாட்களில் தெரியும்.
ஒவ்வொரு சீசனிலும் ஊதுகிற சங்கை இப்போதும் ஊதி வைக்கிறேன். இதர ரியாலிட்டி ஷோக்களைப் போல பிக் பாஸ் என்பது பொழுதுபோக்கை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. சில மனிதர்களை அசாதாரணமான சூழலில் வைத்து அவர்களின் அசலான உணர்ச்சிகளைத் தூண்டி பரிசோதிப்பது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் தவறுகள், விழும் சறுக்கல்கள், நிகழ்த்தும் கீழ்மைகள் போன்றவற்றை வைத்து அவர்களை கிண்டலடித்து வசை பாடுவதால் நம்முடைய வன்ம உணர்ச்சி திருப்தியடையுமே தவிர வேறு உபயோகம் இல்லை. போட்டியாளர்களும் நாமும் வேறு வேறல்ல. நம்முடைய பிரதிநிதிகள்தான் அவர்கள்.
இதே மாதிரியான தவறுகளை நாமும் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ முறை செய்திருப்போம். இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதின் மூலம் அந்தக் கீழ்மைகளை மனச்சாட்சி என்னும் காமிராவின் வழியாக டைம் மெஷினில் பார்த்து நம்மை சீர்திருத்திக் கொள்ள முயல்வதுதான் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதில் கிடைக்கும் பயனாக இருக்கும்.
அடுத்த வாரம் சந்திப்போம் மக்களே.
இந்த சீசனில், முதல் வாரத்தைப் பொறுத்தவரை உங்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் பற்றி கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடுங்கள்.

















