போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில...
மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி
மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு வருகிறது. தற்போது இப்பணியில் ரிலையன்ஸ் நிறுவனமும் இறங்கி இருக்கிறது. மும்பை அந்தேரி ஜுகு கல்லி பகுதியில் 101 ஏக்கரில் குடிசைகள் அடங்கிய நிலப்பகுதியை மேம்படுத்தும் பில்டரை தேர்வு செய்வதற்காக குடிசை மறுசீரமைப்பு ஆணையம் டெண்டர் விட்டு இருந்தது.
இதில் சாபூர்ஜி அண்ட் பாலன்ஜி, ரிலையன்ஸ், ஜெ.எஸ்.டபிள்யூ போன்ற நிறுவனங்கள் டெண்டர் கொடுத்து இருந்தன. தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 4IR ரியாலிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் மகாதேவ் ரியல்டர் நிறுவனத்துடன் இணைந்து டெண்டர் கொடுத்து இருந்தது.

டெண்டர்கள் திறக்கப்பட்டதில் ரிலையன்ஸ் தலைமையிலான கூட்டு நிறுவனம் மாநில அரசின் குடிசை மறுசீரமைப்பு ஆணையத்திற்கு கொடுக்கும் நிதியின் அளவு அதிகமாக இருந்தது.
அதன் அடிப்படையில் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் பணி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது. வழக்கமாக அரசு நிலத்தில் இருக்கும் குடிசைகளை மேம்படுத்தும் போது நில மதிப்பில் 25 சதவிகிதத்தை பில்டர்கள் அரசுக்கு வரியாக கொடுப்பார்கள். ஆனால் இதில் ரிலையன்ஸ் நிறுவனம் 35 சதவிகிதம் கொடுப்பதாக தெரிவித்து இருந்தது. எனவேதான் இப்பணி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்து இருக்கிறது.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் குடிசைவாசிகளுக்கு நிலுவையில் உள்ள வாடகை தொகையான ரூ.180 கோடியை உடனே கொடுக்கவேண்டும். அதோடு அடுத்த இரண்டு ஆண்டுக்கு தேவையான வாடகை ரூ.750 கோடியை முன்பணமாக கொடுக்கவேண்டும். ஜூஹு மறுசீரமைப்பு திட்டம், மும்பையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் மிகப்பெரியதாகும்.
``இத்திட்டத்தில் 28,000 க்கும் மேற்பட்ட தகுதியான குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடிக் கட்டடங்களில் வீடுகள் கட்டப்படும். மறுவாழ்வு இல்லங்கள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் மேற்கொண்டு முடிக்கப்படும்போது அந்தப் பகுதி அடியோடு மாறி இருக்கும். அதே நேரத்தில் குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான, கண்ணியமான மற்றும் நவீன வீட்டுவசதிகள் வழங்கப்படும்" என்று குடிசை மேம்பாட்டு திட்ட அதிகாரி மஹிந்திரா கல்யாண்கர் கூறினார். ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.100 கோடிக்கு உத்தரவாதமும் கொடுக்கவேண்டும்.
101 ஏக்கர் நிலத்தில் 51 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களில் குடிசைகள் இருக்கிறது. அதாவது 61 ஏக்கரில் குடிசைகள் இருக்கிறது. எஞ்சிய இடத்தில் பழைய கட்டடங்கள் இருக்கின்றன. இப்பணிகளை முடிக்கும்போது அதில் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியை வீடுகளாகவோ அல்லது பணமாகவோ அரசுக்கு கொடுக்க வேண்டும். முகேஷ் அம்பானி சில்லறை வர்த்தகம், விவசாயம், தொலைத்தொடர்பு, எரிசக்தி, மின் உற்பத்தியை தொடர்ந்து ரியல் எஸ்டேட்டிலும் கால் பதித்து இருக்கிறார்.





















