போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில...
பிரமாண்ட கான்கிரீட் கோபுரங்கள்; சுண்ணாம்புக்கு பதில் சிமென்ட்; மதிப்பீடு 737.08 லட்சம் | அணை ஓசை 22
ஒரு முக்கியமான முடிவினால் அணை கட்ட எடுத்துக் கொண்ட நேரம் மற்றும் முறைகளில் ஒரு பெரிய தாக்கம் ஏற்பட்டது. மேலும் தேவையான இயந்திரங்களை தேர்வு செய்யும் முடிவுகளுக்கும் அது மாற்றத்தையும் விளைவித்தது. அந்த முடிவு, அணை கட்டுவதற்கு சுண்ணாம்பிற்கு (LIME) பதிலாக சிமென்ட் பயன்படுத்துவது என்ற முக்கிய முடிவாகும்! இது பெரும் தாக்கத்தை அணை கட்டுமானத்தில் ஏற்படுத்தியது! இது குறித்த சில நிகழ்வுகள் மற்றும் காரணங்கள் குறித்து கீழே அலசுவோம்.
ஏற்கனவே எடுத்த முடிவு, அணை கட்டுமானத்திற்கு சுண்ணாம்பு அல்லது சுர்க்கி கலவையை பயன்படுத்துவது என்பதே! 1910-ல் முதன்முதலாக எடுத்த ஆய்வு, இதுகுறித்து பொத்தாம் பொதுவாகவே இருந்தது. அணை கட்டத் தேவையான சுண்ணாம்பு மேட்டூருக்கு அருகில் உள்ள பகுதிகளில் எவ்வளவு படிந்திருக்கிறது எனவும், போதுமான அளவு உள்ளதா என்பது குறித்தும் 1925 மற்றும் 1926 ஆம் ஆண்டு காலத்தில் மீண்டும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் சுண்ணாம்பு போதுமானவையாக இல்லை என்பதே அதன் முடிவு! சில இடங்களில் அதிக அளவில் சுண்ணாம்பு படிமங்கள் உள்ளன என்ற செய்தியின் அடிப்படையில், அகழ்வாராய்ச்சி செய்ததில் ஏமாற்றமே மிஞ்சியது.
கிடைத்த இடங்களான சங்ககிரிக்கு அருகில் படிந்திருந்த சுண்ணாம்பு இருப்புகள், சேலம் - பவானி ஊர்களுக்கு இடையில் கிடைத்த சில இடங்கள், மேட்டூரில் இருந்து சுமார் 38 மைல் தொலைவுக்கு இருந்ததால் அணை கட்ட தேவைப்படும் மிகப்பெரிய அளவிலான (பல லட்சம் கன அடி) சுண்ணாம்பு, சாலை வழியாக கொண்டு வந்து சேர்ப்பதற்கு, தனிப்பட்ட சில விசேஷ ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் பொறியாளர்கள் உணர்ந்தனர்.
மேலும் வெவ்வேறு இடங்களில் கிடைத்த சுண்ணாம்புகளின் தரம் ஒரே மாதிரி இல்லாமல் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டது. இதனால் அணை கட்டப்படும் போது ஒரே மாதிரி தரமான கலவை கிடைப்பதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறைவு என்பது உணரப்பட்டது.
இந்த சமயத்தில் அரசுத் துறையில் இருந்து அனுபவமிக்க பொறியாளர்கள் சிலர் ஏற்கனவே தாங்கள் பெற்றிருந்த அனுபவத்தின் மூலம் அவற்றை சுண்ணாம்பு + சுர்க்கி மூலம் கட்டி இருக்கிறோம் எனவும் இந்த அணையும் அதேபோல சுண்ணாம்பு மூலமே கட்டப்படலாம் என்றும் நிர்பந்தித்தனர். ஆனால், அவர்கள் இதுகாறும் செய்த வேலைகள் அளவில் சிறியதாகவே இருந்தது எனவும் அந்த அடிப்படையில் அவர்கள் இப்படி கூறுகிறார்கள் என்பதும் புரிந்து கொள்ள முடிந்தது என்று பிரிட்டிஷ் பொறியாளர்கள் கருதினார்கள்.
