"ஏழைகளிடம் பணத்தைக் கொடுத்தால் போதும், வறுமை சரியாகிவிடும் என்று.!" - நிர்மலா சீ...
திருமணத் தகவல் மையத்தில் அலைமோதிய ஆண்கள்; கோழிக்கோடு சிவன் கோயிலில் பெறப்பட்ட 12,000 விண்ணப்பங்கள்!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குந்தமங்கலம் அடுத்துள்ள காரந்தூர் 'ஹர ஹர மகாதேவ' திருக்கோயில் கமிட்டி சார்பில், சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச திருமண தகவல் மையப் பதிவு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1-ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட முகாமில் சுமார் 10,000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்டப் பதிவு முகாமிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
நேற்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்து பெறப்பட்டன. முதற்கட்ட முகாமில் கூட்ட நெரிசல் காரணமாக விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களும், புதிய விண்ணப்பதாரர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
கோழிக்கோடு மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவின் பிற மாவட்டங்களில் இருந்தும், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்திருந்தனர். இளைஞர்கள் மட்டுமின்றி, தங்கள் பிள்ளைகளுக்காக பெற்றோர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டு முகாம்களையும் சேர்த்து இதுவரை மொத்த 12,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மணமகன் தேவை என விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை 400-க்கும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, நேற்று பெறப்பட்ட 2,000 விண்ணப்பங்களில் பெரும்பாலானவை 30 வயதைக் கடந்த ஆண்களுடையதாகும்.

விண்ணப்பதாரர்களின் பாலின விகிதத்தில் உள்ள இந்தப் பெரிய இடைவெளியைக் கருத்தில் கொண்டு, வரும் 29-ம் தேதி பெண்களுக்கு மட்டும் பிரத்யேக சிறப்புப் பதிவு முகாம் நடத்த கோயில் நிர்வாகக் கமிட்டி ஆலோசித்து வருகிறது.
தற்போது பெறப்பட்டுள்ள 12,000 விண்ணப்பங்களும் கோயில் கமிட்டியினரால் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, ஜாதகம் மற்றும் குடும்பப் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில் பொருத்தமான வரன்கள் தேர்ந்தெடுக்கப்பட (Shortlist) உள்ளன. அதன் பின்னர், இரு வீட்டாரின் சம்மதம் மற்றும் விருப்பத்தின் பேரில் மணமக்கள் நேரில் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகமே செய்து தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.



















