செய்திகள் :

சுத்தியல், ட்ரில் பிடித்த பெண்கள்; மேட்டூர் அணை கட்டுவதில் ஒட்டர் சமூகத்தினரின் பங்கு!| அணை ஓசை 11

post image

புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்ததினால் ஆற்றுக்கு இடது கரையில் நல்ல உயரமான இடத்தில் "எல்லீஸ் மதகுகள்" வேலை நடக்கும் இடத்திற்கு மிக அருகிலும் மற்றும் அணையின் இடது பக்கவாட்டுச் சுவர் எழுப்பவும் வசதியாக ஒரு முகாம் அமைப்பதற்குண்டான சூழல் ஏற்பட்டது.

இந்த முகாமிற்கு "சேலம் கேம்ப்" என்று பெயரிடப்பட்டது. காவிரியாற்றில் இருந்து சேலம் செல்லும் பாதையில் இது அமைந்த காரணத்தால் "சேலம் கேம்ப்" என்று அழைக்கப்பட்டது. சரிந்த நிலப்பரப்பாக இருந்த இந்த இடத்தில், எந்த கட்டிடங்களும் கட்டப்படாத வெற்று நிலமாகவும் வறண்ட பூமியாகவும் இருந்தது.

முக்கிய அணைக்கட்டுக்கு நிலம் கையகப்படுத்திய போது, அதனோடு சேர்ந்து இந்த சேலம் கேம்ப் என்ற பகுதி நிலங்களையும் சேர்த்து 1925-ல் இந்த திட்டம் அனுமதியானவுடன் கையகப்படுத்தப்பட்டது. உடனடியாக வரைபடம் தயாரிக்கப்பட்டு, மதிப்பீடு கணக்கிட்டு முகாம்களின் கட்டுமானம் வெகு விரைவாக ஆரம்பிக்கப்பட்டது.

இதில் "கூலி லைன்" என்னும் தொழிலாளர் இல்லத் தொகுப்பு வீடுகளும், ஒவ்வொரு தொகுப்பிலும் 20 குடிசைகளாக மொத்தம் 2000 பேர் தங்குவதற்கான வசதிகள் கட்ட முடுக்கி விடப்பட்டன. நிரந்தரப் பணியாளர்கள் தங்க வீடுகள் கட்டப்பட்டன. இவர்கள் அணை கட்டி முடித்த பிறகும் பராமரிப்பு கட்டுப்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகளுக்கு, அமர்த்தப்பட வேண்டியவர்களாகவும் கருதப்பட்டனர்.

மேலும் இவர்களது முக்கியப் பணியாக உபரி நீர் வெளியேற்றும் வேலைகளை, இவர்கள் கண்காணித்து செயல்பட வேண்டும் என்பதாலும் நிரந்தர வீடுகள் இங்கு கட்டப்பட்டன. மேலும் உதவிப் பொறியாளர், மேற்பார்வையாளர்கள், மேஸ்திரிகள் மற்றும் பியூன்கள் போன்ற பொறுப்பு வகிக்கப் போகிறவர்களின் குடியிருப்புகள் இங்கு கட்டப்பட்டன. ஓய்வு விடுதிகள் இந்தியர் அல்லது ஐரோப்பிய விருந்தினர்களுக்கு தகுந்தாற்போல கட்டப்பட்டது.

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மேல்நிலைத் தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் இந்த முகாமில் உள்ள ஒவ்வொரு தொகுப்புக்கும் இணைப்புகள் மூலம் கொடுக்கப்பட்டன. இந்த முகாமில் எல்லா வீடுகளுக்கும் மக்கள் குடியேறிய போது, இந்த இடம் ஒரு நவீன கிராமம் போல காட்சியளித்தது. மேலும் ஒவ்வொரு தொகுப்புகளுக்கு இடையிலும் நிறைய காலியிடங்கள் அமைந்து விசாலமானதாகவும் வசதியாகவும் இருந்தது.

ஒரு மருந்தகம் மற்றும் புறக்காவல் நிலையம் இரண்டும் ஏற்படுத்தப்பட்டு இந்த முகாமுக்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. இந்த முகாமின் வடக்கு பகுதியில் சில தொகுப்புகள் கடைகளுக்காக ஒதுக்கப்பட்டு பின்னாளில் அங்கு நல்ல வியாபாரம் நடைபெற்றது.

