திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album
துப்பாக்கிச்சூடு : `அதிகாரிக்கு பதவி உயர்வா? திமுகவின் இரட்டை வேடம்’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்
``தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்து விட்டு தூத்துக்குடி செல்கிறேன்.”
- கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டவுடன் இப்போதைய முதல்வரும், அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் கொந்தளித்து பேசிய வார்த்தைகள் தான் இவை.
கொந்தளித்ததுடன் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து உடனே விளக்கமெல்லாம் கேட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த சம்பவத்துக்கு காரணமான ஒரு அதிகாரியை விடமாட்டோம் எனச் சூளுரைக்கவும் செய்தார்.
நிற்க. ஒரு வருடத்துக்கு முந்தைய ஒரு செய்திக்கு வருவோம்.
துப்பாக்கிச்சூடு நடந்த போது ஐ.ஜி யாக இருந்த சைலேஷ் குமார் யாதவுக்கு 2023 இறுதியில் டி.ஜி.பி யாக பதவி உயர்வு அளித்தது தமிழக அரசு. திமுக கூட்டணியிலிருக்கும் கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் கண்டனமெல்லாம் கூட தெரிவித்தனர்.

இப்போது கடந்த வார மேட்டருக்கு வருவோம்.
அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷனான அருணா ஜெகதீசன் கமிஷன் சம்பவத்தில் குற்றம் நிகழ்த்தியதாகச் சுட்டிக் காட்டிய காவல் துறை அதிகாரிகளில் ஒருவரான ரென்னிஸுக்கு சப் இன்ஸ்பெக்டர் பதவியிலிருந்து புரமோஷன் கொடுத்திருக்கிறார்கள். இப்போது ரென்னிஸ் இன்ஸ்பெக்டர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காந்திமதி நாதனிடம் இது தொடர்பாகப் பேசினோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் இவரும் ஒருவர்.
‘’திமுக ரெட்டை வேடம் போடுற கட்சின்னு ஒரு கருத்து பொதுவான மக்கள் மத்தியில் இருக்கில்லையா. அதுக்கு நல்ல உதாரணம் இது. ஆட்சியில இருந்தா ஒரு மாதிரியும் இல்லாட்டி வேற மாதிரியும் பேசறது அவங்களுக்கு இயல்பாகவே வரும். ஸ்டெர்லைட்டுக்கு எதிரா போராடின மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளிலெல்லாம் அந்தந்த தனி நபர்களே வாதாடி வழக்குல இருந்து வெளியில வந்தாங்க.

குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரங்கள் மீது நடவடிக்கை எடுக்காட்டிக் கூட என்னன்னும் போறாங்கனு அதைச் சகிச்சுப் போயிடலாம். ஆனா அவங்களுக்குப் பதவி உயர்வு கொடுக்கறது மோசமான முன்னுதாரணம். நாளைககு இன்னொரு போராட்டம் நடந்தா இந்த அதிகாரிகள் எந்த எல்லைக்கும் துணிய மாட்டாங்களா? இதை மக்கள் நலனில் அக்கறை உடைய அரசு செய்யலாமா?
ஸ்டெர்லைட் துப்பாக்குச் சூடு சம்பவம்தான் இந்த தொகுதியில் கனிமொழி ஜெயிக்கவும் முக்கிய காரணமா இருந்தது. எல்லாத்தையும் மறந்துட்டு எப்படி இப்படி புரமோஷன் தர்றாங்கனு தெரியலை.
இதுல இன்னொரு ஹைலைட் என்னன்னா, இப்ப இன்ஸ்பெக்டரா ஆகியிருக்கிற ரென்னஸ் சபாநாயகர் அப்பாவுவின் சகோதரர் மகன். அரசியல் செல்வாக்குல வாங்கினாரா தெரியலை, ஆனா இவருக்கு தரப்பட்டிருக்கும் புரமோஷன் தப்பானதுங்க” என்கிறார் இவர்.

அரசு ஊழியர் பென்ஷன் விவகாரத்திலும் எதிர்க்கட்சியாக இருந்த போது ஒன்றையும் சமீபத்தில் நீதிம்னறத்தில் அதற்கு நேரெதிராகவும் பேசியிருக்கிறார்கள் இப்போதைய ஆட்சியாளர்கள். தேர்தல் நெருக்கத்தில் இப்போது இந்த பதவி உயர்வு விவகாரமும் நடந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் இதை கடுமையாக விமர்சிக்கவும் தொடங்கியிருக்கின்றனர்.

















