விநாயகர் சதுர்த்தி: 12 ராசிகளுக்கும் பிரத்யேக விநாயகர் வழிபாடு! எந்த ராசிக்கு எ...
விநாயகர் சதுர்த்தி: 12 ராசிகளுக்கும் பிரத்யேக விநாயகர் வழிபாடு! எந்த ராசிக்கு என்ன வழிபாடு?
மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு, 12-ல் சனி. மேலும் ராகுவும் கேதுவும் சஞ்சரிக்கும் நிலைப்படி. வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நீங்கள், அம்மன் கோயிலில் அருளும் விநாயகருக்குப் பாலபிஷேகம் செய்யவேண்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் நிவேதித்துத் தானம் வழங்கலாம். இதனால், எதிர்பாராத வெற்றிகளும் பொருள் வரவுகளும் உண்டாகும்.

ரிஷபம்: இவர்களுக்கு குருவின் சஞ்சாரப்படி குடும்பத் தில் வீண் விவாதங்கள், சொத்துப் பிரச்னை வரக்கூடும். மனைவி வழி உறவினர்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும். அதேபோல், ராகு-கேது சஞ்சாரப்படி தாய் வழியில் விரயம் உண்டாகலாம். வீண் மனக்குழப்பமும் ஏற்படும். இந்த ராசியினர், அரசமரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு வஸ்திரம் சாத்தி, 12 தீபங்கள் ஏற்றிவைத்து வழிபடலாம். இதனால் பாதிப்புகள் நீங்கும்; காரிய வெற்றி உண்டாகும்.
மிதுனம்: இவர்களுக்குக் குருவின் சஞ்சாரப்படி எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து போகும். ராகு-கேது கிரகங்களால் வீடு - மனை வாங்கும் யோகம் உண்டு. எனினும் பேச்சில் கவனம் தேவைப்படும். இந்த ராசியினர் முருகன் ஆலயங்களில் அருளும் பிள்ளையார் வழிபாட்டுக்கு அபிஷேகத் திரவியங்கள் வாங்கிக் கொடுக்கலாம். அரிசி-வெல்லம் தானம் தருவதன் மூலம் அதிர்ஷ்ட யோகங்கள் கைகூடும்.
கடகம்: ராசிக்குள் குரு இருக்கும் காலத்தில் எதிலும் உணர்ச்சி வயப்படாமல் முடிவெடுக்க வேண்டும். செலவுகளும் கையைக் கடிக்கும். 9-ல் சனி சஞ்சரிக்கிறார். முயற்சிகள், கிடைக்கவேண்டிய வெற்றி போன்றவற்றில் தடைகள் உண்டாகலாம். இவர்கள், அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று 16 தீபங்கள் ஏற்றி வைத்து சிதறு தேங்காய் உடைத்து வழிபடுவது விசேஷம். 11 பேருக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இதன் மூலம் மனத் தைரியமும், நம்பிக்கையும் பிறக்கும். புது முயற்சிகள் வெற்றிபெறும்.
சிம்மம்: அஷ்டமத்துச் சனி நடைபெறும் காலம். சிரமங்களும் கஷ்டங்களும் சஞ்சலத்தை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. செயல்பாடுகளில் சிறிது சுணக்கம் ஏற்படலாம். இவர்கள் ஸித்தி விநாயகர் அல்லது முச்சந்தியில் அருளும் பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. பசுவுக்குக் காய்கறி உண்ணக் கொடுங்கள். புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

