TN Election: புதுமண தம்பதி, குழந்தையுடன் பெற்றோர் முதல் 92 வயது பாட்டி வரை; வாக்...
''தண்ணீரிலே மூழ்கிடிச்சி'' - கிராம மக்களின் இடப்பெயர்வு; சாட்சிகளிடம் நேர்காணல் | அணை ஓசை 15
சிறப்பு அதிகாரி அரசுக்கு அனுப்பிய ஓர் அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது. “மேட்டூர் கிராமத்திற்கு வடபுறம் பழைய மண்ணாலான கோட்டை ஒன்று ‘காவேரிபுரம்’ மற்றும் ‘சோளபாடி’ கிராமத்துக்கு இடையில் உள்ளது. அணை நிரம்பும் போது இது மூழ்கும். இந்தக் கோட்டை திப்புசுல்தான் பயன்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன.
மேலும், இங்குள்ள கிராமங்களில் பெரும்பாலான வீடுகள் மண்ணாலானவை. அளவில் சிறியன. சில கோவில்களும் இரண்டு சர்ச்சுகளும் நீரில் மூழ்கும். பெரும்பாலான விவசாயிகள் நீர்த்தேக்கத்தின் விளிம்பில் ஊருக்கு அருகிலேயே வேறு நிலம் வாங்கிக் கொள்ள விரும்புகிறார்கள். பவானி வரை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள நிலங்களை பெற்றுக்கொண்டு அங்கு குடியேறுவதற்கு விவசாயிகள் தயாராக இல்லை என்பது தெரிய வருகிறது. ஏனெனில், அணை எந்த அளவு நிலையான உறுதித் தன்மையோடு இருக்கும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் உள்ளது.”
இவ்வாறு மக்கள் அணையின் உறுதித் தன்மை குறித்து சந்தேகம் கொண்டிருந்தது ஆச்சரியம் அளிக்கத்தக்கது. அணை பற்றிய புரிதலின்மையை காட்டுகிறது. அணை உடைந்து விடும் என்ற நம்பிக்கையின்மை மற்றும் பயம் காரணமாக இருக்கலாம். அது அவர்களது அறியாமை மற்றும் பொதுவான ஒரு மூடநம்பிக்கை என்றும் சொல்லலாம் அல்லது தங்கள் சொந்த நிலங்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் இவ்வாறு எண்ணி இருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு.
இவற்றை மீறி 100 ஆண்டுகளாக கட்டப்பட்ட அணை கம்பீரமாக இன்றும் மக்களுக்கு பேருதவி புரிந்து வருகிறது என்பது நிதர்சனம்.

கால அளவு
முன்னதாக இந்த காவிரி நீர் தேக்கம் கட்டி முடிக்க 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம் என்று F.J. வில்சன் என்ற PWD தலைமை பொறியாளர் எழுதிய குறிப்பு உள்ளது. சிறப்பு மேற்பார்வை பொறியாளர் கர்னல் W.M.எல்லீஸ் இத்திட்டம் முழுமை அடைய 15 ஆண்டுகள் ஆகலாம் எனவும் அணைச்சுவர் கட்ட மட்டுமே 11 ஆண்டுகள் ஆகலாம் என்றும் எழுதிய குறிப்பு ஆதாரங்கள் உள்ளன.
ஆனால், காலம் மாறி திரு. சி. டி. முல்லிங்ஸ், தலைமை பொறியாளராக பொறுப்பேற்று சுண்ணாம்புக்கு பதிலாக சிமெண்ட் பயன்படுத்த எடுத்த முடிவும் இன்ன பிற அறிவியல் பூர்வ பொறியியல் கோட்பாடுகளும் சுமார் ஏழு வருடங்களில் அணைச்சுவரை கட்டி முடிக்கும் சூழ்நிலை உருவானது கண்கூடு!
இந்த சூழ்நிலைகளில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மெட்ராஸ் கவர்னருக்கு அளித்த விண்ணப்பத்தில் இருந்து கீழ்கண்ட விவரங்கள் தெரிய வருகிறது.
