செய்திகள் :

புலம் பெயர்ந்த மக்கள்: 'விராலிக் கரடு' `மாதையன் கரடு' `உக்கம்பருத்திக் காடு' | அணை ஓசை 16

post image

மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில் மளிகை கடை நடத்தி வரும் திரு. ராஜேந்திரன் தனது டூவீலரில் என்னை அமர்த்திக் கொண்டு சிலரிடம் அழைத்துச் சென்றதில் 'விராலிக் கரடு' பெரியண்ணன் என்பவரும் ஒருவர்.

"உங்க கார்ல அங்கெல்லாம் போக முடியாது சார்" என்று அவர் கூற, கொளத்தூரில் அவர் கடையருகில் காரை நிறுத்திவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி அவருடன் புறப்பட்டு உயரமான மேட்டாங்காடாக இருந்த விராலிக்கரடு என்ற இடத்துக்கு சென்றடைந்தோம். அங்கிருந்து தூரத்தில் அப்போது சுமார் 100 அடி நிரம்பிய அணையின் வெள்ளம் அமைதியாக கடல் போல் காட்சி அளித்தது.

பொத்தல் நிரம்பிய அந்த குடிசையின் முன்னே நின்ற போது பெரியண்ணன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். நன்கு உரம் ஏறிய உடல். வயது 93ஐ கடந்திருக்கிறது. மீன்பிடிப்பது, முன்பு விவசாயம் பார்த்தது என்ற கடும் உழைப்பில் நல்ல உடல்திறத்துடன் இன்னமும் பீறு நடை போடுகிறார்.

"உங்களை உட்கார வெக்க நாற்காலி கூட என் குடிசையில் இல்லையே சார்" என அவ்வளவு வருத்தம். அவர் குடிசையிலிருந்து மீன் குழம்பு கொதிக்கும் மணம். எங்களுடன் பேசிக் கொண்டே அவ்வப்போது உள்ளே சென்று சமையலையும் கவனித்தவாறு வெளியே வந்து ஆர்வமாக பேசினார்.

தனியாகத்தான் வசிக்கிறார். மனைவி இறந்து 15 வருடங்களுக்கு மேலே ஆகிவிட்டது. இரண்டு மகன்கள். ஒரு மகன் தற்போது இல்லை. அவர்களது குடும்பம் வேறு ஊரில் இருக்கிறார்கள். இவருக்கு இப்போது ஒரே தொழில் மீன் பிடிப்பது. சிலர் அவரிடத்துக்கே வந்து வாங்கிச் சென்று விடுவார்களாம். சில சமயம் கருவாடு ஆக்கி வாரக் கடைசியில் டவுன் பஸ்ஸில் ஏறி சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொளத்தூர் சந்தைக்குச் சென்று விற்றுவிட்டு கிடைக்கும் சொற்ப பணத்தில் மளிகை பொருட்களை வாங்கி பஸ் ஏறி தன் இருப்பிடத்திற்கு வந்து சேருவார். பல சமயம் நடந்தே வந்து விடுவதும் உண்டு என்கிறார்.

விராலிக்கரடு பெரியண்ணன்

சிறிது நேரத்தில் மீன் குழம்பு வாசனை மூக்கைத் துளைத்தது. ஆஹா, பிரமாதம்! உள்ளே சென்று அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அடுப்பை அணைத்து விட்டு வந்தார். "மீன் சாப்பிடுங்க சாமி" என்று அன்பான உபசரிப்பு வேறு. வேண்டாம் என்று புன்னகையுடன் மறுத்து அவரைப் பேச வைத்தோம். இன்னமும் மகா சுறுசுறுப்பு.

"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, நான் சிறுவனாக இருந்த போது ஆத்தோர வீட்டிலிருந்து மேலே ஏறி வந்து இங்கே வசிக்க ஆரம்பித்தோம். அப்போதிலிருந்து இங்கே தான் வாழ்க்கை. பழைய இடத்தில் எங்கள் வீட்டுக்கு அருகே சேர்மன் செங்கோட கவுண்டர் குடும்பம், கொளத்தூர் மணி அவர்களின் தாத்தா குடும்பம் இவர்களின் தோட்டமும் எல்லாம் இருந்தது.

