பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிக...
மேட்டூர் அணையின் பிரமாண்ட அடித்தளம்; வலியும், வாழ்த்துகளும் | அணை ஓசை 21
முன்னதாக, அணையின் முக்கிய சுவர் அமையப்பெறும் (SITE-Y) நேர்கோட்டில் உள்ள இடங்களின் மணல் தன்மை, பெருங்கற்களின் தன்மை போன்ற அனைத்து விபரங்களும் அந்த இடங்களில் துளையிட்டு அல்லது தோண்டி எடுத்து பரிசோதித்து பதிவு செய்யப்பட்டன. ஆராய்ச்சிக்கு உட்படுத்தி குறிப்புகள் பெறப்பட்டன. இவற்றுள் கீழ்க்கண்ட முக்கிய விடயங்கள் கவனம் பெற்றன :
1. ஆற்றின் இடது கரையில் (கிழக்கு திசை) அமைந்த மலையின் சரிவான அமைப்பு.
2. ஆற்றின் இடது கரையிலிருந்து 300 மற்றும் ஆயிரமாவது அடிக்கு இடையில் அமையப்பெற்ற மண்ணும், மணலும் கலந்த வண்டல் படிமம்.
3. 1000 அடி முதல் 2200 அடிக்கு இடையில் அமையப்பெற்ற சேதமடைந்த மற்றும் குறையுடன் அமையப்பெற்ற பாறைகள்.
4. அணையின் 2300 மற்றும் 2800 வது அடி நீளத்தில் அமையப்பெற்ற "டீப் ஹோல்" (DEEP HOLE) எனப்படும் அதிகபட்ச ஆழமான அஸ்திவாரப் பகுதியில் அமைந்த பிளவுகள். இவற்றை நீக்கினால் மட்டுமே 50 லிருந்து 60 அடி ஆழத்தில் கெட்டிப்பாறைகள் அமையப் பெறும் வாய்ப்பு கண்டறியப்பட்டது.
5. அணையின் நீளத்தில் 3600 வது அடியில் "ஹில் 60" (Hill 60) என பெயரிட்டு அழைத்த இடத்தில் அடியில் பிளவு பட்ட மற்றும் சேதமடைந்த பாறைகள் உள்ளதை உடைத்து வெளியே எடுக்கப்பட வேண்டும்.
6. 4000ஆவது அடி நீளத்தில் "லிட்டில் டீப் ஹோல்" (LITTLE DEEP HOLE) என பெயரிட்டு குறிக்கப்பட்ட இடத்தில் 70 அடி ஆழத்துக்கு பாறைகளை பெயர்த்தெடுத்து உறுதி செய்யப்பட வேண்டும்.
7. குறுகிய அளவு அழுத்தம் அமையப்பெற்ற இடமான 4300 வது அடி.
8. கற்பாறைகள் மற்றும் சேதமடைந்த பாறைத் திட்டுக்கள் மேற்புறமாக அமையப்பெற்ற மிகக் கடினமான சிறந்த பாறை. இது சார்னோகைட் ராக்ஸ் (Charnockite Rocks) எனப்படும். இது அணை நீளத்தின் 4600 அடி மற்றும் 5300 வது அடிக்கு இடையில் அமைந்திருந்தது. மேற்கண்ட விடயங்களை மனதில் இருத்தி அணைக்கான அடித்தளம் (அஸ்திவாரம்) திட்டமிடப்பட்டு அதை செயல்படுத்த எத்தனித்தனர்.
எப்போதும் பெரிய ஆறுகளுக்கு இடையே அணை கட்டுவதாக இருந்தால் சரியாகவும், கவனமாகவும் ஆற்று படுக்கையில் திட்டமிடப்பட வேண்டும் என்பது முதல் தெரிவு. மேலும், வருடாந்திர ஆற்று நீரின் அளவைக் கொண்டு மிகக் குறைந்த அளவில் எந்த மாதத்தில் தண்ணீர் செல்லும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொண்டு குறைந்த அளவு இடர்பாடுகள் மற்றும் சேதாரங்கள் இருக்குமாறு திட்டமிடப்பட வேண்டும்.