ஒரு இடத்தில் சரியாக பொருந்துவது இன்னொரு இடத்தில் சரியாக பொருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லையெனினும் இதன் மூலம் கட்டப்படும் வேகம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்று கருதி சிலர் யோசனைகளை தெரிவித்தார்கள். அதோடு கூட, இப்படி கட்டப்படுவதால் சிறப்பு இயந்திரங்கள் எதுவும் தேவையில்லை என்றும் தெரிவித்தார்கள்.
மேட்டூர் அணை கட்டுமானத்தில் முக்கியமாக கருதப்படும் திறமை வாய்ந்த பொறியாளர் திரு.சர். சி. டி. முல்லிங்ஸ் (Sir. C. T. MULLINGS) அவர்களின் வருகை இந்த மேட்டூர் அணைத் திட்டத்துக்கு புதுமையான, விஞ்ஞானப்பூர்வ முடிவுகளை எடுக்க துணை புரிந்தது என்று கூறவேண்டும்.
மெட்ராஸ் பொதுப்பணி துறையின் (P.W.D) ஒரே பிரிட்டிஷ் ராயல் பொறியாளராக இருந்த அவர், 1913 - 1915 காலத்தில் ஹைதராபாத்தில் கட்டப்பட்ட அணை கட்டுமானத்தில் பங்கேற்று நிறைய முன் அனுபவங்கள் பெற்றவர். அவரின் கருத்து கோரப்பட்டது. அவர் மிகவும் உறுதியாக, சுண்ணாம்புக்குப் பதிலாக போர்ட்லண்ட் சிமென்ட் உபயோகப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
மேலும், அப்போது கணக்கிடப்பட்டிருந்த மேட்டூர் அணை கட்டுமானம் 45 மில்லியன் கன அடிக்கு சிமென்ட் உபயோகித்தால் ஏழு வருடங்களில் கட்டி முடித்து விடலாம் என்றும் அதே சமயத்தில் சுண்ணாம்பு உபயோகப்படுத்தினால் அதே அளவு கட்டுமானத்திற்கு 15 வருடங்கள் ஆகும் எனவும் உறுதிபடக் கூறினார்.

சிமென்ட் உபயோகப்படுத்தப்படும் போது அணை விரைவாக கட்டி முடிக்கப்படும் என்பதால் நீர்ப்பாசன திட்டங்கள் முடுக்கி விடப்பட்டு பலன் பெறும் எனவும், புதிய இடத்தை தேர்வு செய்து அணைக்கட்ட ஆரம்பிப்பதால், அதிக உயரம் மற்றும் அதிக அளவுகள் கொண்ட அணைக்கு சிமென்ட் உபயோகிப்பது நல்ல வலுவான கட்டமைப்பு ஏற்பட வழிவகுக்கும் மற்றும் பாதுகாப்பு பலமாகும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மேற்கண்ட இந்த சில காரணங்கள் சிமென்ட்டை தேர்ந்தெடுக்க முக்கியமாக அமைந்தன.
