Sattai Duraimurugan Interview | இதைப் பேச Vijay-க்கு துணிச்சல் இருக்கா? | Vikata...
திருப்பரங்குன்றம்: அடுத்தடுத்து வந்த நீதிமன்ற உத்தரவு; தள்ளுமுள்ளு, 144 தடை! - இதுவரை நடந்தது என்ன?
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகக் கடவுளின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதனை ஒட்டி திருக்கார்த்திகை தினமான இன்று மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்து இயக்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்தாண்டு முதல் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து இந்து அமைப்புகள் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிமன்ற உத்தரவு நகலை திருப்பரங்குன்றத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் மனுவாக அளித்தனர்.
இந்த நிலையில் மதுரை மக்கள் மத நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பாக மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க கூடாது என போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் தலைமையில் 600 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், தீபம் ஏற்றுவதற்காக நான்கரை அடி உயரம் கொண்ட தாமிர கொப்பரையில் 450 லிட்டர் நெய் மற்றும் 300 மீட்டர் காடா துணியை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கான அனைத்து பொருட்களும் மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டன.

மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், தர்கா, உச்சிப்பிள்ளையார் கோயில், மலையின் உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமரா மூலமும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மலைக்கு செல்ல பொதுமக்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் மட்டும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் அறநிலைத்துறை ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் வழக்கமான இடத்தில் அறநிலையத்துறை தீபம் ஏற்ற உள்ளதாக தகவல் வெளியானதால் அங்கு குழுமிய பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6:00 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் இந்து சமய அறநிலையத்துறை தீபம் ஏற்றாமல் வழக்கமான தீபத்தூணில் தீபம் ஏற்றியதால் அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன, இதனால் பெரும் பரபரப்பான பதட்டமான சூழல் காணப்படுகிறது.
போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டிச்சென்றதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பாதுகாக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்களுடன் சென்று மனுதாரர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுமாறு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்த,
திருப்பரங்குன்றத்தில் அசாதாரணமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவை மதுரை கலெக்டர் பிறப்பித்தார்.
இதற்கிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் முறையீடு செய்ய தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















