நெய் வியாபாரம்; 20 ஆண்டு ரசிகர் மன்ற நிர்வாகி டு அமைச்சர் – யார் இந்த கோவை சம்பத...
நீர் ஒரு தேசிய சொத்து; வெளியேற்றப்படுபவர்கள் 2 லட்சம் பேரா? விவாதம் | அணை ஓசை 19
1925-26-ம் ஆண்டு மேட்டூர் திட்டத்திற்காக, துணை மானிய கோரிக்கையாக பாசன ஒதுக்கீட்டின் கீழ் இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ 3 லட்சம் கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று “லா மெம்பர்” சர்.சி.பி.ஆர் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விவாதம் 7 நவம்பர் 1925 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது. இந்த மானிய கோரிக்கையில் ரூபாய்100/- குறைக்க, உறுப்பினர் ஜே.சல்தானா வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியது:
மாண்புமிகு உறுப்பினர் J. A. சல்தானா:
“ஐயா, இந்த மானியத்தில் பாசன ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 3 லட்சம் ஒதுக்கீட்டை ரூபாய் 100/- குறைக்க இந்த மானியத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான அறிவிப்பை வழங்கியதில் நில உரிமையாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் உரிய நிலம் மற்றும் நிலம் வழங்குவதற்கு, பொருத்தமான இடங்களை வழங்குவதற்கான முன்மொழிவுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் கிராமங்கள் மொத்தமாக மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கிராம மக்கள் தங்கள் வீடுகளின் மீது கொண்டிருக்கும் பாசப்பிணைப்பை நாம் அனைவரும் அறிவோம். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்களை தாங்களே சரி செய்து கொள்வது என்பது மிகுந்த கடினமான சூழ்நிலை! மேலும் அங்கு சர்ச்சுகளும், கோயில்களும் கூட கையகப்படுத்தப்பட உள்ளது.”
சி.பி.ஆர் : “மாண்புமிகு நண்பர் சல்தானா அப்பகுதிகளுக்கு வருகை தந்து பிறகு, இந்த கருத்துக்களை சொன்னால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு கிடைத்த தகவல்களின்படி எந்த தேவாலயங்களும் அழிக்கப்படாது! அவை தவறான தகவல்கள். மொத்தமாக கிராமங்களில் உள்ள சில நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதற்காக போதிய இழப்பீடுகளும் வேறு சில சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த மாதிரியான சூழ்நிலையில் அனைத்தும் அகற்றப்படும் என்று அறிக்கை விடுவதற்கு முன்பு நான் மாண்புமிகு உறுப்பினரை கேட்டுக் கொள்வது ஒருமுறை அங்கு வருகை புரிந்து அந்த இடங்களை கண்களால் காணுங்கள். அது மிகவும் ரம்யமாக இருக்கும்.” ( சிரிப்பு).

J. A. சல்தானா: “மன்னிக்கவும், ஆனால் ஒரு தேவாலயத்தை அகற்றுவதன் மூலம் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தின் கவனத்தை ஈர்க்கும் பாதிரியார் ஒருவரின் கடிதம் எனக்கு கிடைத்தது.”
அவைத் தலைவர்: “அந்த தேவாலயத்தின் பெயரை தெரிவிக்கவும்.”
J. A. சல்தானா: “மேட்டூர் திட்டத்திற்காக கையகப்படுத்தும் பகுதியில் அது உள்ளது. குறைந்தபட்சம் ஒரு தேவாலயத்தை இடித்து அதற்காக வேறு ஒரு இடத்தை தேட வேண்டிய சூழ்நிலை! மக்கள் தங்களுடைய திருக்கோயில்கள், தேவாலயங்கள் இவற்றின் மீது அதிக பற்றுதல் கொண்டிருப்பார்கள். மாற்றி அமைக்கும் போது அவர்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் அவை அமையப் பெறுவது மிகுந்த கடினமான செயலாகும். தேடிக் கண்டுபிடிப்பதும் கடினம். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மூலம் இதை நியாயப்படுத்த முடியாது. ஒரு நீதிபதியாக இது போன்ற பல கையகப்படுத்தும் நிகழ்வுகளை கண்டுள்ளேன்.”

