"கார் கொடுக்காததால் கொன்றுவிட்டனர்" - வரதட்சணை கொடுமையால் பெண் சோசியல் மீடியா பி...
'பிரஷரா இருக்கு!' சாதனைகளுக்குப் பின்னால் அழுத்தம் - ரவி சாஸ்திரியிடம் மனம்திறந்த வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் 2026 தொடர், கிரிக்கெட் உலகுக்கு ஒரு புதிய சூப்பர் ஸ்டாரை அடையாளம் காட்டியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். வெறும் 15 வயதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகக் களமிறங்கி, விராட் கோலி, சுப்மன் கில், ஹென்ரிச் கிளாசென் போன்ற ஜாம்பவான்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ஆரஞ்சு தொப்பியை வென்றிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.
இந்த இளம் புயலின் ஆட்டம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தாலும், இந்த அசாத்திய சாதனைக்குப் பின்னால் இருக்கும் அழுத்தங்கள் குறித்து, முன்னாள் இந்தியப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் மனம்திறந்து பேசியுள்ளார்.
சாதனைகள் ஒருபுறம்... அழுத்தம் மறுபுறம்!
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி முடிந்த பிறகு, ரவி சாஸ்திரியுடனான உரையாடலில், புகழ் தரும் அழுத்தத்தைப் பற்றி வைபவ் வெளிப்படையாகப் பேசினார். "இந்த அங்கீகாரம் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் இப்போது நான் நிறைய பேட்டிகள் கொடுக்க வேண்டியிருப்பதால், நிச்சயம் ஒரு அழுத்தம் இருக்கிறது," என்று கூறினார்.
இந்த சீசனில் 'மிகவும் மதிப்புமிக்க வீரர்' (Most Valuable Player) விருதை வென்ற அவர், "இது எனக்கு மிகவும் பெருமையான தருணம். அடுத்த சீசனிலும் இதேபோல சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பேன்," என்றார்.
ஒவ்வொரு போட்டியிலும் ஒரே மாதிரியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது என்பதையும் இந்த இளம் வயதிலேயே வைபவ் உணர்ந்திருக்கிறார். "என் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே நான் எப்போதும் முயற்சிப்பேன். பந்து அடிக்கக்கூடிய இடத்தில் வந்தால், நிச்சயம் அடிப்பேன். ஆனால், ஒவ்வொரு போட்டியிலும் ஒரே மாதிரி விளையாட முடியாது. ஆட்டத்தின் சூழலைப் புரிந்துகொண்டு, அணியின் தேவைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். இந்த அழுத்தமான சூழலை எப்படி எதிர்கொள்வது என்பதையெல்லாம் இந்த சீசனில் நான் கற்றுக்கொண்டேன்," எனத் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஃபிட்னஸில் கூடுதல் கவனம்!
வைபவின் அபார திறமை ஒருபக்கம் இருந்தாலும், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், முகமது கைஃப் போன்ற சில முன்னாள் வீரர்கள், நீண்டகாலம் கிரிக்கெட்டில் ஜொலிக்கத் தேவையான உடற்தகுதி மீது அவர் கவனம் செலுத்துகிறாரா என்ற கேள்வியை எழுப்பியிருந்தனர்.
இந்தக் கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில், வைபவ் தனது ஃபிட்னஸ் திட்டங்கள் குறித்தும் பேசினார். "ஆம், என்னுடைய கவனம் இப்போது ஃபிட்னஸ் மீதுதான் உள்ளது. நான் நீண்ட காலம் விளையாட விரும்பினால், காயங்களிலிருந்து விலகி இருப்பது அவசியம். அதனால் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன்," என்று உறுதியளித்தார்.
மேலும், "அணியில் உள்ள சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் எனக்குப் பெரும் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது," என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
இந்த ஐபிஎல் 2026 தொடரில், வைபவ் சூர்யவன்ஷி ஆரஞ்சு தொப்பி, மிகவும் மதிப்புமிக்க வீரர், வளர்ந்து வரும் வீரர், சூப்பர் ஸ்ட்ரைக்கர் மற்றும் சூப்பர் சிக்ஸர் விருதுகள் எனப் பல முக்கிய விருதுகளைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.



