பருவ மழை காலங்களின் போது எந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவு நீர் ஆற்றுப் படுக்கையில் செல்லும் என்பதை கணிப்பதும், அந்த சமயத்தில் அங்கு தேவையான வேலைகளை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வதும் மிகுந்த கடினமான பணி. ஆனால், ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் மத்தியிலிருந்து மே மாதம் மத்திய நாட்கள் வரை மிகக் குறைவான நீர் வரத்து இருக்கும் என்ற அனுபவ அறிவுடன் யூகித்து அந்த சமயத்தில் ஆற்றுப்படுகையில் வேலைகளை செய்ய திட்டமிட்டனர்.
காவிரி ஆற்றின் ஆற்றுப் படுகை மேட்டூர் கிராமத்தில் குறிப்பிட்ட சைட்-Y நேர்க்கோட்டில் (ஆற்றின் அகலம்) தோராயமாக 1200 அடியாகும். இந்த அகலத்தில் நீர்வரத்து குறைவாக வரும்போது அதன் போக்கை திருப்ப கான்கிரீட்டாலான காப்பணை (Coffer Dam) மூன்று பகுதிகளாக கட்டி, அதில் ஒன்று மாற்றி ஒன்றில் நீரை திருப்பி அந்தப் பகுதியில் அணை கட்டுமான வேலையை மேற்கொள்வது என்று திட்டமிடப்பட்டது. அணை கட்டுமான சுவற்றுக்கு முன்னும் பின்னும் காப்பணை அமைய வேண்டிய இடத்தை கவனமாக சர்வே எடுத்து பாதுகாப்பான முறையில் ஆற்றின் இரண்டு ஓரங்களிலும் கட்டப்பட்டன. அதற்கு அந்த இடங்களில் கிடைத்த கூழாங்கற்களும் மணலும் பயன்படுத்தி மிகக் குறைந்த செலவில் தேவையான நீள அகலத்தில் சாதாரண மரப்பெட்டிகளை உபயோகித்து கட்டப்பட்டது.
குறைந்த அளவாக ஆயிரம் கன அடி நீர் வெளியேறும்படி வெளியேற்ற வாயில்கள் 6 அடியிலிருந்து இருந்து 10 அடிகள் வரை இருக்கும்படி அமைக்கப்பட்டது. இந்த காப்பணை 1926 மற்றும் 1927 ஆம் ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு நீர் வரத்து இருக்கும் போது செய்து முடிக்கப்பட்டது. சிறிய, பெட்ரோல் மூலம் இயங்கும் நீர் வெளியேற்றும் இன்ஜின்களை பயன்படுத்தி நீரை உந்தித்தள்ளி மிக விரைவில் பணி முடிக்கப்பட்டது. இதனால் பிரதான அணை சுவற்றுக்கு (DAM WALL) உண்டான அஸ்திவாரம், நீர்வரத்து அதிகமாக வருவதற்கு முன்பே அணையின் இடது மற்றும் வலது கரையில் செய்து முடிக்க பெருமளவு துணை புரிந்தது. 1928 -ல் பிரதான அணை சுவர் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அணையின் வலது புறம் மிகவும் விரைவாக சுவர் எழுப்பிக் கொண்டு வர முடிந்தது. காரணம், ஏற்கனவே அங்கு உயரமான அளவில் பாறைகள் ஆற்றப்படுகையோடு இணைந்திருந்தது. அதே சமயம், இடது புறத்தில் ஆற்றுப்படுகை மிகவும் கீழ்ப்புறமாக ஆழத்தில் இருந்ததால் கிழக்கு புறச் சுவர் எழுப்பி வர சற்று அதிக காலம் பிடித்தது.
