இந்தியாவிற்கு பெரிய பிரச்னை? நிர்மலா சீதாராமன் சொல்லும் மூன்று F-களை கவனிங்க - D...
வந்தாச்சு 2026 உலகக் கோப்பை: `நேரம் கடத்துவது இனி நடக்காது!' - FIFA வின் 5 புதிய விதிகள்!
கால்பந்து உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 FIFA உலகக் கோப்பை தொடர், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர், பல புதிய மாற்றங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது.
குறிப்பாக, ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து, ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும் 'நேரம் கடத்தும்' யுக்திகளுக்கு முடிவு கட்ட FIFA மற்றும் சர்வதேச கால்பந்து சங்க வாரியம் (IFAB) இணைந்து 5 புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
போட்டியின் கடைசி நிமிடங்களில் மாற்று வீரர்கள் மெதுவாக வெளியேறுவது, காயங்களுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தைக் குறைப்பதாகப் பல ஆண்டுகளாக விமர்சனங்கள் இருந்துவந்தன. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகள் என்னென்ன? அவை ஆட்டத்தை எப்படி மாற்றப்போகின்றன? விரிவாகப் பார்ப்போம்.

1. கோல்கீப்பர்களுக்கான 8 விநாடி விதி
பல கால்பந்து தொடர்களில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்ட இந்த விதி, இப்போது உலகக் கோப்பையிலும் அமலுக்கு வருகிறது. இதன்படி, ஒரு கோல்கீப்பர் பந்தை கையில் பிடித்த பிறகு, 8 விநாடிகளுக்குள் அதை மீண்டும் ஆட்டத்திற்குள் விட வேண்டும். முதல் மூன்று விநாடிகளை நடுவர் மௌனமாக எண்ணுவார். அடுத்த ஐந்து விநாடிகளுக்கு, நடுவர் தனது கையால் கவுண்ட்டவுனை வெளிப்படையாகக் காட்டுவார். குறிப்பிட்ட நேரத்திற்குள் கோல்கீப்பர் பந்தை வெளியேற்றத் தவறினால், எதிரணிக்கு கார்னர் கிக் வழங்கப்படும். இது தேவையற்ற கால தாமதங்களைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. மேம்படுத்தப்பட்ட VAR விதிகள்
விர்ச்சுவல் அசிஸ்டன்ட் ரெஃப்ரி (VAR) தொழில்நுட்பத்தில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பு, VAR மூலம் நேரடி சிவப்பு அட்டைக்கு வழிவகுக்கும் தவறுகளை மட்டுமே ஆய்வு செய்ய முடியும். ஆனால், இனி இரண்டாவது மஞ்சள் அட்டை (இரண்டாவது மஞ்சள் அட்டை = சிவப்பு அட்டை) வழங்கப்படும் சூழ்நிலைகளையும் VAR ஆய்வு செய்ய முடியும். இதனால், ஆட்டத்தின் முடிவையே மாற்றக்கூடிய தவறான முடிவுகள் தவிர்க்கப்படும்.
மேலும், நடுவர் தவறுதலாக வேறு வீரருக்கு மஞ்சள் அட்டை காட்டிவிடும் 'ஆள் மாறாட்ட' நிகழ்வுகளிலும் இனி VAR தலையிடலாம். முன்பு இது நேரடி சிவப்பு அட்டைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

3. களத்திற்கு வெளியே மருத்துவ சிகிச்சை
போட்டியின் வேகத்தைக் குறைக்கும் மற்றொரு முக்கிய காரணி, வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள். புதிய விதியின்படி, ஒரு வீரருக்குக் களத்தில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், சிகிச்சை முடிந்த பிறகு அவர் கட்டாயமாக ஒரு நிமிடமாவது களத்திற்கு வெளியே இருக்க வேண்டும். ஆட்டம் மீண்டும் தொடங்கிய பிறகே அவர் உள்ளே வர அனுமதிக்கப்படுவார். முன்பு, சிகிச்சை முடியும் வரை ஆட்டம் நிறுத்தப்பட்டு, பின்னர் அதே வீரருடன் தொடங்கும். இது முன்னணியில் இருக்கும் அணிகள் மூச்சுவிடவும், பயிற்சியாளர்கள் திட்டங்களை மாற்றியமைக்கவும் நேரத்தை அளித்தது. இனி அந்த தந்திரம் பலிக்காது.
4. மாற்று வீரர்களுக்கான 10 விநாடி விதி
இது நேரம் கடத்துவதைத் தடுக்கும் மிக முக்கியமான விதிகளில் ஒன்று. இதன்படி, ஒரு வீரரை மாற்றுவதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டவுடன், களத்தில் இருந்து வெளியேறும் வீரர் 10 விநாடிகளுக்குள் வெளியேற வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், அவருக்குப் பதிலாக உள்ளே வரும் வீரர், ஆட்டம் அடுத்த முறை நிற்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, குறைந்தது ஒரு நிமிடம் கடந்த பிறகே அவர் களத்திற்குள் நுழைய முடியும். இதனால், தாமதம் செய்யும் அணி, தற்காலிகமாக 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இந்த விதி அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் (MLS) தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது உலக அளவில் பின்பற்றப்படுகிறது.

5. த்ரோ-இன் மற்றும் கோல் கிக்கிற்கு 5 விநாடி கவுண்ட்டவுன்
த்ரோ-இன் மற்றும் கோல் கிக் எடுக்கும்போது வேண்டுமென்றே தாமதம் செய்வதைத் தடுக்க, நடுவர்களுக்குப் புதிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வீரர் தாமதம் செய்வதாக நடுவர் கருதினால், 5 விநாடி கவுண்ட்டவுனைத் தொடங்கலாம். அந்த நேரத்திற்குள் ஆட்டத்தைத் தொடங்கவில்லை என்றால், அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். த்ரோ-இன்னில் தாமதம் செய்தால், பந்து எதிரணிக்குச் சென்றுவிடும். கோல் கிக்கில் தாமதம் செய்தால், எதிரணிக்கு கார்னர் கிக் வழங்கப்படும்.
இந்த புதிய விதிகள் கால்பந்தாட்டத்தின் வேகத்தையும், சுவாரஸ்யத்தையும் அதிகரித்து, உண்மையான ஆட்ட நேரத்தை அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி 'நேரம் கடத்தும்' தந்திரங்களுக்கு உலகக் கோப்பையில் இடமிருக்காது.