வாரம் ஒருமுறை மேட்டூரில் அணைப் பகுதி எல்லைக்கு வெளியே ஞாயிறுதோறும் அரசு கட்டுப்பாட்டுடன் நடக்கும் சந்தையில், பொருட்களை வாங்கிச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டினார்கள்.

மேட்டூருக்கும் சேலம் கேம்புக்கும் தகவல் தொடர்பு, முன்னர் குறிப்பிட்ட காவிரிப் பாலம் வழியாகவே நடைபெற்றது. பாலத்தை கடந்த பிறகு இடது கரையில் உடனடியாக உள்ள சீத்தாமலையில் ஒரு சாலை 6 கொண்டை ஊசி வளைவுகளுடன் மலையேறி, சேலம் கேம்ப் பகுதியில் அந்த சாலை இறங்கியது.

18 அடி அகலமும் முக்கால் மைல் மொத்த நீளமாகவும் இது அமைந்திருந்தது. காவிரிப் பாலத்தில் கடல் மட்டத்திலிருந்து +660 அடி என்ற அளவிலிருந்து, மிக உயரமான இடத்தில் +860 அடி என்ற அளவை தொடும் இடமாகவும் பின்னர் சேலம் கேம்ப் முகாமை நோக்கி கீழிறங்கும் சாலையாகவும் அமைந்தது. இன்றும் இந்த சாலை மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியப் பயன்பாட்டில் உள்ளது.

ஆற்றின் கிழக்குப் புறமாக உள்ள இந்த சீத்தாமலையில் பல வருடங்கள் கழித்து பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் செல்ல நீண்டதொறு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை இன்றளவும் பொதுப்பயன்பாட்டுக்கு உதவுகிறது.

முழூ மூச்சாக அணை கட்டுமானம் நடந்து கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மொத்த தொழிலாளர்களாக எல்லா வேலைகளிலும் இருந்தவர்களின் எண்ணிக்கை 18000-த்தை தாண்டியது என தரவுகள் தெரிவிக்கின்றன!

இந்த மலைப்பாதையில் இருந்து அணை, காவிரி ஆறு, மேற்கே உள்ள பாலமலை, மேட்டூர் ஆற்றுப்பள்ளத்தாக்கு போன்ற இடங்களை காண கண் கோடி வேண்டும். பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளிக்கும்.

அங்கிருந்து நோக்கும்போது அணையை பாதுகாப்பதாக பொதுமக்கள் நம்பும் அணை முனியப்பன் கோவில் கம்பீரமாக காட்சியளிப்பதை கண் குளிரக் காணலாம். இந்த முனியப்பன் கோவில் மற்றும் பிரிட்டிஷ் பொறியாளர்களுக்கிடையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளை இத்தொடரின் இறுதிப் பகுதிகளில் காண்போம்.

கட்டுமானப் பொருட்கள்

ஆரம்பத்தில் கர்னல் எல்லீஸ் பரிந்துரைத்த இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் வடக்கே புதிய இடத்தில் (SITE-Y) அணை கட்டத் தொடங்கப்பட்டது. அணைக்கட்டுமானம் தொடங்குமுன் பாறைகள் ஆராயப்பட்டன. 1926-இல் புவியியலாளர் ஸ்மீத், ஆலோசகர் ஹாரிஸ் ஆகியோர் ஆய்வு செய்து, பாறைகளின் தன்மை, பிளவுகள், நீர்க்கசிவு அபாயம் ஆகியவற்றை மதிப்பிட்டனர்.

C. T. முல்லிங்ஸ் (Mullings), (ENGINEER IN-CHIEF)

“கிரவுட்டிங்” முறையில் பாறைகளின் நுண்துளைகள் சிமெண்ட் செலுத்தி அடைக்கப்பட்டன. Drainage gallery வழியாக கசிவு நீர் வெளியேற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அடித்தளப் பணி மிகுந்த கவனத்துடன், பாறைகளை வெட்டி, வெடித்து அகற்றி, உறுதியான பாறை அடுக்கு வரும் வரை தோண்டப்பட்டது. இவ்வாறு தொழில்நுட்பமும் அனுபவமும் இணைந்து, அணையின் அடித்தளம் உறுதியாக அமைக்கப்பட்டது.