இரண்டு பெரிய கான்கிரீட் தயாரிக்கும் டவர்களை (CONCRETE TOWER) அமைக்கும் பணி அணையின் கீழ் பாகத்தில் சுவற்றுக்கு சேர்ந்தாற் போல் அமைக்கப்பட்டது. மிக முக்கிய இயந்திரங்களாக பயன்படுத்திய இந்த கோபுரங்கள் (TOWERS) குறித்து அடுத்த பதிவில் விரிவாக காண்போம்.
டீப் ஹோல் (DEEP HOLE) எனப்படும் இடத்தில் பாறைகளை வெட்டி அப்புறப்படுத்தப்படும் போது மிகுந்த காலதாமதம் ஆனது கண்கூடு! காரணம், 1927 மற்றும் அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. அதோடு கூட, ஏப்ரல் 24ஆம் தேதி 1929 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் மழை பெய்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த ஒரே நாளில் 7.63 அங்குல மழை அதாவது இரண்டு மணி 45 நிமிட நேரத்திற்குள் இவ்வளவு அதிக மழை பதிவானது. அன்று ஏற்பட்ட வெள்ளம் அணை கட்டுமானத்தில் பெருத்த சேதம் ஏற்படுத்தியது.
50 அடி ஆழம் வரை வெட்டப்பட்டிருந்த குழிகளில் தண்ணீர் நிரம்பியது. நீர் இரைக்கப் பயன்படுத்தும் அனைத்து மின்சார மோட்டார் பம்புகள் முழுவதுமாக நீரில் மூழ்கின. இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. வெவ்வேறு இடங்களில் இருந்து பெறப்பட்ட மாற்று மோட்டார் பம்புகள் மூலம் நீரை வெளியேற்ற முனைந்தாலும் அந்த இடங்களில் மீண்டும் கட்டுமான வேலை ஆரம்பிக்க சுமார் இரண்டு மாத காலம் தள்ளிப் போனது என்று தரவுகளில் இருந்து பெருவெள்ளத்தின் சீற்றத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
குறிப்பாக ஆற்றுப்படுகை அமைந்துள்ள 1200 அடி அகலப் பகுதியில் அகழ்வு செய்து, அஸ்திவாரம் ஏற்படுத்தி மேலே சுவற்றை எழுப்புவது மிகவும் கடினமானதாகவும், மிகுந்த நேரத்தை எடுத்துக் கொள்வதாக இருந்ததாலும் மிகுந்த கவனம் அந்த இடத்தில் செலுத்தப்பட்டது. அணையின் மற்ற இடங்களில் ஒரு வருடத்தின் அனைத்து மாதங்களும் பணிபுரிய முடியும் என்றால் இந்த இடதுபுற ஆற்றுப்படுகையில் குறைந்த அளவு காலமே பணிபுரியும் படியான நேரம் கிடைத்தது.

இதற்கு முக்கியக் காரணம் 1929 இல் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளப்பெருக்கினால் காப்பணை முழுவதுமாக நிரம்பி அணை அஸ்திவாரத்திற்கு தோண்டப்பட்டிருந்த அகழ்வு குழிகளில் முழுவதுமாக நீர் நிரம்பியதால் அவற்றிலிருந்து சுமார் 4 மில்லியன் கன அடி மணல் வெளியே எடுத்த பிறகுதான் பழையபடி வேலையை தொடர முடிந்தது! இதிலிருந்து வெள்ளப்பெருக்கின் சேதாரத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
அதே சமயம் இந்த மணல் எதிர்பாராத பரிசாகவும் கருதப்பட்டது. பயன்படுத்தக் கூடிய தரத்தில் இருந்த இந்த மணல் விரைவான கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இத்துணை பெரிய அளவில் மணல் வேறு இடத்திலிருந்து அந்த இடத்துக்கு கொண்டு வர வேண்டிய செலவு மிச்சமானது என்ற காரணத்தால் இந்த இடர்ப்பாடு இனிய வரவாகவும் மாறிப்போனது.