கன்னி: கண்டச் சனி நடைபெறும் காலம். காரியங்களில் கவனம் தேவைப்படும். அதேபோல், ராகு-கேதுவின் சஞ்சாரப்படி சஞ்சலங்கள் உண்டாகலாம். தனிப்பட்ட விஷயங்களில் சுணக்கம் ஏற்படலாம். இந்த ராசியினர், அம்மன் ஆலயத்தில் அருளும் பிள்ளையாருக்கு 11 தேங்காய்களை மாலையா கக் கட்டி அணிவித்து வழிபடுவதால் நன்மை உண்டாகும். உத்தியோக உயர்வு கிடைக்கும்.
துலாம்: இவர்களுக்கு கிரக அமைப்புகள் நல்லபடியான பலன் களைக் கொடுக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவதில் தாமதம் நேரலாம். இவர்கள், மனக்குழப்பங்கள் நீங்கி நினைத்தவை நல்லபடியே நிறைவேற, தனிக்கோயிலில் மூல மூர்த்தியாய் அருளும் பிள்ளையாருக்கு அரிசி, வெல்லம் அளிக்க வேண்டும். பசுக்களுக்கு உணவு வழங்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று 6 பேருக்கு அன்னதானம் வழங்கலாம்.
விருச்சிகம்: 5-ல் சனி. சிற்சில சவால்களைச் சந்திக்க நேரிடும். ஆனாலும் குருபகவானின் நிலைப்படி, எதிர்பாராத திடீர் பண வரவுகள் உண்டு. விரும்பிய பொருள்களை வாங்குவீர்கள். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். வீட்டில் நல்லது நடக்கும். சுபிட்சம் அதிகரிக்க இந்த ராசியினர், பெருமாள் கொயிலில் அருளும் தும்பிக்கை ஆழ்வாருக்கு அருகம்புல் மாலை, வஸ்திரம் சாத்தி வழிபட வேண்டும். அத்துடன், கருட பகவானுக்குத் தீபம் ஏற்றி வணங்குவதால் நிம்மதி பிறக்கும். செய்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு: இந்த ராசியினருக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இவர்கள் தடங்கல்கள் விலகி, எதிர்பார்த்த விஷயங்களில் ஆதாயம் பெற்றிட, பிள்ளையார் கோயிலில் நெய்தீபம் ஏற்றி வழிபடலாம். குழந்தைகளுக்கு மோதகம் விநியோகிக்க லாம். இதன் மூலம், மனநிம்மதி பிறக்கும்; எடுத்த காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

மகரம்: முக்கிய கிரகங்கள் சாதகமான பலன்களைத் தரும் காலம். எனினும், வீட்டிலும் வெளியிலும் வேலைப்பளுவும் அலைச்சலும் நீங்கிட, பிள்ளையாரை வழிபடவேண்டும். பெருமாள் கோயிலுக்குச் சென்று தும்பிக்கையாழ்வாரை தரிசித்து வணங்குவதுடன், 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவது சிறப்பு. அதேபோல் விநாயகர் ஆலயங்களுக்கு தீபமேற்ற நெய் வாங்கிக் கொடுக்கலாம். அவரருளால் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் சந்தோஷச் செய்திகள் சீக்கிரம் வந்துசேரும்.
கும்பம்: 7-ல் சூரியன். தம்பதிக்கு இடையே பிணக்குகள், ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். இவர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று 8 வியாகர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது விசேஷம். ஒவ்வொரு கோயிலிலும் 8 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். அபிஷேகத்துக்கு இளநீர், பன்னீர், பால் வாங்கிக் கொடுக்கலாம்.
மீனம்: ஜன்மச் சனி நடைபெறும் காலம். இந்த ராசியினர் வீண் செலவுகளைத் தவிர்க்கவும், குடும்பம், ஆரோக்கியம், தனவரவு ஆகிய விஷயங்களில் மேன்மை காணவும், சிவாலயங்களுக்குச் சென்று விநாயகரை வழிபடலாம். 5 நெய்தீபங்கள் ஏற்றிவைத்து, அருகம்புல் மாலை சாற்றி வணங்குவது விசேஷம். விநாயகர் சதுர்த்தி தினத்தில், மோதகம் படைத்துக் குழந்தைகளுக்கு விநியோகிக்கலாம்.



