அப்போதைய பயிர்களை அறுவடை செய்த பிறகு மீண்டும் பயிரிடக் கூடாது என்று “டம் டம்” மூலம் (தண்டோரா) தனித்துணை ஆட்சியாளர் விளம்பரம் செய்கிறார். எழுத்துப்பூர்வ அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
இந்தத் திட்டம் ரயத்துவாரிகளுக்கு (விவசாயிகளுக்கு) பெரும் துன்பத்தை அளிக்கும் நிகழ்வாக மாறிவிட்டது. குடியிருப்புகளை 15 நாட்களில் காலி செய்து வெளியேறிவிட வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஏழைகள் அனைவரும் ஏழை கிறிஸ்தவர்கள். வெளியேறுவது என்பது மிகுந்த சிரமத்தை தரும். தங்கள் பைகளில் எந்த ஒரு செல்வமும் அவர்களிடத்தில் இல்லை. அரசு வரியை கட்டுவதற்கு கூட மற்றவர்களிடம் கடன் யாசிப்பவர்களாக உள்ளனர். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் வேறு எந்த வசதியான இடத்திற்கும் மாற்றிச் செல்லவியலாது என்பதே நிலைமை.

பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இவர்களை இங்கிருந்து விரட்டுவது கடினமான பணி. வேறு இடங்களில் தங்கள் வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வது சுலபமான விஷயமில்லை.
மாறிச் செல்ல ஏதுவான நிலங்கள், வீடுகள், அருகாமையில் இல்லை. நிலங்களுக்கு நஷ்ட ஈடு தரும் வரை அவரவர்கள் வீட்டிலே தங்கிக் கொள்ளவும், வேறு சாகுபடி செய்ய தோதான இடங்களை கண்டறிய இரண்டு வருட கால அவகாசம் அளிக்கவும், மேலும் துன்புறுத்த வேண்டாம் எனவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என 13 ஜூலை 1925 தேதியிட்ட மனு தெரிவிக்கிறது.
இரண்டும் தருவதற்கு இடமில்லை
மேலும், ஆறு மாதங்கள் கழித்து டிசம்பர் 1925-ல் சிறப்பு அதிகாரி அரசுக்கு கீழ்க்கண்டவாறு பரிந்துரைக்கிறார்.
அரசுக்கு உடனடியாக தேவைப்படும் நிலத்துக்கு இழப்பீடு தொகை தந்து அவற்றை கையகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வேறு நிலங்களின் உரிமையாளர்கள் தங்கள் நிலங்கள் நீரில் மூழ்கும் வரை, சாகுபடி செய்ய அனுமதித்து, தற்போதைக்கு குத்தகை மூலம் வாடகை செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம். (இந்த முறையே பின்னாளில் அமலானது)
கையகப்படுத்திய நிலங்களுக்கு ஈட்டுத்தொகை பெற்றவர்கள் வேறு இடத்தில் இலவசமாக நிலங்களை கோர இயலாது. அல்லது ஈட்டுத்தொகைக்கு பதிலாக வேறு இடங்களில் ஈடான நிலத்தை பெற்றுக் கொள்ளலாம். இரண்டும் தருவதற்கு இடமில்லை என்று விளக்கப்பட்டது.
காவேரிபுரம், கொளத்தூர், சாம்பள்ளி போன்ற முக்கியமான கிராமங்களில் கிராம மக்கள் திரளாக வந்து அரசின் சட்ட அம்சங்களை அதிகாரிகளிடமிருந்து நேரில் அறிந்து கொண்டனர்.
குத்தகைதாரர்கள் வேறு இடங்களில் தொழில் தேடி நில உரிமையாளர்களை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.

பண வசதி உள்ள நில உரிமையாளர்கள் கூட கடன் பெற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காரணம் அவர்கள் அடமானம் வைக்கக்கூடிய நிலங்கள் ஏற்கனவே இந்த அணை திட்டத்தில் நில கையகப்படுத்த அறிவிக்கையில் இடம்பெற்றிருக்கிறது.