அடித்தளத்துக்கான அகழ்வுப் பணி குறித்து சற்று பார்ப்போம். அணையின் நீளத்துக்கு ஆராய்ந்ததில் பல இடங்களில் மிகப்பெரிய அளவில் கற்களை வெட்டி அப்புறப்படுத்தி ஆழமாக தோண்ட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
1928 ஆரம்பத்தில், "டீப் ஹோல்" (Deep Hole) எனப்படும் இடத்தில் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்பட்டது. இது ஆற்றின் வலது புறக்கரை. மேலும் சில இடங்களில் வலது புற கரையோரமாக தோண்டப்பட்டன. அந்த சமயத்தில் இடது புறத்தில் (கிழக்கு திசை) அகழ்வுப் பணி வேலையை ஆரம்பிக்கவே முடியவில்லை.

அந்த சமயத்தில் வேலைக்கு தேவையான ஆட்கள் அணை கட்டுமானத்திற்கு மேட்டூர் வந்து குவிந்தார்கள். இதனால் மள மளவென்று வேலைகள் நடக்க ஆரம்பித்தது. 1928 ஜனவரியில் இருந்து ஏப்ரல் 1929 வரை நடந்த அகழ்வுப் பணி வேறு எந்த காலத்தைக் காட்டிலும் மிகவும் அதிகமாக நடந்தேறியது என்று தரவுகள் குறிப்பிடுகின்றன. நவம்பர் 1928 இல் மட்டுமே 2 மில்லியன் கன அடி கற்கள் மற்றும் மணல் வெட்டி எடுத்து அப்புறப்படுத்தப்பட்டது. சில இடங்களில் பெரிதும் ஆழமற்ற குழிகளில், கெட்டியான கற்கள் தென்படும் சமயங்களில் வேறு எந்த விசேட சாதனங்கள் இன்றி வெட்டப்பட்ட மணல் மற்றும் கற்களை வேலையாட்கள் தங்கள் தலைகளில் சுமந்து சாய்வான தளத்தில் ஏறி வந்து நேரடியாக "டிராம்வே" எனப்படும் வேகன்களில் அல்லது வண்டிகளில் கொட்டினார்கள். இவை இடம் மற்றும் குழிகளை நிரப்ப வேண்டிய இடங்களுக்கு கொண்டு சென்று நேரடியாக கொட்டப்பட்டது.
மிக ஆழமான "டீப் ஹோல்" (Deep hole) மற்றும் ஸ்மால் "டீப் ஹோல்" (Small Deep hole) பகுதிகளில் அடித்தளத்திற்கு தோண்டும் போது அந்த நிகழ்விடம் வரை "டிராம்வே" கொண்டு செல்லப்பட்டு கிரேன் மூலம் வெட்டப்பட்டவை அகற்றப்பட்டு, "டிராம்வே வேகனில்" இடப்பட்டு கொண்டு செல்லப்பட்டன. 60 - 70 அடி ஆழமான பகுதிகளில் இருந்தும் வெட்டப்பட்ட டெப்ரீஸ் (Debris) எனப்படும் கற்குவியல்கள் வெளியேற்றப்பட்டன. மிகுந்த கடினமான பாறைகள் வெடி வைத்து தகர்த்து அகற்றப்பட்டன. வேலையாட்கள் வேலைக்கு வருவதற்கு முன்பாகவோ, மதிய உணவு இடைவேளையிலோ அல்லது தொழிலாளர்கள் மாலை வீட்டுக்கு சென்ற பிறகோ பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. பாதுகாப்பு கருதி இந்த முறை கடைபிடிக்கப்பட்டது என்று அறியமுடிகிறது. சில நேரங்களில், இரவிலும் தேவையான விளக்குகளை பொருத்தி கான்கிரீட் அல்லது மேசன் வேலை செய்யும் பணிகள் நடைபெற்றன. முடிந்தவரை இரவுப் பணி தவிர்க்கப்பட்டது என்பதாகவே தரவுகள் தெரிவிக்கின்றன.