சி.பி.ஆர்: “அருமை மிக்க நண்பர் தனது கருத்துக்களுக்கு ஏற்ப ஏதேனும் குறிப்பிட்ட ஆலோசனையை வழங்கினால் நான் அவருக்கு மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.”
J. A. சல்தானா: “ இந்த விவகாரத்தில் நான் புரிந்து கொண்டது, அரசு வழங்கப்படும் இழப்பீடு கூட போதுமானதாக இருக்காது என்று கூறுவேன். அரசாங்கம் இந்தக் கேள்விக்கு சட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல் அனுதாபத்துடனும், மனிதாபிமானத்துடனும் இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும். ஒட்டுமொத்த கிராமத்துக்கும் வசதியான இடத்தில் மாற்று நிலம் வழங்க வேண்டும். அகற்றப்படும் தேவாலயங்களுக்கும் மாற்று இடம் மலைகள் அல்லது காடுகளில் அல்ல - வசதியான இடத்தில் நிலம் வழங்க வேண்டும்.”
“இந்த மேட்டூர் திட்டத்தினால் ஆயிரக்கணக்கான பேர் பலனடைவதும், ஒரு சிலர் சிரமத்திற்கு உள்ளாவதும் உண்மை. ஆனால் இந்த மக்கள் விஷயத்தில் அரசு கனிவாகவும் மனிதாபிமான மிக்கதாகவும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்த அவையை நான் கேட்டுக் கொள்கிறேன்.”
“இதே போன்ற ஒரு நிகழ்வு பம்பாயில் ஒரு திட்டத்தின் மூலம் முழு கிராமமே அகற்றப்பட வேண்டிய நிலைக்கு உருவானது. ஆனால் அங்கிருந்த மக்கள் சத்தியாகிரகம் செய்து போராடினார்கள். நல்ல வேளையாக மெட்ராஸ் மாகாண மக்கள் அதுபோல இல்லை. மிகவும் பொறுமையாகவும் சகிப்புத்தன்மையோடும் இருக்கிறார்கள். இந்த மக்களை வழிநடத்துவதில் அரசு அதிக அனுதாபத்துடன் இருக்கும் என நம்புகிறேன். நான் கேட்க விரும்புவது எல்லாம் இந்த மக்களின் தேவைகளை பற்றி சற்று பரிசீலனை செய்யுங்கள் என்பதே!”
சி.பி.ஆர் : “தற்செயலாக இந்தத் திட்டத்தின் செயல்பாட்டினால் கோவில் அல்லது தேவாலயம் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டால், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தருவார்கள். கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இந்த திட்டமானது பெரிய அளவில் நடைபெறுகிற திட்டமாதலால் நீர்த்தேக்கம் பெரியதாக இருக்கும். ஒருவேளை ஒன்றிரண்டு கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால் மேற்கொண்டு இவர்களுக்கு வேறு துயர்கள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும்.
“நான் ஒரு யோசனை கூற விரும்புகிறேன். நமது உறுப்பினர் சர்ச் அல்லது கோவில்களின் பணியாளர்களுக்கு ஓர் அறிவுரை வழங்கலாம். இந்தத் திட்டம் மூலம் புதிய கால்வாய் பணிகளால் பயன்பெறப் போகும் பட்டுக்கோட்டையில் ஏராளமான நிலங்கள் உள்ளன. இந்த நபர்கள் பட்டுக்கோட்டைக்குச் சென்று குடியேறினால் கட்டப்படும் வாய்க்கால் பாசன நிலங்களிலிருந்து எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் கிடைத்து அங்கே தேவாலயங்களையும் கட்டலாம்.

அவர்களுக்கு நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகள் உரிய இழப்பீடு வழங்குவார்கள் என்று உறுதியாக என்னால் கூற முடியும். ஆனால் அவர்களின் முந்தைய வசிப்பிடத்திலிருந்து கால் மைல் அல்லது அரை மைல் தொலைவில் உள்ள ஒரு உள்ளாட்சியை விரும்பினால், அங்கு ஒரு கிராமத்தையே அருகில் நிர்மாணிக்க முடியாது. எனவே, கூடிய வரையில் அருகில் உள்ள சிறந்த ஆக்கிரமிக்கப்படாத நிலங்களை இந்த மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதான் நான் கொடுக்கும் உறுதிமொழி ஆகும்.”
