Gold Rate: சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
"திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயத்தையும் ஏத்துக்கிறேன்!"- இயக்குநர் கலையரசன் பேட்டி
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், ரியோ, மாளவிகா மனோஜ், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், ஜென்சன் எனப் பலர் நடித்திருக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தை ஓடிடி-யிலும் மக்கள் பலர் கண்டுகளித்து வருகிறார்கள்.
படத்திற்கு பல தரப்பிலிருந்து வரவேற்பு கிடைத்தாலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில் ஆணாதிக்க சிந்தனைகள் நிறைந்திருக்கும் வகையில் படத்தின் திரைக்கதையாசிரியரகள் சிவக்குமார் முருகேசனும், கலையரசன் தங்கவேலும் அமைத்திருக்கிறார்கள் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
'ஆண் பாவம் பொல்லாதது' படத்திற்காக இயக்குநர் கலையரசன் தங்கவேலுக்கு வாழ்த்துகள் சொல்லி அவரைப் பேட்டி கண்டேன்.
"வணக்கம். 'ஆண்பாவம் பொல்லாதது' படத்துக்கு தியேட்டர்ல நல்ல வரவேற்பு கிடைச்சிருந்தது. இப்போ ஓடிடி-யிலும் படத்தை மக்கள் பார்த்து பாராட்டுறாங்க.
அறிமுக இயக்குநராக எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணமாக இது இருக்கு!" என்றவர் திரைப்படத்தின் எழுத்து வேலைகள் குறித்து, படத்திற்கு கிடைத்து வரும் அனைத்து வகையான விமர்சனங்கள் குறித்தும் வெளிப்படையாக நம்மிடையே பேசினார்.

"இந்தப் படத்துக்கான ஐடியாவை முதல்ல எங்களுடைய நண்பர் பாலாதான் எங்ககிட்ட சொன்னாரு. பிறகு அந்த ஐடியாவை வச்சு திரைக்கதையாசிரியர் சிவக்குமார் முருகேசன் கதையாக டெவலப் பண்ணினாரு.
சிவக்குமார் முருகேசன் 'ஆண்பாவம் பொல்லாதது' கதையைச் சொல்லும்போது இது நிச்சயமாக வித்தியாசமான ஒண்ணா இருக்கும்னு எனக்கு தோணுச்சு.
அதன் பிறகு படத்தைப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். 'ஆண் பாவம்' என்பது ஓஜி டைட்டில்! அந்த டைட்டிலுக்கு நியாயம் சேர்த்தாகணும்னு முன்பே முடிவு பண்ணித்தான் வேலைகளைத் தொடங்கினோம்.
நாங்க நிறைய டைட்டில் டிஸ்கஸ் பண்ணினோம். ஆனா, எங்களுக்கு முதல் தோணின டைட்டில் 'ஆண்பாவம் பொல்லாதது' தான். இந்தத் தலைப்பும் படத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கும்னு முடிவு பண்ணி முறையாக பாண்டியராஜன் சாரையும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினரையும் சந்திச்சு அனுமதி வாங்கினோம்.
நாங்க பழைய டைட்டிலோட 'பொல்லாதது' என்கிற வார்த்தையைச் சேர்த்தாலும் அவங்களிடம் அனுமதி வாங்கி செய்வதுதான் சரின்னு தோணுச்சு.
இந்த தருணத்துல, ரியோ அண்ணன், விக்னேஷ் காந்த் அண்ணன், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப குழுவினர்னு எல்லோருக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன்.