எனினும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பாக இது குறித்து மத்திய நீர்ப்பாசன வாரியத்திடம் தொழில்நுட்ப ரீதியான கருத்துருக்களை கேட்டுப் பெறுவது என முடிவெடுத்து அப்படியே கருத்து கோரப்பட்டது. ஒருமித்த கருத்தாக சிமென்ட் கான்கிரீட் பயன்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மேட்டூர் அணை கட்ட 22 மில்லியன் கன அடி மணல், தேவையாய் இருந்தது என கணக்கிடப்பட்டது என்பதை முன்னரே பார்த்தோம். இவ்வளவு பெருமளவு மணல் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, உடைக்கப்பட்ட கற்களை மணலுக்கு பதிலாக பயன்படுத்தலாம் என்று ஒரு சமயத்தில் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், 1926 மற்றும் தொடர்ந்த வருடங்களில் ஆற்றில் நீரின்றி வறண்டு இருந்த சமயம் அணையின் முக்கிய சுவர் எழுப்பப்படும் இடத்திற்கு வடக்கே, மேற்புறத்தில் மணல் படிந்த இடங்களை சோதனை செய்து பார்த்தபோது அணை கட்டுமானத்திற்கு உகந்த மணல் தேவையான அளவுக்கு அங்கு படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடம் அப்போது “பெரும்பள்ளம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டிருந்தது. தீவிர பரிசோதனையில் ஆற்றுப்படுகையில் கற்களுக்கு மேற்புறம் தரமான மணல் ஏராளமாக படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
"சாம்பள்ளி" என்ற கிராமத்திலிருந்து அணை கட்டப்படும் இடம் வரையில், நல்ல தரமான மணல் இருப்பதும், அணை கட்டுமானத்திற்கு உகந்த மணலாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகமாக உள்ள காலங்களில் அந்த இடங்களில் இருந்து மணலை எடுத்து வர முடியாது என்பதும் வெயில் காலத்தில் ஆற்று நீர் வறண்டுள்ள போது நான்கிலிருந்து ஐந்து மாதங்கள் வரை மணலை எடுத்து ஒரு வருடத்திற்கு (அடுத்த வெயில் காலம் வரை) சேமித்து வைத்து அணை கட்டுமானம் தடங்கல் எதுவுமின்றி கட்ட முடியும் என்றும் நீண்டகாலத் திட்டமொன்று வடிவமைக்கப்பட்டது.
அணைக்கு மேற்புறம் உள்ள மணலை துரிதமாக எடுத்து சேமித்து வைக்க முதன்முதலாக "ட்ராம்வே" எனப்படும் ரயில் இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. அணைக்கு வடக்குப்புறம் இந்த ரயில் பாதை அமைத்து முடிந்தவரை விரைவாக மணலை வெட்டி எடுத்து சேமிப்புக் கிடங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
ஓரளவுக்கு அணைச் சுவர் மேலெழும்பி வந்து விட்டால், நீர் தேங்கி நிற்க ஆரம்பித்தால் மணல் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்பதும் ஓர் எச்சரிக்கையாக உணரப்பட்டது. அணையின் கீழ் புறம் (மேற்கு திசையில்) சேகரிக்கப்படும் மணல் சேமிப்பில் வைக்கப்பட்டு, மேல்புறம் கிடைக்கும் மணலை முழுமையாக பயன்படுத்திய பிறகே, இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும், வருடா வருடம் குறிப்பிட்ட வெயில் காலங்களில் அதிக விரைவாக செயல்பட்டு மணலை சேகரித்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்து, இப்பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
1926 இல் ஆரம்பித்து 1934 வரை இவ்வாறு மணல் சேகரிக்கும் திட்டம் ஒவ்வொரு வருட வெயில் காலத்திலும் (Dry season) சிறப்பாக நடந்தேறியது.
முன்னதாக, 1910-ல் கர்னல் எல்லீஸ், அணையிலிருந்து 10 - 12 மைல்கள் மேற்புறத்தில் (வடக்கு) சோளப்பாடி என்ற கிராமத்துக்கு அருகே அமைந்துள்ள ஆற்றுப்படுகையில் படிந்துள்ள மணலை வெட்டி எடுத்து வர வேண்டும் என்று திட்டம் வைத்திருந்தார்.
ஆனால், 1926-ல் வந்த பெருவெள்ளம் காரணமாக அணையின் கட்டுமான இடத்திற்கு அருகிலேயே ஏராளமான மணல் படிந்ததும், அதை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக சூழ்நிலை அமைந்ததும், இதனால் மணல் போக்குவரத்துக்கு செய்திருக்க வேண்டிய செலவு கணிசமாக குறைந்ததும் சாதகமாக அமைந்தது ஒரு நல்வாய்ப்பு!