முத்தையா முதலியார்: “இந்த வருடத்தில் இந்தத் திட்டத்தில் இன்னும் வேறு வேலைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறதா?”
சி.பி.ஆர் : “புதிய வேலை எதுவும் இல்லை. முன்பு நாங்கள் நினைத்ததை விட இயந்திரங்கள் மூலம் பல வேலைகள் செய்ய முயற்சிக்கிறோம். அதாவது 8 அல்லது 9 ஆண்டுகளாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட மொத்த வேலையின் கால அளவு 7 ஆண்டுகளில் முடிவடையும் வகையில் முடிந்தவரை நேரடி மனித உடல் உழைப்பை அகற்றி வருகிறோம். இதனால் பெரிய அளவில் வட்டி குறைந்து வருவாய் விரைவில் கிடைப்பது உறுதி ஆகும்.”
முத்தையா முதலியார்: “எனில், இந்த மூன்று லட்ச ரூபாய் இயந்திரங்கள் வாங்க பயன்படுத்தப்படுமா?”
சி.பி.ஆர் : “பகுதியாக …”
இவ்வாறு விவாதிக்கப்பட்ட மானிய கோரிக்கை இறுதியில் நிறைவேற்றப்பட்டது.
மெட்ராஸ் மாகாண பாசன மசோதா 1926-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 27-ம் நாள் சட்டமன்றத்தில் நிறைவேற்ற தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா1924-ம் ஆண்டிலேயே கொண்டு வந்திருந்த போதிலும், மசோதா குறித்து பல்வேறு திருத்தங்களை மாண்புமிகு கவர்னர் பரிந்துரைத்திருந்தார். இது குறித்து மிக நீண்ட விவாதங்கள் அவையில் நடைபெற்றது. பல்வேறு உறுப்பினர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டு விவாதித்தனர். பெரும் எதிர்ப்புகள் இருந்தன. அனைத்தையும் கடந்து, இறுதியில் நீர்ப்பாசன மசோதாவும் நிறைவேறியது. ஆதரவாக 56 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் பதிவாகின.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், “காவிரி-மேட்டூர் திட்டம்” விரைவு படுத்தப்பட்டது. “இந்திய அரசின் செயலாளர்” (SECRETARY OF STATE) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வசதி உருவானது.
1927, ஜனவரி 24ம் தேதி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்ட விளைநிலங்களுக்கு பாசன வசதி வழங்கப்படவில்லை என்றும் 16 டிசம்பர் 1926 தேதியிட்ட அரசாணை எண் 1974-ல் திருப்தி அளிக்கவில்லை என்றும் உறுப்பினர் சி.வி. வெங்கடரமண அய்யங்கார் ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், “இந்த மேட்டூர் திட்டம் கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. சேலம் மாவட்டம் உட்பட இரண்டு மாவட்டங்களில் 55 சதுர மைல் பரப்பளவில் பயிரிடப்பட்ட மற்றும் பயிரிடப்படாத நிலங்கள் நீரில் மூழ்கும்.
காவிரியின் இரு கரைகளில் பல தலைமுறைகளாக வசித்து வந்த சுமார் 2 லட்சம் மக்கள் வீடுகள், நிலங்களை இழந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த மக்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த மக்களுக்கு ஒரு துளி பாசன நீரும் கிடைக்கவில்லை. வெளியேற்றப்படும் மக்களுக்கு ஆதரவாக இந்த இரண்டு மாவட்ட நிலங்களுக்கு மேட்டூரில் இருந்து நீர் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

மேலும், “கோயம்புத்தூர் மாவட்ட பகுதியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கும் பாசனத்திற்கு நீர் வழங்கப்பட வேண்டும். அதிக விகிதத்தில் கூட நீர் கட்டணம் செலுத்த விவசாயிகள் தயாராக உள்ளனர். முன்னதாக, 1924-ல் மாண்புமிகு “சட்ட உறுப்பினர்” சி.பி.ஆர் கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களுக்கு சாத்தியமுள்ள அளவுக்கு நீர் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இது இப்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது என்ன நியாயம்? தஞ்சாவூர் நிலக்கிழார்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15 என்ற விகிதத்தில் நீர் வழங்கப்படுகிறது. எனினும், அவர்கள் அதை செலுத்தக் கூட தயங்குகிறார்கள்.