அணையில் தண்ணீர் ஏற ஏற எங்கள் நிலங்கள் எல்லாம் நீரில் மூழ்க ஆரம்பித்தது. எல்லாரும் மேட்டாங்காடு பக்கம் நகர ஆரம்பித்தோம். எங்கள் குடும்பம் இந்த "விராலிக் கரடு" (இப்போது தின்னப்பட்டி பஞ்சாயத்து) பக்கம் வந்து குடிசை போட்டு தங்கினோம்" என்றார்.

அதற்கு முன்பு சுமார் ஆறு ஏக்கர் நிலத்தை கொளத்தூர் மணி அவர்களின் தாத்தாவிடம் இருந்து குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்திருக்கிறார். "வருடம் 120 ரூபாய்க்கு குத்தகைக்கு எடுத்து ஓட்டியிருக்கேன். எத்தனை வருடம் ஆனாலும் நானே அவரிடம் சென்று எனக்கு வேண்டாம் என்று சொன்னால்தான் வேறு யாருக்காவது குத்தகைக்கு விடுவார்கள். இல்லையென்றால் நானே எவ்வளவு வருடமானாலும் ஓட்டிக் கொள்ளலாம். அவ்வளவு தங்கமான மனசுக்காரங்க" என்று புகழ்கிறார்.

நன்கு உரமேறிய உடல். மிகுந்த தன்னம்பிக்கை. கவலை படாத மனம். தான் சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் தன் பேரனுக்கு வட்டிக்கு கொடுத்து அதில் வரும் பணத்தையும், தன் சொந்த உழைப்பான மீன் பிடி வருமானத்திலும் காலத்தை ஓட்டி வருகிறார். இன்னமும் சொந்தக் காலில் நிற்கும் நெஞ்சுரம் மிக்கவர்.

கொளத்தூர் T.S.மணியுடன்

இவர் வசிக்கும் பகுதியில் நல்ல குடிநீர் இல்லை. ஆழ்துளை கிணற்று நீர் தான். இங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று உக்கம்பருத்திக் காடு என்ற இடத்திலிருந்து குடிநீர் பிடித்து கொண்டு வந்து பயன்படுத்துகிறார்கள். இவர் குடிசைக்கு அருகில் இன்னும் பல வீடுகளும் உள்ளன. மிக அருகில் அணை இருந்தாலும் குடிக்க நல்ல தண்ணீர் இல்லை என்பது நம் மனதை மிகவும் உறுத்துகிறது.

"அதோ, அங்க தெரியுது பாருங்க என்று தூரத்தில் அணை நீர் சூழ்ந்த ஒரு மணற்திட்டை காண்பிக்கிறார். அதுதான் "மாதையன் கரடு". அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய குன்று. இப்போது சிறிதளவு மேலே மட்டும் தெரிகிறது. அதற்கு அருகில் தான் எங்களோட வீடு மற்றும் காடு. இப்போ தண்ணிக்குள்ள கிடக்குது. காடு ஓட்டறது, மீன் பிடிக்கிறது, இதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. இப்பவும் என்னால் சும்மா படுத்துக் கொண்டிருக்க முடியல! ஏதாவது வேல செய்யணும் போலவே இருக்குது" என்று கூறும் இவர் தனக்கு வரும் சொற்ப வருமானத்தில் தனக்கு வேண்டியதை தானே ஆக்கி, உண்டு காலத்தைக் கழிக்கிறார்.

கொளத்தூர் மணியின் நூலகத்தின் ஒரு பகுதி

இப்போது இவருக்கு வருமானம் மீன்பிடித்தல் மூலம் மட்டுமே வருகிறது. குடிசைக்குள் கரண்ட் இல்லை.

“சில நாட்களுக்கு முன்பு, ராத்திரி நான் தூங்கிட்டேன். மெழுகுவர்த்தி எரிஞ்சுகிட்டு இருந்தது. அப்படியே அது செருப்புல தீ பிடிச்சு, ஜமுக்காளத்துல தீ பரவிடிச்சு. நல்லவேளை! நான் எழுந்துட்டேன்” என்று சிரிக்கிறார் இந்த "பொக்கைவாய் மனிதர்".

“இப்ப பேரன் எளம்பிள்ளை ஊர்ல ஜவுளி வியாபாரம் செஞ்சு சம்பாதிக்கிறான். அவன் எனக்கு இங்க பாதுகாப்பா ஒரு ரூம் கட்டி கொடுத்தால் கூட போதும்" என்று கண்கலங்குகிறார்.