1928-ல், இரண்டு பெரிய கான்கிரீட் கலவை போடும் கோபுரங்கள் (CONCRETE TOWER) வரவழைக்கப்பட்டன. முதலில் வலது புறக்கரையில், இடது புறம் கரையிலிருந்து 2200 அடி தொலைவில் நிறுவ முடிவு எடுக்கப்பட்டது. அந்த இடத்தில் ஏறத்தாழ தரைமட்ட அளவிலேயே நல்ல கடினமான பாறை இருந்தது தெரியவந்தது.
எனவே, அந்த இடத்தில் மேஷனரி (Masonry) எனப்படும் சுவர் கட்டுமானப் பணிக்கான அடித்தளம் மேற்குறிப்பிட்ட கான்கிரீட் கோபுரங்கள் துணை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதே போல 1929-ன் ஆரம்பத்தில் ஆற்றின் இடது புறக்கரையில் மற்றொரு "கான்கிரீட் டவர்" அமைக்கப்பட்டது.
"வேலூர் ஸ்டேஷன்" என்று ஒரு இடத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. அந்த இடத்தில் தரைத்தளத்தில் நல்ல கடினமான பாறை இருந்தது. அந்த இடத்தில் கான்கிரீட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்டது. தோராயமாக அந்த இடத்தின் ஊடே பழைய சாம்பள்ளி மற்றும் வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை அமைந்திருந்ததால் அங்கு அடித்தளம் அமைக்கும் பணி விரைவு படுத்தப்பட்டது. தரைமட்ட அளவிற்கு வேலைகளை விரைந்து முடிந்தவுடன் அந்த இடம் மிக முக்கிய பாதையாக அணை சுவற்றின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் படியாக அமைந்தது. இதன் வழியாக முக்கிய "டிராம்வே" ரயில் பாதையும் அமைக்கப்பட்டது. அணையின் இடது புறக்கரையில் மிகப்பெரிய அளவில் கற்களை உடைத்து தோண்டி எடுக்கும் பணி தேவைப்பட்டது. ஏனெனில், அங்கு பழுதுபட்ட பாறைகள் அதிகம் காணப்பட்டன. எனவே அதிக ஆழம் வெட்டி எடுக்கும் பணி தேவையாக இருந்தது. இதுபோன்று அணையின் மூன்று இடங்களில் மிக ஆழமாக தோண்டும் பணி அவசியமாக அமைந்தது.
அணையின் வலது பக்க கரையில் நீர் தேங்கி நிற்கும் பகுதி இயற்கையாகவே சற்று உயரமாக அமைந்த சூழ்நிலையால், (பேசின் போல்) அணையிலிருந்து கால்வாய் வழியாக நீர் வெளியேற்றத்திற்கு ஏதுவாக அமைந்தது. இவ்வாறாக 1928 இலிருந்து 1932 ஆம் ஆண்டு வரை மிக முக்கிய இடங்களில் அவசரமாக செய்ய வேண்டிய அகழ்வுப் பணிகள் மற்றும் அடித்தளம் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இன்றளவும் எந்த ஒரு அணை கட்டும் போதும் அங்குள்ள புவியியல் அமைப்பு பேசின் போல அமைவது விரும்பத்தக்கது என்று பொறியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த அமைப்பு மேட்டூரில் கச்சிதமாக பொருந்துகிறது என்பதை கண்ணுறலாம்.
அணையின் இடது பக்கக் கரையில் தோண்டும் பணிகள் முடிந்தவரை தாமதப்படுத்தி இறுதியாக அதை செய்து முடிக்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டது. காரணம் இடது புறக்கரையிலிருந்து மேட்டூர் ரயில் நிலையம் அருகில் அமைந்திருந்ததால், அந்த இடம் வரை அமைக்கப்பட்டிருந்த டிராம்வே ரயில் பாதையை அதிகளவு பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

தரவுகளின் படி மொத்த அளவில் தோண்டி எடுத்த அகழ்வுப் பணிகளின் அளவு 32.5 மில்லியன் கன அடி. முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட அணையின் கட்டுமானப் பணியின் அளவுக்கு இது பாதி அளவுக்குச் சமம். அதிலிருந்து வெட்டி எடுத்து தயார் செய்த அடித்தள அகழ்வுப் பணி எவ்வளவு பிரம்மாண்டமும், பணி நிறைந்ததாகவும் இருந்துள்ளன என்பதை நாம் உணர முடியும். அனைத்து அகழ்வுப் பணிகளும் 1932 ஆம் ஆண்டு நிறைவுற்றது. தரவுகளை ஆராயும் போது அடித்தளத்திற்கு தோண்டப்பட்ட மொத்த காலம் ஐந்து வருடங்களை எடுத்துக் கொண்டது என்றும் மொத்த கட்டுமானம் ஆறு வருடத்தில் முடிந்தது எனவும் குறிப்பிடுவதை காண முடிகிறது.
