செய்திகள் :

'துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம் - ஒரு பேரியக்கத்திற்கான பெரும் சங்கடம்!'

post image

'நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில்- என்னையே ‘மகா பிற்போக்குவாதி’, என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாகியிருக்கிறதே!'

- சுயமரியாதை திருமணத்தின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில் தமிழ்ச்சமூகத்தின் முற்போக்கு எண்ணத்தை உச்சத்தில் வைத்து பெரியார் அவிழ்த்த வார்த்தைகள் இவை.

இந்த வார்த்தைகளோடு சமீபத்தில் நடந்து முடிந்திருக்கும் திமுகவின் மூத்த தலைவர், பொதுச் செயலாளர் துரைமுருகனின் வீட்டு திருமணத்தையும் அதற்கெழும் எதிர்வினையையும் எண்ணிப் பாருங்கள். பெரியார் இன்று இருந்திருந்தால் இந்தத் திருமணத்தை கண்டு மனம் நொந்து போயிருப்பார் என்றே தோன்றுகிறது. திராவிட இயக்கத்தின் மூத்தத் தலைவரின் இரட்டை வேடத்தை தோலுரித்து காட்டமாக ஒரு கட்டுரையை எழுதியிருப்பார்.

துரைமுருகன் வீட்டுத் திருமணம்
துரைமுருகன் வீட்டுத் திருமணம்

புரோகிதர்கள் அற்ற சடங்கு சம்பிரதாய வேதங்களற்ற சுயமரியாதை திருமணங்கள் அல்லது சீர்திருத்தத் திருமணங்கள் என்பது பெரியாரின் மிக முக்கிய கொள்கைகளில் ஒன்று.

இப்போதும் இங்கு யாரும் புரோகித முறையில் திருமணம் செய்ய கூடாது என சொல்லவில்லை. ஆனால், கொள்கை பேசும் தலைவர்கள், அதற்கு எதிராக செயல்படும்போது தான் சிக்கல் வருகிறது.

சாதி ஆதிக்கத்தாலும் அடக்குமுறையாலும் பிளவுப்பட்டிருக்கும் சமூகம் அதன் கீழ்மைகளிலிருந்து விடுபடவும் சாதியொழிப்பு என்கிற உச்ச இலக்கை நோக்கி பயணிக்கவும் சுயமரியாதை திருமணங்கள் வழிகோலும் என பெரியார் தீவிரமாக நம்பினார். அதனால்தான் சுயமரியாதை இயக்கத்தின் அடைய வேண்டிய முதல் 10 லட்சியங்களில் சுயமரியாதை திருமணங்களுக்கும் முக்கிய இடம் கொடுத்திருந்தார்.

சுயமரியாதை திருமணங்கள் சாதியொழிப்பை மட்டுமே நிறைவேற்றும் என பெரியார் நினைக்கவில்லை. அதன்மூலம் தங்களை உயர்வாக நினைக்கும் ஆதிக்கத்திலிருந்து தமிழர்களை விடுவித்துக் கொள்ள முடியுமென நம்பினார். ஆணுக்குப் பெண் சமம் என்கையில் திருமண சடங்கு சம்பிரதாயங்கள் வழி பெண்ணை ஆணுக்கு சேவகராக மாற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட அடிமை முறையை ஒழிக்க முடியும் என நினைத்தார்.

துரைமுருகன் வீட்டுத் திருமணம்
துரைமுருகன் வீட்டுத் திருமணம்

மேலும், திருமணங்களை நடத்த செல்வங்களை வீணாய் அள்ளி இறைக்கும் படோபடங்கள் ஒழியும் என நம்பினார். இதையெல்லாம் தான் தலைமையேற்று நடத்திய ஒவ்வொரு சுயமரியாதை திருமண மேடையிலும் பேசிக் கொண்டே இருந்தார்.

'திராவிடர்களிடையே சடங்குமுறைத் திருமணம் இருந்ததென்பதற்கு எங்கேயும் ஆதாரம் காட்ட முடியாது. தேவாரத்தில் ஏதோ காணப்படுகிறது; இராமாயணத்தில் இருப்பதாகத் தெரிகிறது; பாரதத்திலும் இருக்கிறது என்று கூறி, இவ்வாறாக ஆரிய ஏடுகளைத்தான் காட்டுவார்களே ஒழிய - எந்தத் தமிழ் நூலிலும் திருமண முறைக்கு ஆதாரம் காட்ட முடியாது. இன்னும் யோசித்துப்பார்த்தால் வண்ணார்களுக்கு ஒரு முறையும், நாவிதனுக்கு ஒரு முறையும் திருமணச் சடங்குகள் நடைபெற்று வருவதிலிருந்தே திராவிடர்களுக்கு எப்போதுமே திருமணமுறை இருந்திருக்க முடியாதென்பதும், இவையாவும் ஆரியர் வழி வந்தனவையாவும் என்பதும் தெரியவரும்' என முழங்கியிருக்கிறார்.

