செய்திகள் :

Doctor Vikatan: மூச்சுத்திணறல் பாதிப்பில் அலட்சியம் வேண்டாம்: இதய நோயாகவும் இருக்கலாம்

post image

Doctor Vikatan: என் வயது 48. எனக்கு சமீபகாலமாக மூச்சுத்திணறல் பிரச்னை இருக்கிறது. அதற்கான சிகிச்சைகளை எடுத்து வருகிறேன். ஆனால், மூச்சுத்திணறல் பிரச்னை என்பது இதயநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் என் உறவினர்.

இதயநோயின் அறிகுறிகள் வேறு எப்படியிருக்கும்... நான் இதயப் பரிசோதனையும் செய்து பார்க்க வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர்  சஞ்சீவ்

இதயநோய் மருத்துவர் சஞ்சீவ்
இதயநோய் மருத்துவர் சஞ்சீவ்

ஒருவருக்கு மூச்சுத்திணறல் (Breathlessness) ஏற்பட்டால், முதலில் அது நுரையீரல் தொடர்பான பிரச்னையாக இருக்கலாம் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், சில நேரங்களில் மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம், இதயத்தில் ஏதோ பிரச்னை இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

இதயநோயின் முக்கியமான எச்சரிக்கை அறிகுறிகளில் மூச்சுத்திணறலும் ஒன்று. சிலருக்கு இதயப் பிரச்னையின் ஆரம்ப அறிகுறியாகக்கூட இது வெளிப்படலாம்.

மூச்சுத்திணறலுக்கும் இதயப் பிரச்னைக்கும் என்ன தொடர்பு?

உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் (Oxygen) சென்றடைவதில் இதயமும் நுரையீரலும் இணைந்து செயல்படுகின்றன. நுரையீரல் நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து ஆக்ஸிஜனை ரத்தத்தில் சேர்க்கிறது. இதயம் அந்த ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தத்தை உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் அனுப்புகிறது.

இதயம் ரத்தத்தைச் சரியாக உந்தித் தள்ள முடியாதபோது, நுரையீரலுடன் தொடர்புடைய ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால் நுரையீரலில் திரவம் தேங்கலாம் (Fluid Accumulation). இதன் காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம். இதயச் செயலிழப்பு (Heart Failure) உள்ளவர்களிடம் இத்தகைய பாதிப்பு காணப்படலாம்.

அன்றாட வேலைகளைச் செய்யும்போதே மூச்சுத்திணறல் ஏற்படுவது கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறியாகும்.

மூச்சுத்திணறலை அலட்சியப்படுத்தாதீர்கள்

அன்றாட வேலைகளைச் செய்யும்போதே மூச்சுத்திணறல் ஏற்படுவது கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறியாகும். முன்பு சிரமமின்றி நடந்து சென்றவர், படிக்கட்டுகளில் ஏறியவர் அல்லது வீட்டுப் பணிகளைச் செய்தவர், இப்போது இவற்றைச் செய்யும்போது திடீரென அதிகமாகக் களைப்படையலாம் அல்லது மூச்சு வாங்கலாம்.

சிலருக்கு ஓய்வில் இருக்கும்போதுகூட மூச்சுத்திணறல் ஏற்படலாம். படுத்தால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதால், இரண்டு அல்லது மூன்று தலையணைகளை வைத்துத் தூங்க வேண்டிய நிலை வரலாம். இன்னும் சிலர் இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு விழித்துக்கொள்ளலாம். இவை இதயத்தின் செயல்பாட்டில் பாதிப்பு இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

நெஞ்சுவலி இல்லாமலும் மாரடைப்பு ஏற்படலாம்

மாரடைப்பு ஏற்பட்டால் எல்லோருக்கும் கடுமையான நெஞ்சுவலி இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலே முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இதனுடன் வழக்கத்திற்கு மாறாக வியர்வை வருதல், குமட்டல் (Nausea), தலைச்சுற்றல், அதிகப்படியான சோர்வு அல்லது நெஞ்சு, முதுகு, தாடை, கைகளில் அசௌகர்யம் ஏற்படலாம்.

இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் தோன்ற வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே, காரணம் தெரியாமல் ஏற்படும் மூச்சுத்திணறலை வெறும் சோர்வாகவோ வயது அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்னையாகவோ கருதி அலட்சியப்படுத்தக் கூடாது.

மாரடைப்பு ஏற்பட்டால் எல்லோருக்கும் கடுமையான நெஞ்சுவலி இருக்கும் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலே முக்கிய அறிகுறியாக இருக்கலாம்.

யாருக்கு ரிஸ்க் அதிகம்?

உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure), நீரிழிவு நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு (High Cholesterol), உடல் பருமன் (Obesity), புகைப்பழக்கம் மற்றும் குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு இருந்திருப்பது போன்றவை இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கின்றன.

ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்கள், புதிதாக மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ அல்லது ஏற்கெனவே இருந்த மூச்சுத்திணறல் அதிகரித்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

மூச்சுத்திணறலுக்கு இதயம் மட்டுமே காரணமல்ல!

அதே நேரத்தில், மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான காரணம் எப்போதும் இதயப் பிரச்னையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. நுரையீரல் தொற்று, ஆஸ்துமா (Asthma), நாள்பட்ட சுவாசப் பிரச்னைகள் மற்றும் ரத்தச்சோகை (Anaemia) உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளாலும் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

எனவே, இதயப் பிரச்னை அல்லது நுரையீரல் பிரச்னை என்று நாமாகவே முடிவு செய்யாமல், அதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவது அவசியம்.