"கொரோனா காலத்துல மீன் பிடிக்க வெளிய போயிட்டு தான் இருந்தேன். கடவுளை மீறி நாம எங்க போய் ஒளிய முடியும் சொல்லுங்க சாமி? கடவுள் யாரை எடுத்துப் போனுமோ, அவங்கள எடுத்துட்டு போயிடும். இதுல நமக்கென்ன பங்கு? ம்.... நடுவுல எனக்கு சரியா கண் தெரியாம போயிடுச்சு. செக் செய்யப் போனேன். ஒன்னும் பண்ண முடியாதுன்னு டாக்டர் சொல்லி திருப்பி அனுப்பிட்டார். காளியாத்தா கோயிலுக்குப் போய் சாமி முன்னே ரொம்ப நேரம் அழுதுட்டே நின்னேன். ஆனா, கொஞ்ச நாள்ல மீண்டும் ஒரு முகாம் நடந்த போது என்ன செக் செய்து கண்ண ஆபரேஷன் பண்ணி சரி பண்ணிட்டாங்க. எல்லாம் ஆண்டவன் செயல்”!

“நான் சின்ன பையனா இருந்தப்போ வெள்ளைக்காரன் குதிரை மேல இந்த ஆத்தோரமா மெல்ல போறத அடிக்கடி பார்த்து இருக்கேன்”.

“சின்ன வயசு ஞாபகம் எனக்கு அடிக்கடி வரும். எங்க பழைய தோட்டம் கண்ணு முன்னாடி நிக்குது. ஆத்தோரமா இருந்த தோட்டம். அதெல்லாம் ஒரு காலம். இப்போ நாளை எண்ணிகிட்டு இருக்கேன். எங்க சொந்த பூமிய விட்டு வந்துது ரொம்ப மனக்கஷ்டம் தான். ஆனா சோம்பி உட்கார மாட்டேன். காலைல நாலு மணிக்கு எந்திரிச்சு தூண்டில் போட போயிடுவேன்" என்று இன்னமும் நம்பிக்கையோடு வாழ்கிறார் 93 வயது பெரியண்ணன். ஆம் பெரியண்ணன் தான் இவர்.

தமிழ்நாட்டின் ஒரு முக்கியப் பிரமுகரின் மூதாதையரின் குடும்பம் மேட்டூர் அணை கட்டப்பட்டதால் பாதிப்புக்கு உள்ளானது என்ற தகவல் பலருக்கும் புதிய செய்தியாகவும், ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கலாம்.

ஆம். தமிழ்ச் சமூகம் நன்கறிந்த 'திராவிடர் விடுதலைக் கழகத்தின்' தலைவர் கொளத்தூர் T.S. மணி அவர்களின் குடும்பத்தினர் காவிரிக் கரையோரம் இருந்த "உக்கம்பருத்திக் காடு" என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு அணை நீர் நிரம்பும்போது தங்கள் நிலங்களை விட்டு மேடான பகுதியில் புதியதாக நிலங்களை வாங்கி வேளாண்மை செய்ய ஆரம்பித்தார்கள்.

இவர்கள் பெயரில் உள்ள பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட போது சில இடங்களுக்கு ஈட்டுத்தொகையைக்கூட வாங்காமல் வெளியேறிய வெகுசிலரில் இவர்களது குடும்பமும் ஒன்று.

“உக்கம்பருத்தி” என்றால் அது ஒரு வகை மரம். அந்த மரம் தரும் பருத்தி "பூணூல்" செய்ய பயன்தரும். இந்த மரங்கள் நிறைந்த இடமாக இருந்திருக்கிறது இவர்களின் பூமி! தற்போது மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த கொளத்தூர் மணி அவர்கள் மேட்டூரில் வசிக்கிறார்.

மேடான பகுதியிலிருந்து அணையின் ஒரு தோற்றம்

சமூகநீதி, சாதி ஒழிப்பு மற்றும் மனித உரிமை போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபடும் செயற்பாட்டாளர். தமிழகம் முழுவதும் ஓயாமல் சுற்றுப்பயணம் செல்லும் இவரை சந்திக்க, கடும் முயற்சிக்கு பின்பு சேலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை வீரர், நண்பர் திரு. மே.அ.தனபாலன் அவர்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்தி சந்தித்தேன்.