அணைக்கு அருகிலேயே அணை கட்டத் தேவையான மணலின் மொத்த அளவைக் காட்டிலும் 50 விழுக்காடு கூடுதலாக இங்கு கிடைத்தது. 1926-ல் மணல் வெட்டி எடுத்து சேகரிக்கவும் தேவையான அளவு ஆட்கள் நல்வாய்ப்பாக கிடைத்தார்கள். அவற்றை "டிராம்வே" (இரயில் இருப்புப் பாதை) மூலம், பாதுகாப்பாக அணையின் பக்கவாட்டில் உயரமான இடத்தில் சேமித்து வைக்க முடிந்தது.
தேவைப்படும் போது அங்கிருந்து அணை கட்டப்படும் இடத்துக்கு கொண்டு செல்லவும் "டிராம்வே" மற்றும் "வின்ச்" உபயோகப்படுத்தப்பட்டது. பின்னாளில் ஆற்றுப்படுகையில் இருந்து மணல் வெட்டி தோலால் மூடப்பட்ட படகு மூலம் ஏற்றி (பரிசல்) ஆற்று நீர் மூலமாக அணை கட்டப்படும் இடத்திற்கு நேராக சுலபமாக கொண்டு செல்லும் முறை கையாளப்பட்டது.
மணலை அணையின் இரண்டு கரைகளிலும் தேவையான அளவு இருப்பு வைத்து கட்டுமானம் தொடர்ந்து நடைபெற வழி வகை செய்யப்பட்டதாலும், மணலை பலமுறை இடமாற்றம் செய்யும் வேலையை குறைத்ததாலும் அதற்கு உண்டான செலவு மிகவும் குறைந்தது. பணம் மிச்சப்படுத்தப்பட்டதோடு தேவைக்கும் அதிகமாக மணல் இருப்பில் வைக்கப்பட்டது.

பின்னாளில் மேட்டூரில் இருந்து பவானி சாலையின் ஓரத்தில் "டிராம்வே" பாதை சுமார் 10.5 மைல்களுக்கு நிறுவப்பட்டு ஆற்றின் போக்கில் படிந்துள்ள மணல்கள் தேவைக்கேற்றவாறு வெட்டி எடுத்து இருப்புப் பாதை மூலம் மேட்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
28.717 மில்லியன் கன அடி மணல் மொத்தமாக சேகரிக்கப்பட்டது. 9,04,000 கன அடி கற்துகள்கள் (Dust) கல் அரவை நிலையத்திலிருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டது.
மொத்த அணையும் கட்டி முடிக்கப்பட்ட பிறகு 4,57,520 கன அடி மணல் இருப்பில் இருந்தது என்பது மிகவும் ஆச்சரியம் ஏற்படுத்தும் தகவலாகும். இந்த இருப்பிலிருந்து பின்னாளில் மேட்டூர் நீர் மின் நிலையம் கட்டுவதற்கு மணலை உபயோகித்துக் கொண்டார்கள். அணை கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட மணலின் அளவு கீழ்க்கண்டவாறு இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
1. மெயின் டேம் கட்ட - 2,66,51,286 கன அடி
2. இதர வேலைகளுக்கு - 16,08,628 கன அடி
3. மீதமிருந்தது - 4,57,520 கன அடி
4. கிரஷர் டஸ்ட் உபயோகித்தது - 9,03,837 கன அடி
ஆக மொத்தம் - 2,96,21,271 கன அடி.(சுமார் 3 கோடி கன அடி)
தோலால் மூடப்பட்ட பரிசல் மேற்கூறப்பட்ட அளவு மணலை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. ஒரு சமயத்தில் 80 பரிசல் வரை உபயோகத்தில் இருந்தன. வெவ்வேறு அளவுகளில் இந்த பரிசல்கள் இருந்தாலும் ஒரு முறை 35 லிருந்து 60 கன அடி மணல் வரை கொண்டு செல்லப்பட்டது.
