அமைதிகாக்கும் உத்தவ் கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் - இன்றைய கூட்டத்தில் பங்கேற்பா...
மைசூர் ராஜதானியுடன் ஒப்பந்தம்; மின்சாரத் தேவையும் விநியோகமும்! | அணை ஓசை 23
மேட்டூரில் அப்போது அமைக்கப்பட்டிருந்த இயந்திரங்களை இயக்க மொத்தம் 3400 KW மின்சாரம் தேவைப்பட்டது. இரண்டு சிறிய டீசல் ஜெனரேட்டர்கள் மற்றும் அருகில் அமைந்திருந்த அனல் மின் நிலையத்திலிருந்து மின்சார தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதே சமயம் 1927 ஆம் வருடம் நவம்பர் மாதம் மைசூர் மாகாண அரசு சிவசமுத்திரம் மின் நிலையத்தில் இருந்து பெருமளவில் தேவையான மின் தேவையை பூர்த்தி செய்ய முன் வந்தது.
1928 டிசம்பர் மாதம் தலைமைப் பொறியாளர் (Engineer in -chief) திரு. முல்லிங்ஸ் அப்போது மேட்டூர் திட்ட பணிமனை மற்றும் இயந்திர தளவாடங்கள் பிரிவு செயற்பொறியாளராக இருந்த இன்ஷா என்ற பொறியாளரை மைசூருக்கு அனுப்பி வைத்தார். மைசூர் திவான் மற்றும் முதன்மை பொறியாளர் இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி மின்சாரம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளின் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கப் பணித்தார்.
அவருடைய அறிக்கையின்படி சிவசமுத்திரத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் போது ஜெனரேட்டர் மூலம் மின்சார தயாரிப்பு ஆகும் செலவில் பாதி மட்டுமே இதற்கு செலவாகும் என்பது கணக்கிடப்பட்டது.
எனவே, இந்த முன்மொழிவு ஏற்கப்பட்டு 1928 ஆம் வருடம் ஜனவரி 14ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் மைசூர் ராஜதானியுடன் போடப்பட்டது. அந்த வருடம் ஜூலை மாதம் இறுதி ஒப்பந்தம் போடப்பட்டு அதில் மேட்டூர் திட்ட தலைமை பொறியாளர் திரு. முல்லிங்ஸ் மற்றும் மைசூர் மாகாண சார்பில் சிவ சமுத்திரம் மின் நிலைய முதன்மை பொறியாளர் (மின்சாரம்) இருவரும் கையெழுத்திட்டார்கள்.

ஒப்பந்தத்தின்படி, 2040 KW மின்சாரம் (தோராயமாக) பகலில் 12 மணி நேரம் மைசூர் அரசு வழங்கும். தேவைப்படின் 24 மணி நேரமும் நீட்டிக்கப்படும். இந்தத் தேவை தொலைபேசி வழியாக மேட்டூரில் இருந்து மைசூருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
இதற்காக, தொலைபேசி கட்டமைப்பை மைசூர் அரசு நிறுவும். வழங்கப்படும் மின்சார அளவை கணக்கிட மூன்று எண்ணிக்கையில் ஒரே மாதிரியான மீட்டர்களை மைசூர் அரசு வழங்கும். அதன் பராமரிப்பையும் ஏற்றுக்கொள்ளும். இதற்கு உண்டான விலையை மெட்ராஸ் மாகாணம் ஏற்றுக்கொள்ளும்.
மாதம் ஒருமுறை இந்த மீட்டர்களில் கணக்கீடு செய்து, மூன்று மீட்டர்களின் சராசரி அளவு எடுத்துக் கொள்ளப்படும். மீட்டர் அளவுகளில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் இந்திய அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரை வைத்து சோதனை செய்து 2.5% க்கு மேலாக வித்தியாசம் இருப்பது உறுதியானால், மைசூர் அரசின் கணக்குகள் அதற்காக மாற்றம் செய்து கொள்ளப்படும். 2.5 சதவீதத்திற்கு குறைவாக வித்தியாசம் இருப்பின் எந்த அளவும் குறைக்கப்பட மாட்டாது.
