தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு | 77...
2,500 ஆண்டு கால வரலாற்றுப் பிரமிப்பு! புதுக்கோட்டை தொல்லியல் வேட்டையில் சிக்கிய "யானை கட்டி முனி"
தமிழ்நாட்டின் மண், தனக்குள்ளே எத்தனை எத்தனை அதிசயங்களை புதைத்து வைத்திருக்கிறது என்பதற்கு காலம்தான் ஆகச்சிறந்த சாட்சி. கீழடி, சிவகளை, கொடுமணல் எனத் தமிழகத்தின் தொன்மை உலக அரங்கில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், இதோ புதுக்கோட்டை மண்ணிலிருந்து மற்றுமொரு பிரம்மாண்ட வரலாற்றுப் புதையல் வெளிப்பட்டிருக்கிறது.
இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட நெடுங்கற்களிலேயே மிக உயரமான ஒரு 'மென்கிர்' (Menhir)' நினைவுச் சின்னம்,புதுக்கோட்டை அருகே கம்பீரமாகக் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான அந்தப் பிரம்மாண்டம், நம்மை ஆச்சரியத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்கிறது!
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், குடுமியான்மலைக்கு அருகே 2 கிமீ தொலைவில் உள்ளது தொல்லியல் சிறப்புமிக்க பின்னங்குடி கிராமம். அந்த ஊரின் ஒரு பகுதியில் 'யானைகட்டி காடு' என்ற அடர்ந்த பகுதி உள்ளது. அங்குள்ள மக்கள், தங்களின் காவல் தெய்வமாக ஒரு பிரம்மாண்ட கல்லை 'யானைகட்டி முனி' என்ற பெயரில் காலங்காலமாக வழிபட்டு வருகிறார்கள். அந்தப் பகுதி மக்களுக்கு அது பக்தி நிறைந்த ஒரு தெய்வம். ஆனால், வரலாற்று ஆய்வாளர்களுக்கோ அது ஒரு தொல்லியல் சுரங்கம்.

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வாளர்களான பேராசிரியர் சு. முத்தழகன், பொறியாளர் நாராயணமூர்த்தி, ராகுல்பிரசாத் மற்றும் குழுவினருக்கு இந்த நெடுங்கல் குறித்த தகவல் கிடைத்ததும், அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அவர்கள் அண்மையில் கள ஆய்வுக்காக நுழைந்தனர். அங்கே அவர்களுக்காகக் காத்திருந்தது ஒரு பெருங்கற்காலத் த்ரில்லர்!
காட்டின் நடுவே, தாங்கள் கண்ட15 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டு அசாத்தியமாக வானத்தை நோக்கி நிமிர்ந்து நின்றுகொண்டிருக்கும் அந்த மாபெரும் வரலாற்றுப் பிரம்மாண்டத்தை, ஆச்சரியம் விலகாமல் நம்மிடம் விவரிக்கிறார் தொல்லியல் ஆய்வாளரும் தமிழ்ப் பேராசிரியருமான சுப.முத்தழகன்.
"தொல்லியல் துறையில் 'மென்கிர்' அல்லது 'நெடுங்கல்' என்பது பெருங்கற்கால (Megalithic Period) பண்பாட்டின் மிக முக்கிய அடையாளமாகும். உலகெங்கும் இத்தகைய பெரிய புதைகுழிகள் அல்லது கல்லறைகளில் பெரிய கற்களைப் பயன்படுத்தியதால், ஆங்கிலத்தில் இதனை 'மெகாலிதிக்' (Mega = பெரிய, Lithic = கல்) என்றனர். அதனையே தமிழில் 'பெருங்கற்காலம்' என்கிறோம்.

ஆனால், பலரும் நினைப்பது போல 'பெருங்கற்காலம்' என்பது மனிதன் கல்லை மட்டுமே பயன்படுத்திய காலம் அல்ல. அது இரும்பை மிக நன்றாகப் பயன்படுத்தி, பல்வேறு இரும்புக் கருவிகள் மற்றும் பானைகளைச் செய்து, மனிதன் நாகரிகமடைந்து வாழ்ந்த ஒரு சிறப்பான காலக்கட்டமாகும்.."