மேட்டூர் நகரின் மையத்தில் உள்ள நகர்பூங்காவின் அருகில் உள்ளது அவரது வீடு. முதல் ஆச்சரியம் அவரது அலுவலகம். வீட்டின் பேஸ்மென்டில் பல ஆயிரம் புத்தகங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது. மிகப்பெரிய ஹால் முழுவதும் அலமாரிகளில் புத்தகங்கள். அதன் நடுவே அமர்ந்து நம்மை வரவேற்றார்.

30 நிமிட உரையாடலுக்குச் சென்ற நம்மிடம், சுமார் 4 மணி நேரம் உரையாடினார்.

அவர் பல தகவல்களை அள்ளிக் கொட்டி வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று புன்முறுவலோடு வழியனுப்பி வைத்தது இரண்டாவது ஆச்சரியம்.

மிக அன்போடு, பண்போடு உரையாடிய ஒரு சமூகப்போராளியின் புன்னகை ததும்பும் முகமும், உபசரிப்பும் மூன்றாவது ஆச்சரியம்.

"தொன்றுதொட்டு காவிரியின் கரையோரம் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது. நிறைய நிலம் எங்கள் தாத்தாவிடம் இருந்தது. பலருக்கும் குத்தகைக்கு விட்டிருந்தார். அணை கட்டி தண்ணீர் மட்டம் உயர்ந்த போது தாத்தா வேறு இடம் சென்று விட முடிவெடுத்தார்.

எங்களது பக்கத்து காடு வைத்திருந்த கோபால் (Ex MLA) அவர்களின் தகப்பனார் இந்தப் பகுதி வேண்டாம் என்று பூலாம்பட்டி பகுதிக்கு குடிபெயர்ந்தார்.

மேடான இடத்துக்கு தாத்தா வந்து நிலங்களை வாங்கி கிணறு வெட்டி விவசாயத்தை தொடர வழிவகுத்தார்.

அந்த சமயத்தில், ஞாயம்பாடி என்ற இடத்திலிருந்து மக்கள் சவேரியார் பாளையம், பூமனூர், பூலாம்பட்டி, மார்ட்டள்ளி, கெளதள்ளி போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் வன்னியர்- கிறிஸ்தவர்கள்.

பெருமாக்கவுண்டனூர் என்ற பெயர் கொண்ட கிராமம் முன்பு ஆற்றோரம் இருந்தது. அங்கிருந்து வந்த மக்கள் கொளத்தூருக்கு 4 கி.மீ தூரத்தில் இப்போது 'தார்க்காடு' என்ற பெயரில் வழங்கும் ஊரில் வசிக்கின்றனர். தற்போது அங்குள்ளவர்கள் பெரும்பாலும் நன்கு படித்தவர்கள். புலம் பெயர்ந்தவர்களின் வம்சத்தினர் பலர் அங்குள்ளனர்.

அப்போதைய அரசு, நிலம் கையகப்படுத்திய நபர்களுக்கு ஈடாக ஒரு நபருக்கு 5 ஏக்கர் என்ற அளவில் ஒரே மாதிரியாக மாற்று நிலம் கொடுத்தது. இவை சின்னதண்டா, பெரியதண்டா, பெருமாள் கோவில் நத்தம், லக்கம்பட்டி போன்ற காடுகளாக இருந்த இடங்களை சீர்படுத்தி பிரித்து கொடுத்தது" என்று விவரித்தார் கொளத்தூர் மணி. இவர்களது பூர்விக இடங்கள் அணையின் நீர்மட்டம் 40 அடிக்கு கீழ் குறையும்போது தெரிய ஆரம்பிக்குமாம்.

“ஆற்றின் கிழக்கு கரையில் நாகமரை, பெண்ணாகரம், நெருப்பூர் போன்ற ஊர்கள் இருந்தன. இப்போதும் அதே பெயரில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இடங்களில் அணை நீர்ப்பரப்புக்கு அருகில் ஊர்கள் உள்ளன. அங்கு கொங்கு வேளாளர், வன்னியர், ரெட்டியார் சமூகத்தினர் ஒற்றுமையாக வசிக்கின்றனர்.”