இந்த பரிசோதனைக்கு உண்டான செலவை மைசூர் அரசு அல்லது எவரது வேண்டுகோளுக்கிணங்க இது மேற்கொள்ளப்படுகிறது என்பதை பொறுத்து அவர்களின் கணக்கில் மேற்கொள்ளப்படும்.
மின் நுகர்வின் அடிப்படையில் மெட்ராஸ் மாகாணம் ஒரு யூனிட்டுக்கு 0.750 அணா முதல் 0.550 அணா வரை உபயோகிப்பின் அளவிற்கு தகுந்தவாறு நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி மைசூர் அரசுக்கு செலுத்த வேண்டும். (குறிப்பு 16 அணா=1 ரூபாய்).
எந்த ஒரு அணையிலும் நீள, அகல வாக்கில் ஏற்படும் விரிவு (Expansion) மற்றும் சுருக்கம் (contraction) இவற்றை மிகுந்த கவனத்தோடு கணக்கீடு செய்வது அவசியம். தட்பவெப்ப நிலையால் ஏற்படும் இந்த மாற்றங்கள் உலகில் உள்ள அனைத்து அணைகளுக்கும் பொருந்தும்.
இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நீளவாக்கில் கட்டப்படும் மேட்டூர் அணை போன்ற அணைகளில் வெப்ப நிலைகளால் அணைச்சுவற்றில் ஏற்படும் வெடிப்புகள், சில சமயம் பெரும் வெடிப்புக்கும், அணையின் பாதுகாப்புக்கும் ஆபத்தையும் விளைவித்து விடும்.
எகிப்தில் கட்டப்பட்ட அசுவான் அணை (Assovan Dam) இது போன்ற மாற்றங்களுக்கு தேவையான சிறப்பு அம்சங்களை, கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கட்டப்பட்டதால் கட்டடச் சுவற்றில் 9 அங்குல அளவுக்கு வெடிப்பு ஏற்பட்டு, பராமரிப்பு செய்யும் பொறியாளர்களுக்கு மிகுந்த பதட்டத்தை அளித்து வந்தது.
மேட்டூரில் நிலவிய வெப்பநிலை மற்ற நாடுகளில் நிலவும் வெப்பநிலையை விட குறைவாக இருந்தாலும், மேட்டூர் அணை போன்ற மிகப்பெரிய நீளமான அணைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யாவிடில் அது பேரழிவுக்கு வழிவகுக்கும் ஆபத்து இருப்பதாக உணரப்பட்டு, ஆபத்தைத் தவிர்க்க திட்டமிடல் அவசியமானது.

கட்டட வெடிப்புகளை குறைக்கும் வழி
இதை மனதில் வைத்து எல்லாவிதமான வழிவகைகளும் ஆராயப்பட்டன. இந்த மேட்டூர் அணை வடிவமைப்பை, ஆரம்ப காலத்தில் 1910 இல் ஏற்படுத்திய "கர்னல் எல்லீஸ்" கட்டட வெடிப்புகளை குறைக்கும் வழிகளை பட்டியலிட்டு இருந்தார். இந்த பின்புலத்தில் மிக விரைவாக கட்டப்படும் மேட்டூர் அணையில் ஒவ்வொரு 126 அடிகளுக்கும் "கட்டுமான இணைப்பு" (Construction joints) ஏற்படுமாறு வடிவமைக்கப்பட்டது. ஏற்கனவே மேலே குறிப்பிட்ட கான்கிரீட் கோபுரங்கள் மூலம் (கறுப்பு மற்றும் சிவப்பு கோபுரம்) ஒவ்வொரு 126 அடிக்கு கான்கிரீட் அல்லது மேஷனரி (கட்டுமானம்) அமையுமாறும், கோபுரத்தை நகர்த்தாமல் இந்த 126 அடி ஒரே சமயத்தில் கட்டும்படியாகவும் வடிவமைக்கப்பட்டது.
