வீடு, நிலம் வாங்கும்போது 'டக்'கென முடிவு எடுக்காதீங்க; என்னென்ன கட்டாயம் இருக்கண...
மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரம் ஸ்ரீசிவலோகநாதர்: திருமணம் கைகூடும்... வீடுபேறும் கிட்டும்!
திருஞானசம்பந்தர் வாழ்வோடு தொடர்புடைய திருத்தலங்களில் முக்கியமானது ஆச்சாள்புரம். சீர்காழி - சிதம்பரம் சாலையில் கொள்ளிடத்தில் இறங்கி, கிழக்கே 8 கி.மீ.தூரம் பயணித்தால் ஆச்சாள்புரம் ஆலயத்தை அடையலாம்.
இத்தலத்தை தேவாரத் தமிழில் `நல்லூர்ப் பெருமணம்' என்கிறார்கள். இவ்வூர் நல்லூர், பெருமணம், நல்லூர்ப் பெருமணம், பெருமண நல்லூர் என நால்வகைப் பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.
மட்டுமன்றி இவ்வூருக்கு 'சிவலோகம்' என்கிற திருநாமமும் உண்டு. அதனாலேயே இங்குள்ள ஈசனுக்கு சிவலோக நாதர் என்கிற சிறப்புப் பெயரும் உண்டானது.

ஆலயங்கள் தொடர்பான ஆவணங்களில் இந்த ஈஸ்வரன் `பெருமண முடைய மகாதேவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இங்கு வழிபட்ட பிரம்மா, முருகன் முதலான கடவுளருக்கும், பிருகு, வசிஷ்டர், அகத்தியர், வியாசர், மிருகண்டு, ஜமதக்னி ஆகிய முனி சிரேஷ்டர்களுக்கும் சிவலோகத்தினை ஈசன் காட்டியருளினாராம்.
ஆகவே, சிவலோகத் தியாகர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு மாமரமே தலவிருட்சம். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய 533 விருத்தங்கள் அடங்கிய புராணம் ஒன்று இத்தலத்திற்கு உரியது.
இத்தகைய சிறப்புகள் பல இருந்தாலும் திருஞானசம்பந்தரோடு தொடர்புடைய நிகழ்வே இத்தலத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். திருஞானசம்பந்தப் பெருமானுக்கு 16 வயது பூர்த்தியானதும் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. ஆனால் அவரோ இந்த ஏற்பாட்டினை மறுத்தார்.
பின்னர், `மறை ஓதும் அந்தணர்க்குரிய ஆறு தொழில்களைச் செய்வதற்கு திருமணம் அவசியம்’ என்று பெரியோர்கள் கூற, திருமணத்துக்கு இசைந்தார். சீர்காழிக்கு அருகிலிருந்த நல்லூர் நம்பியாண்டார்நம்பியின் பெண்ணைத் தேர்வு செய்தனர்.
வைகாசி மூலத்தன்று திருமணம். அடியார்கள் புடைசூழ திருமணம் ஆயிற்று. அடுத்து, வேள்வித் தீயை வலம்வர வேண்டும்.
"ஞானாக்னியாக இருப்பவர் இறைவன்தானே. அவரையே வலம் செய்வோம்’’ எனச் சொல்லி, சிவலோகநாதரின் சந்நிதியை நோக்கி மனைவியின் கரம் பற்றியபடி நடந்தார் சம்பந்தப் பெருமான். திருமணத்திற்கு வந்திருந்த கூட்டமும் பின்தொடர்ந்தது.
திருஞானசம்பந்தர் தம் மனத்தில், இல்லாளோடு சிவனாரின் திருவடிகளைப் பற்றிடத் தீர்மானம் செய்தவராக `கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்’ என்ற திருப்பதிகத்தைப் பாடித் தொழுதார். மறுகணம் சிவலோகநாதரின் லிங்கத் திருமேனி பிளக்க, அதிலிருந்து பிரகாசமான ஜோதியொன்று தோன்றியது.
`இருவருடனும் இந்த மணத்திற்கு வந்திருக்கும் யாவரும் ஜோதியுள் புகுந்திடுக’ என்ற பெருமானின் வாக்கு அசரீரியாக ஒலித்தது. `காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக்குய்ப்பது' என்று தொடங்கும் திருப்பதிகத்தினைப் பெருமான் பாடத் தொடங்கியதும் ஒவ்வொருவராய் ஜோதிக்குள் புகுந்திட, நிறைவில் சம்பந்தப் பெருமானும் தம் பெருமாட்டியுடன் ஜோதியில் புகுந்து எழுந்தருளினார் என்கிறது தலவரலாறு.