எங்களிடமிருந்து 56 சதுர மைல் நிலத்தை எடுத்துக் கொண்டு அனைத்து நீரையும் 200 மைல் தொலைவுக்கு கொண்டு செல்வது நியாயமாகுமா? இது அநீதி! புறக்கணிப்பு மற்றும் வாக்குறுதி மீறல் என்பதை தவிர வேறு இல்லை” என்று காட்டமாக தீர்மானத்தை முன்மொழிந்தார்.
“வெங்கடரமண அய்யங்கார் (சி.வி.வி) கூறியதை விட எங்கள் சேலம் மாவட்டத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மழைப் பொழிவும் மிகவும் குறைவு. இங்குள்ள மக்கள் பஞ்சத்தால் மலாயா (மலேசியா), சிலோன் போன்ற வெளிநாடுகளுக்கு வேலை தேடி பிழைப்பு நடத்தச் செல்கின்றனர். பலர் இரவோடு இரவாக ரகசியமாக லாரிகள் மூலம் இங்கிருந்து கடத்தப்படுகிறார்கள். பிறகு வெளிநாட்டுக்குச் செல்கின்றனர். எங்கள் நிலங்கள் பாழடைந்துள்ளன. பாசனம் இல்லாததால் விவசாயம் சிதைந்து போய் உள்ளது. இங்குள்ள மக்கள் நீர் கிடைத்தால் ஏக்கருக்கு ரூபாய் 30 வரை கூட கட்டணம் செலுத்த தயாராக உள்ளனர்” என்று உறுப்பினர் T. ஆதிநாராயணன் செட்டியார் வலியுறுத்தி பேசினார்.
மீண்டும் பேசிய சி.வி.வி, “திட்டம் குறித்து போதுமான கவனம் மேற்கொள்ளப்படவில்லை. இந்த அணை ஒரு வருடம் முன்பு கட்டப்பட ஆரம்பித்திருந்தால் 1924 இல் வந்த பெருவெள்ளம் அணையை முழுவதுமாக அடித்துச் சென்றிருக்கும். திருச்சிராப்பள்ளி உட்பட நதியின் இரண்டு பக்கங்களில் வசிக்கும் மக்கள் மூழ்கி இருப்பார்கள். நாங்கள் 40 ஆண்டுகளுக்கு மேல் காத்துக் கிடக்கிறோம். இப்போதும் கூட அரசு எங்களை புறக்கணித்தால் மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்து விடும்” என்றார்.
கோட்டி ரெட்டி அவர்கள் பேசும்போது, “நீர் என்பது தேசிய சொத்து. அது எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும். செலவு அடிப்படையில் நீர் பங்கீடு செய்வதும், நீர் வரிவிகிதத்தை நிர்ணயிப்பது தவறு. தஞ்சாவூர் மாவட்ட நிலக்கிழார்களுக்கு சலுகை அளித்து, ஏழை மக்களை புறக்கணிப்பது மிகவும் அநீதி” என்று சாடினார்.
“பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் மாற்ற முயற்சிக்கிறார்கள். ஏழைகளுக்கு உதவுவது மிகவும் நல்லது. ஆனால், பணக்காரர்களுக்கு உதவக் கூடாது என்றும் நான் சொல்ல விரும்பவில்லை” என்றார் கோட்டி ரெட்டி.
உறுப்பினர் எல்லப்பா செட்டியார், “அணையின் பாதிப்பு அதிகம் ஏற்பட போகும் பகுதி சேலம், கோயம்புத்தூர் எல்லைகள் தான்! அங்குள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும்! அங்கேயே வாழ்ந்து வரும் மக்கள் வீடுகளை இழக்கிறார்கள். இப்படி வீடுகளை குலைத்து பாசன நீர் தராமல் விட்டு விட்டால், அவர்கள் மனதில் ஆழ்ந்த அதிருப்தி ஏற்படும்” என்று எச்சரிக்கை செய்தார்.