ஒவ்வொரு பகுதி பகுதியாக கான்கிரீட் மற்றும் மேஷனரி வேலை முடிக்கப்படும் போது இரண்டு பகுதிகளுக்கு இடையில் மென்மையான மேற்பரப்பு (Smooth) இருக்கும்படி ஏற்படுத்தப்பட்டது.
இதனால் சுவர் விரியும் போது அல்லது சுருங்கும் போது முக்கிய பகுதிகளில் விரிசல் ஏற்படாமல் தவிர்க்கப்படும். நீரொழுக்கை தடுக்கும் நட்சத்திரக் குறி கொண்ட பட்டைகள் (Diamond size staunching bar) பொருத்தப்பட்டு அவைகளும் கொண்டை ஊசி போன்ற வடிவில் உள்ள தாமிர கீற்றுகளுடன் வைக்கப்பட்டு சுருங்கி விரியும் போது வெடிப்புகள் நிகழா வண்ணம் பாதுகாக்கப்பட்டது.

பெரிய அளவிலான கான்கிரீட் பகுதி (Blocks) அல்லது மேசனரி பகுதிகள் சுருங்கி விரிவது, வேறு காரணங்களினாலும் ஏற்படும். உதாரணமாக, கான்கிரீட் கலவை கலக்கும் போது சிமெண்டில் நீர் ஊற்றி மேலும் சில ரசாயன திரவம் கலக்கும் போது திடீரென அதிகமாகும் வெப்பத்தால் அந்தக் கலவை இயல்பை விட பெருத்து காணப்படும்.
வெயில் மற்றும் குளிரான தட்பவெப்ப நிலையில் நேரம் செல்லச் செல்ல அவை சுருங்கும். இதன் காரணமாகவும் சுவற்றில் வெடிப்பு நிகழும். மேலும் சுவர் எழுப்பப்படும் போது காற்றடைத்த இடங்களில் கலவைகள் சென்று படியும்போது மேற்புறத்தில் வெடிப்பு ஏற்படலாம். இவற்றைத் தவிர்க்க இந்த ‘எக்ஸ்பான்சன் ஜாயின்ட்ஸ்’ (EXPANSION JOINTS) எனப்படும் சுவற்றின் விரிவு இணைப்புகள் உபயோகப்படுத்தப்பட்டன.
சில அடிகளுக்கு ஒரு முறை இந்த இணைப்பு அல்லது 200 அடிகளுக்கு ஒரு முறை இந்த இணைப்பு போதுமானது போன்ற வெவ்வேறு கருத்துக்கள் பொறியாளர்களுக்கு மத்தியில் அப்போது நிலவியது. இது அந்தந்த இடங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையை பொறுத்தது என்ற அடிப்படையில் மேட்டூரில் பணிபுரிந்த பொறியாளர்கள் 126 அடிகளுக்கு ஒரு இணைப்பு ஏற்படுத்துவது என்ற இறுதி முடிவை எடுத்து செயல்படுத்தினர்.
பெரிய அணைகளை கட்டும் போது இது போன்ற வெடிப்புகளை தவிர்க்க, அகலமான அடுக்குகளாக கான்கிரீட் போடாமல் மெல்லிய அகலம் குறைந்து அடுக்குகளாக கான்கிரீட் போட்டு அது குளிர்வடைய நேரம் கொடுப்பது போன்ற முறைகளை வேறு இடங்களில் பயன்படுத்துவது வழக்கம்.
