பீகார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகாலையில் தீ விபத்து: 4 நோயாளிக...
உலகக் கோப்பை வென்ற 3 மாதங்களில் பதவிக்கு ஆபத்து! சூர்யகுமார் யாதவை கழற்றிவிட BCCI முடிவு?
இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு உலகக் கோப்பையை வென்று தந்து வெறும் 3 மாதங்களே ஆன நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவின் பதவி பறிபோகும் அபாயத்தில் உள்ளது. கேப்டன் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவது மட்டுமல்லாமல், அணியில் அவரது இடம்குறித்தும் விவாதிக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், அதற்கான அணி வீரர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த சூழலில், பிசிசிஐயின் இந்த திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2028-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து, எதிர்காலத்திற்கான ஒரு புதிய அணியைக் கட்டமைக்கும் முதல் படியாகவே சூர்யகுமாரின் பதவி நீக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது என்கிறார்கள்.

சரிந்த ஃபார்ம்... பறிபோகும் பதவி?
சூர்யகுமார் யாதவை இந்த முடிவுக்குத் தள்ளியதில் முக்கியப் பங்கு வகிப்பது, அவரது சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் தான். ஒரு காலத்தில் எதிரணியினரைத் தனது 360 டிகிரி ஆட்டத்தால் மிரட்டிய SKY, கடந்த இரண்டு ஆண்டுகளாக ரன் குவிக்கத் திணறி வருகிறார். ஜனவரி 1, 2025 முதல் மார்ச் 2026 வரை, அவர் 35 போட்டிகளில் விளையாடி 702 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்; அவரது சராசரி வெறும் 26. இதேபோல், 2024-ம் ஆண்டு முழுவதும் 18 போட்டிகளில் விளையாடி 429 ரன்களை 26.81 சராசரியில் எடுத்திருந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரிலும், 13 இன்னிங்ஸ்களில் 270 ரன்கள் மட்டுமே எடுத்து, 20.76 என்ற மோசமான சராசரியைப் பதிவு செய்தார்.
கேப்டன்சிக்கு முன், கேப்டன்சிக்கு பின்...
சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கில் ஏற்பட்ட சரிவு, அவர் கேப்டனாகப் பொறுப்பேற்ற பிறகு மிகவும் அப்பட்டமாகத் தெரிந்தது. ஜூலை 2024-ல் கேப்டன் ஆனதிலிருந்து, அவரது பேட்டிங் சராசரி 25.88 ஆகக் குறைந்துள்ளது. இதில் ஆறு அரை சதங்கள் அடங்கும், ஆனால் நான்கு முறை டக் அவுட் ஆகியுள்ளார். இதுவே, கேப்டன்சிக்கு முன்பு அவரது ஆட்டத்திறன் உச்சத்தில் இருந்தது. அப்போது அவரது சராசரி 43.60 ஆகவும், 4 சதங்கள் மற்றும் 20 அரை சதங்களையும் விளாசியிருந்தார். கேப்டன் பதவி கொடுத்த அழுத்தம் அவரது இயல்பான ஆட்டத்தைப் பாதித்துவிட்டதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
வெற்றிகளுக்குப் பஞ்சமில்லை... ஆனாலும் இந்த முடிவு!
பேட்டிங்கில் தடுமாறினாலும், கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு மகத்தான வெற்றிகளைத் தேடித் தந்துள்ளார். அவரது தலைமையில்தான் இந்தியா 2025 ஆசியக் கோப்பையையும், 2026 டி20 உலகக் கோப்பையையும் வென்றது. இதற்கு முன், 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் முக்கிய வீரராக இடம்பிடித்திருந்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கி, unorthodox ஷாட்கள் மூலம் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்டவராகவே அவர் அறியப்பட்டார்.
ஆனால், அக்டோபர் 2024-க்குப் பிறகு அவரது ஆட்டத்தில் அந்த பழைய தீப்பொறி காணப்படவில்லை. அக்டோபர் 12, 2024 அன்று வங்கதேசத்துக்கு எதிராக அரை சதம் அடித்த பிறகு, அடுத்த 50+ ஸ்கோரை அடிக்க அவருக்கு ஜனவரி 23, 2026 வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

உலகக் கோப்பைக்கு முன் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்து நம்பிக்கை அளித்தாலும், உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக அடித்த 84ரன்களைத் தவிர மற்ற போட்டிகளில் அவரால் பெரிதாக சோபிக்க முடியவில்லை.
2028 உலகக் கோப்பையைக் குறிவைத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் பிசிசிஐ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.




