எதிர்காலத்தில் அணையின் உயரத்தை மேலும் 10 அடி (120 அடிக்கும் மேலே) உயர்த்தும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டது. அணையின் மேல், சாலையின் அகலம் 18 அடியில் இருந்து 20 அடி ஆறு அங்குலமாக மாற்றப்பட்டது. அழகுக்காக வளைந்த வடிவமைப்பு யோசிக்கப்பட்டாலும், அதிக செலவு பிடிக்கும் என்ற காரணத்தால், அதை தவிர்த்து, நேரடியாக அமைக்கப்பட்டது.

இதனால் வேலை விரைவாக முன்னேறி, 1934 வெள்ளம் வருவதற்கு முன்பே அணைச் சுவர் தேவையான உயரம் எட்டியது; இல்லையெனில் அப்போது வந்த அதிகளவு நீர் Spillway வழியாக வீணாகக் கடலில் கலந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

நிர்வாகம் எடுத்த மிகப் பெரிய முக்கிய தீர்மானம் சுண்ணாம்புக்கு பதிலாக போர்ட்லண்ட் சிமெண்ட் பயன்படுத்துவது என்ற முடிவாகும். அருகிலுள்ள பகுதிகளில் சுண்ணாம்பு போதுமான அளவில் இல்லாமையும், தரத்தில் மாறுபாடு காணப்பட்டதும் காரணமாக இருந்தது.

மேட்டூர் அணை கட்டுமானத்தில் முக்கியமாக கருதப்படும் திறமை வாய்ந்த பொறியாளர் திரு.சர். சி. டி. முல்லிங்ஸ் (Sir. C. T. MULLINGS) இப்போது நம் கதையில் உள்ளே நுழைகிறார். இந்த “கால நிகழ்வு” ஓர் முக்கிய அம்சமாகும். ஒரு கதை அல்லது திரைப்படத்தில் முக்கிய கதாநாயகன் முதல் காட்சியில் தோன்றும் போது ஒரு "மாஸ் எண்ட்ரி" என்று குறிப்பிடுவார்களே, அதைப் போல அவரது வருகை இந்த மேட்டூர் அணைத் திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவமான நிகழ்வு என்றே கூறவேண்டும்.

தலைமைப் பொறியாளராக சர் C. T. முல்லிங்ஸ் (Mullings), (ENGINEER IN-CHIEF) பொறுப்பேற்று சிமெண்ட் பயன்படுத்தினால் 7 ஆண்டுகளில் அணை முடியும்; சுண்ணாம்பு பயன்படுத்தினால் 15 ஆண்டுகள் ஆகும் என வலியுறுத்தினார். இதன் விளைவாக, மத்திய நீர்ப்பாசன வாரியமும் அனுமதி அளித்து, சிமெண்ட் கான்கிரீட் பயன்படுத்தும் முக்கிய முடிவெடுக்கப்பட்டது. பல முக்கிய முடிவுகள் எடுத்து விரைவாக அணை கட்டுவதற்கு திறமையான நிர்வாக முடிவுகள செயல்படுத்தியவர் சர். C. T. முல்லிங்ஸ்.

அணைக்கு 22 மில்லியன் கனஅடி மணல் தேவை என கணிக்கப்பட்டது. 1924 வெள்ளத்திற்குப் பின் அணையின் மேற்புற ஆற்றுப்படுகையில் ஏராளமான தரமான மணல் படிந்திருந்தது. இதனால் தூரத்தில் அமைந்திருந்த சோளப்பாடி என்ற இடத்திலிருந்து மணல் எடுக்கும் பழைய திட்டம் கைவிடப்பட்டது.

மணல் சேகரிக்க டிராம்வே அமைக்கப்பட்டு, ஆற்றில் நீர் இல்லாத வெயில் காலங்களில் மணல் சேகரித்து சேமிக்கும் முறையைப் பின்பற்றினர். 1926–1934 வரை 28.7 மில்லியன் கனஅடி மணல் சேகரிக்கப்பட்டது. வேலை திறமையாகச் செய்யப்பட்டதன் காரணமாக, மணலுக்கான செலவில் ரூ.6 லட்சம் மிச்சப்பட்டது. ஒட்டுமொத்த அணை கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட மணலின் மதிப்பு ஒரு யூனிட்டுக்கு(100 கன அடி) ரூ27 -7 அணா-1 பைசா என்பதாக இருந்தது(ரூ 27-7-1).