மணலை டேம் சைட்டில் இறக்கிவிட்டு பரிசலை தங்கள் தோள்களில் தூக்கிக்கொண்டு சுமார் மூன்று மைல் தூரம் அளவுக்கு கரையின் ஓரத்தில் நடந்து மீண்டும் மணல் வெட்டப்படும் இடத்திற்கு ஆட்கள் சென்று விடுவார்கள். இது நீரில் எதிர்த் துடுப்பு போட்டு செல்வதை விட சுலபமானதாக இருந்திருக்கிறது. மேலும் இந்த பரிசலை, மழை வரும் நேரங்களில் திருப்பிப்போட்டு அதற்கடியில் பலர் நின்று கொண்டு மழையில் நனையாமல் காப்பாற்றிக் கொள்ளவும் பயன்படுத்தப்பட்டது! அணை கட்டப்பட்ட இடம் வெட்டவெளி அல்லவா?!

இந்த பரிசல் ஆச்சரியமளிக்கும் ஒரு கைவினைத் தயாரிப்பாகும். இது பழங்காலந்தொட்டே ஆற்று நீரில் பயணிக்கவும், கரடுமுரடான கற்கள் உள்ள இடத்தில் பாதுகாப்பாக செல்லவும், இதில் பாரத்தை ஏற்றினாலும் ஒரு சில அங்குலங்கள் மட்டுமே கீழே நீருக்கடியில் அமிழ்வதாகவும் இருந்து, அதன் பயன்பாடு மிகவும் அதிசயத்தக்க அளவில் உபயோகமானதாக இருந்தது. பரிசில் ஓட்டுபவரின் திறமை அதற்கு மிகவும் முக்கியம் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்! இதை பிரிட்டிஷ் பொறியாளர்கள் வெகுவாக பாராட்டி பதிவு செய்துள்ளனர்.
எவ்வளவு மணல் எடுக்கப்படுகிறதோ அவ்வளவு கூலி என்ற அடிப்படையில் ஆட்களுக்கு சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. ஒரே அளவு மணலை நிரப்புதல், அதற்கு கணக்கு வைத்துக் கொள்வது போன்ற சிறப்பான முறையில் (System) எவ்வளவு மணல் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும், லாக் புக் (Log book) பராமரிக்கும் முறையும் செயல்படுத்தப்பட்டது. அப்போது மணல் வெட்டி எடுத்தவர்களின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.
முன்பாக திட்டமிடுதலின் போது மணல் ஒரு யூனிட்டுக்கு ரூ 50/- என ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இங்கு வேலை செய்த ஒட்டுமொத்த நபர்களின் திறமையான பங்களிப்பால் மணல் மூலம் மட்டுமே ரூபாய் 6 லட்சம் மொத்தமாக சேமிப்பானது என்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
புதிய சீரமைப்பு செய்த திட்டத்தின் படி சுண்ணாம்புக்கு பதில் சிமென்ட் பயன்படுத்துவது என்ற முடிவின் காரணத்தால், கட்டுமான அட்டவணையில் மாற்றங்கள், விரைவாக செய்ய வேண்டிய அவசியம், பலவிதமான வடிவமைப்பு மாற்றங்கள் இவை 1924-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் அடிப்படையில் அவசியத் தேவையாகி போனது.
நீர்ப்பாசன கால்வாய், உபரி நீர் வெளியேற்றம் இவற்றில் வடிவமைப்பு மாற்றம் மேலும் பெருமளவில் தேவையான கருவிகள் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆரம்ப காலத்தில் வடிவமைக்கப்பட்ட திட்டத்தில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் எழுந்தது.
மதகுகளைத் திறக்க பயன்படும் கோலியாத் கிரேன்கள் போன்றவற்றில் தேவைப்பட்ட மாறுதல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. எல்லாவித மாற்றங்களை உள்ளடக்கிய திட்டத்தின் மதிப்பீடு 1928 இல் 737.08 லட்சங்களாக இருந்தது. நீர்ப்பாசன கால்வாய்களிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதனால் நிகர வருவாய் ரூபாய் 55,53,967/- அல்லது 6.31 சதவீதமாக கணக்கிடப்பட்டது.

