“கோர்ட்ல கூட குழந்தையை திரும்பிப் பார்க்காத அம்மா… மகளுக்காக வாழும் அப்பா”
`தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை' - சரத்பவார் மகள் சுப்ரியா சுலே
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தனியாக பிரிந்து சென்ற மறைந்த மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் சின்னம் மற்றும் பெயர் அஜித்பவார் வசம் சென்றது.
ஆனால் அஜித்பவார் உயிரோடு இருந்தபோது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணியை தனது தலைமையிலான அணியோடு சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். திடீரென இந்த ஆண்டு தொடக்கத்தில் அஜித்பவார் விமான விபத்தில் காலமானார். அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்வர் மற்றும் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையை சரத்பவார் அணி மீண்டும் கையில் எடுத்தது. ஆனால் இதற்கு அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் இணைப்பு பேச்சுவார்த்தை அப்படியே நின்றது. சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் பட்டேல், சுனில் தட்கரே ஆகியோர் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரை சந்தித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளும் இணைவது குறித்து பேசினர்.
இது குறித்து ஆலோசிக்க சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான தலைவர்கள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சரத்பவார் கட்சியின் மாநில தலைவர் சசிகாந்த் ஷிண்டே இது குறித்து அளித்த பேட்டியில்,'' இரு அணிகளும் இணைவது குறித்து மேற்கொண்டு எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது. இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்று கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துவிட்டோம். இனி கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ''என்று தெரிவித்தார்.
சரத்பவார் மகளும், கட்சியின் செயல் தலைவருமான சுப்ரியா சுலே இது குறித்து அளித்த பேட்டியில்,'' இரு அணிகளும் இணைவது தொடர்பான திட்டம் இப்போது இல்லை. எனது சகோதரர்(அஜித் பவார்) இறந்த பிறகு இணைப்பு தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நின்றுவிட்டது''என்று தெரிவித்தார். இரு அணிகளும் இணையும் பட்சத்தில் எதிர்கால தேர்தலில் தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போகும் என்று கட்சி நிர்வாகிகள் நினைக்கின்றனர். எனவே கட்சி நிர்வாகிகளும் இணைப்பு எதிராகவே குரல் கொடுத்துள்ளனர். அதேசமயம் கூட்டத்தில் சரத் பவார் பேரன் ரோஹித் பவார் கலந்து கொள்ளவில்லை. கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக செயதி வெளியாகி இருக்கிறது. ஆனால் இதனை ரோஹித் பவார் மறுத்துள்ளார்.
















