ஆதார் அப்டேட்டுகளை 'முற்றிலும் இலவசமாக' செய்துகொள்ளலாம்; இதற்கு UIDAI சொல்லும் ச...
சர் சி.பி.ராமசாமி அய்யர் பங்கும்... அபசகுனம் விவாதமும்; அணையின் அடித்தளம் | அணை ஓசை 20
பொறியாளர்கள், அதிகாரிகள் மட்டுமன்றி காவிரி-மேட்டூர் அணை திட்டத்தின் செயலாக்கத்தின் முக்கிய பங்கு மெட்ராஸ் மாகாண சட்டசபைக்கு உண்டு. அந்த சபையின் உறுப்பினர்கள் இந்தத் திட்டம் செயல்முறைக்கு வருவதற்காக பெரிதும் உதவினார்கள். காங்கிரஸ் மற்றும் நீதிக் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களின் பங்கு அளப்பரியது.
அரசு சார்பில் மேட்டூர் அணை உருவாக முக்கிய பங்காற்றியவர் சர். சி.பி. ராமசாமி அய்யர் B.A., B.L. C.I.E. இவர் உயர்நீதிமன்ற வக்கீல்.
1912-ல் மெட்ராஸ் கார்ப்பரேஷனில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரானார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக இருந்தார். 1923 முதல் 1928 மார்ச் வரை மெட்ராஸ் மாகாண ஆளுநரின் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தார். 1920 ஆம் ஆண்டிலிருந்து அட்வகேட் ஜெனரலாக இருந்த அவர் எந்த பிரச்சனையிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்காதவராகவும், ஒவ்வொரு விஷயத்திலும் ஆழ்ந்த பரிசீலனைக்கு பின்பே உறுதியாகவும் துணிவாகவும் நோக்கங்களை கொண்டதாகவும் முடிவெடுத்தார்.
ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினராக 1923 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். சட்ட உறுப்பினரான இவர் வசம் நீர்ப்பாசனத் துறை பொறுப்பும் சேர்த்து அளிக்கப்பட்டது. 1931-ல் லண்டனில் நடந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய குழுவில் ஒருவராக கலந்து கொண்டார். மகாத்மா காந்தியுடன் சென்ற அந்த குழுவில் சர்.சி.பி. ராமசாமி அய்யரும் (சி.பி.ஆரும்) ஒருவர்.
மெட்ராஸ் மாகாணத்தில் அப்போது விளைநிலங்களாக இருந்த 39 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பில் 7.28 மில்லியன் ஏக்கர்கள் அல்லது 18.6 விழுக்காடு மட்டுமே அரசாங்க பாசன வசதி பெறும் விளைநிலங்களாக இருந்தன. (2024-ல் முழு டெல்டா பாசனம் மட்டும் 18.3 லட்சம் ஏக்கர்களாக இருக்கிறது என்று ஒரு தரவு கூறுகிறது.)
1923 ஏப்ரல் மாதம் இந்திய அரசுக்கு சி.பி.ஆர் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் மேட்டூர் திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க கேட்டுக்கொள்கிறார். ஜூன் மாதம் இது குறித்து வைஸ்ராயிடம் விவாதிக்க சி.பி.ஆர் சிம்லா சென்றார்.
முதலில் 1916 ஆம் ஆண்டு அணை கட்ட முடிவு செய்யப்பட்ட இடத்தையும் மற்றவற்றையும் ஆய்வு செய்து மேட்டூர் அணை கட்ட சிறந்த இடத்தை தேர்ந்தெடுக்கும் கடமை அவர் மீது சுமத்தப்பட்டது.

அஸ்திவாரத்திற்கு ஏற்ற பாறையை எந்த ஆழத்தில் காணலாம் மற்றும் உபரி நீரை வெளியேற்றுவதற்கான வசதிகள் அந்த இடத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள் என்று கருதப்பட்டது. 1924- ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.
சி.பி.ஆர்., புவியியல் நிபுணரான ஸ்மித், புவியியலாளர் திரு விநாயகராவ் இருவரோடும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டிய முக்கிய பொறுப்பேற்றார்.