ஆச்சர்யமாக கவனத்தைக் கவரும் செய்தி யாதெனில், மைல் நீள கட்டுமான சுவற்றில் 200 அடி அகலமும் 50 லிருந்து 75 அடி வரை ஆழமும் தோண்டும் பணி எதிர்பார்க்கப்பட்டதில் தரைமட்டத்திலிருந்து சில அடிகள் மட்டுமே மண்ணை வெட்டி எடுக்க வேண்டிய தேவையும், மீதமுள்ள மொத்த ஆழமும் கடினமான பெரிய பாறைகளை உடைத்து எடுக்க வேண்டிய பிரமாண்ட தேவையும் இருந்தது என்பதை மிகச் சரியான திட்டமிடலால் குறைந்த செலவில் செய்ய முடிந்தது என்பதே!
இந்த அடித்தள தோண்டும் பணிக்கான செலவு பல மடங்கு குறைக்கப்பட்டது என்பது பொறியியலாளர்களின் சிறந்த சாதனை என்றே கூற வேண்டும்! ஒவ்வொரு இடத்துக்கும் தேவையான திட்டமிடுதலை வெகு முன்னதாகவே கணித்து திட்டமிட்டு செயல்படுத்தியதன் விளைவே இது!
ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவில் கற்களின் தேவை காப்பணை கட்டவும் (Coffer Dam) வீடுகள் மற்றும் மற்ற கட்டடங்கள் கட்டவும் தேவைப்பட்டன. மேட்டூர் ஆற்றங்கரைகளின் இரு பக்கங்களிலும் உள்ள மலைகளின் அடிவாரங்களில் இருந்து வெடி மூலம் தகர்க்கப்பட்டு, வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு சமயங்களில் கட்டுமானத்துக்கு கொண்டுவரப்பட்டது. இவைகளை காண்ட்ராக்டர்கள் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஒட்டர் சமூகத்தினர் திறம்பட செய்தார்கள்.
ஒட்டர்கள் மிகுந்த சுதந்திரமாக வேலை செய்யும் மனப்பாங்கு கொண்டவர்களாக இருந்தனர். ஒட்டர்களின் மனைவிமார்களும் மிகச் சிறந்த முறையில் வேலை தெரிந்து செய்பவர்களாக இருந்தனர். தங்கள் கைகளில் சுத்தியல் ஏந்தி, கற்களை உடைத்து, ஒழுங்குபடுத்தி சிறப்புடன் வேலை செய்யும் திறமையான வேலையாட்களாக ஆண்களுக்கு நிகரானவர்களாக பெண்களும் இருந்தனர். பெண்கள் திடம் மிக்கவர்களாக வலம் வந்தனர். பொதுவாக கற்களை உடைக்கும் போது கணவன் கற்களைத் துளையிடும் டிரில்லை (Drill) பிடிக்கும்போது சுத்தியல் வைத்து அடிப்பதும், பின் மாற்றி மாற்றி வேலைகளை செய்பவர்களாகவும் இருந்தனர். அவர்களின் கற்களை உடைக்கும் திறனும், அதற்கான வேலை நுண்ணறிவும் மிகவும் மெச்சத் தகுந்தது! அளப்பரியது! மிகக் குறைந்த நேரத்தில் அளவாக கருப்பு நிற வெடி மருந்து துகள்களை உபயோகித்து கற்களை உடைத்து, நாளொன்றுக்கு அதிகபட்ச உற்பத்தித் திறனை வெளிக்கொணரும் திறமை வாய்ந்தவர்களாக இருந்தனர்.