முன்பு திட்டமிட்டதற்கு மாறாக, இறுதி வடிவத்தில் கீழ்க்கண்ட முக்கிய சிறப்பு அம்சங்களை கொண்டதாக திட்டம் திருத்தி அமைக்கப்பட்டது.
1. அணைச்சுவற்றின் மேல் புறம் முழு நீளத்துக்கும் வாகனங்கள் சென்றுவரும் வசதி கிட்டும். இது கடல் மட்டத்திலிருந்து +801.0 அடி MSL ஆக இருக்கும்.
2. மூன்றரை அடி உயரச் சுவர் அந்த சாலைக்கு இருபுறமும் பாதுகாப்பிற்காக உயர்ந்து நிற்கும். இதன் உயரம் + 804.5 MSL.
3. முழு நீர் கொள்ளளவு + 796.0 MSL-ல் அமையும். தேவையெனில், மேலும் இரண்டரை அடி உயரம் அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
4. இந்த அளவுக்கு அதிகமான அளவு நிரம்பினாலும் அணையின் வலது பக்கக் கரையில் மேலும் அதிகமாக வரும் உபரி நீர் வழிந்து ஓட பாதுகாப்பான அம்சம் நிறுவப்பட்டது.
5. எதிர்காலத்தில் அணையில் சுவற்றை மேலும் அதிகபட்சம் 10 அடி உயரப்படுத்தி கொள்ள முடியும். அதற்கேற்ற வகையில் அணை பலமாக அமைக்கப்படும்.
இது ஒருவேளை பத்து அடிகள் அளவுக்கு அணையில் தூர் படிந்தால் தேங்கி நிற்கும் நீரின் அளவு குறையாமல் இருக்க இப்படி செய்து கொள்ள முடியும் என்று வசதி தரப்பட்டிருக்கிறது!
6. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எவ்வித இடர்பாடுமின்றி அணை உறுதியாக தாங்கி நிற்கும் படி வடிவமைப்பு மாற்றப்பட்டு திட்டமிடப்பட்டது.
7. உபரி நீர் வெளியேற அமைக்கப்படும் "எல்லீஸ் வளைவு" பாலத்தின் மதகுகளின் அடிப்பகுதி +770 MSL அடியாக இருக்கும்.
8. இதனால் 26 அடி நீர் "சில்" எனப்படும் மதகுகளின் அடிப்பகுதியில் இருந்து மேல் புறம் வரை நிரம்பி நிற்கும். இந்த நிலை அணையின் அதிகபட்ச நீரின் உயரத்திற்கு சமமாக இருக்கும். மதகு 20 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.
8. நீர்ப்பாசன மதகுகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதற்கு மிகப்பெரிய குழாய்கள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு நீர் மின் நிலையம் வழியாக மின்சாரம் தயாரிக்கப்படும்.
9. மேலும், உயர்மட்ட மதகுகள் 8 எண்ணிக்கையிலும், கீழ்மட்ட மதகுகள் ஐந்து எண்ணிக்கையிலும் அமையும்.

10. ஏப்ரல் 1928-ல் முதல் முறையாக கான்கிரீட் போடும் வேலை துவக்கப்பட்டது. அணையின் வலது புறக்கரையில் ஓரிடம் குறிக்கப்பட்டு, அது இடது கரையிலிருந்து 2100 அடி நீள தூரத்தில் அவ்விடத்தில் கான்கிரீட் அமைக்க ஆரம்பிக்கப்பட்டது.
11. கான்கிரீட் டவர் அமைப்பதற்கு ஆரம்ப காலத்தில் மிகக் குறைந்த கொள்ளளவு அளவிலான சிறிய கான்கிரீட் கலவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
12. ஆரம்பகால அடித்தளம் இந்த மாதிரியான கான்கிரீட் கலவை இயந்திரங்களால் மட்டுமே இடப்பட்டன. கான்கிரீட் டவர் அமைத்த பிறகு, சிமெண்ட் கலவைகள் இந்த டவர் மூலம் அணையின் தேவைப்பட்ட இடத்திற்கு மிக சுலபமாக ஏற்றி பயன்படுத்த வசதி ஏற்பட்டது.