எந்தவொரு நாளிலும் மணலுக்காக எந்த ஒரு வேலையும் அணை கட்டுமானத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தாமதமே ஆகவில்லை என்பது தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

கற்கள் பெருமளவில் தேவைப்பட்டதால், முதலில் பவர் ட்ரில், ஹெவி கிரஷர்கள் போன்ற இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதிக செலவு, தாமதம், சாலைகள் குறைவு போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. அதற்குப் பதிலாக, மனித உழைப்பை நம்பி பல குவாரிகள் திறக்கப்பட்டன. ஒட்டர் சமூகத்தினர் (ஆண்களும், பெண்களும்) கற்கள் உடைக்கும் வேலையில் ஈடுபட்டனர்.

இவர்களின் உழைப்பால் குறைந்த செலவில் கோடிக்கணக்கான கனஅடி கற்கள் கிடைத்தது. பெண்கள் ஆண்களுக்கு நிகராக சுத்தியல், ட்ரில் பிடித்தல் போன்ற பணிகளில் பங்கு கொண்டனர் என்பது வெகு சிறப்பு!

ஒட்டர்கள் மிகுந்த திறமையுடன் வேலை செய்தாலும், மதுவில் மூழ்கி சில நாட்கள் வேலையைத் தவிர்ப்பது, அதிகாரிகளை ஏமாற்றி கற்கள் அடுக்குகளில் வெற்றிடம் வைப்பது போன்ற சில குறைகளும் இருந்தன என்று பதிவு செய்துள்ளனர், பிரிட்டிஷ் அதிகாரிகள்.

இருந்தாலும், இவர்களின் பங்களிப்பு இல்லாமல் இவ்வளவு குறைந்த செலவில் இத்தகைய மாபெரும் அணை கட்ட இயலாது என்று பிரிட்டிஷ் பொறியாளர்கள் தங்கள் பதிவுகளில் பாராட்டியும் உள்ளனர். இந்த சமுதாய மக்கள் இந்த அணை கட்டுமானத்துக்கு மிகப்பெரிய அளவில் தங்கள் பங்களிப்பை நல்கியுள்ளனர் என்பதுவே நிஜம்!

கடும் உழைப்பாளிகளான இவர்கள் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்!

மொத்தத்தில், சிமெண்ட் கான்கிரீட் உபயோகம், அருகிலேயே கிடைத்த மணல், ஒட்டர் தொழிலாளர்களின் உழைப்பு போன்ற காரணங்களால், மேட்டூர் அணை மிகக் குறைந்த செலவில், வேகமாகவும், வலிமையாகவும் கட்டப்பட்டு முடிந்தது. இதுவே இந்திய பொறியியல் வரலாற்றில் ஒரு பெரிய பாடம் என்று குறிப்பிடுகிறார்கள், பிரிட்டிஷ் பொறியாளர்கள்!

மேட்டூர் அணை கட்டுமானத்தில் அடித்தளம் அமைக்க பெருமளவில் கற்கள் உடைக்க வேண்டியிருந்தது. அப்பகுதியில் இருந்த ஒட்டர் தொழிலாளர்கள் கருப்பு பவுடர் பயன்படுத்தி கற்களை உடைப்பதில் வல்லவர்கள். ஆனால் இவ்வளவு பெரிய வேலைக்கு அது போதாது என்று பொறியாளர்கள் உணர்ந்தனர். அதனால் புதிய முறைகளைத் தேடினர்.

முதலாம் உலகப்போரின் (1914 – 1918) விளைவாக உலக சந்தையில் புதிய “திரவ ஆக்சிஜன் வெடிமருந்து” (Liquid Oxygen explosive) அறிமுகமானது. ஜெர்மனியர்கள் நைட்ரேட் பற்றாக்குறையால் மாற்று வழிகளைத் தேடும்போது உருவான இதை, போர் முடிந்த பின் ஐரோப்பாவில் பெருமளவில் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர்.

1927-ல் இந்தியாவில் “Lightfoot Refrigeration” என்ற நிறுவனம் இதை சுரங்க மற்றும் கட்டுமானப் பணிகளில் அறிமுகப்படுத்த முனைந்தது. மெட்ராஸ் மாகாண அரசு ஆலோசனைக்கு உட்படுத்திய பின், மேட்டூரில் இதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது. 1927 மே 3-ஆம் தேதி முதல் முறையாக மேட்டூரில் திரவ ஆக்சிஜன் கொண்டு கற்கள் உடைக்கும் சோதனை நடந்தது.