1916- ல் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்ட இடம் தீவிர பரிசோதனைக்கு, பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. கவர்னரின் நிர்வாககுழு உறுப்பினரும் நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பாகவும் இருந்த சிபிஆர் 1924-ல் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பெருவெள்ளத்தால் நிலங்களில் படிந்திருந்த மணற்குவியலை, அதன் சேதாரங்களை நேரில் கண்டார். புதிய இடம் உபரி நீராக சுமார் 4,70,000 கன அடியை வெளியேற்றவல்லதாக இருப்பதையும் அறிந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, பொறியாளர்களுடன் கலந்து ஆலோசித்து, மெட்ராஸ் அரசு புதிய இடம் சிறந்தது (SITE – Y) என்ற முடிவுக்கு வர முக்கியப் பங்காற்றினார். மேலும், இதனால், அணை கட்ட ஆகும் செலவு குறைவாக இருக்கும் என்ற முடிவுக்கு பொறியாளர்கள் வந்தனர் . இதனால் அரசு ஒப்புதல் அளித்தது.
விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள்
இந்தத் திட்டம் சிலரால் அநியாயமாக விமர்சிக்கப்பட்டாலும் இடமாற்றம் பலரை அச்சத்தில் ஆக்கியது எனலாம். நீர்த்தேக்கம் மற்றும் டெல்டாவின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. அடிக்கல் நாட்டிய பிறகு அணையின் இடத்தை மாற்றுவது குறித்து இது அபசகுனம் என்று சிலர் கவலை தெரிவித்தனர். மேலும் தஞ்சை மிராசுதார்கள் பெரும் அச்சம் கொண்டனர். தஞ்சையின் பாசனப்பகுதி பாதிக்கப்பட்டு மற்ற மாவட்டங்கள் பயன்பெறும் என்ற தேவையற்ற பயம் அவர்களிடத்தில் நிலவியது.
கோவை மற்றும் சேலம் மாவட்ட மக்கள் இத்திட்டத்தின் ஒரு பகுதியாவது தங்களுக்கு பயன்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேட்டூர் திட்டத்தால் கோவைக்கு சிக்கல் மற்றும் சிரமம் மட்டுமே ஏற்படும் என்பதால் அதற்காக அரசு சிறிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை அளித்தனர். இந்த அச்சங்கள் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கப்பட்டது. இருந்தபோதிலும் காவேரிபுரம், திண்ணப்பட்டி, மூலக்காடு மற்றும் கொளத்தூர் போன்ற கிராமங்களில் வசிப்பவர்கள் சி.பி.ஆர் வசம் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
சட்டசபையில் சி.வி.வெங்கட் ரமண அய்யங்கார், மேட்டூர் அணை கட்டுவதால் கோவை மற்றும் சேலம் மாவட்ட கிராமங்கள் அனுபவிக்கப் போகும் துன்பங்கள் என ஒரு பட்டியலிட்டார். சி.பி.ஆர்., உண்மைகளை எடுத்துக் கூறி உறுப்பினர்களை சமாதானப் படுத்தினார்.
சி.பி.ஆரின் தனித்தன்மை...
மேட்டூர் திட்டப்பணிகள் தொடங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கடும் விமர்சனங்கள் இருந்தன. இது நடைமுறை அடிப்படையிலான தாமதம் என்பதை அறிந்திருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து அதிருப்தி வெளியிட்டனர்.
சி.பி.ஆரின் வேண்டுகோளுக்கிணங்க இந்திய அரசின் ஆலோசனை பொறியாளர் பி. ஜி. ஹாரிஸை இந்த திட்டம் குறித்து ஆய்வு நடத்த இந்திய அரசு அனுப்பி வைத்தது. அவர் புதிய இடத்தின் நன்மைகள் எந்த கேள்விகளுக்கும் அப்பாற்பட்டவை என்று கூறினார். ஆலோசனைப் பொறியாளரின் அறிக்கை அரசாங்கம் வேலையை தொடர உதவியது. திட்டம் முன்னேறியது. ஆனால், அது முன்னேறும் போது பல குற்றச்சாட்டுகளும் தீவிரமடைந்தன. இது சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இவை அனைத்தும் திறமையாக சமாளிக்கப்பட்டன! இதில் சி.பி.ஆரின் தனித்தன்மை பளிச்சிட்டது.
பல்வேறு தரப்பினரின் அழுத்தத்தின் கீழ் சி.பி.ஆர் வேலை செய்து பிரச்சனைகளை சமாளித்து இந்த திட்டம் அரசிடம் அனுமதி பெறவும், செயல்படுத்தவும், செய்து முடிக்கவும் தனது திறனை வெளிப்படுத்தினார் என்பதை சட்டமன்ற விவாதங்களின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
1923-1928 ஆண்டுகளில் சி.பி.ஆர் ஆளுநரின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். மிகுந்த ஆளுமையுடன் செயல்பட்டார். சட்டமன்றத்தில் ஒரு முறை அவர் இப்படி கூறினார். “எனது அரசாங்கத்தில் “விஸ்கவுன் கோஷன்” (கவர்னர்) முதல்வராக இருக்கிறார்.”