இந்த ஒரு வெடி மருந்தை மட்டுமே உபயோகிக்க பழகி இருந்தாலும், இந்த மருந்து துகள்களையும் அவர்களே தயாரிக்கும் அளவிற்கு திறமை வாய்ந்தவர்களாக திகழ்ந்தனர் என்பது மிகுந்த சிறப்பாகும். வெடிமருந்து வைத்து கற்களை வெடிக்க வைக்கும் போது ஆபத்தை சர்வ சாதாரணமாக கையாண்டனர். தங்கள் வேலை உண்டு, தங்களின் பாதுகாப்பு இவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்தி, தீவிர வேலை பற்றாளர்களாக இருந்தனர்.
இவர்களிடம் சிற்சில குறைபாடுகள் குறைந்த அளவில் இருந்தாலும், இவர்களால் தான் பல மில்லியன் கன அடி அளவுக்கு கற்கள் உடைக்கப்பட்டு இந்த மாபெரும் அணை கட்ட முடிந்தது என்ற வகையிலும், மிகவும் குறைந்த கூலியில் அவர்கள் செய்து தர முடிந்தது என்ற வகையிலும், இவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்களாவர். வேறு எந்த வகையிலும் இவ்வளவு குறைவான விலையில் (Low cost) இம்மாதிரியான பெரிய திட்டம் செயல்படுத்தி இருக்க முடியாது என்பதே உண்மை! பிரிட்டிஷ் பொறியாளர்கள் அவர்களை வெகுவாக பாராட்டி தங்கள் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர்.

குவாரி ( Quary) அனுபவம் உள்ள உலகத்தின் எந்த பாகத்தில் உள்ளவரும், இவ்வளவு குறைவான விலையில் இவ்வளவு பெரிய அணைக்குத் தேவையான பெருமளவு கற்களை இவர்கள் செய்து கொடுத்திருக்கிறார்கள் என்று அறியும்போது, அது அவர்களுக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தையே அளிக்கும். அணை கட்ட ஆரம்பித்த பிறகு மிக விரைவான வேகத்தில் கட்டப்பட்டதால் மொத்த தேவையான 54.5 மில்லியன் கன அடி அளவில் உடைத்த கற்கள் தேவைப்படும் நேரத்தில் பெரிய அளவிலான நவீன குவாரிகளின் வழிமுறைகள் ( Modern quarrying Methods) தேவைப்பட்டது. எனவே பவர் ட்ரில் மற்றும் அதிக திறன் கொண்ட வெடிப் பொருட்களை உபயோகித்து அணையின் வலது புறக்கரையில் அமைந்திருந்த புலி மலை ( Tiger Hills) மற்றும் கிழக்குக் கரையில் அணையின் இடது புறக்கரையில் அமைந்திருந்த சீதா மலையில் (இது எல்லீஸ் பாலத்துக்கு வடக்கு புறத்தில்) குவாரிகளை அமைக்க ஏற்பாடானது. நல்ல கற்கள் இங்கு கிடைத்தாலும் ஆரம்பத்தில் பெருமளவு கற்கள் தரம் குறைவால் கழிவானது.