ரயத்துவாரிகள் தங்களின் “துரதிர்ஷ்டமான விதி” என்று ஒப்புக் கொள்ளும் மனநிலையில் உள்ளனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்ட கருத்துக்களை தொகுக்கலாம். இவற்றை தொடர்ந்து பல ஆவணங்களை ஆய்வு செய்ததில், பட்டா நிலங்களை வைத்திருந்தவர்களுக்கு ஈட்டுத்தொகை அல்லது அதற்கு சமமான அளவு வேறு நிலங்கள் அரசு சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டது என்பதை காண முடிகிறது. குத்தகைதாரர்கள் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து அங்குள்ள காடுகளை அழித்து விவசாய வேலைகளை செய்ய ஆரம்பித்தனர். அதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி ஏதுமில்லை.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களிலிருந்து “ஞாயம் பாடி, கொளத்தூர், காவேரிபுரம் போன்ற இடங்களில் இருந்து கொள்ளேகால் பகுதிக்கு புலம்பெயர்ந்தனர். கொள்ளேகால் பகுதி நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்டதாக இருந்துள்ளது. இப்போது கொள்ளேகால் கர்நாடக மாநிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாதேஸ்வரன் மலைத்தொடரில் ஏறி மேற்கு திசையில் இறங்கினால் வரும் கொள்ளேகால் பகுதியில் ஜல்லி பாளையம், ஜக்கள்ளி, தோமையார்பாளையம் பிரகாஷ் பாளையம், ஜாகேரி, கௌதள்ளி, புஷ்பகிரி, ஜம்பனஹள்ளி, மரியமங்கலம், மார்ட்டள்ளி போன்ற இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கினர். இவ்வாறு சென்ற விவசாயிகள் பெரும்பாலும் வன்னியர் குலத்தைச் சார்ந்தவர்களாக இருந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களாகவும் உள்ளனர். அங்குள்ள காடுகளை அழித்து அவர்கள் சுத்தப்படுத்தும் இடங்கள் அவர்களுக்கு சொந்தம் என ஏற்பாடு செய்யப்பட்டு, குடும்பங்களாக காட்டினுள் சென்று சீர்படுத்தி, நிலங்களை பக்குவப்படுத்தி, புலம் பெயர்ந்த ரயத்துவாரிகள் வேளாண்மை செய்ய ஆரம்பித்துள்ளனர். இவர்களில் பலரோடு எமக்கு நேரில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இன்னமும் உழைப்பதற்கு தயங்காத கடும் உழைப்பாளிகளாக இருப்பதை காண நேர்ந்தது.

அணையில் நீர் மெள்ள, மெள்ள நிரம்பும்போது தங்கள் வீடுகள் நீரில் மூழ்கியதை அடுத்து சிலர் ஒவ்வொரு குடும்பமாக ஆற்றின் படுகை மட்ட நிலத்திலிருந்து சற்று மேடான நிலங்களை நோக்கி நகர்ந்தனர். காவேரிபுரம் என்ற கிராமத்திலிருந்து மேட்டூர் வரை இவ்வாறு நகர்ந்த மக்களின் அடுத்த தலைமுறை மக்கள் இன்னமும் பலர் அந்த இடங்களில் வாழ்கின்றனர்.

அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டும்போது பழைய கிராமங்கள் அனைத்தும் நீரில் முழுவதுமாக மூழ்கி விடும். அங்கே மூழ்கி இருப்பது தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும். ஆனால், நினைவுகளைச் சுமந்த மக்கள் தொடர்ந்து தங்கள் எதிர்கால கனவுகளை நோக்கி முன்னேறியவண்ணம் உள்ளனர்.
நீர் மட்டம் சுமார் 50 அடிக்கு குறையும்போது அந்த கிராம மக்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய ஜலகண்டேஸ்வரர் ஆலயமும், 2 கிறிஸ்துவ தேவாலயங்களும் வெளியே தெரிவதுண்டு!
இது பெரிய அளவில் சுற்றுலா பயணிகளை இன்றளவும் ஈர்த்து வருகிறது. பரிசல் மூலமாக கோவில் மற்றும் தேவாலயத்தின் மேற்பகுதியில் இறங்கி அதை காண இயலும்.
அணை கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த, இன்றும் சாட்சிகளாக உள்ள சிலரை நேர்காணல் செய்த போது கிடைத்த விவரங்களை காண்போமா?
பொன்னுசாமி - புதுவேல மங்கலம்.