“வேறு பிரிவுகளாக இருந்தாலும் மிகவும் உறவு முறை பாராட்டுபவர்களாக, ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்" என்று பெருமையோடு கூறுகிறார் திரு.மணி. ``ஒருவருக்கொருவர் அண்ணா, அண்ணி, மாமன் என்று இரு சமூகத்தினரும் உறவு முறை பாராட்டிக்கொள்வது இயல்பு. இந்த ஊர்களில் யாரேனும் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவர் இறந்தாலும் "நெருப்பூர் கோடி துணி" போட்ட பிறகு தான் அப்போது உடலை எடுப்பார்களாம். அப்படி சொந்தம் கூறி நட்பு பாராட்டி வாழ்ந்து வந்துள்ளனர். "ஏமனூர்" என்ற ஒரு ஊர் இப்போதும் சரியாக போக்குவரத்து இல்லாத காட்டுக்குள் செல்ல வேண்டிய ஊராக உள்ளது. இப்போது காட்டிலாகாவிடம் அனுமதி வாங்கித் தான் செல்ல வேண்டும். ஏமனூர், செங்கப்பாடி, கோபி நத்தம் போன்ற ஊர்களுக்கும் மக்கள் அப்போது புலம்பெயர்ந்து இன்னமும் அங்கே வாழ்கின்றனர்” என்றார் திரு. மணி.

“சாம்பள்ளி கிராமம் ஆற்றின் இடது புறம் இருந்தது. அங்கு ஒரு "மீனாட்சி கோயில்" இருந்திருக்கிறது. “ஞாயம்பாடி” பெரிய ஊராக இருந்துள்ளது. காவேரிபுரமும் அப்படியே. சிலர் மானாவாரி நிலத்தில் உழுது பண்படுத்தி அங்கேயே இருந்துள்ளனர். பலர் வெளியேறி போய்விட்டார்கள். ஆனால், நிலம் கையகப்படுத்தும் போது அரசு உத்தரவை எதிர்த்து எந்த போராட்டமும் நடைபெறவில்லை. உத்தரவை மதித்து நடந்தார்கள் என்றுதான் கூறவேண்டும்” என்கிறார்.

நிலம் இல்லாத குத்தகைக்கு ஓட்டிய பல விவசாயிகள் பல வருடங்கள் விவசாயம் எதுவும் செய்யவில்லை என்று நினைவு கூறுகிறார்.

முழு கொள்ளளவு எட்டும் போது படத்தில் உள்ள குன்றின் மரங்கள் வரை மூழ்கும்

“அணையின் நீர்மட்டம் 110 அடி வரும் போது இந்த கிராமத்தில் ஒரு கிணறு மூழ்கும். அந்த இடத்தில் தான் உறவினர்களை எரிக்கும் இடம் இருந்தது. எங்கள் தாத்தா எங்கள் உறவினர்களுக்கு சமாதி எழுப்பக் கூடாது என்று கூறியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் மற்றும் ரெட்டியார்கள் அப்போது பெட்டியில் வைத்து புதைப்பார்கள். இன்றும் அந்த பழக்கம் சிலரிடம் உண்டு. அணை கட்டிக் கொண்டிருந்த காலத்தில் நிறைய விவசாயிகள் ஒன்று சேர்ந்து பழைய நிலத்திற்குச் சென்று காடு ஓட்டுவோம் என்று உழுதபோது அரசிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. அப்போது நீர் வரத்து மிகவும் குறைந்து இருந்ததால் அவர்களின் பழைய காடுகளில் தண்ணீர் மட்டம் உயரவில்லை. பிரிட்டிஷ் அரசும் சில காலம் கண்டும் காணாமல் இருந்தது.

1931இல் "ஃபிர்கா விஜிலென்ஸ் கமிட்டி" என்று ஒரு சான்றிதழை சில முக்கியமானவர்களுக்கு மட்டும் கொடுத்து கௌரவப் படுத்தியிருந்தார்கள். எங்களது தாத்தாவுக்கு அந்த கிராமத்தின் தலைவராக போலீஸ் ஐ.ஜி கொடுத்த சர்டிபிகேட் என்னிடம் பத்திரமாக பல காலம் இருந்தது. காவல் நிலையத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் இந்தக் கமிட்டி தலைவர் சொல்லுக்கு காவல் நிலையம் கட்டுப்படும் என்ற அளவுக்கு அதற்கு மரியாதை உண்டு”!