இந்தத் தொழில்நுட்பம் குறித்த கட்டுரை ஒன்று 1935-ல் திரு. N.Davey, P.hD, A.M.I.C.E என்ற பொறியாளர் எழுதிய ஆராய்ச்சி கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார். "அமெரிக்கன் போல்டர் சிட்டி அணை" என்ற ஒரு கட்டுமானத்தில் இந்த முறைகள் கடைபிடிக்கப்பட்டு சூடு தணிந்த பிறகு அடுத்தடுத்த கான்கிரீட் அடுக்குகள் (Layers) போடப்படுவது மற்றும் குளிர்ந்த நீர் குழாய்களை வைத்து அந்த கான்கிரீட் அடுக்குகளை குளிர்வித்து தொடர்ந்து கட்டுமானங்களை தொடர்வது போன்ற நடைமுறைகள் விளக்கப்பட்டிருந்தது.
மேட்டூரில் இது போன்ற விரிவான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை எனினும் ஒவ்வொரு அடுக்குகளாக கான்கிரீட் போடும் போது தேவையான அளவு நேரம் கொடுத்து பிறகு வேலை தொடரப்பட்டது.

டீப் ஹோல் (Deep hole) என ஏற்கனவே குறிப்பிட்ட ஆழமான பகுதிகளில் கான்கிரீட் போடும்போது தொடர்ந்து வெப்பநிலை உயர்ந்து 14 -15 நாட்களில் வெப்பநிலை குறையத் தொடங்கியது. மிகவும் தொடர்ந்த தரவுகள் இது குறித்து பதிவாகவில்லை என்பது உண்மையாயினும் நீண்ட நாட்கள் கழித்து தண்ணீர் தேங்கி நிற்கும் காலம் ஏற்பட்டதால் பெரிய அளவில் மாறுதல்கள் ஏற்படவில்லை. அதோடு மட்டுமின்றி அவ்வப்போது தேவையான சோதனைகளும் செய்யப்பட்டு வந்தன.
பல வருட கட்டுமான பணிகளின் போது அப்போது சூப்பரின்டெண்டன்ட் திரு சி.ஜி. பார்பர் அவர்கள் வெவ்வேறு கால நிலைகளில் "கான்ட்ராக்சன் ஜாயின்ட்" எனப்படும் "சுருங்கும் இணைப்புகளில்" தன்மை என்னவாக இருக்கிறது என்பதை கவனித்து குறித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்திருக்கிறார்.
இருந்தாலும் அணை சுவற்றின் பின்புறம் பெரும்பாலும் பகல் நேரம் முழுவதும் வெயிலில் இருக்கும் படியான சூழ்நிலையில் Hair crack எனப்படும் மயிரிழை அளவிலான வெடிப்புகள் இருந்துள்ளது. உதாரணமாக, ஒரு காகிதத்தை அதில் நுழைக்கக் கூடிய விரிசல்கள் அப்போது காணப்பட்டு இருக்கின்றன.
இவை அனைத்தும் பாதுகாப்பான அளவிலேயே தான் இருந்துள்ளது எனப் பொறியாளர்கள் உறுதிப்படுத்தினார்கள். ஆனாலும், பொறியாளர்களின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. "இந்த முக்கியமான வெடிப்பு மற்றும் சுருங்குதல் தன்மைகள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் தொழில்நுட்பத் துறையில் நிலவி வந்தாலும் இது குறித்து மேலும் ஆராய்ச்சிகள் பின்னாளில் பல கேள்விகளுக்கு விடை அளிக்கும்" என்று திறந்த மனதுடன் ஒப்புக் கொண்டார்கள்.