பெரியாரை பொறுத்தவரைக்கும் சடங்கு சம்பிரதாய திருமணங்கள் திராவிட கருத்தியலுக்கு ஒவ்வாதவை.

1920 களிலிருந்து திமுக ஆட்சியைப் பிடிக்கும் வரைக்கும் பெரியார் பல இணையர்களுக்கு சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். ஆனால், இந்து திருமணச் சட்டத்தின்படி அமையாத அந்தத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. பெரியாரின் கனவை ஆட்சிக் கட்டிலில் ஏறிய சில மாதங்களிலேயே அண்ணா நிறைவேற்ற எத்தனித்தார்.

1967 மார்ச் 6 ஆம் தேதி அண்ணா தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார். ஜூன் மாதத்திலேயே இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும் வேலையை தொடங்கிவிட்டார். 1967 நவம்பர் 28 ஆம் தேதி சட்டமன்றத்தில் பெரியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் இந்து திருமண சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தார்.

'புரோகிதர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறீர்களே?' என எதிர்க்கட்சியினர் கேட்க, 'புரோகிதர்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால் சடங்கு சம்பிரதாய திருமணத்தை செய்வோர் நான்கைந்து புரோகிதர்களை அழைத்து திருமணத்தை நடத்திக் கொள்ளுங்கள்' எனக் கூறி மசோதாவை நிறைவேற்றினார் அண்ணா. 1967 க்கு முன்பு சுயமரியாதை திருமணத்தை முடித்தவர்களுக்கும் அங்கீகாரமும் சட்டப்பாதுகாப்பும் வழங்கும் வகையில் இந்த மசோதா அமைந்தது.

அண்ணா மறைந்த போது அவருக்காக பெரியார் எழுதிய இரங்கல் குறிப்பில், 'அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டுக்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாடும் தமிழ்ப் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றங்கள் அடையக் காத்திருந்தன. அவரும் பகுத்தறிவுக்கொள்கைகளைப் பரப்பி, அதை உருவாக்குவதே தனது கடமை என்றே கருதியிருந்தார். அதற்கேற்ப, அவர் செய்த அரும்பெரும் காரியங்களில் முக்கியமானது, சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டம் ஆகும். இதில் கடவுளுக்கோ மதத்துக்கோ சாத்திர சம்பிரதாயத்துக்கோ இடமில்லை' என அண்ணாவை பெருமிதமாக போற்றியிருந்தார்.

பெரியாரின் கனவை அவரின் மாணாக்கர்கள் மனதில் உறுதியாகஏந்தி நின்றனர். இளம் வயதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு பெண்ணை விரும்புகிறார். இருவீட்டாரும் கூடி பேசுகிறார்கள். கருணாநிதி கொள்கையின்பால் நின்று சுயமரியாதை திருமணம்தான் நடக்க வேண்டும் என்கிறார். பெண் வீட்டார் சடங்கு சம்பிரதாய திருமணத்தில் பிடிப்போடு நின்றனர். கருணாநிதி காதலை துறந்தார். கொள்கைதான் முக்கியமென பெரியாரின் வழி நடந்தார். பின்னாளில் முதல்வரான பிறகும் தமிழகத்தைப் போலவே தேசியளவிலும் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டி முறையிட்டார்.

இந்தப் பின்னணியிலிருந்துதான் துரைமுருகன் வீட்டு திருமணத்தின் மீதான விமர்சனங்களை அணுக வேண்டும். பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் என திராவிட இயக்கத் தலைவர்கள் அத்தனை பேருடனும் பயணப்பட்டவர் துரைமுருகன்.

முக்கால் நூற்றாண்டை கடந்த பேரியக்கமான திமுகவின் இன்றைய மிக மூத்தத் தலைவர் துரைமுருகன்தான். இன்னொரு முக்கியமான விடயத்தையும் இங்கே கவனிக்க வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு திமுகவுக்கு அரசியல் நெருக்கடியும் அதன் இருப்பு மற்றும் எதிர்காலத்தின் மீதான கேள்வி எழுந்திருக்கிறது.

இருபெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி அந்த இடத்தில் புதிய சக்தி ஒன்று அமர்ந்திருக்கிறது. அரசியல் சந்தையில் மக்களின் நுகரும் தன்மை மாறியிருக்கிறது. இப்படியொரு புதிய சக்தியின் வெற்றிக்கு திமுக, அதிமுக இத்தனை ஆண்டுகளாக கொடுத்த ஏமாற்றங்களும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

குறிப்பாக இன்னமும் திராவிட மாடல், திராவிடியன் ஸ்டாக் என கொள்கை அரசியல்தான் பேசுகிறோம் என நம்பவைக்கும் திமுகவுக்கு இந்த அரசியல் மாற்றம் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. தங்கள் மீதான மக்களின் அதிருப்திகளை கலைந்துவிட்டு கொள்கைப் பிடிப்போடு புத்துயிர்ப் பெற்று ஓடி ஒரு புதிய தலைமுறையை ஈர்க்க வேண்டிய நெருக்கடி திமுகவுக்கு இருக்கிறது.

இப்படியொரு நிலையில் மேடையில் கொள்கை பீரங்கியாக முழங்கிவிட்டு, 'எங்களைப் போல கொள்கை கோட்பாடு பேச ஆள் உண்டா?' என காலரை தூக்கி சவடால் பேச்சுகளை பேசிவிட்டு, தங்கள் வீட்டுக்குள் பேசிய பேச்சுக்கும் பற்றிக் கொண்ட கொள்கைக்கும் மாறாக செயல்பட்டால் பொதுச்சமூகம் கேள்வி கேட்கத்தான் செய்யும்.

நீங்கள் பேசும் அரசியல் ஒழுங்கு, கொள்கை ஒழுங்கு எல்லாம் கொடி பிடிக்கும் தொண்டன் உயிர் மூச்சாக நினைத்து கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், சௌகரியமான பதவியில் இருப்போர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வெற்று வசனங்களை மட்டுமே பேசிவிட்டு கொள்கையை காற்றில் பறக்கவிட்டால் கட்சியின் உடன்பிறப்புகள் கேள்வி கேட்கத்தானே செய்வார்கள்!

ஒரு முக்கியமான காலக்கட்டத்தில் ஒரு பேரியக்கத்துக்கு பெரும் சங்கடத்தை கொடுத்திருக்கிறது துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம்.!

"20 சதவீத கமிஷன் பெற ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தவெக அரசு தொடங்கியுள்ளதா?" - டிடிவி காட்டம்

ஊழலை ஒழிக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் தூய சக்தி, 20 சதவீத கமிஷன் பெறுவதற்காக ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

"கேரளாவுக்கு ரூ.8க்கு மின்சாரம் கிடைக்குமென்றால், தவெக அரசுக்கு ஏன் சாத்தியமில்லை?"- ஸ்டாலின் கேள்வி

"கேரளாவுக்குக் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?" என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பத... மேலும் பார்க்க

US Mid Term Election: செனட் சபையை இழந்தது ட்ரம்ப் கட்சி - தட்டித் தூக்கிய ஜனநாயகக் கட்சி!

அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவின் நாடாளுமன்றம் காங்கிரஸ். இதில் மேல்சபை, கீழ்சபை என இரண்டு அவைகள் உள்ளன. ட்ரம்ப் கட்சி பின்னடைவுமேல்சபையான செனட்டில் இப்போது... மேலும் பார்க்க

புதிய தலைமைச் செயலகம்: "கருத்துக்கேட்புக் கூட்டத்தை மறைமுகமாக நடத்துவதா?"- சீமான் கேள்வி

"கருத்துக்கேட்புக் கூட்டத்தையே மறைமுகமாக நடத்துவதா? மீனவ மக்களின் எதிர்ப்பைப் புறந்தள்ளி பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுக" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப... மேலும் பார்க்க

"18 நாள்கள் அவைக்கு வராத அமித்ஷா; எங்களுக்குப் பாடம் எடுக்காதீர்கள்!" - சசிகாந்த் செந்தில் காட்டம்

‘வெளிநாடு உதவி, ஆதரவு யாருக்கு இருக்கிறது’ என்று இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து நேரடியாக விவாதம் செய்ய மோடிய... மேலும் பார்க்க

"ராகுல் தயார்; நாடாளுமன்றத்தில் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க மோடி தயாரா?" - மாணிக்கம் தாகூர்

‘வெளிநாட்டிலிருந்து யார் உதவி பெறுகிறார்கள்?’ என்று மத்தியில் இந்தியப் பிரதமர் மோடி vs மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வெளிநாட்டு உதவி குறித்து விவாதிக... மேலும் பார்க்க