விநாயகர் சதுர்த்தி: ``விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேற" - முதல்வர் விஜய...
கோவையில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை – குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்!
கோவை கடந்த 12ம் தேதியன்று இரவு சுமார் 7.30 மணி அளவில் 14 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சந்தோஷ் (24) மற்றும் தவசி (28) ஆகிய இருவர் சேர்ந்து அச்சிறுமியைக் கடத்திச் சென்று, ஒரு வீட்டில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அரிவாளை காட்டி மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியை மிரட்டுவதற்குப் பயன்படுத்திய அரிவாளை மறைத்து வைத்து இருக்கும் இடத்தை அடையாளம் காட்டுவதற்காக கைது செய்யப்பட்ட தவசியை ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல் குழுவினர் அழைத்துச் சென்றனர். அப்போது, அங்கு மறைத்து வைத்து இருந்த அரிவாளைத் திடீரெனக் கையில் எடுத்த தவசி, காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியை வெட்டியதாகவும், இதில் சுவர்ணவள்ளியின் கையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், எச்சரிக்கையை மீறி மற்ற காவல் அதிகாரிகளையும் அரிவாளால் தாக்க முயன்றதாகவும், இதனால் பாதுகாப்பு கருதி உதவி காவல் ஆய்வாளர் சிலம்பரசன் என்பவர் தவசியின் இடது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