ஒட்டுமொத்த டீம் வொர்க்னாலதான் இது சாத்தியமாகி இருக்கு. படத்திற்கு கிடைச்சிருக்கிற பாசிட்டிவ் கமென்ட்ஸ் மகிழ்ச்சியைத் தருது.
அதே சமயம், இதை நீங்க திருத்திச் செய்திருக்கலாம்னு சொல்ற விஷயங்களையும் நான் சிரம் தாழ்ந்து ஏத்துக்கிறேன்." என்றவர், "ரியோ அண்ணன் எனக்கு 8 வருஷமாக பழக்கம். அவர் அறிமுக இயக்குநர்களுக்கு ஒரு பொக்கிஷம்! லொகேஷன் பார்க்கிறதுக்கு தொடங்கி அவரால் முடிஞ்ச உதவிகளையும் எங்களுக்கு பண்ணினாரு.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்துல நான் உதவி இயக்குநராக வேலை பார்த்துட்டு இருந்தேன்.
அந்தத் தருணத்துல நாங்க சின்ன பைலட் எடுத்துப் பார்த்தோம். அதுல ரியோ அண்ணன் நடிச்ச விதம்தான் இந்தக் கதைக்கு அவர் மிகப் பொருத்தமாக இருப்பார்னு தோணுச்சு.
இன்னொரு முறை அவரோட சேர்ந்து படம் பண்ணுறதுக்கும் நான் தயாரா இருக்கேன். இந்தத் தருணத்துல தொழில்நுட்ப குழுவினர் பற்றி நான் பேசியாகணும்.
முதல்ல ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் அண்ணனுடைய வொர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை இயக்குநர்களின் ஒளிப்பதிவாளர்னு சொல்லலாம். இவ்வளவு நேரத்துல இத்தனை ஷாட் எடுத்தாகணும்னா, அதுக்கேத்த மாதிரி வேலைகளை வேகமாக முடிப்பாரு.
இன்னொரு முக்கியமான விஷயமும் இதுல இருக்குங்க! நானும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவன். அவரும் விகடன்ல மாணவப் பத்திரிகையாளரா இருந்தவர்தான்.

இசையமைப்பாளர் சித்துக்குமாரை நாங்க ஜீனினுதான் சொல்லுவோம். அவரை சோஷியல் மீடியாவுல 'மாடர்ன் தேனிசைத் தென்றல்'னு பாராட்டுறாங்க. இன்னும் அவருக்கு பெரிய அங்கீகாரங்கள் கிடைக்கணும்.
நாங்க எதிர்பார்க்கிறதைவிட பெஸ்டான விஷயங்களைச் செய்து தருவாரு. எடிட்டர் வருண் கே.ஜி படத்துக்கு இன்னொரு துணை இயக்குநர்னு சொல்லணும். நடிகரா, இயக்குநரா அவரை நாம பார்த்திருப்போம்.
இனிமேலும், அவரை அப்படியான பரிமாணங்கள்ல பார்ப்பீங்க! கலரிஸ்ட், சவுண்ட் இன்ஜினீயர்னு பலருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்." என்றார் உற்சாகத்துடன்.
"திரைக்கதையை எழுதத் தொடங்கும்போதே, பாலின சமத்துவத்தை உணர்த்தும் கதையில கதாபாத்திர வடிவமைப்பை சமமாகக் காட்சிப்படுத்தணும்னு முடிவுலதான் வேலைகளை ஆரம்பிச்சோம்.
படத்திற்காக நிறைய ரிசர்ச் பண்ணினோம். வழக்கறிஞர்களைச் சந்திச்சு அவர்களிடம் இருக்கிற வழக்குகள் பத்தித் தெரிஞ்சுகிட்டோம்.
அதுபோல, பாலின சமத்துவத்தைப் பேசும் நண்பர்களிடமும் எங்களுடைய ஸ்கிரிப்ட் கொடுத்து பேசினோம். அவர்களுடனான டிஸ்கஷன்ல, எது வேணும், எது வேண்டாம், எவை சரியா இருக்கும்னு பேசினோம்.
இந்த விஷயம் எல்லோருக்கும் போய்ச் சேரணும், தவறான விஷயத்தைச் சொல்லிடக்கூடாதுனு தெளிவா இருந்தோம். 2 மணி நேரம் நான் கதை சொல்லிட்டேன்.
அதை மக்களும் நேரம் கொடுத்துப் பார்த்து கருத்துகளைச் சொல்றாங்க. அதையும் நான் ஏத்துக்கிறேன். எல்லா இயக்குநர்களுக்கும் அவர்களுடைய படங்கள்ல இந்த விஷயத்தை மாத்தி வச்சிருக்கலாம்னு தோணும்.
எந்தவொரு இடத்திலும் தவறான அரசியலைப் பேசணும்னு நாங்க செய்யல. நான் வேறொரு விஷயம் சொல்ல முயற்சி பண்ணினேன். இன்னும் நான் தெளிவா சொல்லியிருக்கலாம். நான் அப்படியான அர்த்தத்துல அதைச் சொல்ல வரலைங்கிறதுதான் ஒரு வருத்தம்.