உறுப்பினர் எஸ் அற்புத சாமி உடையார், “சர்.ஆர்தர் காட்டன், பென்னிகுயிக் காலத்தில் இருந்து இது கவனத்தில் உள்ள திட்டமாகும், இந்த “காவிரி-மேட்டூர் திட்டம்”. கோயம்புத்தூருக்கு இரண்டு நதிகள் உள்ளன. பவானி மற்றும் அமராவதி. ஆனால், சேலம் மாவட்டத்திற்கு மாற்று வழி இல்லை. சில ஆயிரம் ஏக்கருக்காவது பாசனத்துக்கு நீர் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், இது திட்டமிடப்பட்ட புறக்கணிப்பு என்று மக்கள் கருதுவார்கள்” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய டி எம் நாராயணசாமிப் பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் புறக்கணிக்கப்பட கூடாது. அங்கும் சில பகுதி விவசாயிகள் பாசன வசதி இன்றி தவிக்கிறார்கள் என்றார். பட்டுக்கோட்டைக்கு தண்ணீர் அளிக்கும் திட்டமானது, அங்கு குறைவான மக்கள் தொகையே இருப்பதால் பயனுள்ளதாக இருக்காது. ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவு, ஒன்றிரண்டு ஜமீன்தார்களால் மட்டுமே பகிரப்படும் நிலங்களாக உள்ளன என்றும் எச்சரித்தார்.
மக்கள் வெளிப்படையாகவே அதிக விகிதம் செலுத்தத் தயாராக உள்ள இந்த இரண்டு மாவட்டங்களை புறக்கணிப்பது அநியாயமாகும். அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றார் உறுப்பினர் பஷீர் அகமத் சயீத்.
பல உறுப்பினர்களின் கோரிக்கைகள் அடங்கிய உரையை கவனித்து பதிலுரையில் சர்.சி.பி.ராமசாமி அய்யர், “மேட்டூர் திட்டத்தின் முதன்மையான நோக்கம் தஞ்சாவூர் மாவட்டத்தின் டெல்டாவில் விநியோக அமைப்புகளை பாதுகாப்பது. 10 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இதில் அடங்கும். கூடுதலாக மூன்று லட்சம் ஏக்கருக்கு பாசனம் ஏற்படுத்துவது, நீர் வளங்களை சீராக மேம்படுத்துவது போன்றவையும் அடங்கும்” என்றார்.
“கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாசன வசதி சாத்தியம். ஆனால், நீர் வரி ஏக்கருக்கு ரூபாய் 28 வரை ஆகும். அதற்கு ஒப்புக் கொண்டால் அரசு பரிசீலிக்கும். மேலும் வெளியேற்றப்படுபவர்கள் 2 லட்சம் பேர் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இது தவறு! அரசின் கணக்குப்படி, மேட்டூர் நீர் தேக்கத்தால் சேலத்தில் 7409 ஏக்கரும், கோயம்புத்தூரில் 12,122 ஏக்கரும் ஆக மொத்தம் 19531 ஏக்கர் நீரில் மூழ்கும். வீடுகளை இழக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 2140 மட்டுமே. இதன் மூலம் சுமார் 10,000 பேர் மட்டுமே வீடு இழப்பர். இரண்டு லட்சம் பேர் என்பது மிகைப்படுத்தப்பட்ட தவறான தகவல்” என்று அரசின் அதிகாரபூர்வ தகவலுடன் மறுதலித்தார்.

1924-ல் கொடுத்த உறுதி மொழியை “அரசு சாத்தியம் உள்ள அளவுக்கு நிறைவேற்றும்” என்று சி.பி.ஆர் உறுதியளித்தார். இந்தத் திட்டம் 1880-ல் இருந்து அரசின் கவனத்தில் உள்ளது. பல கமிட்டிகள், பொறியாளர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் ஆய்வு செய்தனர். சேலம் நிலத்தின் தன்மை, நில மட்டத்தின் உயர்வான நிலை, செலவு இவை அனைத்தும் தடையாக உள்ளன. அதில் ஆய்வு செய்த அனைவரும் இந்த 2 மாவட்டங்களுக்கு பாசனம் சாத்தியமில்லை என்று ஒரே முடிவுக்கு வந்தனர்” என்றும் விளக்கமளித்தார் சி.பி.ஆர்.