பொன்னுசாமி சிறுவனாக இருந்தபோது பால், தயிர் விற்க கூடையில் எடுத்துக் கொண்டு, காவிரி கரை ஓரமாக சென்று மேட்டூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு விற்பனை செய்து வந்த பால்காரர். இன்றைய வயது 96. “அணை கட்டி முடித்த பிறகு காந்தி வெள்ளைக்காரனை ஊரை விட்டு துரத்துனது எனக்கு ஞாபகம் இருக்குது” என்றுதான் தன் உரையாடலை நம்மோடு துவக்கினார்.
“டேம் கட்டும்போது நான் சின்ன பையன். எங்க ஐயா, அம்மா சொல்லி அப்ப நடந்தது ஞாபகம் இருக்கு, தம்பி! நெனவுல உள்ளது சொல்றேன். மேட்டூருல, பங்களாவிலே இருந்த வெள்ளைக்காரங்களுக்கு நான் பால், தயிர் ஊத்தி இருக்கேன். எங்க அம்மா, அம்மாவ பெத்த அம்மா எல்லாம் “கேசம ரெட்டியூர்” என்கிற கிராமத்தில இருந்தோம். காவிரி ஆத்தோர கிராமம். தின்னப்பட்டி, வேலமங்கலம், தாளவாடி, கோட்டையூர், காவேரிபுரம், வன்னி மரத்தூர், கீரைக்காரனூர், ரெட்ட குண்டு, மூலக்காடு இதெல்லாம் ஆத்துக்கு வலப்பக்கம் இருந்த ஊருங்க! இதெல்லாம் டேம் கட்டினதுக்கு அப்புறம் தண்ணீரிலே மூழ்கிடிச்சி.”
“அங்கிருந்து கிளம்பி மூட்டை முடிச்சோட மேட்டாங்காடு பக்கம் நகர்ந்து மேலே வந்துட்டோம். தண்ணி கொஞ்சம் கொஞ்சமாக உசரம் ஏறும் போது எங்க வீடு முழுகிப் போக, பக்கத்தில இருந்த “ஓனான் கரடு” மேல ஏறி இருக்க கொஞ்சம் முயற்சி பண்ணினோம். அங்கேயும் தண்ணி வந்துடுச்சு. இன்னும் மேலே ஏறி மேட்டாங்காடா இருந்த இங்க வந்துட்டோம்” என்றார்.

அந்த இடத்தின் பெயர் “புதுவேல மங்கலம்”. அங்கு இந்த வயதிலும் தனியாக வசிக்கிறார். “எங்களுக்கெல்லாம் கவர்மெண்ட்ல காசு எதுவும் கொடுக்கல. இங்கு நான் தனியா இருக்கேன். இப்ப வயசானவங்களுக்கு பென்ஷன் கொடுக்கிறதா சொல்றாங்க! எனக்கு இன்னமும் வரலீங்க. 96 வயசு ஆகுது. நான் தனியா என்ன பண்ணுவேன்” என்று புலம்பினார்.
“பல வருசம் முன்னாடி, பொண்டாட்டி கண்ணாடி விரியன் பாம்பு கடிச்சு செத்துப் போயிட்டா! நிறைய செலவு பண்ணி காப்பாத்த முடியல” என்று கண்கலங்கினார் பொன்னுசாமி. மூணு பசங்க, ரெண்டு பெண். சம்பாதித்து வைத்த காசில் வாங்கின காட்டை எல்லோருக்கும் எழுதிக் கொடுத்துட்டேன். இப்ப யாரும் கவனிக்கறது இல்ல. கொளத்தூர் மளிகை கடைக்காரர் ராஜேந்திரன் அய்யா, அப்பப்ப அரிசி கொடுப்பார். பொய் பேச மாட்டேன். திருட மாட்டேன்.”
“அந்த காலத்துல, காவிரி ஆத்தோட பரிசல்ல போய் இறங்கி அப்புறம் மேட்டூர் ஊருக்குள்ள நடந்து போய் தயிர் வித்துட்டு வருவேன். என்கூட வருதாயி, பாப்பா, சின்னப்பொன்னு, காயிதங்காடு முத்தாயி, சேத்துக்குழி பாவாயி, உப்பம்பருத்திக்காடு அளவாயி இவர்களெல்லாம் சேர்ந்து போயி ஊருக்குள்ள பால், தயிரு விப்போம்” என்று பழைய நினைவுகளில் மூழ்கினார்.
