தவெக ஆட்சி: "38 நாள், 150 போக்சோ வழக்குகள், 126 பாலியல் குற்ற வழக்குகள்" - இபிஎஸ...
தூத்துக்குடி: துறைமுகத்தில் பணியாற்றி உயிரிழந்த 27 பேர் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி!
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் ஓய்வூதிய நிதியில் மிகப்பெரிய அளவில் பண மோசடி மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் துறைமுக கணக்கு மற்றும் தரவுப் பிரிவுகளில் தீவிர விசாரணை நடத்தினர். இந்த ரகசிய விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்துள்ளது. துறைமுக ஆணையத்தின் ஓய்வூதியர் பிரிவில் ஒப்பந்த (அவுட்சோர்சிங்) முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களான கிஷோர் பாபு மற்றும் மணிகண்டன் பிரபு ஆகிய இருவரும், அங்குள்ள உயர் அதிகாரிகளின் துணையோடு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் வ.உ.சி. துறைமுகத்தில் பணிபுரிந்து இறந்துபோன ஓய்வூதியதாரர்கள் 27 பேரின் பட்டியலை கம்ப்யூட்டரில் எடுத்து, அவர்களின் அசல் வங்கி கணக்கு எண்களை நீக்கியுள்ளனர். அதற்குப் பதிலாகத் தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களின் வங்கி கணக்கு எண்களை கம்ப்யூட்டர் தரவுகளில் (Data) மாற்றி அமைத்துள்ளனர். இதன் மூலம், இறந்தவர்களின் ஓய்வூதியத் தொகை முழுவதும் இவர்களால் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்குத் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்துள்ளது.
இவ்வாறாகக் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.4.51 கோடி வரை மோசடி செய்துள்ளது தணிக்கை மற்றும் சி.பி.ஐ. விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டிற்குத் துறைமுகத்தின் முக்கிய அதிகாரிகள் கோப்புகளைச் சரிபார்க்காமல் ஒப்புதல் அளித்து உடந்தையாக இருந்துள்ளனர்.

இதையடுத்து, முறைகேட்டிற்குத் துணைபோன துறைமுக முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கணக்கு அலுவலர் (நிலை-2) பழனி குமாரசுவாமி, மின்னணு தரவு செயலாக்க அலுவலர் ரோஜர்ஸ் ஜோசப் துரைராஜா, மின்னணு தரவு செயலாக்கத்துறை உதவி இயக்குனர் காளியப்பன், முதுநிலை உதவியாளர் சந்தனசங்கர் ஆகிய 5 அதிகாரிகள் மற்றும் அவுட்சோர்சிங் ஊழியர்கள் மணிகண்டன் பிரபு, கிஷோர் பாபு ஆகிய 2 பேர் என மொத்தம் 7 பேர் மீதும் கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மதுரை சி.பி.ஐ. போலீசார் முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு நிறுவனமான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் அரங்கேறியுள்ள இந்த பல கோடி ரூபாய் நிதி மோசடிச் சம்பவம் மத்திய அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