குவாரிகள் அமைப்பதிலும், கற்களை தயார் செய்வதிலும் பொறியாளர்கள் நினைத்ததற்கு மாறான அனுபவம் அவர்களுக்கு கிடைத்தது! மிகப்பெரிய அளவில் கற்களின் எண்ணிக்கை தேவைப்படும் என்ற நோக்கில் ஒரு நாளைக்கு 37,800 கன அடி கற்கள் தேவைப்படுமென கணக்கிட்டார்கள். அணையின் இரு பக்கங்களில் உள்ள மலைகளில் ஒவ்வொன்றிலும் 70,000 - 80,000 சதுர அடி பரப்பளவில் குவாரிகள் அமைக்கப்பட இடத்தை தேர்வு செய்தார்கள். பெரிய அளவில் கற்களை உடைத்தெடுக்க, நியூமேடிக் ட்ரில் (PNEUMATIC DRILL) மற்றும் இயந்திரங்களை நிறுவுவதற்கு அதிக நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டது. அது மட்டுமன்றி இங்கிலாந்தில் இருந்து ஹெவி க்ரஷர்ஸ் எனும் (HEAVY CRUSHERS) கல்லுடைக்கும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
மெஷின்களுக்கு ஆன செலவை விட அதற்குண்டான உதிரி பாகங்களுக்கு அதிக தொகை செலவாவது குறித்து அதிகாரிகள் கவலை அடைந்தனர். வெடி வைத்து தகர்க்கும் போது பரப்பளவு தேவையான அளவு அதிகமாக இல்லாத காரணத்தினால் அதற்காக அவ்வப்போது வேலைகளை நிறுத்தி, வெடி வைத்து தகர்த்த பின் வேலையை தொடர்வது போன்ற காரணங்களாலும், அணையின் இடது புறத்தில் உள்ள குவாரியிலிருந்து மிகவும் சரிவாக கீழ் நோக்கி கற்களை ஏற்றிய லாரிகளை ஒன்றரை மைல் நீள குறுகிய சாலையில் கொண்டு வருவதில் இடர்ப்பாடுகள் ஏற்பட்டதாலும், தேவையான அளவு கற்களை கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படும் என்பதையும், அதற்கான நவீன இயந்திரங்களின் செலவு அதிகமாக ஆகிறது என்பதையும் கணித்து வேறு ஒரு முடிவையும் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பொறியாளர்கள் உள்ளானார்கள்.
இன்னும் பல இடங்களில் குவாரிகளை தேடிப்பிடித்து அமைப்பது, அங்கேயே கூலிகளை வைத்து கற்களை உடைத்து அங்கிருந்து கற்கள் தேவைப்படும் இடத்திற்கு நேராக லாரிகள் மூலம் அனுப்பி வைப்பது என்ற முடிவு தான் அது! இதன் மூலம் கூலி குறைவாக ஆவதுடன் விரைவாகவும் தேவையான அளவு கற்கள் கட்டுமானத்திற்கு கிடைத்துவிடும் என்றும் கணக்கிட முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் ஏராளமான கூலி ஆட்கள் (ஒட்டர்கள்) கல் உடைப்பதற்கு அங்கு கிடைத்ததே ஆகும். அணையின் இரு புறத்திலும் (இடது - வலது) இது போன்ற பல குவாரிகள் இனம் கண்டு அங்கு கூலித் தொழிலாளர்களை பணியமர்த்தி, விரைவாகவும், தரமாகவும் விலை குறைவாகவும், கற்கள் தயார் படுத்தப்பட்டது.
மெஷின்கள் மூலம் கற்களை உடைத்து தயார் செய்வதை விட, மனித உழைப்பில் கற்களை தயார் செய்வது பொருளாதார ரீதியில் குறைவானதாகவே உள்ளது என்ற முடிவுக்கு வந்து பவர் ட்ரில் வைத்து வேலை செய்வது நிறுத்தப்பட்டது. எங்கு குறைவான சம்பளத்தில் தேவையான ஆட்கள் கிடைக்கின்றார்களோ, அங்கே நிறைய இடங்களில் பரந்துபட்ட அளவில் கணக்கற்ற குவாரிகளை திறந்தனர்.
தினப்படி தேவை அதிகம் உள்ள இது போன்ற திட்டங்களுக்கு மனித உழைப்பை நம்புவதே சாலச் சிறந்தது என்ற பாடம் கற்றுக் கொண்டதாக பிரிட்டிஷ் பொறியாளர்கள் ஆவணப்படுத்தி உள்ளனர்.
மேலும் கட்டி எழுப்ப தொடர்ந்து பயணிப்போம்!
காவிரி நன்னீர் சிறப்பு




