பண்டைய காலத்தில், போரிலோ அல்லது வேறு காரணங்களாலோ வீர மரணமடைந்த தலைவர்கள், குழுவின் முக்கியப் பிரமுகர்கள் அல்லது முன்னோர்களின் நினைவாக, அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மேலே இந்த நீண்ட செங்குத்தான கற்கள் நடப்பட்டன.
இன்றைய கிறிஸ்தவர்களின் கல்லறைகளைப் போலவே, அன்றும் வாழ்ந்தவர்களின் வசதி மற்றும் சமூகத் தகுதிக்குத் தக்கபடிதான் இந்த நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. ஊரில் புகழ்பெற்ற தலைவராகவோ அல்லது செல்வாக்கு மிக்கவராகவோ இருந்தால், அவர்களின் தகுதிக்கேற்ப நடுகற்கள் பெரிய உயரத்துடன் கம்பீரமாக அமைக்கப்பட்டன. வசதி குறைந்தவர்களுக்குச் சிறிய கற்கள் வைக்கப்பட்டன.
தொடக்கத்தில் எந்தவித செதுக்கல்களும் இன்றி, இயற்கையான பாறாங்கற்களை அப்படியே செங்குத்தாக நட்டு வைக்கும் வழக்கமே இருந்தது. காலப்போக்கில் ஒரு தூண் நிறுவி, அதில் இறந்தவரின் பெருமைகளை எழுதத் தொடங்கினர். இன்னும் கொஞ்சக் காலம் கழித்து, புலியைக் குத்துவது போன்ற வீரக் காட்சிகளைச் செதுக்கி, அதற்குப் பின் அதன் கீழே விபரங்களை எழுதினர். பிற்காலத்தில் சங்க காலத்திலும், அதற்குப் பிறகும் உருவான 'நடுகல்' வழிபாட்டிற்கு, இந்த எழுத்துகளற்ற நெடுங்கற்கள் தான் ஆதிப்புள்ளி.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, தெற்கு வெள்ளாற்றின் வடகரை ஓரங்களில் நார்த்தாமலைக்கு எதிரே உள்ள தொடையூர் போன்ற பல இடங்களில் ஏகப்பட்ட பெருங்கற்காலப் புதைகுழிகள் (Burial sites) கிடைத்துள்ளன.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் உள்ள நெடுங்கற்கள் கால ஓட்டத்தில், மண் அரிப்பால் சரிந்து விழுந்து கிடக்கின்றன. இதேபோன்றதொரு நெடுங்கல் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே உள்ள ராங்கியம் காட்டுக்குள்ளும் நின்ற நிலையில் காணப்படுகிறது. ஆனால், அதன் உயரம் மிகவும் குறைவு.
பின்னங்குடி அதிசயம்:
ஆனால், இந்த பின்னங்குடி ‘நெடுங்கல்' மட்டும்தான் 2,500 ஆண்டுகளாக புயல், மழை, வெயில் என எதற்கும் அசராமல், இன்னும் அதே 15 அடி கம்பீரத்தோடு நின்ற நிலையிலேயே நேராக இருக்கிறது. இதுதான் இதன் ஆகப்பெரும் வியப்பு. இந்த மாபெரும் நெடுங்கல்லுக்கு அரணாக, இதன் அருகிலேயே 5 அடி உயரத்தில் மேலும் இரண்டு குட்டி நெடுங்கல் பலகைகளும் ஊன்றப்பட்டுள்ளன..." என்று ஆச்சரியத்துடன் பேசிய பேராசிரியர் சுப. முத்தழகன் நம்மிடம் மேலும் பகிர்ந்து கொண்டதாவது:
" இதன் மிகத்துல்லியமான காலத்தைக் கணிக்க அங்கே கிடைக்கும் பானை ஓடுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றாலும், தோராயமாக இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறலாம். வரலாற்றை 'எழுத்துச் சான்றுகள் இல்லாத காலம்' (Pre-historic period), 'எழுத்துச் சான்றுகள் உள்ள காலம்' (Historical period) எனப் பிரிப்பார்கள். சங்க காலம் என்பது எழுத்துச் சான்றுகள் உள்ள வரலாற்றுக்காலம். ஆனால், இந்த நெடுங்கல் எழுத்துப் பொறிப்புகள் தோன்றுவதற்கு முற்பட்ட, 'வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச்' சேர்ந்த அரிய சான்றாகும்!"

