பாலியல் குற்றங்கள்: ``புதருக்குள்ளேயுமா போலிஸ் லைட் போடமுடியும்?"- எஸ்.வி சேகர் ...
பாபநாசம் தொகுதி அமமுக-வுக்கு இல்லை; ரூட் போடும் வைத்தி! - திமுகவில் இணைகிறாரா டிடிவி விசுவாசி?
அமமுக-வின் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி. டி.டி.வி.தினகரனுக்கு அடுத்தபடியாக டெல்டா அமமுக-வின் முகமாக இருந்தவர். சசிகலாவின் நெருங்கிய உறவினர். அதிமுக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். தஞ்சாவூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏக்களில் ரெங்கசாமியும் ஒருவர். இதனால் எம்.எல்.ஏ பதவி தகுதி நீக்கத்துக்கு ஆளானவர்.

இதையடுத்து அமமுகவில் தன் பயணத்தை தொடர்ந்து வந்த ரெங்கசாமி டி.டி.வி.தினகரனின் நம்பிக்கையை பெற்று அவருக்கு விசுவாசமாக இருந்தார். 2026 தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான பாபநாசம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேலைகளை முன்கூட்டியே செய்து வந்தார்.
அதிமுக கூட்டணியில், பாபநாசம் தொகுதியை அமமுக கேட்ட நிலையில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால் ரெங்கசாமி கடும் அப்செட் ஆனார். டி.டி.வி.தினகரனுடன் சென்னையில் இருந்த ரெங்கசாமி தொகுதி இல்லை என்றதும் கோபத்துடன் தஞ்சாவூருக்கு வந்து விட்டாராம்.
இந்த நிலையில் ரெங்கசாமி அமமுகவில் இருந்து விலகி திமுகவில் சேரப்போவதாக பரவலாக பேசப்படுகிறது. அவருடைய ஆதரவாளர்கள் பலர் முகநூல் பக்கத்தில் இதை சூசகமாக பதிவிட்டு வருகின்றனர். நேற்று இரவு 11 மணி வரை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ரெங்கசாமி. இந்த சம்பவம் அமமுக வட்டாரத்தில் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.
இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ``எடப்பாடி பழனிசாமிக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்ட போது சுமார் 21 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக இருந்தனர். தினகரன் பக்கம் செல்வதை தடுக்க எடப்பாடி பழனிசாமி பலவகையில் முயன்றார்.

ஆனாலும் ரெங்கசாமி உள்ளிட்ட பல எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் உறுதியாக நின்றனர். இதைதொடர்ந்து அமமுக தொடங்கப்பட்டு துரோகத்துக்கு நீதி கேட்பதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்தார் தினகரன். கடந்த 2021 தேர்தலில் அமமுக சார்பில் பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட ரெங்கசாமி சுமார் 19,000 வாக்குகள் பெற்றார். இந்தமுறையும் பாபநாசத்தில் போட்டியிடுவதற்கு தயாராக இருந்தார். தேர்தல் வேலைகளையும் தொடங்கி விட்டார். இதற்கிடையே அதிமுக, அமமுக கூட்டணி ஏற்பட்டதை தொடர்ந்து களமும் அவருக்கு சாதகமாக இருந்தது.
தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரத்திலும் ஈடுப்பட்டு வந்தார். இந்நிலையில் கூட்டணியில் பாபநாசம் அமமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. அதிமுகவில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மகன் அய்யப்பனுக்காக தொகுதியை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை என்கிறார்கள்.
தினகரனோ, என்னோடு இப்போது வரை விசுவாசமாக இருப்பவர் ரெங்கசாமி அவருக்கு தொகுதி இல்லை என்றால் எப்படினு கேட்க எடப்பாடி பழனிசாமி தொகுதியை விட்டு கொடுக்காமல் உறுதியாக இருந்து விட்டார். இதில் தினகரனே அப்செட் ஆகி விட்டார் என்பது தான் உண்மை. எல்லாம் கைமீறி போய் விட்டது என்ன செய்ய முடியும்னு தினகரனுக்கு அருகே இருப்பவர்கள் புலம்புகின்றனர்.