“நிலம் இல்லாத சாதாரண விவசாயிகளுக்கு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. "ஏழு தடி அளவு" என்ற ஒரு அளவு - தோராயமாக 42 அடி அகலத்தில் நீள வாக்கில், தண்ணீர் நிற்கும் வரை காடு ஓட்டிக்கொள்ள வழிவகை செய்துள்ளனர். அங்கெல்லாம் கோராலி (குதிரைவாலி) எனப்படும் சிறுதானியப் பயிர் வகைகளை மேலே தூவி விட்டால் போதும். அது மள மள என்று வளர்ந்து வந்து விடும். அறுவடை செய்யும் போது கருதினை மட்டும் அறுப்பார்கள். தண்டை அப்படியே விட்டு விடுவார்கள். அவை தண்ணீரோடு சேர்ந்து அணையில் போய் தேங்குவதை கண்டு அரசு எச்சரிக்கை செய்து முழுமையாக எடுக்கச் சொன்ன காலமெல்லாம் உண்டு.

நல்ல நீர் வளம் இருந்ததால், சாதாரணமாக ஒவ்வொருவரும் 100 மூட்டை அறுவடை செய்வது சகஜம். நிலமில்லா விவசாயிகளுக்கு திருமணம் ஆனவர்களுக்கு என்று தனியாகவெல்லாம் நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டது. ஆனால், நஷ்ட ஈடு வாங்கியவர்கள் பல காலம் இதுபோல் விவசாயம் செய்ய மனம் ஒப்பாமல் நாம் நஷ்ட ஈடு வாங்கி விட்டதால் இங்கே விவசாயம் செய்யக் கூடாது என்று நேர்மையாக வேறு இடங்களை நோக்கி நகர்ந்து விட்டனர்.

அந்த அளவுக்கு நேர்மையான மக்கள் வாழ்ந்த பூமி இது”! என்று பெருமிதம் கொள்கிறார்.

கொளத்தூரில் கே.பி. நரசிம்ம ரெட்டியார் சேர்மனாக இருந்தவர். மிகப்பெரிய பணக்காரர். பள்ளிக்கூடம், அரசு மருத்துவமனை என்று பொது காரியங்களுக்கு தனது நிலங்களை இலவசமாக எழுதிக் கொடுத்தார். நம்ம ஊருக்கு நல்லது நடக்குது, கொடுப்போம் என்பார், பெருந்தன்மையாக! அவர்களின் வாரிசுகள் இப்போதும் இருக்கிறார்கள்.

கி.பி.1900வது ஆண்டுக்கு முன்பே காவிரி ஆற்றோர பல கிராமங்களில் வன்னிய சமுதாயத்தினர் பலர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களாக இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். காரணம், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சு பாதிரியார் இங்குள்ள நிலமற்ற விவசாயிகளை அழைத்துச் சென்று மாதேஸ்வரன் மலையை அடுத்த மாரட்டள்ளி என்ற கிராமத்தை உருவாக்கி அங்கே காடழித்து விவசாய பூமியாக மாற்றினார் என்பது வரலாறு. கொள்ளேகால் மாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் பரப்பும் ஒரு அமைப்பும் செயல்பட்டு வந்தது.

அணை ஓசை

அந்த பாதிரியாரின் புகைப்படம் அங்கு பல கிராமங்களில் உள்ள வீடுகளில் இன்னமும் இருக்கும். இது மெட்ராஸ் மாகாணத்தை சேர்ந்த இடம் என்பதால் இங்குள்ள பல அரசு அலுவலக பலகைகள் தமிழில் இருக்கும். உதாரணமாக, T. நரசீபுரம் என்ற ஊரின் பெயர்ப் பலகை திருக்கூடல் நரசீபுரம் என்றழைக்கப்பட்ட ஊராகும்.

அந்தக்காலத்தில் கிராமங்களை கடந்து செல்ல "குதிரைப்பாதை" என்றழைக்கப்படும் ஒரு சமண் செய்த பாதை உண்டு. அவற்றின் வழியே செல்பவர்களின் தாகம் தீர்க்க ஒவ்வொரு 5 மைலுக்கும் ஒரு கிணறு வெட்டப்பட்டு இருக்கும். ஆச்சரியமாக அந்தக் கிணறுகளில் எப்போதும் நீர் இருப்பது சிறப்பு.

இப்படி பல விஷயங்களை காவிரி மற்றும் மேட்டூர் அணை சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமன்றி சாதி ஒழிப்பு, மனித உரிமைகள், சமூகப்பணி என பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவான பதில்களை தந்து உரையாடினார்.

இவர் கூறிய பல விஷயங்கள் நாம் பின்னாளில் மாரட்டள்ளி மற்றும் கொள்ளேகால் மாவட்டங்களில் இருந்த புலம் பெயர்ந்தோரிடம் உரையாடிய போது அப்படியே பொருந்துவதாக இருந்தது மிகச்சிறப்பு!