நோயாளியின் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றைப் பொறுத்து, மருத்துவர் இசிஜி (ECG), இதயத்தின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை (Echocardiogram), மார்பு எக்ஸ்-ரே (Chest X-ray) போன்ற பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம்.

இந்த மருத்துவப் பரிசோதனைகள் உதவும்!

நோயாளியின் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றைப் பொறுத்து, மருத்துவர் இசிஜி (ECG), இதயத்தின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை (Echocardiogram), மார்பு எக்ஸ்-ரே (Chest X-ray) போன்ற பரிசோதனைகளைப் பரிந்துரைக்கலாம்.

மருத்துவ ரீதியாகத் தேவைப்பட்டால், பிஎன்பி (BNP) அல்லது என்டி-புரோபிஎன்பி (NT-proBNP) போன்ற ரத்தப் பரிசோதனைகளும் செய்யப்படலாம். இதயச் செயலிழப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா என்பதை மதிப்பிடவும், இதயத்தின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பரிசோதனைகள் உதவுகின்றன.

எந்த அறிகுறிகள் இருந்தால் உடனடி மருத்துவ உதவி தேவை?

திடீரென அல்லது கடுமையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், குறிப்பாக நெஞ்சில் அசௌகர்யம், குளிர்ந்த வியர்வை, மயக்கம், கடுமையான தலைச்சுற்றல் அல்லது உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளும் இருந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

மூச்சுத்திணறல் லேசாக இருந்தாலோ, அடிக்கடி ஏற்பட்டாலோ அல்லது படிப்படியாக அதிகரித்தாலோ மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

கடுமையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால், குறிப்பாக நெஞ்சில் அசௌகர்யம், குளிர்ந்த வியர்வை, மயக்கம், கடுமையான தலைச்சுற்றல் அல்லது உதடுகள் நீல நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளும் இருந்தால், உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

முக்கியமாக, மூச்சுத்திணறலை ஒருபோதும் அலட்சியப்படுத்தக் கூடாது. அது நுரையீரல் பிரச்னையால் மட்டுமே ஏற்படுகிறது என்று நினைத்துவிடவும் கூடாது. மூச்சுவிடுவதில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பதும், அதனுடன் தோன்றும் மற்ற அறிகுறிகளை அடையாளம் காண்பதும், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவதும் இதயப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தீவிரமான பாதிப்புகளைத் தடுக்க உதவும்.

டாக்டர்   சஞ்சீவ்:

Consultant Cardiologist,  Gleneagles Hospital Chennai.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: டிரெண்டாகும் 'Water cut diet'... உடனடி வெயிட்லாஸுக்கு உண்மையிலேயே உதவுமா?

Doctor Vikatan: என்னுடைய தோழி வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கிறாள். அவள் இப்போது தண்ணீரைக் குறைக்கும் 'வாட்டர் கட் டயட்' என்ற முறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறாள். இந்த டயட் உடனடி வெயிட்லாஸுக்கு உதவும் எ... மேலும் பார்க்க

Yellow Fever: கொசு மூலம் பரவும் நோய்; அறிகுறிகள் என்ன? வெளிநாடு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு!

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்லும் பயணம் என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல. சில நேரங்களில், ஒரு நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.அந்த வகையில், ... மேலும் பார்க்க

Doctor Vikatan: எப்போதாவது ஒன்றிரண்டு சிகரெட் பிடிப்பதில் ஆபத்து இல்லையா?

Doctor Vikatan: எனக்கு எப்போதாவது, என்றாவது ஒரு நாள் சிகரெட் பிடிக்கும் வழக்கம் இருக்கிறது. நண்பர்கள் சேர்ந்தால் மட்டும் அன்றைய தினம் ஒன்று அல்லது இரண்டு சிகரெட் பிடிப்பேன். வாரத்தில் ஒன்றிரண்டு நாள்க... மேலும் பார்க்க

ரூ.9 கோடி மதிப்புள்ள மருந்து ரூ.2.5 லட்சம்; 7 குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சைக்கு உதவிய மருத்துவர்!

ஹைதராபாத் மருத்துவரின் முயற்சியால் அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு குழந்தைகளுக்கு ஓராண்டுக்கான மருந்து இலவசமாகக் கிடைக்க உள்ளது.மருத்துவர் சிவரஞ்சனிAllan-Herndon-Dudley Syndrome (AHDS) எனப்படும் அ... மேலும் பார்க்க

தருமபுரி : வீடுகளுக்குள் படையெடுத்து வரும் எறும்புகள்! - நிம்மதி இழந்து தவிக்கும் மக்கள்

படையெடுத்து வரும் எறும்புகளால் வீட்டில் இருக்க முடியாமல், சாப்பிட முடியாமல், நிம்மதியாக உறங்க முடியாமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வேதனையுடன் கழித்து வருகிறார்கள் முள்ளிக்காடு கிராம மக்கள். எங்கெங்கும் எறு... மேலும் பார்க்க

Doctor Vikatan: லோ BP பிரச்னை... உணவுகளின் மூலம் ரத்த அழுத்த அளவை அதிகரிக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு வயது 42. பல வருடங்களாகலோ BP பிரச்னை இருக்கிறது. இதற்கு சிகிச்சை எடுக்கவில்லை. உப்பை அதிகரிப்பது போல உணவின் மூலம் இந்தப் பிரச்னையைச் சரியாக்க முடியுமா?பதில் சொல்கிறார், சென்னையைச... மேலும் பார்க்க