இந்த பெரியவரை ஒரு தோட்டத்தில் வைத்து குடிசை கட்டி அதில் தங்கவைத்து சாப்பாடு போட்டு காப்பாற்றுகிறார் பாப்பாத்தி என்ற 72 வயது பெண்மணி. பெரியவருக்கு எந்த சொந்தமும் இல்லை இந்தப் பெண்மணி! இப்படி இன்றும் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
“20 வருஷமா பென்சனுக்கு எழுதி எழுதி சலிச்சு போச்சு. எழுதிக் கொடுத்தா கிழிச்சு போடுவாங்களா, இல்ல தூக்கி போட்டு விடுவார்களா? தெரியல தம்பி” என்கிறார் விரக்தியோடு! (இந்த இடம் தற்போது தின்னப்பட்டி ஊராட்சிக்குள் இருக்கிறது).
“அப்போ கிணறு வெட்ட ஒரு நாளுக்கு ஒன்றரை ரூபா குடுப்பாங்க. கல்லு வெச்சு மாட்டு வண்டி ஓட்டியிருக்கேன். வீட்டு வேலைக்கு போனா சாப்பாடு போட்டு வருஷத்துக்கு 400 ரூபாய் கொடுப்பாங்க.” கடின உழைப்பு.

பழைய நினைவுகள் குறித்து மேலும் விசாரித்தபோது, ``அணை கட்டிய பிறகு தண்ணீர் வந்துவிடும் என்று “டமாரம்” அடித்து பழைய வீடுகளிலிருந்து வெளியேறச் சொன்னார்கள். ஆனால், தண்ணீர் வீட்டுக்குள் ஏறிய போது தான் எல்லோரும் அங்கிருந்து ஓடி வந்தார்கள். வீட்டுக்கு பக்கத்தில் இருந்த எங்க தாத்தன் வெச்ச பனைமரம் பல வருடம் கழிச்சு தண்ணீர் குறைந்த பிறகு கண்ணுக்கு தெரிஞ்சது. அந்த பனைமரத்தை வெட்டிக் கொண்டு வந்து எங்கள் குடிசையிலே கதவு, ஜன்னல் செய்ய பயன்படுத்தினோம்” என்று கண்களை மூடி தன் சொந்தங்களின் தொடர்புகளை எண்ணியாவாறு இளமை காலத்துக்குள் சஞ்சரித்தார்.
அந்த வயல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளின் சத்தமும், குருவிகளின் பாடல்களும், சில ஆடுகளின் சத்தங்களும் அங்கு நிலவிய நிசப்தத்தை கலைக்க, எம்மை அவரிடம் அழைத்துச் சென்ற கொளத்தூர் ராஜேந்திரனோடு பொன்னுசாமி என்ற அந்த பெரியவரிடமிருந்து விடை பெற்றேன்.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறையும் போது செய்தி ஊடகங்களில் தவறாது இடம் பிடிக்கும் செய்தி நீரில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் நந்தி கண்ணுக்குத் தெரிகிறது என்பதே! நுழைவாசல் கோபுரத்தின் மேலே பெரிய நந்தி சிலை அமையப்பெற்றிருக்கும். நீர் குறையும் போது முதலில் நந்தி சிலை தெரிய ஆரம்பிக்கும். இந்த கோவில் தண்ணீரில் மூழ்கும் என்பதால் சென்ற நூற்றாண்டிலேயே இக்கோவிலின் மூல விக்கிரகத்தை எடுத்து வந்து 1926-ல் பாலவாடி என்னும் கிராமத்தில் பழைய கோவிலை போன்று புதிய கோவில் ஒன்று கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பழைய கோவிலில் இருந்த பல்வேறு சிலைகள் தற்போதைய மேட்டூர் நகரின் மேற்கு பிரதான சாலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.

அணை நிரம்பிய போது சோளப்பாடி கிராமம் காலியானது. கிபி 1900 ஆண்டுக்கு முன்பாகவே இந்த கிராமத்தில் பூர்வீகமாக தோன்றுதொட்டு வசித்து வந்த திரு. சவுண்டப்ப செட்டியார் பரம்பரையில் வந்த ஐந்தாவது தலைமுறையை சேர்ந்த திரு.சந்திரசேகரன் என்பவரை பற்றி அறிந்து, மேட்டூரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜலகண்டபுரம் அருகே மலையம்பாளையம் என்ற பகுதிக்கு சென்றேன்.