நிலத்தை இழந்தவர்களுக்கு நஷ்டஈடாக அப்போதைய பிரிட்டிஷ் அரசின் வெள்ளி நாணயங்களை அரசு கொடுத்தது.

அந்த வெள்ளி நாணயங்களில் செய்த நகைகளை 100 ஆண்டுகள் கழித்து நேரில் கண்ட போது எனக்கு மட்டுமல்ல, என்னுடன் வந்த பலருக்கும் பெரும் ஆச்சர்யம்.

அந்த நகைகளை அணிந்து நமக்கு நேர்காணல் அளித்த மூதாட்டிகளை காண கொள்ளேகால் மாவட்டம் மார்ட்டள்ளி கிராமம் செல்வோமா?

உடன் வாருங்கள்!

காவிரி நன்னீர் சிறப்பு

`15 டன் கடுக்காய், 20 டன் கருப்பட்டி,180 டன் சுண்ணாம்பு'- புதுப்பொலிவுடன் புதுக்கோட்டை நீதிமன்றம்

புதுக்கோட்டைக்கு எப்போதும் ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. அந்த மண்ணின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் கல்வெட்டுகளைவிடவும், இன்று அதன் மார்பின் மேல் உயர்ந்து நிற்கும் 'பப்ளிக் ஆபீஸ்' கட்டடம் என்று அழைக்கப... மேலும் பார்க்க

'தமிழகத்திலிருந்துதான் தேர்தல் முறை உலகமெங்கும் சென்றது'- தொல்லியல் துறை சி.சுதாகர்

இங்கு மக்களை நெறிப்படுத்துவதற்காகவே தலைவர்கள் உருவாக்கப்பட்டார்கள். அவ்வாறு உருவாக்கப்பட்ட தலைவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆதரவாளர்களைத் திரட்டி, ஆயுதம் ஏந்தவும் துணிந்தார்கள். இவ்வாறே மன்... மேலும் பார்க்க

''தண்ணீரிலே மூழ்கிடிச்சி'' - கிராம மக்களின் இடப்பெயர்வு; சாட்சிகளிடம் நேர்காணல் | அணை ஓசை 15

ஏழு வருடங்களில் அணைச்சுவரைஅரசுக்கு அனுப்பிய அறிக்கைசிறப்பு அதிகாரி அரசுக்கு அனுப்பிய ஓர் அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. “மேட்டூர் கிராமத்திற்கு வடபுறம் பழைய மண்ணாலான கோட்டை ஒன்று ‘காவேரிபுரம்’ மற்றும்... மேலும் பார்க்க

`வருகிற மொத்த பணத்தையும் செலவு பண்ணிட மாட்டாங்க' - அந்தக் கால 'சத்திரங்களின்' நிதிக் கணக்கு!

சத்திரம் - இந்த வார்த்தையை நாம் அதிகமாகக் கேள்விப்பட்டிருப்போம். வகுப்பறையில் ஆசிரியர், "இது ஒன்றும் சத்திரம் கிடையாது?" என்பார், மக்கள் பேச்சு வழக்கில் சத்திரம் என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்துவ... மேலும் பார்க்க

புலம்பெயர்வு: கண்ணீர் வரவழைக்கும் பல கதைகள்; பாதிக்கப்பட்ட கிராமங்கள் | அணை ஓசை 14

தொடருக்காக நேர்காணல்புலம்பெயர்வுகண்ணீர் வரவழைக்கும் பல கதைகள் இருந்தன. மேட்டூர் அணை கட்டப்படுவதால் தங்கள் நிலங்களை இழந்த விவசாயிகள், கிராமங்களில் வாழ்ந்து வந்த பொதுமக்கள், முதியவர்கள், தங்கள் குழந்தை ... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்துதல்: 18,435.84 ஏக்கர்கள் நிலம்; 4,146 வீடுகள் | அணை ஓசை 13

மக்களின் நில இழப்பு, இடப்பெயர்ச்சிமேட்டூர் அணை கட்டுமானம் குறித்த வரலாற்று நிகழ்வுகளில், இத்தொடரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான விவசாய மக்களின் நில இழப்பு, இடப்பெயர்ச்சி மற்றும் அவர்களின் துயரங்கள் கு... மேலும் பார்க்க