தஞ்சாவூர்: ”வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு” - வயல்களை சூழ்ந்த வெள்ளம் வேதனையி...
திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?
திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகரின் விரைவான வளர்ச்சியால் பாறைக்குழியைச் சுற்றியுள்ள பகுதிகள் வீடுகளாக மாறிவிட்டன. இதனால் அங்கு குப்பை கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதலியபாளையம் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதற்கான மாற்று தீர்வாக, இடுவாய் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் குப்பையை கொட்டத் திட்டமிடப்பட்டது.

ஆனால், அதற்கும் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகளை அகற்ற முடியாமல் நிர்வாகம் சிக்கலில் உள்ளது.
இதனிடையே, ராயபுரம் ரோட்டரி பள்ளி அருகே நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும், திருப்பூர் ரயில் நிலையம் பின்புறமாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்திலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியது:
“இந்த வழியேதான் நாங்கள் மெயின் ரோட்டுக்கு செல்வோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இதை கடந்து செல்கிறார்கள்.
இங்கிருந்து அதிக துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி உடனடியாக இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து 36-ஆம் வார்டு கவுன்சிலரும் அந்தப் பகுதியின் மண்டல தலைவருமான திவாகரன் அவர்களிடம் கேட்டபோது,
“குப்பை பிரச்சினைக்கு மாநகராட்சி விரைவில் நிரந்தர தீர்வு எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. மக்கள் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.



