அவருடன் உரையாடிய போது பல விஷயங்கள் தெரியவந்தன. 1926-ல் நிலம் கையகப்படுத்தும் வேலையை மெட்ராஸ் மாகாண அரசு ஆரம்பித்து 1930 வரையிலும் கூட நடந்தேறி இருக்கிறது. சந்திரசேகரனின் கொள்ளு தாத்தா திரு.லிங்கி செட்டியார் பெயருக்கு வந்திருந்த பிரிட்டிஷ் மெட்ராஸ் மாகாண அரசின் தபால் கார்டை (POST CARD) காண்பித்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
சோளப்பாடியில் அவரது நிலத்துக்குண்டான ஈட்டுத்தொகையை, மேச்சேரி ஸ்பெஷல் கலெக்டர் ஆபீஸில் வந்து பெற்றுக் கொள்ளும்படி பவானி அலுவலகம் முத்திரையோடு இருந்த அந்த போஸ்ட் கார்டை காண முடிந்தது. இதை மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளார் சந்திரசேகரன்.

மிகவும் தீவிர வாசகரான இவர் சாண்டில்யன் கதைகள், பொன்னியின் செல்வன் ஆரம்பித்து வேள்பாரி, நீரதிகாரம் வரை படித்து வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.
பல விஷயங்களை டைரியில் குறித்து வைத்திருக்கிறார். தனது கொள்ளு தாத்தா கோவில் தர்மகர்த்தாவாகவும், துப்பாக்கி லைசென்ஸ் பெற்றவராகவும் இருந்துள்ளார் என்று குறிப்பிடுகிறார். குலத்தொழிலாக நெசவுத் தொழிலை மேற்கொண்ட இவரது குடும்பம் சோளப்பாடியில் இருந்து மலையம்பாளையம் வந்து குடியமர்ந்துள்ளனர். அந்த காலத்திலேயே ஆங்கிலம் அறிந்தவராக, பேசுபவராக இருந்துள்ளார். வட்டித் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்தக் குடும்பம் புலம்பெயரும் போது உறவினர்கள் பலரும் தங்கள் குடும்பங்களோடு இவருடன் சேர்ந்து வந்து இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இன்றைய தலைமுறையாக வாழ்ந்து வரும் சந்திரசேகரன் “அபிராமி” என்ற பெயரில் தியேட்டர் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் கூறும் போது “பிரிட்டிஷ் அரசு அப்போது நிலம் வைத்திருப்பவர்களுக்கு வீடு, காடு, கிணறு என அனைத்துக்கும் ஈட்டுத்தொகை கணக்கிட்டு கொடுத்துள்ளனர்.
எவரையும் அரசு ஏமாற்றவில்லை. நீர் மட்டம் மேலே ஏறும்போதுதான் மக்கள் தங்கள் இடத்தை விட்டு அகன்று சென்றார்கள். கிராமங்களில் இருந்த சிறு குன்றுகள் கூட நீர் ஏற ஏற மூழ்கி விட்டன. சோளப்பாடி பகுதியில் சுமார் 400 வீடுகள் இருந்துள்ளன. அணை கட்டப்பட்டு நீர்மட்டம் உயர்ந்த போது அதனால் 27 கிராமங்கள் வரை மக்கள் தங்கள் இடங்களை இழந்தனர்” என்கிறார் சந்திரசேகர்.
வேறுபட்ட மேற்கண்ட இரண்டு நபர்களின் இன்றைய வாழ்க்கை நிலையை காணும் போது, நூற்றாண்டுக்கு முன் வீடிழந்த மக்கள் தங்கள் இலக்குகளை தாங்களே தீர்மானித்துக் கொண்டனர். அதற்கு தகுந்தார் போல அவர்களது சந்ததிகள் இப்போது வாழ்ந்து வருகிறார்கள் என்பது தெளிவாகிறது.
வாருங்கள், இன்னும் சிலரோடு அளவலாவுவோம்.
காவிரி நன்னீர் சிறப்பு




