இப்படி “எனதுஅரசாங்கம்” என்று தன்னை முதன்மைப்படுத்தி பேசியதை பார்த்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். சட்டமன்றத்தில் நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்திய போதெல்லாம் சி.பி.ஆர்., கடும் எதிர்ப்புகளை சந்தித்தார். சி.பி.ஆரி-ன் மேட்டூர் அணை திட்டத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் பேசிய நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான முனுசாமிநாயுடு,
“வசதி படைத்த மாவட்டங்கள் மேலும் வசதி பெறுகின்றன. வறுமையில் வாடுகின்ற மாவட்டங்களில் மேலும் மேலும் வறுமைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த அரசாங்கமே சி.பி.ஆரி-ன் அரசாங்கமாக மாறிவிட்டது. ஆளுநர் சி.பி.ஆருக்கு அடுத்த நிலையில் இருந்துசெயல்படுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் மீறி அனைத்தும் சமாளிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் நாள் ஆளுநர் ஜார்ஜ் ஸ்டான்லியால் திறந்து வைக்கப்பட்டது.
கெடுவாய்ப்பாக அந்த அணை திறப்பு விழாவில் அதன் முக்கியகர்த்தாக்களில் ஒருவரான சி.பி.ஆர் கலந்து கொள்ள இயலவில்லை. தவிர்க்க இயலாத வேறு அவசர பணிகள் காரணமாக அவர் திருவனந்தபுரத்தில் அன்று இருக்க வேண்டியதாக இருந்தது.
பல மகத்தான செயல்களை சி.பி.ஆர் செய்திருந்தாலும், இன்றளவும் மிகப்பெரிய அளவில் பாராட்டப்படும் ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கான இலவச மதிய உணவுத்திட்டம் இவரால் மெட்ராஸ் மாகாணத்தில் முதன் முதலில் துவக்கப்பட்டது என்பது நம்மில் பலரும் அறியாத செய்தி!
எம்.ஜி.ஆர்., அதற்கு முன்பாக காமராஜர் ஆரம்பிப்பதற்கும் முன்னோடியாக சி.பி. ராமசாமி அய்யர் அப்போதைய திருவிதாங்கூர் மாகாணத்தில் உள்ள (இப்போதைய கன்னியாகுமரி மாவட்டம்) ‘வெள்ளமடம்’ என்ற ஊரில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1946 பிப்ரவரி மாதம் 12-ம்தேதி நேரில் வருகை புரிந்து, 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி திட்டத்தை துவக்கினார்.
இந்தியாவில் முதன் முதலில் இந்தப் பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு அளிக்கும் திட்டத்தை துவக்கினார். இந்த விஷயத்தில் கர்மவீரர் காமராஜருக்கும் முன்னோடியாக திகழ்ந்தவர் சர். சி.பி. ராமசாமி அய்யர் என்பதே வரலாறு!
1879-ம் ஆண்டு நவம்பர் 13 –ம்தேதி பிறந்த இவர் பின்னாளில் 26.9.1966 அன்று திங்கட்கிழமை காலை இறைவனின் திருவடிகளை சேர்ந்தார்.
1966ல் ஆரம்பிக்கப்பட்ட சி.பி. ராமசாமி அய்யர் ஃபவுண்டேஷன் கல்வி, கலை மற்றும் மக்களின் மேம்பாடு, முன்னேற்றம் குறித்து பலவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இங்கு ஒரு மிகச் சிறந்த நூலகம் இன்றளவும் இயங்கி வருகிறது. இது சென்னையில் ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ளது. நன்றியுடன் சர்.சி.பி.ஆர் அவர்களை நினைவு கூர்வோம்.
நேரில் சென்று மேற்கண்ட சமூகப் பணிகளை அவதானிக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. மேலும், எந்த நூலகத்திலும் தேடி எமக்கு கிடைக்காத “ காவிரி-மேட்டூர் திட்டத்தின் செலவு-பயன் மதிப்பீடு” என்ற மேட்டூர் அணை குறித்த ஒரு ஆய்வு அறிக்கை (Benefit Cost Evaluation of Cauvery-Mettur Project) இங்கேதான் கிடைத்தது. மத்திய திட்டக்கமிஷனுக்காக கெளரவ இயக்குநர், திரு.K.S.சோனாச்சலம் அவர்களின் தலைமையில் நடைபெற்று சமர்ப்பித்த ஆய்வறிக்கையாகும் இது!