சி.வி.வி-யின் எச்சரிக்கை
ஆனால், மீண்டும் வெங்கடரமண அய்யங்கார், “மக்களின் உணர்வுகளையும் அவர்களின் துயரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், மக்கள் பொறுமையை இழந்து எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகள் எழும்” என்று எச்சரித்தார். விவாதம் இந்த அளவில் முடிந்து வாக்கெடுப்பு நடந்தது. சி.வி.வி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறவில்லை.
சி.வி.வெங்கடரமண அய்யங்கார் பற்றிய குறிப்பு:
மேட்டூர் அணை கட்டுமானத்தில் தொடர்புடைய பிரிட்டிஷ் பொறியாளர்கள், இந்திய பொறியாளர்கள் இவர்களை குறித்த வாழ்க்கை விபரங்களை தொகுத்து இந்தத் தொடரில் கொண்டு வருவோம் என முயற்சித்தேன்.
அதனுடன், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற கவுன்சிலில் இதற்காக உழைத்த உறுப்பினர்கள் மற்றும் மந்திரி பொறுப்பில் இருந்தவர்கள் குறித்தும் அவர்களின் குறிப்புகளை தேட முயற்சித்தேன். நாம் நல்லதை எண்ணி முயற்சித்தால் இறைவன் நமக்கு முன்பாக அதை செயல்படுத்த கதவுகளை திறந்து வழி காட்டுவார் என்பதும் மெய்யாயிற்று! எனது நண்பரும், கோவை கொடீசியா அமைப்பின் தலைவரும், தொழிலதிபரும், அறிஞரும், தீவிர வாசகருமான திரு. D. பாலசுந்தரம் அவர்களிடம் இதுகுறித்து உரையாடிய போது, நிமிட நேரத்தில் சில குறிப்புகளை கூறினார்.

சட்டமன்ற உறுப்பினர் C.V. வெங்கடரமண அய்யங்கார் கோவையைச் சேர்ந்தவர். அவரது பேரன் ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசிக்கிறார் என்று கூறி பெரும் உதவி செய்தார். தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தொழிலதிபராக உள்ள C.V.V அவர்களின் பேரன் அவர்களை சந்தித்து அவர் மூலம் பல தகவல்களை பெற்றேன். அந்த தகவல்களின் தொகுப்பு இங்கே..
திவான் பகதூர் சி.வி வெங்கட்ரமண ஐயங்கார் B.A, B.L., F.R.S.A
பல வருடங்களாக கோயம்புத்தூர் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் மெம்பராக இருந்துள்ளார். வழக்கறிஞர். 1920 முதல் பல வருடங்கள் மெட்ராஸ் மாகாண கவுன்சில் உறுப்பினராக (M.L.C) பணியாற்றினார். மேலும் கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியின் சேர்மன் பதவியில் இருந்து தொண்டாற்றி உள்ளார்.
சிறந்த தொழில் முனைவோராக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்ட அவர், பல புது நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து ஊக்கமளித்தார். மேலும் பேங்க் ஆப் இந்தியா, C.S&W மில்ஸ், T.STANES கம்பெனி, கோயம்புத்தூர் காட்டன் மில்ஸ், சிம்சன் அண்ட் கம்பெனி லிமிடெட், நெடுங்காடி வங்கி போன்ற பெரிய நிறுவனங்களில் இயக்குனராக பதவி வகித்தார். இந்தியன் வங்கியின் நிறுவன இயக்குனராகவும் இருந்தார்.
மெட்ராஸ் மாகாண கவுன்சில் உறுப்பினராக சி.வி.வெங்கட்ரமண ஐயங்கார் பதவியில் இருந்த போது பில்லூர் நீர்த்திட்டம் குறித்த பல முன்னெடுப்புகளை மேற்கொண்டார். அவர் வாழ்ந்த அந்தக் காலத்தில் அவர் மிகப்பெரிய மனிதராக வலம் வந்தார் என்பது தெரிகிறது.