மேட்டூர் அணையை பொறுத்தவரை வெப்ப மாறுதல்கள் காரணமாக நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மேல்புறம் (வடக்கே) ஒரு மாதிரியும், அணையின் பின்புறம் (தெற்கே) எப்போதும் வெயிலில் காயும் தன்மையோடும் வெப்ப மாறுதல்களுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இருந்தாலும் அணை கட்ட பயன்படுத்திய பொருட்களின் தன்மை, தரம் மற்றும் முறைகள் இவற்றின் காரணங்களால் வெப்ப மாறுதல்களை தேவையான அளவுக்கு தாங்கிக் கொள்ளும் படியும், பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்டன என பொறியாளர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
மேற்கண்ட காரணங்களால் மேட்டூர் அணை நீர் கசிவு இன்றி, உலகத் தரத்துக்கு ஒப்பானதாக கருதலாம் என்ற கருத்தை முன் வைத்தனர். பின்னாளில் அது உண்மை என்றும் பெரும்பாலும் இந்த நூறு ஆண்டுகளில் நீர் கசிவு என்பது பாதுகாப்பான அளவிலேயே தான் இருந்துள்ளது என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே குறிப்பிட்டபடி அணைக்குள், அளவில் சிறிதாக கசிவு ஏற்படும் நீர், சேகரிக்கப்படும் கேலரி என்ற இடம் அணையின் நடுப்பகுதி கோட்டிற்கு சற்று வடபுறமாக முழு நீள அணையிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கேலரியின் அகலம் 7 அடி மற்றும் உயரம் 7.5 அடி. மொத்தம் 5 இடங்களில் இதன் வெளியேற்றம், அணையின் மொத்த நீளத்திலும், வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை "கிரவுண்ட் லெவல்" எனப்படும் தரைத்தள அளவில் உள்ளது. (DRAINAGE SHAFTS AND INSPECTION GALLERY)
இந்த கேலரியில், அணையின் உட்புற சுவர்களில் இருந்து கசியும் சொட்டு நீர், கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கப்பட்டு சாய்வான தளத்தில் (கேலரியில்) வெளியேற்றப்பட்டு அணைக்கு வெளியே அந்த நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த மாதிரியான கசிவு நீர் வெளியேற்றம் வேறு சில சிறிய அணைகளில் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் அணையின் உட்புறத்தில் நீர் கசிவு எவ்வளவு உள்ளது என்றோ பாதிப்பு எதுவும் ஏற்படா வண்ணம் தடுப்பதற்கு உண்டான வாய்ப்போ ஏற்படுவதில்லை.
உதாரணமாக, இந்த மேட்டூர் அணை கட்டுவதற்கு சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட "பெரியார் அணையில்" இதுபோன்ற நீர் கசிவு தொடர்ந்து இருந்து வந்தது. அணை கட்டப்பட்ட காலத்தில் இருந்தே இந்த கசிவு இருந்து வந்தது பதிவாகி இருந்தது. 1940களில் மேட்டூர் அணையில் அமைக்கப்பட்ட படி, நீர் கசிவு ஏற்பாடுகள் அங்கும் செய்து மராமத்துப் பணிகள் செய்யப்பட்டது என்பது கூடுதல் செய்தி.

மேலும், மேட்டூர் அணையின் கண்காணிப்பு கேலரியின் அமைப்பின்படி, அணையின் உட்புறத்தில் எந்த இடத்திலும், அணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது தரைத்தள அளவிலோ அல்லது எங்கு அழுத்தம் காரணமாக நீர் கசிவு ஏற்பட்டாலும், கண்காணிப்பு கேலரி மூலம் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். இவைகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது மிகவும் அதிசயத்தக்க சிறப்பம்சமாகும்.
CONTRACTION JOINT என்று சொல்லப்படும் இடத்தில் உள்ள தாமிரக் கீற்றுகள், உள்ளே உடைந்து போனால் அதன் வழியாக கசியும் அதிகப்படியான நீர், அங்கு பதியப்பட்டுள்ள குழாய்கள் மூலம் கண்காணிப்பு கேலரியை வந்தடைந்து, அணையின் தெற்கு புறத்தில் தரைமட்ட அளவில் வெளியே கொண்டு வந்து வெளியேற்றப்படும்.
