ஹார்முஸ் நீர்சந்தி: ஈரான், ஓமன் கன்ட்ரோலுக்கு செல்லுமா? சுங்க வரி வசூலா? - ட்ரம்...
நெல்லை: விஷம் வைத்து கொல்லப்பட்ட 3 வளர்ப்பு நாய்கள்; நாய் உடலுடன் எஸ்.பி அலுவலகம் வந்த நபர்
நெல்லை மாவட்டம், உகந்தான்பட்டியைச் சேர்ந்தவர் துரை. இவர் தனது வீட்டுக்காவலுக்காக 3 சிப்பிப்பாறை நாய்கள் உட்பட 5 நாய்களை வளர்த்து வந்தார். இதில் சிப்பிப்பாறை நாய்கள் ஒவ்வொன்றும் சுமார் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் மதிப்புடைது எனக் கூறப்படுகிறது.
கடந்த 21-ம் தேதி துரையின் நாய், பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுடலைக்குமார் என்பவர் வளர்க்கும் நாயை கடித்துவிட்டது. இதுதொடர்பாக துரை மற்றும் சுடலைக்குமார் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி, காலையில் துரை தனது 3 சிப்பிப்பாறை நாய்களை தனது வீட்டின் பின்புறம் கட்டிவைத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். மதியம் அவரது மனைவி அந்த நாய்களுக்கு உணவு வைத்துள்ளார். இரவில் வேலை முடிந்து வீடு திரும்பிய துரை, நாய்களுக்கு உணவு வைக்கச் சென்றபோது 3 சிப்பிப்பாறை நாய்களும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளன. இதனையடுத்து துரை, மயங்கிய நாய்களை அருகில் உள்ள பெட் கிளினிக்கிற்க்கு தூக்கிச் சென்றுள்ளார்.
நாய்களை பரிசோதித்த மருத்துவர் நாய்களுக்கு விஷம் கலந்த உணவு கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் அடுத்தடுத்து 3 நாய்களும் உயிரிழந்தன. இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் துரை, சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு ஆட்டோவில் இறந்த நாய்களை கொண்டு வந்து புகார் மனு அளித்தார்.

அந்த மனுவை பரிசீலித்த மாவட்ட எஸ்.பி., பிரசன்னகுமார், நாய்களை கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முன்னதாக உயிரிழந்த மூன்று நாய்களில் ஒரு நாய்க்கு கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். பிரேதப் பரிசோதனையில் நாய்க்கு விஷம் கலந்த உணவு வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அந்த அறிக்கையையும் துரை, எஸ்.பி., அலுவலகத்தில் ஆதாரமாகச் சமர்ப்பித்தார். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.



