13. சிகப்பு டவர் (Red Tower) கான்கிரீட் டவர் மூலம் டீப் ஹோல் (DEEP HOLE) என்று அழைக்கப்பட்ட அடித்தள அதிகபட்ச ஆழமான குழிகளை கான்கிரீட் மூலம் நிரப்பப்பட்டது.
அடையாளம் கருதி பொருத்தப்பட்ட இரண்டு கான்கிரீட் கோபுரங்களில் ஒன்றுக்கு சிகப்பு கோபுரம் எனவும் மற்றொன்றுக்கு கருப்பு கோபுரம் எனவும் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது.
1926-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரிட்டனைச் சேர்ந்த W. P. ராபர்ட்ஸ் அப்போதைய பணிமனை மற்றும் இயந்திரங்கள் பிரிவுக்கு அலுவலராக இருந்தார். அவர் இங்கிலாந்துக்கு பணி நிமித்தம் அனுப்பப்பட்டு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாட்டில் கட்டப்பட்ட பெரிய அணைகளில் எந்த மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்பட்டு கான்கிரீட் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து வர பணிக்கப்பட்டது.
இதன் மூலம் ரோப்வே (Rope way) என்ற தொடர் கம்பி மூலம் சிறிய அளவில் வாளிகளை இணைத்து, அதை இயக்கி அதன் மூலம் மூலப் பொருட்கள் மற்றும் கான்கிரீட் இவற்றை அணையின் பக்கவாட்டு பகுதியில் இருந்து தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பும் வசதியை மேற்கொள்ளுதல், மற்றும் கேபிள் வழி அல்லது கேபிள் கிரேன் என்று சொல்லப்படும் கம்பியுடன் இணைத்த ஒற்றைக்கலன் மூலம் கான்கிரீட் கலவையை மற்றொரு இடத்திற்கு கடத்துதல், போன்ற இந்த முறைகள் அங்கெல்லாம் கடைபிடிக்கப்பட்டு வருவதை அறிந்தார்.
இந்த இரண்டு முறைகளும் மேட்டூர் அணை கட்டுமானத்திற்கு பொருந்தாத முறை என்று அது நிராகரிக்கப்பட்டது. காரணம், நீளமான இந்த அணைக்கு பொருட்களை கொண்டு சேர்க்க மிக அதிக நேரம் பிடிக்கும் எனவும், மேலும் அந்த கலன்கள் மூலம் குறைந்த அளவில் பொருட்களை மட்டுமே, ஒவ்வொரு முறையும் கொண்டு செல்ல முடியும் என்பதையும் கருத்தில் கொண்டு, மிகப் பெரிய இந்த கட்டுமானத்துக்கு அதுவும் 1 மைலுக்கும் அதிகமான இந்த நீள அணைக்குப் பொருந்தாது என்று கைவிடப்பட்டது.
அது மட்டுமன்றி இந்த முறைகளுக்கு நடுநடுவே இரும்பினால் ஆன சிறிய அளவு கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என்ற தேவை, அணை கட்டுமானப் பணிக்கு இடையூறு விளைவிக்கும் என்பது உணரப்பட்டது. மேலும் இதற்குண்டான நிர்மாணச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் மிகவும் அதிகமாகும் என்பதும் கணக்கிடப்பட்டது.