ஆடியன்ஸ் எப்போதும் சரியானவங்க. அவங்க பணம் கொடுத்து படம் பார்க்கிறாங்க. அவங்க சொல்ற விமர்சனத்தை நான் ஏத்துக்கிறேன்.
ரெண்டு மணி நேரம் செலவழிச்சுப் பார்த்தவங்களுக்கு நான் சரியாக கன்வே பண்ணலைனா என்மேலதான் தப்பு! ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு சிலர் விமர்சனங்கள் சொல்றாங்க.
முழு படத்தையும் பார்த்துட்டு அந்த விமர்சனத்தை நீங்க சொன்னா, நிச்சயமா அதையும் நான் ஏத்துக்கிறேன்." என்றவர் க்ளைமேக்ஸ் காட்சிகள் உருவான ஐடியா குறித்து விளக்கினார். அவர், "இந்தப் படத்துல வர்ற ஹீரோ, ஹீரோயின்னு ரெண்டு பேர்மேலையும் சில தவறுகள் இருக்கும்.
படத்தின் முதல் காட்சியில மணப்பெண்ணைப் பார்க்கப் போகும்போது பெண்ணுக்கு சரியானவன் நான்தான்னு நிரூபிக்க கதாநாயகன் கீழ உட்காருவாரு.
ஆனா, சிவா கதாபாத்திரத்துக்குள்ள சில ஆணாதிக்க சிந்தனைகள் இருக்கும். தாலி போடணும்னு சிவா எதிர்பார்க்கிறதும் ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான்.
ஷக்தி - சிவானு ரெண்டு பேரும் தங்களுக்குள்ள போலியான விஷயங்களைதான் தொடக்கத்துல வெளிகாட்டுவாங்க. உண்மை வெளிய தெரிய வரும்போது, அவங்களுக்கு இடையில சண்டை வரும்.

ரெண்டு பேரும் அவங்களுடைய தவறுகளை உணர்ந்து சேர்றாங்க என்பதுதான் இந்தப் படத்தின் கரு. சிவா செய்யும் தவறை சுட்டிக்காட்டுறதுக்குதான் தீபா அக்காவின் கேரக்டரை வடிவமைச்சோம்.
நியாயத்தையும் தவறையும் ஒரு பெண் கதாபாத்திரம்தான் சுட்டிக்காட்டணும்கிற ஐடியாவுலதான் பாரதி மேம் மற்றும் தீபா அக்கா கேரக்டரை டிசைன் பண்ணினோம். எந்த இடத்திலும் நான் ரீல்ஸ் போடுவதை தவறுனு உணர்த்தவே இல்ல.
அதை ஹீரோவின் பார்வையில்தான் நான் சொல்லியிருந்தேன். ஸ்விட்ச் வசனம் தொடங்கி படத்தின் முக்கியமான வசனங்கள் அனைத்திற்கும் கிரெடிட் சிவக்குமார் முருகேசனுக்குதான் கிடைக்கணும். அவருடைய பல திறமைகளை நீங்க இனி பார்ப்பீங்க!" என்றவர், "இந்தப் படத்துக்கு கிடைச்ச வரவேற்பு எனக்கு கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கு.
இனி எனக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கும். அதை வச்சு அடுத்ததும் ஒரு நல்ல கதையைச் சொல்லணும். பார்ப்போம்!" என நம்பிக்கையுடன் பேசினார்.