அணை கட்டி முடித்த பிறகு, ஒவ்வொரு கால இடைவெளியில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு இந்த அணை திட்டத்தின் பயன் என்ன என்பதை ஆய்வு செய்த அறிக்கையாகும் இது.
இந்த அறிக்கையின் படி, அணை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வந்த 1934ம் ஆண்டு முதல் 1959ம் ஆண்டு வரை இந்த திட்டத்தின் பயன் குறித்த ஆய்வு, ஒன்பது வெவ்வேறு மதிப்பீட்டு முறைகளின் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.
1960ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி இந்த மேட்டூர் திட்டமானது மிகுந்த பலனளித்த திட்டமாக அறிவிக்கப்பட்டது. நீர்ப்பாசன மற்றும் நீர் மின் உற்பத்தி என்ற இரு அலகிலும் மிகுந்த பயனளிக்கும் திட்டம் என்று இந்த அறிக்கை மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சர்.சி.பி.ஆர்., நூலகத்திற்கும் நன்றி.
இனி அணையின் அடித்தளம் அமைக்கப்பட்ட விவரங்களை தெரிந்து கொள்ள மேட்டூர் கட்டுமானப் பகுதிக்கு திரும்பிச் செல்வோமா?
அணை கட்டுமானப் பணிக்கு இப்போது மீண்டும் திரும்புவோம். முக்கியத் தேவைகளாக உணரப்பட்ட கட்டமைப்பு வசதிகள் ஒரு புறம் முடிந்து, நிலம் கையகப்படுத்தும் வேலைகளை முடுக்கி விட்டு, நிர்வாகம் அடுத்த கட்டமாக அடித்தளம் குறித்த வேலைகளை தொடர்ந்தார்கள். அதன் விவரங்களை கண்டுணர்வோம்.
ஆற்றுப்படுகையில் ஆரம்பத்தில் மாதிரி துளைகள் இட்டு பாறைகளின் தன்மைகளை ஆராய்வது, இடங்களைத் தோண்டி எடுத்து அணை கட்டுமானத்திற்கு உகந்ததா என தரத்தை பரிசோதிப்பது, அடித்தளத்திற்கு தோதாக இருக்கிறதா என பரிசோதனைகளை மேற்கொள்வது போன்ற வேலைகள் அணை கட்டுமிடத்தில் மேற்கொள்ளப்பட்டன. 1926 ஆம் ஆண்டு மார்ச் மாதம், புவியியலாளர் டாக்டர் ஸ்மீத் (Dr. Smeeth) மற்றும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசின் ஆலோசனை பொறியாளர் ஹாரிஸ், (D.G. Harris) அணைக்கட்டு இடத்திற்கு வருகை புரிந்து மாற்றம் செய்திருந்த புதிய இடத்தில் சைட்- Y (Site-Y) சுவர் அமையப்போகும் முழு நீளத்தில் ஆங்காங்கே 40 அடி ஆழம் வரை துளையிட்டு பாறைகளின் தன்மை மற்றும் பாறை அடுக்குகளின் அமைப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தந்தனர்.
பாறைகளில் உள்ள பிளவுகள் மற்றும் நுண்துகள்களின் வழியாக அடித்தளம் அமைத்த பிறகு, நீர் கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதையும் அதை உறுதி செய்ய துளையிட்டு, அதில் அதிக அழுத்தத்தில் சிமெண்டை திரவ வடிவில் செலுத்தி ஆராயப்பட்டது.
அடித்தளம் அமைக்கப்பட வேண்டிய நீள்வாக்கு இடம் முழுவதும் பாறைகளை பெயர்த்தெடுத்து, தேவையான அளவு ஆழமான பள்ளம் எடுத்து, ஒழுங்கற்ற பாறைகள் மற்றும் மென்மையான பாறைகள் இவற்றை வெட்டி அகற்றி, தட்டையான கெட்டியான பாறைகள் வரும்வரை பாறைகளை வெட்டியும், வெடி வைத்து தகர்த்தும், ஓரளவுக்கு சமதளம் அமைக்கப்பட்டது.
இப்படி சீர் செய்யப்பட்ட தளங்களையும் விஞ்ஞான முறைப்படியான சோதனைகள் செய்து ஆற்றின் குறுக்குவாட்டில் முழு நீளமும் பரிசோதித்து உறுதி செய்யப்பட்டது. எந்தவித சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்காமல் அடித்தளம் அமைக்க ஏதுவான இடம் என்பதை உறுதி செய்யப்பட்டது. தொழில்நுட்பமும், அனுபவமும் இணைந்து சிறப்பான அடித்தளம் அமைவதற்கு நிறைய வித்தியாசமான முறைகளை கையாண்டு உறுதியான அடித்தளம் (Foundation) அமைக்க உறுதி செய்யப்பட்டது.