இது போன்ற பல முறைகளை ஆராய்ந்த பிறகு இறுதியாக மேட்டூர் அணை கட்டுவதற்கு TRAVELLING HOIST TOWER WITH CHUTES என்ற முறை மட்டுமே பயனளிக்கும் என தீர்மானிக்கப்பட்டு அதற்காக இரண்டு கோபுரங்கள் (TOWERS) கொள்முதல் செய்யப்பட்டன. அவைதான் மேலே நாம் கண்ட 2 கோபுரங்கள். சிகப்பு மற்றும் கருப்பு கோபுரங்கள்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள Stothert and Pitt of Bath என்ற நிறுவனம் மூலம் இதை வடிவமைத்து, தயார் செய்து கொண்டு வந்து மேட்டூரில் நிறுவப்பட்டது. அடையாளத்திற்காக கறுப்பு (BLACK) மற்றும் சிகப்பு (RED) கோபுரம் என பெயரிடப்பட்ட இந்த இரண்டு கோபுரங்களின் பாகங்கள் கப்பல் மூலம் மெட்ராஸ் துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ரயில் மூலம் மேட்டூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அணையின் இடது புற பக்கவாட்டு முனையிலிருந்து 2200 ஆவது அடியில் இந்த கான்கிரீட் போடும் முதல் கோபுரம் முதலில் நிறுவப்பட்டது.
இந்த கோபுரங்களை டேம் சைட்டில் நிர்மாணிக்க, திறமை மிக்க ஐரோப்பிய பொறியாளர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியாவில் பெரிய பெரிய நிர்மாணப் பணிகளை செய்து பழக்கப்பட்ட "மாப்பிள்ளா" என்று அழைக்கப்படும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் - மிகவும் திறமைசாலிகளாக கண்டறியப்பட்ட இவர்கள், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து அழைக்கப்பட்டார்கள். சிகப்பு கோபுரம் 1929-ல் நிலைநிறுத்த ஆரம்பித்து உயரமான கோபுரத்தின் நிர்மாணப் பணி 1930 -ம் வருடம் மார்ச் மாதம் நிறைவடைந்தது.
இந்த இயந்திரத்தின் நிறுவும் வேலையையும், இது வேலை செய்யும் விதத்தை காணவும் மிகுந்த ஆர்வத்துடன் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் வருகை தந்து ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்தனர்.
1930-ம் வருடம், ஏப்ரல் மூன்றாம் தேதி இது பயன்பாட்டுக்கு வந்தது. மொத்தம் 306 அடி உயரம் 1800 டன் எடை கொண்ட இந்த கோபுரம் முழுவதும் மின்சாரத்தால் இயங்கும். இதை இயக்க ஒரு நபர் மட்டுமே தேவையாயிருந்தது என்பது மிகவும் வியப்பூட்டும் செய்தி! இந்த இரண்டு கோபுரங்களை நிர்மாணித்த இங்கிலாந்து கம்பெனி பெரிதும் பாராட்டுக்குரியவர்களாக திகழ்ந்தனர்.
இந்த இரண்டு கோபுரங்களும் சிறிய அளவிலான பிரச்னைகள் கூட இன்றி மிகவும் திறனுடன் வேலை செய்தது. 1931 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி ஏற்பட்ட பெருமழை காரணமாக சிகப்பு கோபுரத்தின் சில பகுதிகள் பழுதடைந்து அதே சமயம் அந்தப் பழுது மிகக் குறைந்த நேரத்தில் அணையில் அமைக்கப்பட்டிருந்த பணிமனையில் (work shop) சரி செய்யப்பட்டு உடனடி பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவரப்பட்டது.
வேறொரு சமயம், எலிகளின் தொந்தரவால் இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த மோட்டார் ஒயர்கள் பழுதுபட்டன. அவையும் குறுகிய காலத்தில் சரி செய்யப்பட்டு தொடர் பயன்பாட்டில் இந்த கோபுரங்கள் இயங்கி வந்தன என தரவுகள் தெரிவிக்கின்றன!
இதற்கு தேவையான மின்சாரம் மைசூர் சமஸ்தானம் சிவசமுத்திரம் மின் நிலையத்தில் இருந்து பெறப்பட்டது என்பதை நாம் முன்பே வாசித்தது நினைவிருக்கலாம்.
காவிரி நன்னீர் சிறப்பு





