மேற்கண்ட கிளப்பின் பொன் விழா கொண்டாட்டத்தின் போது (1941) எழுதிய நினைவுக் கட்டுரை ஒன்றில் நமது முன்னோர்களின் திறமைகள் மற்றும் குண நலன்களை ஏற்று ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்து நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். காஸ்மோபாலிட்டன் கிளப்பின் ஆரம்பகால உறுப்பினராக “எனது நினைவலைகள்” என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் மிகவும் வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
யாருடைய மனதையும் புண்படுத்தாமல் பொதுவாக சில நினைவுகளை பகிர்ந்து கொள்வது என்பது மிகக் கடினம். எனவே, நான் அந்த சமயத்தில் இந்த கிளப்பின் உறுப்பினராக முதல் 6 வருடங்களில் எனது வாழ்க்கையை எப்படி கழித்தேன் என்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பதிவு செய்து கோயம்புத்தூர் திரும்பியவுடன் 1897-ல் இந்த காஸ்மோபாலிட்டன் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்தேன். மெட்ராஸில் திருவல்லிக்கேணியில் உள்ள இலக்கிய சங்கத்தின் தீவிர உறுப்பினராக சென்னையில் உள்ள கிளப் வாழ்க்கைக்கு நான் பழக்கப்பட்டு இருந்ததால் ஒவ்வொரு நாளையும் கிளப்பில் சிறிது நேரம் செலவிடுவது அவசியம் என்று நான் உணர்ந்தேன். தினமும் கோயம்புத்தூர் கிளப்பில் எனது உறுப்பினர் பதவியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன்
கிளப்பின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் இனிமையாக இருந்தது. இப்போதும் அந்த மகிழ்ச்சியான நாட்களை நினைக்கும் போது அந்த நினைவுகளை அனுபவிக்கிறேன்” என்று C.V.வெங்கட்ரமண ஐயங்கார் தனது வாழ்வின் ஒரு பகுதியை சுவைபட எழுதியதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இவர் பெற்றோர் காவிரி கரையோரம் உள்ள சோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அங்கிருந்து குடும்பமாக வெளியேறி கோயம்புத்தூர் சென்று படித்து முன்னேறி வழக்கறிஞராக ஆகி, சென்னைக்குச் சென்று சட்டமன்ற உறுப்பினராகவும் (M.L.C) உயர்ந்து, சட்டமன்றத்தில் அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்றே கூற வேண்டும்.
இவருக்கும் சர்.சி.பி. ராமசாமி ஐயர் அவர்களுக்கும் சட்ட மன்றத்தில் ஏழாம் பொருத்தம் என்றால் மிகையல்ல! இவர்கள் இருவரும் பலமுறை சட்டமன்ற விவாதத்தில் மிகவும் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக விளங்கினர். கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாவட்ட விளைநிலங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்தார் சி.வி.வி. சட்ட சபை நிகழ்வுகளில் அனல் பறக்கும் விவாதம் என்பதற்கு சொந்தக்காரர் C.V. வெங்கட்ரமண ஐயங்கார்.
அவருக்கு சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் ரசிகர் கூட்டமே இருந்தது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பல முக்கிய பிரமுகர்களிடம் மிகுந்த நெருக்கமான நட்பு பாராட்டி பழகி வந்ததும் தெரியவருகிறது. நகைச்சுவை உணர்வு மிக்கவராக இருந்தாலும், பொதுமக்களின் துயர் தீர்க்க மிகவும் தீவிரமாக உழைத்தவர்.
இவரின் வாத திறமைகளை இத்தொடரின் மற்ற பகுதிகளில் வாசிக்கும் போது நம்மால் கண்டுணர இயலும்.
காவிரி-மேட்டூர் அணை திட்ட செயலாக்கத்தில் அரசு சார்பில் மிக முக்கிய பங்கு வகித்தவர் சர். C.P. ராமசாமி அய்யர். இவர் குறித்தும் முதலில் எனக்குக் கூறி சென்னை முகவரி அளித்து ஊக்கப்படுத்தியவர் மேற்கூறிய திரு. D. பாலசுந்தரம் அவர்கள். மிகுந்த நன்றிக்கு உரியவர்.
C.P.R குறித்து அவசியம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு




















