நிலம்/வீடு வாங்கப் போறீங்களா? - சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் என்னென...
'விஜய்க்கு ஈஸியா இருக்காது' - இடைத்தேர்தலைச் சந்திக்கும் 5 தொகுதிகள்; களம் எப்படி இருக்கும்?
தமிழக சட்டமன்றத் தேர்தலில், தவெக தலைவரும், முதல்வருமான விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
அதே வேளையில், சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த அதிமுக-விலிருந்து மதுராந்தகம் மரகதம், பெருந்துறை ஜெயகுமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய நான்கு எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

இடைத்தேர்தலை சந்திக்கும் 5 தொகுதிகள்
இதனால் தமிழகத்தில் தற்போது ஐந்து தொகுதிகள் இடைத்தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன. இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
கள நிலவரத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவர், "தற்போதைய தமிழக அரசியல் சூழலில், கடந்த 2019, 2021 மற்றும் 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலும் திமுக கூட்டணி பெற்ற தொடர் வெற்றிகளுக்கு, அக்கட்சி பாஜகவை நேரடியாகவும் கொள்கை ரீதியாகவும் எதிர்த்ததே முதன்மைக் காரணமாகும்.
பாஜகவை விமர்சிக்காத விஜய்
நிதிப் பகிர்வுப் பாகுபாடு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சிப் பறிப்பு மற்றும் ஆளுநரின் சட்டமன்ற வெளிநடப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வந்திருக்கிறது.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜகவை நேரடியாகவோ பகிரங்கமாகவோ விமர்சிக்கத் தயாராக இல்லை என்பதை அவருடைய அண்மைக்கால நடவடிக்கைகள் காட்டுகின்றன.
காங்கிரஸ் தலைவர்களைச் சந்திக்காத விஜய்
டெல்லி சென்றபோது 'தமிழ்த்தாய் வாழ்த்து' பாடுவது குறித்த நமது மாநில உரிமையை நிலைநாட்ட பிரதமரிடம் அவர் கோரிக்கை விடுத்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க இயலாத சூழலில் பாஜகவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தால் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திப்பதைத் தவிர்த்ததும் இதற்குச் சான்று.
திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்
மேலும், கேரள முதல்வர் வி. டி. சதீசன் அவர்களின் முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தீவிரமாக எதிர்பார்த்தும், விஜய் செல்லவில்லை.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் 'திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ்' ஆவணப்படத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தபோதோ, அல்லது பக்ரீத் பண்டிகையின்போது மாடுகள் மற்றும் ஆடுகள் வெட்டப்படுவது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பின்போதோ, தவெக தரப்பிலிருந்தோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தோ எவ்வித அதிகாரப்பூர்வ எதிர்ப்பும் எழவில்லை.

தவெக கூட்டணிக்கு ஒரு பலவீனம்
திருச்சிக் கூட்டத்திலும் விஜய், திமுகவை மட்டுமே முதன்மை எதிரியாகக் கட்டமைக்க முயல்கிறாரே தவிர, மறந்தும்கூட பாஜகவைக் குறிவைக்கவில்லை.
எனவே, திமுக கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விசிக, முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தவெக-வுடன் இணைந்தாலும், அவர்களால் அங்கு தீவிரமான 'பாஜக எதிர்ப்பு' அல்லது 'இந்துத்துவ எதிர்ப்பு' அரசியலை முன்னெடுக்க முடியாது என்பது தவெக கூட்டணிக்கு ஒரு பலவீனமே ஆகும்.
அதிமுகவின் நிர்வாகப் பலம் குறையும்
மற்றொரு புறம், தொகுதி மேம்பாட்டிற்காகவே ஆளுங்கட்சியில் இணைந்ததாக, அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினாலும், முதலமைச்சர் என்பவர் ஒட்டுமொத்த மாநிலத்திற்குமானவர் மற்றும் திட்டங்கள் அனைத்துத் தொகுதிகளுக்கும் பொதுவானவை என்பதை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றபோது முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, இந்தக் கட்சித் தாவல்கள் மக்கள் நலனுக்கானவை அல்லாமல், அரசியல் ஆதாயம், பணப் பேரங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற சுயநல நோக்கங்களுக்காகவே நிகழ்ந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் தொடர் தோல்விகளைச் சந்திப்பதால் மாற்றுப் புகலிடம் தேடி அவர்கள் சென்றுள்ளனர். இதனால் அதிமுகவின் நிர்வாகப் பலம் வரும் நாட்களில் மேலும் குறையக்கூடும்.

திமுக மற்றும் அதிமுகவின் பிரசார உத்தி
இருப்பினும், கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பினர்களைத் 'துரோகிகள்' என்றும், 'பணத்திற்காக விலைபோனவர்கள்' என்றும், தேவையின்றி இடைத்தேர்தலைத் திணித்தவர்கள் என்றும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கடுமையாக விமர்சிக்கும் என்பதால், கடந்த காலங்களில் தவெக வேட்பாளர்களுக்குக் கிடைத்த அரசியல் சலுகைகளும் பொதுமக்களின் பரிதாப அலையும் இனி கிடைக்காது.
ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசி, அதைச் சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் விஜய்யின் சுருக்கமான பிரசார உத்தியை, இனி திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளும் சம பலத்துடன் கையாளத் தொடங்கும்.
தவெகவின் சட்டம் ஒழுங்கு
மேலும், தவெக-விற்கு முறையான உட்கட்டமைப்பு இல்லாததால், சமூக விரோதச் சக்திகள் கட்சியைத் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
அதற்குச் சான்றாக, ஸ்ரீவைகுண்டத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை வன்கொடுமை செய்த விவகாரம், செங்குன்றத்தில் உணவக உரிமையாளரைத் தாக்கியது, வடசென்னையில் கடலோரக் காவல்படை நிலத்தை ஆக்கிரமித்தது மற்றும் வேலூரில் செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டியது போன்ற உட்கட்சிச் சீர்கேடுகளைக் குறிப்பிடலாம்.

கடினமான வெற்றி
போட்டியிட்ட தவெக வேட்பாளர்களில் சுமார் 40 விழுக்காட்டினர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
இவற்றையெல்லாம் ஆராயும்போது, தவெக இந்த இடைத்தேர்தலில் எளிதாக வெற்றி பெற இயலாது என்பது தெளிவாகிறது.
ஒருவேளை ஆளுங்கட்சி என்ற அதிகார பலத்தைப் பயன்படுத்தி அவர்கள் வெற்றி பெற்றாலும், அது திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் கூர்மையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு பெறக்கூடிய மிகக் கடினமான வெற்றியாகவே இருக்கும்" என்று விரிவாக விளக்கினார்.















