ஆட்டோ கட்டணம் உயர்வு: '1.8 கி.மீக்கு ரூ.50' - Waiting Charge, இரவு கட்டணம் எவ்வள...
திருவண்ணாமலை: மாயமான 3 மாணவிகளுக்கு என்ன நேர்ந்தது? தீவிர தேடுதலில் போலீஸ்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்துள்ள தரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 15 வயது மகள், தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
இவரின் இளைய மகளுக்கு 14 வயதாகிறது. அவரும் அதே பள்ளியில் 9-ம் வகுப்புப் பயில்கிறார். தாய் - தந்தை இருவரும் கேரளாவில் கிணறு வெட்டும் வேலை செய்வதால் 2 மகள்களும் பாட்டியின் அரவணைப்பில் இருந்தனர். இவர்களுடன், இவர்களின் அத்தை மகளான 13 வயது மாணவியும் தங்கி, 8-ம் வகுப்புப் படித்து வந்தார்.

இந்த நிலையில், மூத்த மகள் கடந்த ஒரு மாதமாக பள்ளிக்குச் சரிவர செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இளைய மகளும் ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லவில்லையாம். தாய் தினமும் மாலை வேளையில் மகள்களுடன் போனில் பேசுவது வழக்கமாம்.
2 நாள்களுக்கு முன்பு போனில் பேசும்போது, பள்ளிக்குச் செல்லாதது பற்றி கேட்டு திட்டியுள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் காலையில் அத்தை மகளுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்வதாக அக்காள், தங்கை இருவரும் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர்.
ஆனால், 3 பேரும் பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டுக்கு மீண்டும் வந்து பாட்டிக்குத் தெரியாமல் புத்தகப் பைகளை மறைத்து வைத்துவிட்டு, வெளியே சென்றுள்ளனர். மாலை நீண்ட நேரமாகியும் 3 மாணவிகளும் வீடு திரும்பவில்லை. மாணவிகளிடம் கொடுத்துவைக்கப்பட்டிருந்த செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாம்.
இது குறித்து, கேரளாவில் உள்ள பெற்றோருக்கு உறவினர்கள் தகவல் தெரியப்படுத்தியிருக்கின்றனர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் நேற்று காலை கேரளாவில் இருந்து ஊருக்கு வந்திருக்கின்றனர்.

3 மாணவிகளும் எங்குப் போனார்கள்? என்ன ஆனார்கள்? என்பன பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால், தண்டராம்பட்டு காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும், மாணவிகள் பயன்படுத்திய செல்போன் சிக்னலையும் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
மாணவிகளை யாரேனும் கடத்திச் சென்றார்களா? என்கிற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதால் தண்டராம்பட்டு பகுதியே பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது.



















