"ஒரு வருடமாக எனது இடது தோள்பட்டையில் சில பிரச்னைகள் உள்ளன, ஆனாலும்.! - ஆட்டநாயகன...
IPL : "5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஐபிஎல் வேறு, இப்போது இருக்கும் ஐபிஎல் வேறு"- SRH கேப்டன் கம்மின்ஸ்
ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்29) நடைபெற்ற மும்பை vs ஹைதராபாத் போட்டியில் மும்பை நிர்ணயித்த 244 என்ற இலக்கை 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது ஹைதராபாத் அணி.
இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "ஆரம்பத்தில் இந்த இலக்கை எட்டுவது கடினம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால், எங்களுடைய பேட்டிங் வரிசையையும், ஆடுகளத்தின் தன்மையையும் பார்த்தபோது, இது சாத்தியம்தான் என்ற நம்பிக்கை வந்தது. சில விஷயங்கள் எங்களுக்குச் சாதகமாக அமைந்தது.

இந்த ஸ்கோர் நிச்சயம் துரத்தக்கூடிய ஒன்றுதான். எங்களின் தொடக்க ஆட்டகாரர்களின் பேட்டிங்கை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல பிட்ச் கிடைத்துவிட்டால், மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் சிதறடிக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால், அவர்களுக்கு எதிராக நான் பந்துவீசவில்லை என்பது வரை எனக்கு நிம்மதிதான். அந்த அளவுக்கு அவர்கள் பவுலர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகிறார்கள்.
அணியில் இளம் வீரர்களின் ஆட்டம் அருமையாக இருக்கிறது, இதற்கு முழு கிரெடிட்டும் பயிற்சியாளர்களுக்குத்தான் போய் சேரும். எங்களின் பவுளர்கள் அதிக ரன்களை வாரிக்கொடுப்பது நிச்சயம்.
கவலையாகத்தான் இருக்கிறது. யதார்த்தமாகப் பார்த்தால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஐபிஎல் வேறு, இப்போது இருக்கும் ஐபிஎல் வேறு. அன்று 200 ரன்கள் என்பது பெரிய இலக்கு.

இன்று ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்பட்டாலும், ஒரு பேட்டிங் யூனிட்டாக அதைச் சுலபமாக அடித்துவிட முடியும் என நம்புகிறோம். எனவே, பவுலர்களாக நாங்கள் எங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வளவு ரன்கள் குவியும் போட்டிகளில் பவுலர்களுக்குச் சாதகமாக எதுவுமே இல்லை. ரன்கள் குவிந்தாலும், ஒரு நல்ல பந்துவீச்சாளரால் எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என பேசியிருந்தார்.

















