அமைச்சர் சக்கரபாணியின் அண்டர் கிரவுண்ட் டீலிங்; தொகுதியை மேற்கு மாவட்டங்களுடன் இ...
``இந்த நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம்" - ஈரான் பட்டியலில் இந்தியா?
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. இதனால் ஏற்கனவே எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாலும், பல நாடுகளில் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாலும், உலகளாவில் எரிசக்தி நெருக்கடி உருவாகும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்திற்குப் பதிலளிக்கும் விதமாக ஈரான் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தது.
நேற்று நியூயார்க்கில் உள்ள ஈரானியத் தூதரகம், ஹார்முஸ் நீரிணை வழியாக பிற நாடுகளைச் சேர்ந்த அல்லது அவற்றுடன் தொடர்புடைய கப்பல்கள் உட்பட, 'பகைமை அற்ற கப்பல்கள்' அதாவது, அவை ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயல்களில் ஈடுபடாமலும், அத்தகைய செயல்களுக்கு ஆதரவளிக்காமலும் இருப்பதுடன், அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் காவல் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் கப்பல்கள், தகுந்த ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகக் கடந்து செல்லும் வசதியைப் பெறலாம்," என்று அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ``நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தியை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற 'நட்பு நாடுகள்' பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது." எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கடுமையான போருக்கு மத்தியில் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

டெல்லியில் நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டுக் கூட்டத்தில் பேசிய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் சின்ஹா, ``இந்தியக் கொடியுடன் கூடிய இரண்டு எல்பிஜி கப்பல்களான பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த் ஆகியவை ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்தியக் கப்பல்களும் மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையில், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், ``உலகளவில் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருவதால், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக அமைப்புகள் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்குமாறு வலியுறுத்தி வருகின்றன. ஹார்முஸ் நீரிணை நீண்ட காலமாக மூடப்பட்டிருப்பது, உலகளாவிய பயிர் சாகுபடிப் பருவத்தின் ஒரு மிக முக்கியமான தருணத்தில் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் போக்குவரத்தை முடக்கி வருகிறது. பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருவதுடன், ஆழ்ந்த பாதுகாப்பற்ற சூழலிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் போரின் விளைவுகளைக் குறைப்பதில் ஐ.நா. ஈடுபட்டு வருகிறது. அந்த விளைவுகளைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழி மிகவும் தெளிவானது. போரை - உடனடியாக - முடிவுக்குக் கொண்டுவருவதே ஆகும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