கண்காணிப்பு கேலரியின் வடிவமைப்பு மிக அழகிய ஒன்றாகும். அரைக்கோள வடிவில் வளைவான மேற்கூரையுடன் அழகுற அமைக்கப்பட்டதோடு, அதன் தரையில் ரயில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு அதில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ட்ராலிகளை (Trolley) பொருத்தி அங்கு பணிகளை சுலபமாக முடிக்க திட்டமிட்டு கட்டி முடிக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் பல அழகான கட்டுமானப் பணிகளில் இந்த ஓர் அமைப்பு இங்கு அழகியலை எடுத்தியம்பும். காண்போர் உள்ளம் கொள்ளை கொள்ளும். அனைத்திற்கும் மேலாக பாதுகாப்புடன் நீர்க்கசிவு வெளியேற்றப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். மேட்டூர் அணையின் மிகச் சிறப்பான பாதுகாப்பான அம்சங்களில் இதுவும் ஒன்று!
வெளியேற்றப்படும் கசிவு நீரின் அளவைத் தொடர்ந்து அளப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது.
அணையின் ஊடாக அமைக்கப்பட்ட, பாசன வசதிக்கான மதகுகள் முன்பு திட்டமிட்டபடி செயல்படுத்தப்படாமல் சில மாற்றங்களைக் கண்டது. கர்னல் எல்லீஸ் ஆரம்ப காலத்தில் தயாரித்த திட்டத்தின்படி இயற்கையாகவே அமையப்பெற்ற இடங்களில் மதகுகள் மற்றும் அதனுடைய உயரங்கள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அணை அமையப்பெற்ற இடம் பழைய இடத்திலிருந்து மாற்றப்பட்டதால் பாசனக் கால்வாய்களின் திட்டங்களும் தேவைக்குத் தகுந்தவாறு மாற்றப்பட்டன. மூன்று இடங்களில் பாசனக் கால்வாய் வெளியேற்றம் குறிக்கப்பட்டிருந்தன.
அவை டீப் சப்ளை (Deep supply), சென்ட்ரல் சப்ளை (Central supply) மற்றும் ரைட் சப்ளை (Right Supply) என பெயரிடப்பட்டிருந்தன.

ஆனால், 1924 இல் ஏற்பட்ட வெள்ளம் மதகுகளின் எண்ணிக்கை, இடம், நீரின் அளவு போன்ற பல விஷயங்களை உள்ளடக்கிய மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. பாசனத்திற்கு தேவையான அளவு நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ளக் காலங்களில் பாதிப்பு என்று நீர் வெளியேற்ற வேண்டிய அவசியம் போன்ற விஷயங்கள் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மீண்டும் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டது.
அணைக்கான புதிய இடத்தை தேர்வு செய்த பின்னர் மிக விரிவான அளவில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்கள் குறித்த அணையின் வரைபடத்தை "சர்வே" எடுத்து தயாரிக்கப்பட்டது. இதை சர்வே ஆப் இந்தியா நிறுவனம் (Survey of India) தயாரித்தது. சிறந்ததொரு வரைபடமாக அது தயாரிக்கப்பட்டது என்று கூற வேண்டும்.
அணையின் கொள்ளளவு, வெவ்வேறு நிலைகளில் தோற்றம் இவற்றைக் கொண்டு மதகுகளின் அளவு மற்றும் எண்ணிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. மிக முக்கியமான ஒரு விடயமாக நீரின் வேகம் அதிக அளவாக மதகுகளின் வழியாக எவ்வளவு அனுமதிக்க முடியும் என்று கணக்கிடப்பட்டது.
பல கருத்துக்கள் அதில் கூறப்பட்டு அவை எண்ணிலடங்கா வேறுபாடுகளை கொண்டதாக இருந்தது. ஆனால், எல்லீஸ் வரையறுத்த விதிகளின் உதவி கொண்டு மேலே குறிப்பிட்ட பல கருத்துக்களையும் கருத்தில் எடுத்துக் கொண்டு பாசனத்திற்கான நீரின் அளவு, மதகுகளின் எண்ணிக்கைகள் மீண்டும் ஒருமுறை கணக்கிடப்பட்டன.