அதன் விளைவுகள் மிகச் சிறப்பாக இருந்தன. ஒரு நாளைக்கு 3,000 டன் வரை கற்களை உடைக்கக் கூடிய வல்லமை கொண்டதாகவும், பாதுகாப்பானதாகவும், செலவு குறைவானதாகவும் கண்டறியப்பட்டது. இதனால் அரசாங்கம் இதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

Lightfoot Refrigeration

அப்போதைய தலைமைப் பொறியாளர் “எப். எம். டெளலி (F. M. Dowley)”, 1929 ஜூலை 22-ஆம் தேதியிட்ட கடிதத்தில் இதை பதிவு செய்தார். அவரது அறிக்கையில், மேட்டூர் அணை கட்டுமானத்தில் திரவ ஆக்சிஜன் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதால் வேகம், பாதுகாப்பு, செலவு குறைவு ஆகிய மூன்று அம்சங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக Lightfoot Refrigeration நிறுவனம் மேட்டூரில் இரண்டு சிறிய ஆலைகளை நிறுவியது. ஒவ்வொரு ஆலையும் ஒரு மணி நேரத்தில் 20 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்தது. இதனால் அங்கிருந்த பாறைமலைகளை உடைத்து அணைக்குத் தேவையான அளவிலான கற்களை சுலபமாகவும் பாதுகாப்பாகவும் பெற முடிந்தது.

பிரிட்டிஷ் பொறியாளர்களின் பார்வையில், இது மேட்டூர் திட்டத்தில் மிகப் பெரிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது. பாரம்பரிய கருப்பு பவுடருக்குப் பதிலாக திரவ ஆக்சிஜன் பயன்படுத்தியதால், அணை கட்டுமான வேகம் அதிகரித்து, கட்டுமானச் செலவு குறைந்தது. இதுவே இந்தியாவில் திரவ ஆக்சிஜன் வெடிமருந்து பரவலாகப் பயன்படுத்தப்பட்ட முக்கிய தொடக்கமாகும்.

பயணம் தொடரும்...

நாதிர் ஷா கடத்திய கோஹினூர் வைரம்: கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

வரலாற்றில் இன்று!மார்ச் 22, 1739: இந்த நாளில்தான் நாதிர் ஷா டெல்லியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, மயில் சிம்மாசனத்தையும், கோஹினூர் வைரத்தையும் அதிகாரபூர்வமாகக் கைப்பற்றினார்.நாதிர்... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10

பரிசல் பயன்பாடு1927 வரை மேட்டூர் கிராமத்திலிருந்து காவிரியின் இடக்கரைக்கு செல்ல ஒரே வழி பரிசல் மட்டுமே. பரிசல் ஓட்டுபவர்கள் ஆற்றின் கடினமான நீரோட்டத்தையும் திறமையாகக் கடந்து சென்றனர். இந்த பரிசல்களை இ... மேலும் பார்க்க

`தாமதம் நல்லது' - பெரு வெள்ளமும் எல்லீஸ் பாலம் உருவாக்கமும்! | அணை ஓசை 09

பெருவெள்ளம்மேட்டூர் நகரியத்தின் உருவாக்கம்1924-ம் ஆண்டு காவிரி–மேட்டூர் திட்டத்தின் முழு வரைவு முடித்து ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்த காலத்தில், காவிரியில் ஏற்பட்ட பெருவெள்ளம் வரலாற்றிலேயே முக்கியம... மேலும் பார்க்க

கிரஹாம் பெல் முதலில் `ஹலோ' சொல்லவில்லை! - உலகின் முதல் தொலைபேசி அழைப்பு கட்டுக்கதையா?

இன்று நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்களுக்கெல்லாம் முன்னோடி தொலைபேசி (Telephone). இதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் கண்டுபிடித்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த முதல் தொலைபேசி அழைப்பு குறித்... மேலும் பார்க்க

சிக்கலிலிருந்து தீர்வு நோக்கி..! - ரூ.385 லட்சம் திட்ட மதிப்பீடு ரூ.737 லட்சம் ஆனது ஏன்?| அணை ஓசை 07

இரு அரசுகளுக்கும் இடையில் தீவிரமான பிரச்சனை1914 - நடுவர் மன்றம் தீர்ப்பு1910-ல் தயாரிக்கப்பட்ட மேட்டூர் அணை திட்டம் அரசு பரிசீலனையில் இருந்தபோதும், மெட்ராஸ் மற்றும் மைசூர் அரசுகளின் உடன்பாடின்மையால் அ... மேலும் பார்க்க