2026 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஒரு டிக்கெட் விலை ரூ.95 கோடியா? விண்ணை தாண்டும் ...
பாலியல் விருந்து, மிரட்டல்; ரூ.954 கோடி வங்கி மோசடி! - அமெரிக்காவில் சிக்கிய இந்திய வம்சாவளி யார்?
அமெரிக்காவின் ஆடம்பர மாளிகையில் ஒரு கைது... அதன் பின்னணியில் 100 மில்லியன் டாலர் வங்கி மோசடி... சட்டத்தின் பிடியில் சிக்கிய இந்திய வம்சாவளி தொழிலதிபர்! அமெரிக்காவின் நிதித்துறையை அதிர வைத்திருக்கும் இந்த பிரம்மாண்ட மோசடியின் சூத்திரதாரி யார்?
யார் இந்த மகேந்தர் மகிஜானி?
அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று வசித்து வரும் இந்திய வம்சாவளி தொழிலதிபர் மகேந்தர் மகிஜானி (44), சுமார் 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.954 கோடி) வங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கலிபோர்னியாவின் நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது பிரம்மாண்ட மாளிகையில் வைத்து புதன்கிழமை காலை அவர் கைது செய்யப்பட்டார். காப்பீட்டு பாலிசிகளின் உரிமைப் பத்திரப் பதிவுகளைத் திருத்தி, ஒரு வங்கியை ஏமாற்றி இந்த மாபெரும் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மோசடியின் பின்னணி என்ன?
அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியா மாவட்டத்தின் முதல் உதவி அட்டர்னி பிலால் எஸ்ஸாய்லி இதுபற்றி கூறுகையில், "இந்தியாவிலிருந்து சட்டப்பூர்வமாக குடியேறிய மகேந்தர் மகிஜானி, சுமார் 100 மில்லியன் டாலர் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க வருமான வரித்துறையின் (IRS) விசாரணையின்படி, மகிஜானியின் தந்திரம் மிகவும் கச்சிதமாக திட்டமிடப்பட்டுள்ளது. போலியான உரிமை காப்பீட்டுப் பதிவுகளை உருவாக்குவது, உண்மையான பற்றுரிமை நிலைகளை மறைப்பது, மற்றும் பல போலி நிறுவனங்களின் வலையமைப்பைப் பயன்படுத்தி வங்கியைத் திசைதிருப்புவது என பல அடுக்குகளைக் கொண்டதாக இந்த மோசடி அரங்கேறியுள்ளது.
மகிஜானிக்கு சொந்தமான 'கேண்டர் குரூப் V LLC' என்ற நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கியுடன் கடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, நிலங்களை அடிப்படையாகக் கொண்ட கடன்களை உருவாக்க அல்லது வாங்க, வங்கி சுமார் 100 மில்லியன் டாலர்களை கேண்டர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கேண்டர் நிறுவனம், அந்த கடன்களையும் அதன் அடிப்படை சொத்துக்களையும் வங்கிக்கு ஈடாக வைத்து, கடன் வருவாயிலிருந்து வங்கிக்கான தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆனால், செப்டம்பர் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை, மகிஜானி போலியான உரிமை காப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரித்து, சில சொத்துக்களின் மீது தனது நிறுவனத்திற்கே முதல் பற்றுரிமை (first lien position) இருப்பதாக வங்கியை நம்ப வைத்துள்ளார்.

போதை விருந்துகள், ஆள் கடத்தல், கொலை மிரட்டல்!
பணம், அதிகாரம், மிரட்டல்... மகிஜானியின் சாம்ராஜ்யம் குற்றத்தின் நிழலில்தான் கட்டமைக்கப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்புகின்றன நீதிமன்ற ஆவணங்கள். இந்த மோசடி மட்டுமல்லாமல், மகிஜானி மீது அடுக்கடுக்கான பல பாலியல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் பங்கேற்ற தனிப்பட்ட விருந்துகளை இவர் நடத்தியதாகவும், இந்த விருந்துகளில் சில வங்கி ஊழியர்களும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர், இந்த விருந்துகளில் நடந்த நிகழ்வுகளை வைத்து அவர்களை 'பிளாக்மெயில்' செய்து, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி, தனது கீழ் பணிபுரிபவர்களை "கொன்றுவிடுவேன்" என்றும், "உங்கள் குடும்பத்தை தெருவில் நிறுத்துவேன்" என்றும், "உங்கள் பிள்ளைகளை அரசின் நலத்திட்டங்களில் வாழ வைப்பேன்" என்றும் கொடூரமாக மிரட்டியதாக ஆவணங்கள் கூறுகின்றன. மேலும், ஆயுதம் ஏந்திய அடியாட்களைப் பயன்படுத்தி தெற்கு கலிபோர்னியாவின் முக்கிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ஒரு உணவகத்தை கைப்பற்றியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
மற்றொரு வழக்கில் 1.3 பில்லியன் டாலர் அபராதம்!
கடந்த மாதம், லகுனா பீச் தொழிலதிபர் முகமது ஹோனர்கர் என்பவருடனான ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, மகிஜானிக்கு 1.3 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.12,391 கோடி) அதிகமான நஷ்டஈடு செலுத்த வேண்டும் என ஒரு நடுவர் தீர்ப்பளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கிலும், தனது தொழில் போட்டியாளர்களை அச்சுறுத்தல், மிரட்டல் மற்றும் வன்முறை மூலம் ஒடுக்க மகிஜானி முயன்றதாக நியூயார்க் போஸ்ட் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள மகிஜானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அமெரிக்காவின் நிதி அமைப்புகளையே ஏமாற்றும் அளவுக்கு வளர்ந்த ஒரு தொழிலதிபரின் இந்த செயல், பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




