மதகுகளின் நீள அகலம் ஒரே அளவு வைத்து திட்டமிட்ட போதிலும், மதகுகளை வடிவமைக்கும் உற்பத்தியாளர் நல்லதொரு கருத்தைக் கூறி அதில் மாற்றத்தை ஏற்படுத்தினார். அகலம் குறைவாகவும், உயரம் சற்று அதிகமாகவும் அமையும் மதகுகளின் கதவுகள், சற்று கூடுதலான பலன்களைத் தரும் என்றும் இவ்வாறு அளவுகள் அமையும் போது கதவுகளின் மேல் ஏற்படும் அழுத்தம் (Stress) மிகவும் குறைவாக இருக்கும் என்றும் யோசனை தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற அளவுகளில், மதகுகளின் கதவுகள் மேலே மற்றும் கீழே ஏற்றி இறக்கும் போது நடுவில் "ஜாம்" ஆகி சிக்கிக் கொள்ளாமல் திறம்பட கதவுகள் வேலை செய்யும் என்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளும்படி ஆயிற்று.
தலைமைப் பொறியாளர் திரு. முல்லிங்ஸ் மிக நீண்டதொரு விவாதமும், யோசனையும் செய்து பாசன வசதிக்காக எந்த இடங்களில் மதகுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்தார். மிகவும் அதிகமான தொழில்நுட்ப விஷயங்கள் அடங்கிய தகவல்கள் விரிவாக பேசப்பட்டு இருந்தாலும் சாதாரண பொதுமக்களாகிய நாம் எளிதில் புரிந்து கொள்ளும்படி கீழ்க்கண்டவாறு முடிவு இருந்தது எனலாம்.
நிலத்தின் உயரம் அதிகமாக உள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மதகுகள் (High level sluices), உயரம் குறைவாக உள்ள பகுதியில் அமைந்த மதகுகள் (Low level sluices) என்று இரு இடங்களில் பாசன மதகுகள் நீரை அணையில் இருந்து வெளியேற்றும் படி அமைப்பது எனவும் முடிவு செய்தார்.
இந்த மதகுகளின் கதவுகள் மற்றும் அமைப்பை க்ளென்பீல்ட் & கென்னடி (M/s. GLENFIELD & KENNEDY) நிறுவனத்தினர், அவர்களின் உலகளாவிய அனுபவங்களை வைத்து வடிவமைக்கும் படி பணிக்கப்பட்டார்கள்.

இறுதியாக உயரம் அதிகமாக உள்ள இடத்தில் (அணையின் வலதுபக்கம்) அமையும் மதகுகளின் உயரம் 10.5 அடி x 16 அடி என்ற அளவில் 8 மதகுகள் எனவும், அணையின் மத்தியில் அமையும் குறைந்த அளவு உயரம் உள்ள இடத்தில் 7 அடி x 14 அடி என்று அளவில் ஐந்து மதகுகளும் அமைப்பதாக இறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த அமைப்பின் படி மதகுகள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன என்பதை எவர் ஒருவரும் நேரில் சென்று கண்டுணரலாம்.
மேட்டூர் நீர் மின் நிலையம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான அடையாளம். அது குறித்து பார்ப்பதற்கு முன்பாக, இயந்திரங்கள் கொள்முதல் குறித்தும், கான்கிரீட் டவர்கள் குறித்தும் மெட்ராஸ் சட்டமன்றத்தில் நடைபெற்ற காரசார விவாதங்கள் மிகுந்த சுவாரசியமிக்க நிகழ்வுகள். அவற்றை கண்டுணர்ந்து மீண்டும் மேட்டூருக்கு திரும்பி வருவோம். உடன் பயணியுங்கள்.
காவிரி நன்னீர் சிறப்பு





