நீர் ஊடுருவி கசிவு ஏற்படா வண்ணம் தடுக்க மேலே கூறப்பட்ட ‘கிரவுட்டிங்’ என்ற தொழில்நுட்பத்தை உபயோகித்து பாறையில் இருந்த நுண்துளைகள் அடைக்கப்பட்டன. அணை கட்டி முடித்து முழு கொள்ளளவில் நீர் தேங்கி நிற்கும் போது நீரின் அழுத்தம் காரணமாக, கசிவு ஏதேனும் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டால் அதற்கும் முன்கூட்டியே யோசித்து திட்டமிடப்பட்டு G.I குழாய்கள் எனப்படும் இரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டு கசிவு நீர் சுரங்கம் வரை (Drainage gallery) கொண்டு வந்து அதன் வழியாக கிரவுட்டிங் செய்து கசிவுகள் ஏற்படுத்தும் துளைகளை அடைக்க முன்யோசனையாக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மலைப்பு ஏற்படுத்தும் இவ்வளவு வேலைகளும் மிகுந்த கவனத்துடன் செய்து முடிக்கப்பட்டன!
கர்னல் எல்லீஸ் முன்பு குறித்துக் கொடுத்த அணையின் இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரம் வடக்கே மேல்புறத்தில் புதிய இடத்தில் வேலைகளைத் தொடங்கினார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எதிர்காலத்தில் அணையின் உயரம் தேவைப்பட்டால் 10 அடிக்கு உயர்த்தும் அளவுக்கு முன்னெச்சரிக்கையாக வடிவமைப்பும் செய்யப்பட்டது. ஏற்கனவே, திட்டமிட்ட அணையின் மேற்புறத்தின் சாலை (TOP OF THE DAM) அகலம் 18 அடியில் இருந்து 20 அடி 6 அங்குலமாக அதிகரிக்கப்பட்டது.
அணையின் மேல் புறத்தில் அழகான வளைவுகளோடு வடிவமைப்பை மாற்றினால் அணை அழகாகத் தோற்றமளிக்கும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு, அதற்குண்டான வாய்ப்புகளும் தொழில்நுட்ப ரீதியாக இருந்தும், அதிக செலவு பிடிக்கும் எனவும், திட்ட மதிப்பீடு அதிகமாகிவிடும் என்ற காரணத்தினாலும், வளைவுகள் அமைக்கும் யோசனை கைவிடப்பட்டது.
எனவே, தட்டையான நேர் கோடாக அணையின் மேல் புறம் அமைக்கப்பட்டது. இதனால் பெரும் செலவு மிச்சப்படுத்தப்பட்டது. வளைவுகளுடன் வடிவமைப்பை தொடர்ந்திருந்தால், பின்னாளில் 1934 ல் வெள்ளம் ஏற்பட்ட காலங்களுக்கு முன்பாக முழு வேலைகள் முடிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.
இதனால் அணை உயரமாக கட்டப்பட்டு வந்தபோது, அணையின் அகலத்தின் நடுவில் ஒருவேளை பெருவெள்ளம் வந்தால் வழிந்து ஓடுவதற்கு ஸ்பில்வே (Spillway) எனப்படும் "கசிவுப் பாதையை" மேலும் ஒரு வருடம் நீடித்து அப்படியே வைத்திருக்கலாம் என்ற முடிவை மாற்றி அங்கு சுவர் கட்டப்பட்டது. இதனால், அதிக வெள்ளம் சேமித்து வைக்கவும் முடிந்தது.
மாறாக கட்டி முடிக்க இன்னும் சில மாதங்களை எடுத்துக் கொண்டிருந்தால் 1934 ல் வந்த வெள்ளம், கசிவுப்பாதையில் வழிந்தோடி டெல்டா வழியாக பயனின்று கடலில் சென்று கலந்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இதனால் பயிர் சாகுபடி அந்த பருவ காலத்தில் முற்றிலுமாக பொய்த்திருக்கும். அவ்வாறு நடைபெறாமல் மேற்கண்ட மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியில் அணையின் முகப்பு தோற்றம் இயற்கையாகவே மிகுந்த பொலிவோடும், அழகோடும் அமைந்தது.
தொடர்ந்து அகழ்வு பணியை ஆராய்வோம்!
காவிரி நன்னீர் சிறப்பு





