இந்த தேர்தலை பெரிதும் நம்பியிருந்தார் ரெங்கசாமி. வயதும் அதற்கு ஒரு காரணம், இதை தவறவிட்டால் வரும் காலங்கள் எப்படி இருக்கும் என சொல்லமுடியாது, களமும் சாதகமாக இருந்ததால் நம்பிக்கையுடன் இருந்தார். கூட்டணியில் தொகுதி இல்லை என தெரிந்ததும் உடைந்து விட்டார். நமக்கு தான் சீட், எல்லோரும் வேலையை செய்யுங்கனு சொல்லிட்டு போனவர் வெறுங்கையுடன் திரும்பி விட்டார். எம்.எல்.ஏ பதவியை துறந்து, கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் விசுவாசமாக இருந்தற்கு கிடைத்த பரிசு இதுதானா என்று அவருடைய ஆதரவாளர்கள் மனம் வெதும்பி வருகின்றனர்.
இந்த சூழலில் கடும் அதிருப்தியில் இருந்த ரெங்கசாமி திமுகவிற்கு செல்ல முடிவெடுத்து விட்டதாக சொல்கிறார்கள். இதையறிந்த தினகரன், சிலரை விட்டு ரெங்கசாமியிடம் பேசிய சமாதானம் தோற்று விட்டதாம். வருத்தத்தில் இருக்கும் ரெங்கசாமியை வைத்திலிங்கம் ரூட் போட்டு திமுகவுக்கு அழைத்து வருவதாக சொல்கிறார்கள்.
செந்தில்பாலாஜியும் இவரை இழுக்கும் பின்னணியில் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது அதிமுகவில் இருந்த வைத்திலிங்கம் தஞ்சாவூரில் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில், நான் ரெங்கசாமியை அந்த பக்கம் போகாதீர்கள் என்றேன் அவர் கேட்கவில்லை. நான் சொன்னதை கேட்டிருந்தால் அதிமுகவில் நல்ல இடத்தில் இருந்திருப்பார், எம்.எல்.ஏ பதவியும் பறிபோயிருக்காது என பேசினார்.

காலமும், காட்சியும் மாறி விட்டன. வைத்திலிங்கம் இப்போது திமுகவில் நல்ல இடத்தில் இருக்கிறார். அவருக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வைத்திலிங்கமும், ரெங்கசாமியும் அதிமுக-வில் ஒன்றாக பயணித்தவர்கள். அதன் அடிப்படையில், ரெங்கசாமியை திமுகவுக்கு இழுத்து வருவதற்கான காய் நகர்த்தல்களை வைத்தி செய்வதாக சொல்கிறார்கள்.
ரெங்கசாமியும் கிட்டதட்ட ஓகே சொல்லி விட்டதாக பேசப்படுகிறது. திமுக-வில் இணைந்தால் பாபநாசம் தொகுதியில் சீட் வேண்டும் என ரெங்கசாமி தரப்பில் டிமாண்ட் வைப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அரசியலில் எப்ப, எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்றனர்.
இது குறித்து எம்.ரெங்கசாமியிடம் பேசினோம், ``இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. அமைதியாக இருக்கிறேன். என் மீது அன்பு, பிரியம் கொண்டவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டும். அதற்கு அவகாசம் வேண்டும். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. வைத்திலிங்கம் என்னிடம் எதுவும் பேசவில்லை" என்றார். திமுக தலைமை அதிமுக, அமமுக-வில் இருந்து வருபவர்களை சேர்த்து அவர்களுக்கான முக்கியத்துவத்தை கட்சியில் கொடுப்பதால் கட்சியில் இருக்க கூடியவர்களின் வாய்ப்பு பறிபோவதாக திமுக நிர்வாகிகள் பலர் புலம்ப தொடங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.!