சங்க இலக்கியம் காட்டும் சான்று:
இந்த நெடுங்கற்கள் ஏதோ கதையல்ல, நம் மூதாதையர்களின் வாழ்வியலோடு கலந்தவை என்பதற்கு சங்க இலக்கியங்களே சாட்சி பகிர்கின்றன. "நட்ட போலும் நடா நெடுங்கல்...!" என்கிறது அக நானூறு. அதாவது, தொலைவிலிருந்து பார்ப்பதற்கு யாரோ ஒரு மனிதன் நேராக நிமிர்ந்து நிற்பது போலத் தோன்றும் இந்த நெடுங்கற்கள் பற்றி நம் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் கூட இந்த 'முதுமக்கள் தாழி' மற்றும் 'நெடுங்கல்' பற்றிய குறிப்புகள் ஏராளமாக உண்டு எனச் சான்று பகிர்கிறார் சுப. முத்தழகன்
இந்த அரிய கண்டுபிடிப்பு குறித்து நம்மிடம் பேசிய தொல்லியல் ஆர்வலர்கள் சிலர் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்:
"கீழடி வைகை நதிக்கரை நாகரிகத்தை உலகிற்குப் பறைசாற்றியது போல, புதுக்கோட்டையின் 'தெற்கு வெள்ளாற்றங்கரை நாகரிகம்' இன்னும் ஆழமாகப் படிக்கப்படாத ஒரு திறந்தவெளிப் புத்தகம். இந்த 15 அடி நெடுங்கல் என்பது சாதாரண விஷயமல்ல; 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வளவு பெரிய பாறையைச் செங்குத்தாக நிறுத்தும் தொழில்நுட்பமும், மனித உழைப்பும் நம் மூதாதையர்களிடம் இருந்திருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. உள்ளூர் மக்கள் இதை 'யானைகட்டி முனி' என்று வழிபடுவதால்தான் இந்த நெடுங்கல் இன்னும் அழியாமல் தப்பியதற்கு இன்னொரு காரணம். தமிழர்களின் வழிபாட்டு மரபுதான் நம் வரலாற்றைக் காப்பாற்றி வைத்திருக்கும் ஆகச்சிறந்த வேலி!" என்கிறார்கள் .
ஆய்வாளர்களுக்கு இது 2,500 ஆண்டுகள் பழமையான 'மென்கிர்' என்றால், உள்ளூர் மக்களுக்கோ இது இன்றும் உயிர்வாழும் ஒரு நம்பிக்கை. காட்டில் ஆடு மாடு மேய்க்கச் செல்பவர்கள், வழிப்போக்கர்கள் என யாராவது பயந்துவிட்டால், இங்கிருக்கும் 'யானைகட்டி முனிக்கு' எலுமிச்சம்பழம், விபூதி, குங்குமம் வைத்து, காசு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். நாம் அங்கு சென்றபோதும் எலுமிச்சை, குங்குமத்தைக் காண முடிந்தது.

இந்த நெடுங்கல்லிலிருந்து சற்றுத் தள்ளி, ஊருக்குள் இருக்கும் அதன் முதன்மைக் கோயிலில், இந்த முனிக்காகக் கிடா வெட்டி பெரும் படையல் போடும் வழக்கமும் ஊர் மக்களிடம் உண்டு. அறிவியல் எவ்வளவோ மாறினாலும், தமிழர்களின் நடுகல் வழிபாட்டு மரபு இன்றுவரை மாறவில்லை என்பதற்கு இதுவே ஆகச்சிறந்த உதாரணம்.
மண்ணின் அடியில் மட்டுமல்ல, நம் கண் முன்னே காடுகளுக்குள் புதர் மண்டி மறைந்து கிடக்கிறது தமிழனின் பிரம்மாண்ட வரலாறு. 2,500 ஆண்டுகளாகக் கம்பீரமாக நிற்கும் இந்த பின்னங்குடி நெடுங்கல்லைச் சுற்றியுள்ள பகுதியை, தொல்லியல் துறை உடனடியாக 'பாதுகாக்கப்பட்ட மண்டலமாக' அறிவிக்க வேண்டும். முறையான அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டால், கீழடியைப் போலத் தெற்கு வெள்ளாற்றங்கரையிலும் ஒரு பிரம்மாண்ட நகர நாகரிகத்தின் சுவடுகள் வெளிப்படலாம். நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது நமது கடமை மட்டுமல்ல, உரிமை...!


