அனைவரும் ஜோதியுள் புகுமுன், இங்குள்ள தீர்த்தக் கரையில் எழுதருளிய அம்பிகை, அனைவருக்கும் வெண்ணீறு அளித்து அருளினாளாம். அதனால் இங்கு அருளும் அம்மைக்கு 'வெண்ணீற்றுமையம்மை' (விபூதிக் கல்யாணி) என்று திருப்பெயர். இவள் சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீற்றுப் பிரசாதமே வழங்கப்படுகிறது.
சிவனார் இங்கே தன் சூலத்தால் குளம் உண்டாக்கி, அதில் தன் திருமுடியில் திகழும் கங்கையின் நீரை நிரப்பி, பஞ்சாட்சர சாந்நித்தியம் நிறைந்திருக்கும்படி அருள்புரிந்தாராம். ஆகவே, இங்குள்ள தீர்த்தம் `பஞ்சாட்சரத் தீர்த்தம்' என்று வழங்கப்படுகிறது.
Sakthi Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
ஆன்மிகம் மணக்கும் ஆனந்த ஆலயம். சக்தி விகடன் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்த்த; ஆன்மிக திருத்தலங்கள், திருக்கதைகள், ஆன்மிகத் தொடர்கள், ஜோதிடம் முதலான கட்டுரை, வீடியோக்கள் இங்கே உடனுக்குடன்
கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தில் கல்யாணக் கோலத்தில் தம் தேவியுடன் கல்யாண சம்பந்தர் தரிசனம் தருகிறார். காகபுஜண்டர் (காகமா முனிவர்) சிவனாரின் உத்தரவுப்படி, திருஞானசம்பந்தப் பெருமானின் திருமணத்தில் முக்தி பெறும் எண்ணத்துடன், நெடுங்காலம் முன்பாகவே இத்தலத்திற்கு வந்து தவமியற்றிக் காத்திருந்தார்.
இத்தலத்தின் மகிமையை உணர்ந்த இவர், இங்கு தலைகீழாகவே நடந்து வந்து, தலைகீழாகவே தவம் இயற்றி, சம்பந்தர் திருமணத்தன்று ஜோதியில் ஐக்கியம் ஆனார்.
இன்றைக்கும், தலைகீழ் தோற்றத்துடன் திகழும் காகபுஜண்ட முனிவரைத் திருக்கோயில் கோபுரத்தில் காணலாம். இம்முனிவரால் வழிபடப்பட்ட ஈசன் 'யோகீசர்' என்ற திருப்பெயருடன் கோயிலில் அருள்கிறார்.

ரணங்களைப் போக்கியருளும் ரணவிமோசகராக அருள்கிறார் இவ்வூர் ஈசன். இங்கே, பிரம்மோற்சவம் நிறைவுற்ற மூன்றாம் தினம் வைகாசி மூலத்தன்று திருஞான சம்பந்தர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும்.
இத்திருமண வைபவத்தில் கலந்துகொண்டால் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமண வரம் கிடைக்கும். மேலும் வாழ்வில் சகலவிதமான சுபிட்சங்களும் உண்டாகி சுகவாழ்வு வாழ்வார்கள். இந்த உலக வாழ்க்கை முடிந்தபின் சிவலோகநாதரின் அருளால் முக்திப்பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.





















