செய்திகள் :

`Vincere o Morire' முசோலினி மிரட்டலும், ஹிட்லருக்கு பயந்து கட்டிலுக்கு அடியில் பதுங்கிய கோப்பையும்!

post image

விளையாட்டு என்பது வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டம். ஆனால், ஒரு கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டி, வீரர்கள் மனதில் மரண பயத்தோடு விளையாடப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், 1938-ல் நடந்த அந்தப் போட்டியில், இத்தாலி அணிக்கு அதன் சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியிடமிருந்து வந்த ஒரு தந்தி, ஒட்டுமொத்த கால்பந்து உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த தந்திதான், "வெற்றி அல்லது மரணம்!".

போர் மேகங்கள் சூழ்ந்த 1938 உலகக்கோப்பை!

1938-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் மூன்றாவது உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. ஐரோப்பா முழுவதும் இரண்டாம் உலகப்போருக்கான பதற்றம் சூழ்ந்திருந்த நேரம் அது. இத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி, 1934-ல் தன் நாட்டில் நடந்த உலகக்கோப்பையை வென்று, அதை தனது பாசிச கொள்கைகளைப் பரப்ப ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். இதைப் பார்த்த ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரும், கால்பந்தை ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றத் துடித்தார்.

அந்த ஆண்டு மார்ச் மாதம், ஆஸ்திரியாவை ஜெர்மனியுடன் இணைத்த ஹிட்லர், இரு நாட்டு வீரர்களையும் இணைத்து ஒரு பலமான 'கிரேட்டர் ஜெர்மனி' அணியை உருவாக்கினார். ஆனால், ஆஸ்திரியாவின் தலைசிறந்த வீரரும், அந்தக் காலத்தின் பீலே என்று அழைக்கப்பட்டவருமான மத்தியாஸ் சிண்டெலர், ஹிட்லரின் அழைப்பை நிராகரித்தார். சில மாதங்களுக்குப் பிறகு, அவர் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால், ஹிட்லரின் முயற்சி களத்தில் பலனளிக்கவில்லை. உலகக்கோப்பையின் முதல் சுற்றிலேயே சுவிட்சர்லாந்து அணியிடம் தோற்று, ஜெர்மனி வெளியேறியது.

ஹிட்லர்

இறுதிப்போட்டியும், முசோலினியின் மிரட்டலும்!

இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி மற்றும் ஹங்கேரி அணிகள் தகுதி பெற்றன. போட்டி தொடங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, இத்தாலி வீரர்களுக்கு முசோலினியிடமிருந்து ஒரு தந்தி வந்தது.

அதில், "Vincere o Morire" என்று எழுதப்பட்டிருந்தது. இதன் நேரடி அர்த்தம், "வெற்றி பெறுங்கள் அல்லது இறந்து போங்கள்". இது பாசிச ஆதரவாளர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் ஒரு வாசகம்தான் என்றாலும், ஒரு சர்வாதிகாரியிடமிருந்து வந்ததால், அது வீரர்களுக்கு உண்மையான மரண பயத்தையே கொடுத்தது.

இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் களமிறங்கிய இத்தாலி அணி, ஹங்கேரியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது. போட்டி முடிந்த பிறகு, ஹங்கேரி அணியின் கோல்கீப்பர் அன்டல் ஸாபோ கூறிய வார்த்தைகள் வரலாற்றில் பதிவாகின.

"நான் நான்கு கோல்களை விட்டிருக்கலாம், ஆனால் நான் அவர்களின் (இத்தாலி வீரர்கள்) உயிரைக் காப்பாற்றினேன்," என்று அவர் கூறினார். இந்த ஒற்றை வாக்கியம், அந்தப் போட்டியின்போது இத்தாலி வீரர்கள் எந்தளவுக்கு அழுத்தத்தில் இருந்தார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர்
உலகக் கோப்பை கால்பந்து தொடர்

கட்டிலுக்கு அடியில் பதுங்கிய உலகக்கோப்பை!

1938-க்குப் பிறகு, இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942 மற்றும் 1946-ம் ஆண்டுகளில் உலகக்கோப்பைத் தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. போர்க்காலத்தில், நாஜிப் படையினர் கோப்பையைக் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, இத்தாலிய கால்பந்து கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஒட்டோரினோ பராசி, ஜூல்ஸ் ரிமெட் கோப்பையை ரோமில் உள்ள வங்கியிலிருந்து எடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு சென்று, ஒரு ஷூ பெட்டிக்குள் வைத்து கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்தார். ஒரு தனி நபரின் முயற்சியால், உலகக்கோப்பை நாஜிகளிடம் சிக்காமல் தப்பியது குறிப்பிடதக்கது.

வந்தாச்சு 2026 உலகக் கோப்பை: `நேரம் கடத்துவது இனி நடக்காது!' - FIFA வின் 5 புதிய விதிகள்!

கால்பந்து உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 FIFA உலகக் கோப்பை தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தத... மேலும் பார்க்க

Ronaldo: "எனது கால்பந்து வாழ்க்கையின் முடிவு நெருங்கிவிட்டது" - ரொனால்டோ உருக்கம்

சவுதி ப்ரோ லீக்கில் அல் ஆலி அணியை வீழ்த்திய பிறகு அல் நசார் க்ளப் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.கால்பந்து விளையாடுவது குறித்து பேசிய ரொனால்டோ, "எனது கால்பந்து வாழ்க்க... மேலும் பார்க்க